பவள சங்கரி
"விடுங்க .... ஆரும் பார்க்கப் போயினம்.. “ உதடுகள் மட்டும் ஏதோ சொல்வதை உள்ளம் மறுத்து அதுவே தொடர வேண்டும் என்று ஏங்கும் அதிசயத்தை உணர்ந்தாள் தமிழினி.
“தமிழினி, எப்படி இவ்வளவு மென்மையாக இருக்கிறாய்?. அதுசரி, காயம் ஏதும் பட்டதோ? ” கீழே விழப் போனவளை தாங்கிப் பிடித்தபோது, அவன் வார்த்தைகளில் இருந்த அதீத அன்பை உணரும் நேரம் உள்ளமெல்லாம் பூவாய் பூத்தது!
“அதெல்லாம் ஒன்னுமில்லை, விடுங்க.. நான் போய்விட்டு வாறன்”
“என்ன தமிழினி, உன்னுடைய உடம்பு இப்படி நடுங்குது..?”
“உங்கட நாடி மட்டும் என்னவாம்? இப்படி துடிக்குது?” கடைக்கண் பார்வையினால் சொக்கி விழச் செய்தாள் தமிழவனை!.
“தமிழினி, நாளை நான் வாறேன் அங்கே” அவன் கண்களில் பொங்கிய ஆர்வம் அவளையும் தொற்றிக்கொண்டது.
“இங்கே ஒரே ஆட்கள்... கதைக்கவும் ஏலாது. பாலன் அண்ணைக்கு சாடையாக விளங்குது போலத் தெரியுது..”
“ஓமோம்.. என்னட்டையும் கேட்டவ.. நான்.. சீ.. இல்லை எண்டு சொல்லிப் போட்டன்”
”ம்ம்... என்ன.. அப்படி ஒண்டுமில்லையோ?” லேசான செல்லக்கோபம்!
“அப்ப என்ன... நடுத்தெருவுல நிண்டு சத்தம் போட்டு உண்மையச் சொல்லட்டோ?” சிரித்தான் குறும்பாக.
அவள் அவசரமாக மறுத்துத் தலையாட்டினாள்.