Saturday, July 31, 2021

குட்டி அணில்

 

வெளுப்பாய் இருந்த அதை பாலென

ஏமாந்தது முதன்முறையாக அல்ல

பசியில் பத்தும் பறந்துபோம்

என்பதறியா அவ்வணில்.

 

இன்று சோறுகூட எருக்கம்பூவென

ஐயம் கொள்ளவைத்தது பட்டறிவு

அந்த பிஞ்சு நெஞ்சில் வஞ்சம்

புகுந்து பட்டினி போட்டது.

 

பட்டினியால் பரிதவிப்பதற்கு தின்று

தீர்த்துவிட உறுதி கொண்டாலும்

உயிரச்சம் உரக்க குரல் கொடுத்து

உணர்வுகளைச் சிறை பிடித்தது.

 

உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்

உவகையோடு உள்ளொளி புகுத்தி

உத்தமரை உறுதுணையாக்கி உற்றவை

அனைத்தையும் பெற்றுத் தந்தவனால்

சுதந்திரமாய் ஓடித்திரிந்தது.

 

Sunday, July 25, 2021

மீட்டெடுப்பது எப்போது? எப்படி?

 

 

கனவிலும் நினைத்துப் பார்க்காத சம்பவங்கள் உலகையே புரட்டிப் போட்டுவிட்டன. கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்திருக்கிறது என்று மகிழ்ச்சியடைவதா அல்லது மூன்றாம் அலை வந்து தாக்குமோ என்று அஞ்சுவதா என்ற குழப்பம் தீராத நிலைதான் இன்றும். பொது முடக்கம், தொற்று அச்சம் காரணமாக  பணிக்குச் செல்ல முடியாத சூழல், கையிருப்பு, சேமிப்பு என அனைத்தும் கரைந்து போன நிலையில் இன்று சிறுவர்கள் வேலைக்குச் செல்லும் நிலை மீண்டும் உருவாகிவிட்டது. குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க பாடுபட்டதெல்லாம் போக இன்று அவர்களைத் தடுக்கவும் திராணியில்லாமல் வேடிக்கைப் பார்க்கும் நிலையிலேயே அனைவரும் இருக்கிறோம்..  அரசு பள்ளியில் ஆசிரியராக இருக்கும் தோழி ஒருவர் கூறியது வருத்தமளிக்கிறது .. 11ஆம் வகுப்பில் 25 -30  மாணவர்கள் படிக்கும் வகுப்பில் 10-12 மாணவர்களால்தான் இணையவழி வகுப்பில் கலந்து கொள்ள முடிகிறதாம். அதிலும் சில மாணவர்கள், மளிகை கடை, வாகனங்கள் பழுது பார்க்கும் கடை, முடி திருத்தும் கடை போன்று வேலை செய்யும் இடங்களிலிருந்து, அவ்வப்போது இடைவெளி எடுத்து வகுப்பில் இணைவதாகக் கூறினார்.. பொருளாதார வீழ்ச்சி இன்னும் எந்த அளவிற்கு அதிகபட்ச பாதிப்புகளை ஏற்படுத்தப் போகிறது என்று நினைத்துப்பார்த்தால் மேலும் அச்சமாகத்தான் உள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை கொரோனா முதல் அலையின் தாக்கத்தினால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டன. தொற்று குறைந்ததால், 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த ஆரம்பித்தாலும் இரண்டாம் அலையின் தாக்கம் தீவிரமாக மீண்டும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கடந்த ஓராண்டுக்கு மேலாக ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடைபெறுகின்றன. பெரும்பாலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி சென்று சேர்வதில் பல தடைகள் ஏற்படுகின்றன. மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் நின்றுபோவதோடு இடைநிற்கும் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. வீட்டில் சும்மாதானே இருக்கிறார்கள் எனக் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் நிலையை குடும்பச் சூழல் ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் கிடைக்கும் சத்துணவும் கிடைக்காமல் குழந்தைகளின் ஆரோக்கியமும் கேள்விக்குறியாகிறது. பள்ளிகள் எப்போது திறக்கப்படப் போகிறதோ தெரியவில்லை. குழந்தைகளின் வாழ்க்கை எப்போது இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் தெரியவில்லை .. இழந்ததையெல்லாம் மீட்டெடுப்பது எப்போது? எப்படி? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.