வசந்த காலத்தை வரவேற்று, சரம், சரமாக மங்கலமான மஞ்சள் வண்ணத்தில் , மெல்லிய நறுமணமும் பரப்பிக் கொண்டு, குடையாய் விரிந்த கொன்றை மரம். விடியற்காலை வேளை. ஆதவன் தன் வெப்ப கிரணங்களை அள்ளி வீசும் முன் குளிர்ந்த தென்றல் வீசும் இதமான காலம். மயில் போல தோகையும் செம்போத்து பறவை போன்ற தோற்றமும் கொண்ட பறவை ஒன்று விர்ரென்று பறந்து வந்து கிளை ஒன்றில் அமர்ந்து தம் சிறு தோகையை விரித்து அழகு காட்டிக் கொண்டே, குகுக்….. குகுக் என்று அடி வயிற்றிலிருந்து ஒரு ஆழ்ந்த முனகலை வெளிப்படுத்தியது. சில மணித்துளிகளில் இந்த சங்கேத அழைப்பைக் கேட்டோ என்னவோ அதன் இணைப்பேடும் எங்கிருந்தோ விர்ரென்று வந்து சற்று தள்ளி அமர்ந்தது. தானும் குகுக்… குகுக்…கூகுக்…கூகுக்… என ஏதோ மறுமொழி சொல்ல, முன்னால் வந்த அந்த ஆண் பறவையும் ஏதோ சொல்ல, கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் இந்த அழகில் லயித்திருந்த அர்ச்சனா, ஜோடிப்பறவைகள கானம் எழுப்பிக் கொண்டே, பறந்து செல்ல, சுய நினைவிற்குத் திரும்பினாள். ஏதோ முக்கியமான குடும்ப உரையாடலாக இருக்குமோ… என்று சிந்திக்கத் தொடங்கியவள், மணித்துளிகள் மின்னலாய் பறப்பது கண்டு, தன் கடமைகளும் நினைவிற்கு வர, பரபரவென, தோட்டத்திலிருந்து வெளியேறி, சமையலறைப்பக்கம் பறந்து சென்றாள்… பறந்து..? ஆம் அந்தப் பறவைகளின் உற்சாகம் அவளையும் தொற்றிக் கொள்ள பறப்பது போன்றதொரு உணர்வுதான் வந்தது.
மளமளவென காலைக்கடன்களை முடித்து, கணவனின், செல்ல மகனின், மதிய உணவு பாத்திரங்களை நிரப்பி காலை உணவிற்கான ஏற்பாடுகளையும் முடித்து, பம்பரமாக சுழன்று, சுழன்று வேலை பார்த்து நிமிர்ந்து பார்த்தால் மணித்துளிகள் வெகு வேகமாக மறைந்தது புரிந்தது… வழக்கம்போல காலை உணவாக இரண்டு ரொட்டித் துண்டுகளுடன் பசசைக் காய்கறியை உள்ளே வைத்து சாண்ட்விச்சாக எடுத்துக் கொண்டு, ஆரஞ்சு பழச்சாறையும் ஒரு சின்ன பாட்டிலில் நிரப்பிக் கொண்டு தன் இரு சக்கர வாகனத்தில் கிளம்பி விட்டாள்… பணிக்கு!
என்னதான் அவசரமாகக் கிளம்பினாலும், தெருமுனை தாண்டியவுடன், அரசாங்கக் குடியிருப்பு பன்மாடி கட்டிடம் வழியாகச் செல்லும்போது தன்னையறியாமல் வண்டி சில நிமிடங்கள் மெல்லத் தேய்ந்து, திரும்ப வேகமெடுக்கும். தெருவின் புறம் தெற்கு மூலையில் உள்ள அந்த கீழ் வீட்டிலிருந்து இரைச்சல் இல்லாத நாளே இருக்காது எனலாம். ஒரு பெண்ணைக் குறித்து கீழ்த்தரமாக திட்டக்கூடிய அத்துனை வார்த்தைகளும் சரளமாக காதில் விழும். குடிகாரனாக இருப்பானோ.. குடித்து விட்டு அன்றாடம் மனைவியை துன்புறுத்துகிற ரகமாக இருப்பானோ என்றால் அதுவும் குடி போதையில் வருகிற குழப்பமான வார்த்தைகளாக இல்லாமல் தெளிவாக தெரித்து விழுகிற நெருப்பைக் கக்கும் வார்த்தைகள். இதைக் கேட்டுக் கொண்டு ஒரு பெண் எப்படி எந்த உணர்வும் இல்லாமல் அப்படியே புழுவாகக் கிடக்க முடியும் என்று பேராச்சரியமாக இருந்தாலும் அந்தப் பெண்ணின் பதில் சத்தமோ அல்லது அழுகுரலோ எதுவும் துளியும் வெளி வராது. சில நேரங்களில் குழந்தை இருப்பதன் அடையாளமாக அதன் அழுகுரல் வேண்டுமானாலும் கேட்கும்.
இன்றும் அத்துனை அவசரத்திலும், தன்னையறியாமல் கண்கள் அந்த வீட்டை நோக்கி அலைபாய்ந்தது. அந்தப் பெண் கையில் ஏதோ, குப்பையைப் போல எதையோ எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள் குப்பைத் தொட்டி நோக்கியவாறு. வழக்கம்போல அந்தக் குரலும் பின்னாலேயே…
” அடி கேடுகெட்ட சிறுக்கி மவளே.. நான் ஒருத்தன் இங்கு கரடியா கத்திக்கிட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு புடுங்குன மயிராட்டம் சத்தமிலலாம அப்பிடியே போற… என்ன நினைச்சிட்டிருக்கே மனசுல.. போட்டுத் தள்ளிப்பிடுவன் பாத்துக்கோ… என்னைப்பத்தி உனக்குத் தெரியுமில்ல….?”
வெளியில் வந்த அந்தப் பெண்ணைப் பார்த்தவுடன் என் பரிதாபம் பன்மடங்கு அதிகமாகி விட்டது. ஒடிசலாக, கண்களில் உயிரை வைத்துக் கொண்டு, மிகவும் பயந்த சுபாவமாகத் தெரிந்தாள்.’அட்ப்பாவி… இந்த பரிதாபமான ஜென்மத்தையா இப்படி போட்டுத் தள்ளறான்’ என்று மனம் கோபத்தில் வெடித்தாலும் தன் நேரமின்மை காரணமாகவும் தேவையில்லாமல் அடுத்தவர் குடும்ப விசயத்தில் மூக்கை நுழைக்கக் கூடாது என்றும் மனதை கட்டுப்படுத்திக் கொண்டு வண்டியின் வேகத்தைக் கூட்டினாள்.. அடுத்த் நிமிடம் அனைத்தையும் மறந்து விட்டு பணியில் ஆழ்ந்து போனாள். அடுத்த மூன்று நாட்கள் அரசு விடுமுறையானதால், தன் பெற்றோரைப் பார்த்து விட்டு வரலாம் என மூவரும் கிளம்பிவிட்டனர்.
விடுமுறை முடிந்து அன்று வழக்கம் போல அலுவலகம் கிளம்பிய போது வீட்டிலேயே அந்தப் பெண்ணின் நினைவு வந்தது. ஏதோ பல நாட்கள் பழகிய ஒருவரை சில நாட்களாகப் பார்க்காதது போன்ற நினைவு வந்தது அவளுக்கே ஆச்சரியம்தான்…. அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலும் வந்தது.. அவள் வீட்டை நெருங்கும் போது அவள் வெளியே வர வேண்டுமே என்று பரபரப்பாகவும் இருந்தது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக, அந்த இடமே நிசப்தமாக இருந்தது. எந்த சலனமும் இல்லாமல் இருந்தது. ஒரு வேளை வெளியூர் சென்றிருப்பார்களோ என்று யோசிக்கும் போதே, வீட்டினுள் குழந்தை அழும் சத்தம் கேட்டது. ஓ… வீட்டில்தான் இருப்பாள் போல் இருக்கிறது. அப்ப அவன் என்ன ஆனான்…? ஒரு வேளை திருந்தி விட்டானோ. அப்படி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். பாவம் அந்தப் பெண், கொஞ்சம் நிம்மதியாகவாவது இருப்பாள். இப்படி எதை, எதையோ நினைத்துக் கொண்டு அலுவலகம் வந்து சேர்ந்து விட்டாள்.
அலுவலகத்தில் ஆடிட்டிங் சமயம். வேலை பிழிந்தெடுக்க, வேறு எந்தவிதமான சிந்தனைக்கும் இடமில்லாமல் போய்விட்டது. மூன்று நாட்கள் இப்படியே பொழுது போய்விட்டது. அந்த வீட்டில் எந்த சத்தமும் இல்லை. மனக் குழப்பம் அதிகமானது. எப்படியும் அடுத்த நாள் சற்று காத்திருந்தாவது அவளைப் பார்த்துவிட வேண்டும், பாவம் என்ன ஆனாளோ தெரியவில்லையே என்று ஏக்கம் வந்தது.
அன்று தாளாளராகத் தான் பணிபுரியும் தனியார் வங்கியில் சற்று கூட்டம் அதிகம். நிமிர நேரமில்லாத வேலை. காசோலைகள் வந்து குவிந்த வண்னம் இருந்தது.
“அக்கா.. அக்கா..”
என்ற மெல்லிய பயந்த குரல் கேட்டு ஒரு வினாடி தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு திரும்ப கவிழ்த்துக் கொண்டாள். வேலை மும்முரத்தில் அந்த பெண் அழைத்ததை மறந்து விட்டாள். திடீரென ஏதோ பொறிதட்டியது போல, இந்தப் பெண்ணை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று நினைத்தவள், திரும்ப தலையைத் தூக்கி பார்வையை ஓடவிட்டாள். அந்த தெரிந்த முகம், நினைவில் நின்ற பரிதாப முகம் அவளையே ஆவலாகப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது… ‘அட இவள் அந்த் அரசாங்கக் குடியிருப்பில் இருக்கும் பெண்ணல்லவா என்ற நினைவு வந்தவுடன், அவளையறியாமல் உதட்டோரம் ஒரு புன்னகை மலர,
“வாம்மா, என்ன வேண்டும் உனக்கு?” என்று பழகியவள் போல உரிமையுடன் கேட்கத் தோன்றியது.
“அக்கா, ஒரு கணக்கு ஆரம்பிக்கோனும். நான் சம்பாதிக்கற காசை அப்பப்ப கொண்டாந்து கட்டுற மாதரி எனக்கு என்ன பன்னனும்னு தெரியாதுக்கா.. உங்களை நான் நம்ம ஏரியாவுல பாத்திருக்கேன்.அதான் உங்ககிட்ட கேக்கலாமுன்னு காத்திருக்கேன்க்கா…”
”அப்படியா. சரி நான் உனக்கு உதவி செய்யிறேன். உன்னோட வோட்டு அட்டையும், ரேசன் அட்டையும் எடுத்துக்கிட்டு வா. மத்ததெல்லாம் நான் பார்த்துக்கிறேன்” என்றவுடன் அவள் முகத்தில் சிறு மலர்ச்சியைப் பார்த்தவுடன் கொஞ்சம் மகிழ்ச்சியாகக் கூட இருந்தது அர்ச்சனாவிற்கு.
“நீ என்ன வேலை பார்க்கிறாய்?” என்றாள்.
“வீட்டு வேலை செய்யிறேன் அக்கா.உங்க வீடு இருக்கற தெருவில கூட ஒரு வீட்டிற்கு வாரம் ஒருக்கா வருவேன். ஞாயிற்றுக் கிழமைகள்ல சுத்தம் செய்யிறதுக்கு. உங்கள மாதிரி அந்த அக்காவும் பெரிய வேலையில இருக்காங்க. ஞாயிறு மட்டும்தான் போய் எல்லா வேலையும் முடிச்சுட்டு வருவேன். நாளை அங்கு வருவேன்க்கா.. உங்க வீட்டில ஏதும் வேலை இருந்தா சொல்லுக்கா வாரேன்.” என்றாள்.
வெகு நாட்களாக மனதில் இருக்கும் சந்தேகம் தீர இதுதான் வழி என்பதை புரிந்து கொண்டு, “சரி நாளைக்கு அந்தப்பக்கம் வந்தால் அப்படியே வீட்டுக்கு வா” என்றாள்.
சொன்னபடியே அஞ்சலை, அதான் அவ பேருன்னு வங்கியில் கேட்டு தெரிந்து கொண்டதால் அதைச் சொல்லியே கூப்பிட்டாள். ஒருவரை அவருடைய பெயர் அறிந்து அதைச் சொல்லிக் கூப்பிடும் போது அவருடன் நெருக்கம் அதிகமாவது போல் தோன்றும். தானாக ஒரு அன்பு வலையும் உருவாகும். இப்படித்தான் அஞ்சலையுடனும் நெருக்கம் அதிகமானது அர்ச்சனாவிற்கு விரைவிலேயே..
அவள் வேலை பார்க்கும் விவரம் குடுமபம், கணவன் என்று அனைத்தும் விசாரித்தவள் மெதுவாக தன் சந்தேகத்தைக் கிளப்பினாள். ஒரு நாளைப்போல எப்போதும் உன் கணவன் ஏன் அப்படி வம்பு செய்து கொண்டே இருக்கிறான் என்று கேட்டபோது,
“அதுவாக்கா.. வேறொன்னுமில்ல.. எங்கம்மா வீட்டில போட்ட 3 பவுனு நகையும், நான் உங்கள மாதிரி ஒரு நல்லவிங்ககிட்ட குடுத்து வச்சிருக்கேன். அதை வாங்கியாந்து குடுன்னு அடிக்குதுக்கா.. இந்த மாசம் பூரா அதாங்ககா பிரச்சனை. எப்ப பாத்தாலும் இப்படி ஏதாவது ஒரு பிரச்சனை கொண்டுவந்து அடிக்கும், அது வழக்கமாப் போச்சுக்கா..”
“சரி அந்த ஆளுக்கு எதுக்கு மூனு பவுனு நகை. குடிப்பழக்கம் உண்டா..”
“அதெல்லாம் இல்லக்கா. எல்லாத்தையும் பிடுங்கிக் கொண்டுபோய் கூத்தியாகிட்ட குடுத்துப்பிடும். நல்ல சீலை கூட கட்ட உடாது… இப்ப இருக்கறது அந்த மூனு பவுனு நகைதான். பொட்டப் புள்ள வச்சிருக்கேனே. அதுக்கு நாளைக்கு வேணுமே.. வர வருமானம் வாயுக்கும், வவுத்துக்குமே சரியா இருக்குக்கா. அதை யாருகிட்ட குடுத்து வச்சிருக்கேன்னு தெரிஞ்சிக்கத்தான் இத்தனை கலாட்டா.. எப்ப பாத்தாலும் போட்டுத் தள்ளிப்பிடுவேன்னு சொல்லிச் சொல்லி அன்னாடம் கொன்னுகிட்டிருக்கான் கட்டைல போறவன்..”
அவள் சொல்வதை கேட்பதற்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அடுத்த முறை அவன் கலாட்டா செய்வதைப் பார்த்தால் ஏதாவது செய்ய வேண்டும், காவல் துறையில் பணிபுரியும் தன் தோழியின் கணவரிடம் சொல்லி மிரட்டி வைக்கச் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
அடுத்த இரண்டு நாட்களில் அஞ்சலைக்கு வங்கிக் கணக்கு ஆரம்பிக்கும் உதவியும் செய்து கொடுத்தாள் அர்ச்சனா. திடீரென காய்ச்சல் வந்ததால் வங்கிக்கு நான்கு நாட்கள் விடுமுறை சொல்லிவிட்டு வீட்டிலேயே ஓய்வெடுக்க வேண்டி வந்தது. அன்று திங்கட்கிழமை பணிக்குச் செல்லத் தயாரானாள். நான்கு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு கிளம்பிச் செல்வது கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது அவளுக்கு. காய்ச்சல் வந்ததால் இன்னும் அந்த அசதியும் குறையாதலால் சலிப்பாகவும் இருந்தது. ஆனாலும் விடுமுறை இல்லாதலால் மெல்ல கிளம்பினாள் பணிக்கு.
வழக்கம் போல் அந்த அரசாங்கக் குடியிருப்புப் பகுதியை நெருங்கும் போதே, ஒரே கூட்டமும், பரபரப்பும், சாவு மேளமும், ஊதுபத்தி, பூக்களின் மணமும் ஏதோ அசம்பாவிதம் நடந்துள்ளதை தெளிவாக்கியது. உள்மனதில் அஞ்சலை வீட்டில் தான் ஏதோ நடந்துள்ளது என்று தோன்றியது. தன்னையறியாமல் வண்டியை நிறுத்திவிட்டு அஞ்சலை வீடு நோக்கி உள்ளே சென்றாள். மனதில் பெரிய போராட்டமே நடந்து கொண்டிருந்தது. அந்த பாவி சொன்னது போலவே அஞ்சலையைப் போட்டுத் தள்ளிவிட்டான் போல் உள்ளதே… கடவுளே அப்படி ஏதும் நடந்திருக்கக் கூடாது என்று மனதார பிரார்த்தனை செய்தாள். குழந்தை அழுது கொண்டிருந்த்து. நடுவில் கிடத்தி வைத்திருப்பது….. அடக் கடவுளே! அது அஞ்சலையின் கணவன் அல்லவா.. அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது, என்ன நடந்ததோ தெரியவில்லையே என்று. அஞ்சலையின் அருகில் சென்று தோளைத் தொடவும், அவள் துளியும் கண்ணீர் சிந்தாமல் உறுதியான மனநிலையுடன் அசையாமல் உட்கார்ந்திருந்தாள், தன் கணவனின் உடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டு. அர்ச்சனாவின் வருகையை அறிந்து அர்த்தமுடன் அவளைப் பார்த்த பார்வையும், கண்ணில் இருந்த அந்தக் கோபமும் பலவற்றையும் அவளுக்கு நிமிடத்தில் விளக்கிவிட்டது……. !!!