Friday, August 17, 2012

வாழ நினைத்தால் வாழலாம்


உலகப்புகழ் மெரீனா கடற்கரை. பலவிதமான வண்ணங்களும், எண்ணங்களும் சுமந்துத் திரியும் மனிதர்களுடன் நாளும் உறவாடும் ஓயாத அலைகள். மாறி மாறி வரும் மக்கள் மத்தியில் என்றும் மாறாமல் அனைத்திற்கும் சாட்சியாய் நிற்கும் கடல் அன்னை. பல்லாயிரம் உயிர்களை பலி வாங்கி, விழுங்கினாலும் பச்சைப்பிள்ளையாய் துள்ளி விளையாடும் தோற்றம். கதிரவன் தம் செங்கிரணங்களை வீசத்துடிக்கும் மங்கிய இளங்காலைப் பொழுது.

சரசரவென கடலோரம் ஈர மணலில் பாதம் பதித்துக் கொண்டிருந்தவளின் நடையில் இருந்த தள்ளாட்டம் ஏதோ உள்ளுணர்வாக தப்பாகச் சொல்ல தன் நடையை எட்டிப்போட்டாள் அனுஜா. வழக்க்மாக் அவள் வாக்கிங் வரும் நேரம் இன்று சற்று தள்ளிப்போனது. தான் நினைத்தது சரியாக இருந்தது புரிந்தது. அந்தப் பெண்ணின் பின்புறம் மட்டுமே தெரிந்தது... ஆளையும், உயரத்தையும் வைத்துப் பார்க்கும்போது இருபது அல்லது ஒன்றிரண்டு முன்பின்னாக வயது கணிக்கலாம். ஏதோ வித்தியாசமாகத் தெரிந்தாள். யோசித்துக் கொண்டே நெருங்கியவள், அதற்குள் அவள் அவ்வளவு விரைவாக கடலில் சென்று இறங்குவாள் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. கடக்க வேண்டிய பத்தடி தூரத்தை அவ்வளவு விரைவாக நான்கு எட்டில் கடந்தது தனக்கே ஆச்சரியம்தான்.. எட்டிப்போய் இழுத்துப் பிடிக்க முயன்றாள். அதற்குள் வேகமாக முன்னேறியவள், அலைகள் இழுத்த இழுப்பிற்கு சமாளிக்க முடியாமல், விழுந்தவளை ஆழத்தில் செல்வதற்குள் பின்னாலிருந்து ஒரு கரம் அணைத்துப் பிடித்து இழுத்தது.

வெளியே கொண்டு வந்து போட்ட அனு, அவள் வயிற்றில் அமுக்கி உள்ளே சென்ற நீரை வெளியேற்றினாள். சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்தவளை பார்த்த மாத்திரத்திலேயே அவளுடைய இந்த பரிதாபமான முடிவிற்கான காரணம் புரிந்தது. மேற்கொண்டு அவளிடம் எதுவுமே பேசாமல் அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள். அவள் என்று சொல்லக் கூடியவளும், மகுடிக்கு கட்டுப்பட்ட நாகமாக அனுவின் பின்னே தொடர்ந்தாள். அனு கூட்டிச்சென்ற இடம் ஒரு ஆசிரமம் போல இருந்தாலும், அந்த காலை வேளையில் மிக சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ராமசாமி என்று யாரையோ பெயர் சொல்லி அழைத்தவள், அவளுக்கு தங்குமிடத்தை காட்டிவிட்டு வரச்சொன்னாள். ஒன்றும் பேசாமல் செல்ல எத்தனித்தவளை, ”உன் பெயர் என்னஎன்ற ஒற்றைக் கேள்வி நின்று திரும்பிப் பார்க்க வைத்தது. ஒரு நிமிடம் அனுஜாவின் கண்களை உற்று நோக்கியவள், “நானாக வைத்துக் கொண்ட பெயர் அம்ருதாஎன்றாள்.

ஒரு புன்னகையை பதிலாகத் தந்தவள், எதையோ யோசித்துக் கொண்டே நகர்ந்தாள் அனுஜா.

மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டது. தன் வாழ்விற்கும் ஓர் அர்த்தம் இருப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. மனதில் இருந்த அந்த பழைய கோபமும், ஆத்திரமும் குறைந்து இன்று அமைதியானதொரு நிலை அம்ருதாவிற்கு. உண்ணும் சோற்றிற்கு ஏற்ற உழைப்பு, அதற்கேற்ற ஊதியம், தையல் பயிற்சி வகுப்பு, யோகாசனம், தியானம், மருத்துவ ஆலோசனை நேரம் என பொழுது வெகு வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. விவரம் தெரிந்த காலத்திலிருந்து பெற்றோரின் பரிவும், பாசமும்கூட உணர்ந்திராதவளுக்கு, இன்று அக்கா, அண்ணன், தம்பி, தங்கை, என எத்த்னையோ உறவுகள். ஆயிரம் இருந்தும், தன்னை ஒதுக்கித் தள்ளிய குடும்பத்தினர் மீது வெறுப்போ, கோபமோ எதுவுமே இல்லாதது தனக்கே ஆச்சரியம்தான். தாங்கொணா அலட்சியப் பார்வைகளும், எள்ளி நகையாடும் பேச்சுக்களும் பலவற்றை சகித்துக் கொண்டாலும், தன்னைப் பெற்றவர்களே காட்டிய இழிவான பார்வையையும், அவர்களுடைய தர்மசங்கடங்களையும் ஒவ்வொரு நாளும் சகித்துக் கொள்ள இயலாமையில்தான் வீட்டை விட்டு சொல்லாமல்,கொள்ளாமல் ஓடி வர வேண்டியதாகியது. ஏதோ தானே விரும்பி இப்பிறவியை எடுத்துக் கொண்டது போல பெற்றோரின் நடவடிக்கை அவள் நெஞ்சை முள்ளாய் தைத்தது. மனம் என்ற ஒன்று மட்டும் எல்லோரைப் போன்று தனக்கும் பொதுவாக அமைந்துவிட்டதை அவர்களால் உணர முடியாமல் போனதுதான் வேதனையின் உச்சம்....

ஆணாய்ப் பிறந்த அண்ணனும், பெண்ணாய்ப் பிறந்த தங்கையும் பெற்ற அன்பும், பாசமும், இரண்டுங்கெட்டானாக பிறந்த தனக்குக் கிடைக்காததை பிஞ்சிலேயே உணர்ந்தவள். இது நடக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் போல, தான் பெற்ற குழந்தைக்கு அடிப்படை வாழ்வாதார சூழலையாவது ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்ற குறைந்தபட்ச எண்ணம் கூட இல்லாமல் போனதை என்ன செய்ய முடியும்..

கழுகுக் கூட்டத்தில் சிக்கிய கோழிக்குஞ்சாக ஆன தன் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள முடியாமல் அன்று எடுத்த முடிவு சில மணித்துளிகளிலேயே தலையெழுத்தையே மாற்றியமைத்து விட்ட வரமாக எண்ணத்தோன்றியது. பெற்றோரையும், உடன் பிறப்புக்களையும் அவர்கள் அறியாமல் அவ்வப்போது ஒளிந்திருந்து பார்த்து வருவாள். ஒரு நாளாவது தன்னைப்பற்றி யாராவது தவறியாவது ஒரு வார்த்தை பேசக்கூடாதா என்ற ஏக்கமும் இருக்கும். விட்டது தொல்லை என்று நிம்மதியாக, நினைப்பதுகூட பாவம் என்று இருப்பவர்கள், அர்த்தநாரீஸ்வரரை மட்டும் விழுந்து, விழுந்து கும்பிடுவது வேடிக்கையாக இருந்தது.

வீட்டை விட்டு வந்த இந்த பத்து ஆண்டுகளில் பட்ட வேதனைகள் கடலளவையும் மிஞ்சுமே... பிச்சை எடுத்து வயிறு வளர்த்தபோது கூட படாத சிரமங்கள் பருவம் வந்த பிறகு கழுகுகளிடம் சிக்கி சீரழந்த நேரம் மரணமே மேல் என்று நினைக்கத் தோன்றியது. இன்று தானும் இந்த உலகில் வாழ்த்தகுதி வாய்ந்த ஒரு உயிர் என்பதை உணரச் செய்த அனுஜாவை தெய்வமாகவே கொண்டாடினாள். அது மட்டுமல்லாமல், தன்னால் மூன்று ஆதரவற்ற குழந்தைகளை தத்து எடுத்து அவர்களைப் படிக்க வைக்க முடிகிறது என்று எண்ணும்போது பெருமை பொங்கியது..

அன்று வங்கிக்கு பணம் கட்டுவதற்காகச் சென்று திரும்பும் வழியில் தெருவோரம் ஏதோ சத்தமும், கைகலப்பும் தெரிந்தது. தன்னுடைய இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு நெருங்கியவள், அங்கு ஒரு ஐந்து ரூபாய் பணத்திற்காக இரண்டு குரூப்பாக பிரிந்து அடிதடி போட்டுக்கொண்டிருந்த திருநங்கைகளைப் பார்க்கும் போது வேதனையாக இருந்தது. பலமுறை இவர்களிடம் விடுதியில் வந்து சேரும்படி சொல்லியும், அங்கிருக்கும் கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் தொடர்ந்து தங்க மறுத்து இப்படி தெருவில் காட்சிப் பொருளாக ஆகிறார்களே என்ற கோபமும் ஆத்திரமும் வந்தது.

அடிப்பாவிகளா... ஏண்டி இப்படி செய்யறீங்க எத்தனைவாட்டி சொன்னாலும் திருந்த மாட்டீங்கறீங்க.. எதுக்குடி இந்த சுயபச்சாதாபம் உங்களுக்கு... ஆண்டவன் நமக்கு படைப்புலதான வஞ்சம் பண்ணிப்புட்டான்.. மத்தவிங்களைப்போல நல்ல மூளையும், சக்தியும் கொடுத்திருக்கான்.. நமக்குனு எத்தனையோ தனிப்பட்ட திறமைகள கொடுத்திருக்கானே.. கைகால் இல்லாதவன்கூட தன்னால முடிஞ்ச தொழிலைச் செய்யுறான்.. நாம் மட்டும் ஏன் இப்படி கையாலாகாம்த் திரியணும்.. நாம ஒழுங்கா ஏதோ ஒரு தொழில நேர்மையா செஞ்சாத்தானே அரசாங்கமும் நம்மள் புரிஞ்சிக்கிட்டு சலுகைகள தருவாங்க. மக்களும் மரியாதையா நடத்துவாங்க.. இப்படி நம்மளையே அசிங்கப்படுத்திக்கவா இந்த பொறப்பு... நம்ம வாழ்க்கைய நாமதானடி வாழணும்.. வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்..... ?”

ஐய.. இங்க பாருங்கடி இந்தக் கூத்தை... அட்வைஸ் பண்றாளாம்... நாங்க என்ன கோட்டையப் புடிக்கவா போட்டுக்கிட்டு கிடக்கறோம்.. அடுத்த நேர வவுத்துப்பாடு.. கஞ்சிக்கிடி.. பசிக் கொடுமை பட்டாத்தான தெரியும்.. வந்துட்டா என்னமோ புத்தி சொல்ல..

போக்குவரத்து இடைஞ்சல் ஏற்பட்டதால், யாரோ கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் வந்து வழக்கம் போல மிரட்டி, ஜீப்பில் ஏறச்சொன்ன போது, அம்ருதா, அவர்களுக்காக வாதாடி, காப்பாற்றினாலும், இது நிரந்தரம் அல்ல . விரைவிலேயே அடுத்த சண்டைக்குத் தயாராகிவிடுவார்கள்... சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்களே என்ற வேதனையுடனே, அடுத்து தான் கலந்து கொள்ள வேண்டிய தொலைக்காட்சி பேட்டிக்கான நேரம் ஆகிவிட்டதே என்று ஓட்டமாக ஓடினாள். தன்னுடைய த்னனம்பிக்கையையும், மனத்தெளிவையும் பாராட்டும் வகையிலும், இது போன்று பாதிக்கப்பட்டவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அம்ருதாவை பேட்டி எடுத்தார்கள். நிகழ்ச்சி முடிந்து திரும்ப இரவு வெகுநேரம் ஆகிவிட்டது.

இரயில் நிலையத்தின் அருகில் உள்ள குறுக்குச் சந்தின் வழியாக சென்றால் சீக்கிரம் விடுதியை அடைந்து விடலாம் என்று நினைத்து வண்டியைத் திருப்பியவள், அந்த சந்தில் தெருவிளக்கு பழுதாகிப் போனதால் இருண்டு கிடந்தது.. வேகமாகக்கடந்து போய் விடலாம் என்று நினைத்து வண்டியை முடுக்கியவள், கொஞ்ச தூரம் சென்றவுடன் ஹெட்லைட் வெளிச்சத்தில் ஒரு பெண் ஓடுவதையும், முரட்டு உருவம் ஒன்று துரத்திக்கொண்டு ஓடி, அந்தப் பெண்ணை நெருங்கும் சமயம் சரியாகப் பார்த்துவிட்டாள். சற்றும் தயங்காமல் அவர்களை நெருங்கி வண்டியை நிறுத்தி விட்டு, இறங்கினாள். பளிச்சென்ற ஒளியில் கண்கள்கூச தடுமாறிய அந்த உருவம் கொஞ்சம் தயங்க, அந்த இடைவெளியில் கையை மடக்கி, பலமனைத்தும் திரட்டி, பொளேரென அவன் பிடரியில் ஒன்று விட்டாள். அப்படியே சுருண்டு விழுந்தவன் கதி என்னவானது என்றுகூட கவனிக்காமல் அந்தப் பெண்ணை கையைப் பிடித்து இழுத்து வந்து வண்டியை ஸ்டார்ட் செய்து அவளை உட்கார வைத்து வேகமாகக் கிளப்பினாள்.. மெயின் ரோடிற்கு வந்தவுடன்தான் உயிரே வந்தது அவளுக்கு. அந்தப் பெண்ணை அப்போதுதான் முழுவதுமாக கவனித்தாள்.. ஆச்சரியத்தில் கண்கள் விரிந்து கலங்கிப் போனது. தன் உடன் பிறந்த சகோதரியைக் காப்பாற்றியிருப்பது தெரிந்தவுடன், தன் பிறப்பிற்கே ஒரு அர்த்தம் கிடைத்தது போன்று உணர்ந்தாள் அவள்.. இதை அறியாமலே பயத்தில் உரைந்து போயிருந்த அந்த பெண் அம்ருதாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்கள் கலங்க ரொம்ப நன்றிக்கா.. ஆண்டவனா பார்த்துதான் உங்களை அனுப்பி என்னைக் காப்பாற்ற வைத்தான். கம்ப்யூட்டர் கிளாஸ் போயிட்டு திரும்பி வந்தேன். கூட வர பிள்ளைக இன்னைக்கு வரல.. தனியா வந்தேன். குறுக்கு சந்துல வந்தது தப்பாப் போச்சு.. நல்ல நேரத்துல தெய்வமாட்டமா வந்து அந்த குடிகார பாவிகிட்ட இருந்து காப்பாத்திட்டீங்கஎன்று கண்கள் கலங்க நெகிழ்ந்து போனாள். தன் உடன்பிறப்பின் ஸ்பரிசம் பட்டவுடன், புத்துயிர் பெற்றது போன்று உணர்ந்தவள், ஒன்றும் பேச முடியாமல், அவளிடம் ஏதும் காட்டிக் கொள்ளாமல் வீடு எங்கிருக்கிறது என்று கேட்டு, வீட்டின் முனையிலேயே இறக்கிவிட்டுச் சென்றாள்... அக்கா... நன்றிக்கா என்று அன்பாக தன் உயிர்த் தங்கை சொல்வது காதில் கேட்டும், திரும்பி கையை ஆட்டிவிட்டு வேகமாக நகர்ந்தாள் அதே மகிழ்ச்சியுடன்......

நன்றி : திண்ணை

Tuesday, August 14, 2012

தியாக தீபம்!



தியாக தீபம் - அன்னை இந்திரா (1917 - 1984)

"If I die a violent death as some fear and a few are plotting, I know the violence will be in the thought and the action of the assassin, not in my dying......!" Indira Gandhi.

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்!” - மகாகவி பாரதி.

நெஞ்சுரமும், நேர்மைத்திறமும், நேர் கொண்ட பார்வையும் அஞ்சா நெஞ்சமும் கொண்ட மாதர் குல திலகம் , 'இரும்பு பெண்மணி’, இந்திரா பிரியதர்சினி, அவதரித்தது, ஜவஹர்லால் நேரு மற்றும் கமலா நேரு என்ற புகழ்பெற்ற பெற்றோரின் கருவில். கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய முப்பெரும் நதிகள் ஒன்று கூடும் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் அலகாபாத் நகரில். மற்ற குழந்தைகளைப் போன்று பெற்றோரின் முழுமையான அரவணைப்பில் கடந்ததல்ல அவருடைய இளம் பிராயம். ஆம், நவம்பர் 19, 1917இல் பிறந்தார் இவர். பிறந்த இரண்டாண்டுகளில், 1919 ஆம் ஆண்டு நம் தேசத் தந்தை மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, தென் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பியவுடன், நேரு குடும்பத்தின் அடிக்கடி தொடர் சந்திப்பின் மூலமாக இந்திய சுதந்திர தாகத்தை எழுச்சியூட்டி, அவர்களை முழுமையாக ஈடுபடச் செய்தார். அவருடைய நான்காம் வயதில், தந்தை ஜவஹர்லால் நேருவும், தாத்தா மோத்திலால் நேருவும் முதல் முறையாக சிறை சென்ற போது. பின்பு தாயும் இணைந்து கொள்ள, போகப்போக அதுவே வாடிக்கையாகிவிட்டிருக்கிறது. பிற்காலங்களில் தம் இளம் பிராயத்தை நினைவு கூர்கையில் இளம் வயதில் ஒரு பாதுகாப்பற்ற உணர்வு தனக்கு இருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். தாயின் மெல்லிய உடல் வாகையையும், தந்தையின் கூரிய நாசியும், துணிவும் கொண்டவர்.

அவர் பிறந்த நேரம் முதல் உலகப் போர் முடிந்த நேரம். தந்தையும், தாத்தாவும் சிறையில் அடைபட,, குடும்பத்தின் மற்ற பெண்களுடன் குழந்தை இந்திராவும் காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் தங்க வேண்டிய கட்டாயம். ஆசிரம வாழ்க்கை புதிய அனுபவத்தையும், சுதந்திரப் போராட்ட வித்தையும் விதைத்தது. அதன் காரணமாக பால்யகால விளையாட்டே மேடைப்பேச்சு, கைது, கூட்டம் ஆங்கிலப் போர் வீரர்களை போரிட்டு முறியடிப்பது என்பது போல் அமைந்தது, அவருடைய பிற்கால வாழ்க்கை முறைமைகளுக்கு அடித்தளமாக அமைந்தது. இதுவே அவர் ஒரு சுதந்திர உணர்வுள்ள , உறுதியான இதயம் கொண்ட ஒரு பெண்ணாக வளர வழி வகுத்தது.

அவருடைய குழந்தைப்பள்ளி தில்லியிலும், பள்ளிப்படிப்பு முதலில் அலகாபாத் நகரில் ஒரு கான்வெண்ட் பள்ளியிலும் பின்பு ஒரு தங்கும் பள்ளியிலும் தொடர்ந்தது. புத்தகம் படிப்பதில் ஆழ்ந்த விருப்பம் கொண்டவராக வளர்ந்தார். தந்தை வாங்கி வைத்திருந்த பெரும்பாலான புத்தகங்களை வாசித்திருக்கிறார். கவிஞர், எழுத்தாளர், ஓவியர் என பல்வேறு முகங்கள் கொண்ட ரவீந்திரநாத் தாகூரின், சாந்தி நிகேதன் பள்ளியில் , சேர்க்கப்பட்டார். இதைப்பற்றிக் கூறும் போது அவர், “ தந்தையின் முயற்சியால் ஏற்கனவே எனக்கு இலக்கியத் தொடர்பு இருப்பினும், சாந்தி நிகேதனுக்குச் சென்றவுடன் தாகூர் மூலமாக கலையுலகின் கதவு தானாகத் திறந்ததுஎன்றார். தன்னுடைய 11வது வயதில் இராமாயணக் காப்பியத்தில் வருவது போன்று, வானரப் படையை நிறுவ முயன்றார். தன் வயதொத்த சிறுவர் சிறுமியரை இணைத்து, வானரசேனை என்ற ஒரு அமைப்பை ஆரம்பித்து வைத்தார்.

வானரசேனை என்ற இந்த அமைப்பு பல அரும் பணிகளைச் செய்தன. அதாவது, சுதந்திரப் போராட்ட வீரார்களுக்கு உணவு, குடிநீர் விநியோகம் செய்வது, கொடிகள் தைத்துக் கொடுப்பது, கல்வியறிவற்றவர்களுக்கு தேவையான மடல்கள் எழுதிக் கொடுப்பது, விடுதலைப் போராட்டங்களில் கலந்து கொண்டு தலைமறைவாக வாழ்பவர்களுக்கு மடல் கொண்டு சேர்க்கும் சேவையைச் செய்தல், சமையல் செய்து கொடுத்தல் போன்ற எண்ணற்றப் பணிகள் செய்து வந்தனர். இவையனைத்தும் அண்ணல் காந்தியடிகளின் கொள்கைகளின் தாக்கம்தான் என்பதை அவரே, 1930 இல் பூனாவில் ஒரு பள்ளியில் படிக்கும் போது, ” காந்தியடிகள் என் வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருந்தார். என் ஒவ்வொரு செயல்களிலும் முன்னேற்றங்களிலும் அவருக்கு பெரும் பங்கு உண்டு என்ற சொற்கள் மூலம் அதை உறுதிபடுத்தினார்.

பாலசர்க்கா சங்கம்என்ற நிறுவனத்தை , காந்தியடிகளின் அறிவுரைப்படி நிறுவி, சிறுவர், சிறுமியுடன், நூற்பு வேள்வியை மேற்கொண்டார். ஆனந்த பவனம் என்ற தம்முடைய மாளிகையின் மூத்த பணியாளர் ஒருவருக்கு தம் இளம் வயதிலேயே கல்வி கற்பிக்கும் பணியும் மேற்கொண்டார். தம் இல்லத்திற்கு சற்று அருகாமையில் இருந்த ஒரு தொழுநோய் இல்லத்திற்கு அடிக்கடி சென்று தன்னால் ஆன சேவைகளைச் செய்ய முற்பட்டிருக்கிறார்.

இந்திரா தம்முடைய 17 வது வயதில் தன் தாய் கமலா நேருவிற்கு காசநோயினால் உடல் நலம் பாதிக்கப்பட்ட காரணத்தினால், அவருடைய மருத்துவத்திற்காக அவருடன் சுவிட்சர்லாந்து செல்லவேண்டி வந்தது. அந்த நேரத்தில் தந்தையும் சிறைச்சாலையில், ஆனால் 1936 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், 28ஆம் நாள் தாய் கமலா நேரு இறந்தபோது தந்தை விடுதலை செய்யப்பட்டு, உடனிருந்தார். இந்தியாவிற்கு திரும்பியபோது, மிக அழுத்தமான ஒரு சூழலில் சிக்குண்டு இருந்தார். வேதனை, கவலை, அனைத்திற்கும் மேலாக தனிமை! இந்த நேரத்தில் தம் பால்ய கால நண்பரான பிரோஸ்காந்திதான் இவருக்கு உடனிருந்து ஆறுதலளித்து வந்தார். நேரு குடும்பத்தின் மீது ஆழ்ந்த பற்று கொண்டவர் இவர். இரண்டாம் உலகப் போர் தொடங்கப் போகும் சில காலம் முன்னர்தான் அவர் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் சேர்ந்தார்.

மோதிலால் நேரு தம் பெருஞ்செல்வத்தை தேசத்திற்காக அளித்துவிட்டார். நேரு தாம் எழுதிய புத்தகத்தின் மூலமாகக் கிடைத்த வருமானத்தைக் கொண்டுதான் தம் மகளைப் படிக்க வைத்தார்.

ஒரு ஆண்டிற்குள்ளாக அங்கு அவருடைய உடல் நிலை பாதிக்கப்பட்டு, சுவிட்சர்லாந்து சென்று மருத்துவம் பார்க்க வேண்டி வந்தது. நோயின் கொடுமையும், தனிமையும் ஒரு சேர வாட்ட, அந்த நேரத்தில் பிரோஸ்காந்தி அவருக்குத் துணையாகவும், ஆதரவாகவும் இருந்துள்ளார். 1939 இல் இரண்டாம் உலகப்போர் ஆரம்பமானவுடன், இந்திரா, கப்பல் மூலமாக, பிரோஸ்காந்தியுடன் இந்தியா வந்து சேர்ந்தார். தன் தந்தையின் விருப்பத்திற்கு மாறாக பிரோஸ்காந்தியை 1941 ஆம் ஆண்டு,மார்ச் மாதம் அலகாபாத்தில் அவரை மணந்து கொண்டு, லக்னோவில் தம் திருமண வாழ்க்கையைத் துவங்கினார். நேஷனல் ஹெரால்ட் பத்திரிக்கையில் மேலாளராக பணி புரிந்தார் பிரோஸ்காந்தி. அப்பத்திரிக்கையின் பெண்கள் பகுதியை கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் இந்திராவிற்குக் கிடைத்தது. 1944 ஆகஸ்ட் 20 ஆம் தேதி மும்பையில் ராஜீவ் காந்தியைப் பெற்றெடுத்தார் இந்திரா.

பிரோகம் மும்பையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரசு கமிட்டி கூட்டத்திற்கு இந்திராவும் சென்றார். வெள்ளையனே வெளியேறுஎன்ற இயக்கமும் இங்குதான் துவக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில், நேருஜி, இந்திரா காந்தி மற்றும் பிரோஸ்காந்தி மூவரும் கைது செய்யப்பட்டு , சிறை வைக்கப்பட்டனர்.

நம் இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திருநாளும், ஆகஸ்ட் 15 ஆம் நாள் 1947 ஆம் ஆண்டு வந்தது. ஆனாலும் இந்திய - பாகிஸ்தான் பிரிவினையும் உடன் வந்தது, மகாத்மாவை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. மத வெறியும், வகுப்புக் கலவரங்களும் நாட்டில் பெருங்குழப்பத்தை ஏற்படுத்தின. மக்கள் பாகிஸ்தானிலிருந்து கூட்டம் கூட்டமாக அகதிகளாக வந்தனர். இந்த அகதிகள் முகாமிற்கு அன்னை இந்திரா நேரிடையாகச் சென்று, அவர்களுக்கு உணவு, உடை என எந்த குறைவும் இல்லாமல் பார்த்துக் கொண்டார். இஸ்லாமியர்கள் வாழ்ந்த பகுதிக்கும் எந்த அச்சமுமின்றி சென்று வந்தார்.

சுதந்திர இந்தியாவின் பிரதம மந்திரியாக பதவியேற்ற ஜவஹர்லால் நேரு, தம் இறுதிக் காலமான 1967 வரை பதவியில் இருந்தார். அந்த காலகட்டத்தில், தாய் உயிருடன் இல்லாத காரணத்தினால் , குடும்பப் பராமரிப்பிற்காக இந்திராவும் , தம் கணவர், குழந்தைகளுடன் மும்மூர்த்தி இல்லத்தில் (Teen Murthi House) தங்க வேண்டி வந்தது. உலக நாடுகளின் அழைப்பை ஏற்ற தந்தையுடன் பல நாடுகளுக்குப் பயணம் செய்வதற்கும், பல அரசியல் பிரபலங்களைச் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டியது அவருக்கு. 18 ஆண்டு காலம் தந்தையுடன் கற்ற அரசியல் நெளிவு சுளிவுகள், இந்திராவை ஒரு பெரும் ராஜதந்திரியாகவும், சிறந்த அரசியல்வாதியாகவும் பண்படுத்தியது. பாரிசில் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபை கூட்டத்திற்கும், காமன்வெல்த் மாநாட்டிற்கும், மற்றும் அமெரிக்காவிற்கும் தன் தந்தையுடன் சென்று வந்தது பல அனுபவங்களைக் கொடுத்தது. எலிசபெத் மகாராணியின் மகுடாபிஷேகதிற்கான அழைப்பை ஏற்று அங்கு சென்றபோது, வின்ஸ்டன் சர்ச்சிலையும் சந்தித்தார். 1952 இல் தீன் மூர்த்தி பவனுக்கு வந்த அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி திருமதி ரூஸ்வெல்ட்டைச் சந்திக்கும் வாய்ப்பையும் பெற்றார்.

1959 இல், பிரதம மந்திரி லால் பகதூர் சாஸ்திரி இந்திராகாந்தி அம்மையாரை செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சராக நியமித்தார். குறைந்த விலையில் வானொலி தயாரிப்பதையும், குடும்ப நலத்திட்டத்தையும் துவக்கி வைத்தார். பிரோஸ்காந்தி பாராளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1956 முதல் 1960 வரை அகில இந்திய காங்கிரசின் இளைஞர் அணித்தலைவராக இருந்தார் இந்திரா காந்தி. 1960 ஆம் ஆண்டு பிரோஸ்காந்தியின் திடீர் மறைவு இந்திராவை மிகவும் பாதித்தது. 1964 ஆம் ஆண்டு, புவனேசுவரம் காங்கிரசு மாநாட்டில் மயக்கமுற்று விழுந்த தந்தை நேருஜியை கண்ணும் கருத்துமாக மகள் கவனித்துக் கொண்டாலும், காலன் அவரையும் விட்டு வைக்காமல் மே மாதம் 27ஆம் நாள் அதே வருடத்தில் அழைத்துக் கொண்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் , வலுவடைந்திருந்த நேரம், தமிழ் நாட்டிற்கு வந்திருந்த அன்னை இந்திரா மக்களின் நல்லாதரவையும் பெற்றிருந்தார். தேசிய ஒருமைப்பாட்டை மிகவும் நேசித்த அன்னையின் சேவையைப் பாராட்டும் விதமாக அவர்தம் பிறந்த நாளை தேசிய ஒருமைப்பாட்டு தினமாகக் கொண்டாடுவதும் சிறப்பு

பாகிஸ்தான் படை வீரர்களின் காஷ்மீர் ஊடுறுவல் கலவரத்தை ஏற்படுத்தியது. இந்திராகாந்தி ஸ்ரீநகர் சென்று பல பொதுக்கூட்டங்களில் உரையாற்றினார். போர் உருவாகி, நிறுத்தமும் ஏற்பட்டது. சிப்பாய்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஊக்கமளித்தார். பாகிஸ்தானுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்வதற்காக லால் பகதூர் சாஸ்திரி ரஷ்யாவிலுள்ள தாஷ்கண்டிற்கு சென்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்பு அங்கேயே லால் பகதூர் சாஸ்திரி மாரடைப்பால் காலமானார். அவர் மறைவிற்குப் பிறகு 1966 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 25ம் நாள் இந்தியாவின் பிரதமர் ஆனார். காமராசரின் உறுதுணை பெரும் பலமானது இவருக்கு. பிரதமராக இவர் ஆற்றிய தொண்டு பாரே புகழும் வண்ணம் இருந்தது!

1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து இலட்சக்கணக்கான அகதிகள் சாரிசாரியாக இந்தியா நோக்கி வர ஆரம்பித்தார்கள். இது பெரும் பிரச்சனையாக உருவெடுக்க ஆரம்பித்த நேரம், இந்திராவின் நண்பர் ஒருவர், தான் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாட்டிற்கும், அந்தக் கோடை விடுமுறையில் செல்லப் போவதாக சொன்னபோது, அன்னை சற்றும் தயங்காது, “ பலர் உங்களிடம் வந்து இந்தியாவில் என்ன நடக்கிறது என்று கேட்பார்கள். அப்போது நீங்கள், இன்னும் ஓர் ஆண்டு காலத்தில் மேற்கு வங்காளத்திலிருந்து இந்திய மண்ணிற்கு வரும் அகதிகளே இருக்க மாட்டார்கள் என்று இந்தியப் பிரதமர் ,அதிகாரப்பூர்வமாக அறிவித்ததாகச் சொல்லுங்கள்என்றார். மேற்கு வங்க இடதுசாரிகளின் கிளர்ச்சியைத் துணிவுடன் எதிர்கொண்டு ஜனநாயக முறையில் சமாளித்தார். கேரளாவில் உணவுப் பிரச்சனை போன்ற பல பிரச்சனைகள் தலை தூக்கிய நேரம் அது. வாஷ்ங்டன் சென்று ஜனாதிபதியுடன் பேசிக் கொண்டிருந்த போது, “ என் நாட்டு மக்களுக்காக விடம் அருந்தச் சொன்னாலும், தயங்காமல் அருந்துவேன்என்று சொன்னது அவர் நாட்டின் மீது கொண்டிருந்த அபரிமிதமான பற்றைக் காட்டியது. அவருடைய துணிச்சலான போக்கு பல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டது.

இந்து மதத்தின் வேதாந்தத் தத்துவங்களில் எனக்கு நல்ல நம்பிக்கை இருந்தாலும், மனித குலத்தைப் பிரிக்கும் அந்த மதவெறியைத் தீவிரமாக எதிர்க்கிறேன்என்ற தெளிவான சிந்தனை கொண்டிருந்தார். உலகளவில், பொதுவுடைமை அல்லாத 70 நாடுகள் பங்கு கொண்ட, வாக்கெடுப்பில், உலகப்புகழ் பெற்ற தலைவராக இந்திரா காந்தி அம்மையாரே தேர்ந்தெடுக்கப்படது குறிப்பிடத்தக்கது. இவர் செய்த பல அரிய சாதனைகளே இதற்குக் காரணம்.தன் ஆட்சிக் காலத்தில் நாணயத்தின் மதிப்பைக் குறைத்தார். உச்சநீதி மன்ற தலைமைப் பதவி நியமனத்தை மூப்புரிமை அடிப்படையில் செய்யும் மரபை மாற்றியமைத்தார்.

பஞ்சாப் கலவரம் தீவிரமான வேளையில் அவர்களை ஒடுக்க பொற்கோவிலுக்குள் இராணுவத்தை அனுப்பினார். 1984 ஆம் ஆண்டில், ‘ஆபரேஷன் புளூ ஸ்டார் தீவிரவாதிகளை ஒடுக்க வைத்ததோடு பிந்த்ரன்வாலே கொல்லப்பட்டார். இந்த நேரத்தில்தான் சீக்கிய மக்களின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டி வந்தது அவருக்கு. ஜனநாயகத்தைப் பாதுகாக்க நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்த வேண்டி வந்தது. 1969 இல் பதினான்கு மிகப்பெரிய வங்கிகள் தேசிய உடமையாக்கப்பட்டது. பத்திரிக்கை தணிக்கை முறை ஒழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மன்னர்களுக்கு அளிக்கப்பட்ட மானியங்கள் நிறுத்தப்பட்டது. பஞ்சாப் மட்டுமன்றி, காஷ்மீர், மணிப்பூர், அஸ்ஸாம், நாகாலாந்து, மிசோரம் ஆகிய இடங்களில் ஏற்பட்ட பிரிவினை வாதமும் முடக்கப்பட்டது. இப்படி பல்வேறு சோதனைகளைக் களைந்து சாதனைகளாக மாற்றிய பெருமை அம்மையாரையேச் சேரும்.

அவருடைய பல்வேறு நாட்டு நலப்பணித்திட்டங்கள் ,மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதில் முக்கியமானது இருபது அம்சத் திட்டம். இத்திட்டத்தின் மூலம், மலை சாதி மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், கிராமப்புற, வறுமைக் கோட்டின் கீழே உள்ள மகளிர், ஆகியோரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட இத்திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அறிவியல் துறையும், வான் ஆய்வு மையங்களும் பெரும் வளர்ச்சி கண்டது அம்மையாரின் ஆட்சிக்காலத்தில். பொருளாதாரமும் நல்ல வளர்ச்சியடைந்தது. நம் இந்திய நாட்டு விஞ்ஞானிகளின் தனிப்பட்ட முயற்சியால் அணு ஆய்வு சோதனையிலும் வெற்றி கண்டதும் குறிப்பிடத்தக்கது. பல ஏவுகணைகள் விண்ணில் செலுத்தப்பட்டன. தொலைத்தொடர்பிற்கென பல கோள்கள் செலுத்தப்பட்டன. இன்சாட் A, B விண் வெளிக்கலங்கள், அணுமின் நிலையங்கள், பெரிய தொழிற்சாலைகள் என அனைத்தும் வெற்றிகரமாக செயல்பட்டன.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளை சீரிய முறையில் நடத்தியமைக்காக 1982 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் கழகத்தின் விருது இவருக்கு வழங்கப்பட்டது. தொள்ளாயிரத்தைம்பது நாடுகள் இணைந்த கூட்டுச் சேரா இயக்கத்தின் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, தன்னுடைய அன்பான போக்கினாலும், சாமர்த்தியமான செயல்களினாலும், நாடுகளுக்கிடையே ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களைத் தீர்த்து வைத்தார். ஓயாத உழைப்பும், உன்னத முயற்சியும், நாட்டை உயர்த்த வேண்டும் என்ற உயரிய நோக்கும் அவரை உச்சாணியில் ஏற்றி வைத்த வேளையில், துரதிருஷ்டவசமாக, அக்டோபர் 31ந்தேதி, 1984 ஆம் ஆண்டு, அவருடைய இரண்டு சீக்கிய மெய்க்காப்பாளர்களான பியாந்த்சிங் மற்றும் சத்வந்த்சிங் என்பவர்களால் ஈவு இரக்கமின்றி, சுட்டுக் கொல்லப்பட்டார். தன்னிகரில்லா அந்தத் தியாகச்சுடரின் அஸ்தி நாற்பது கலசங்களில் சேகரிக்கப்பட்டு, மக்களின் அஞ்சலிக்காக நாட்டின் பல முக்கிய தலைநகரங்களில் வைக்கப்பட்டிருந்தது. யமுனை ஆற்றங்கரையில் அவர்தம் நல்லுடல் தகனம் செய்யப்பட்டது.

நல்ல பல குறிக்கோள்களை , பல்வேறு சோதனைகளுக்கிடையேயும் நிறைவேற்றிக் காட்டிய சாதனைப் பெண்மணி அன்னை இந்திரா. மனிதாபிமானம், சகோதரத்துவம், அநியாயத்தைத் தட்டிக்கேட்கும் துணிச்சல், சகமனிதர்களிடம் அன்பு, நாட்டுப்பற்று, விடாமுயற்சி இப்படி ஆக்கப்பூர்வமான நல்லெண்ணங்கள் மூலமாகவே நாட்டில் பல அரிய நற்பணிகள் செய்து தம் இன்னுயிரையும் ஈந்தார். அவருடைய சாதனை வாழ்க்கை பல்லோருக்கும் முன்னுதாரணமாக இருப்பதில் அதிசயமில்லை. பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக வாழ்ந்து காட்டியவர் அன்னை இந்திரா காந்தி!

நன்றி : திண்ணை வெளியீடு

Sunday, August 12, 2012

மனிதப் பயிர்களுக்கு மழையைப் போன்றவர்!


பவள சங்கரி

தி.க.சிவசங்கரன் - சிறப்பு நேர்காணல்

'நான் ஒரு சாதாரண களப்பணியாளன்’ என்று தம்முடைய சாகித்திய அகாதமி பரிசு பெறும் விழாவில் நிறைகுடமாகத் தம்மை வெளிப்படுத்திக் கொண்ட தி.க.சி. என்று இலக்கிய வட்டாரத்தில் அழைக்கப்பெறும் திரு. தி.க. சிவசங்கரன் அவர்கள் கவிஞர், சிறுகதை ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், கட்டுரையாளர், பத்திரிக்கை ஆசிரியர், சிறந்த விமர்சகர் என பன்முகங்கள் கொண்ட ஒரு வல்லமையளார். தனக்குச் சரி எனப்படுவதை அழுத்தமாக எடுத்துச் சொல்கிற தன்மையுடையவர் என்று மூத்த எழுத்தாளர் திரு வல்லிக்கண்ணனால் பாராட்டப் பெற்றவர், திறனாய்வுத் தென்றல் தி.க.சி அவர்களின் முழு பரிமாணங்களையும், எஸ்.இராஜகுமாரன் இயக்கிய ‘21இ சுடலைமாடன் கோயில் தெரு, திருநெல்வேலி டவுன்’, என்ற ஆவணப்படம் வாயிலாக, கண்டு உணர முடிகிறது. கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களால் ‘Literrary Activist' அதாவது ‘தமது உற்பத்தி அளவினை அல்லது தம் குழுவின் உற்பத்தியளவினைப் பெருக்கி வெற்றி காணும் பொதுவுடைமைக் கட்சி உழைப்பாளர்’ என்று பொருள்படும்படி பாராட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

8/8/2012 புதன்கிழமையன்று, ஈரோடு புத்தகத் திருவிழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள்ள வந்திருந்த திரு தி.க.சி. அவர்களுடன் நம் வல்லமை இதழுக்காக நேர்காணல் எடுக்க சந்தித்த போது அவருடைய உற்சாகமும், உபசரிப்பும், சுறுசுறுப்பும், 88 வயதை சுத்தமாக மறைத்து விட்டது ஆச்சரியம். மிக எளிமையான தோற்றமும், சக மனிதர்களின் மீது அவர் காட்டும் நெருங்கிய நட்புறவும், அவர்பால் நம்மை எளிதாக ஈர்க்கச் செய்கிறது. ஒவ்வொரு பேச்சிலும், செயலிலும் பரந்த சமூகச் சிந்தனையும், நல்ல மனிதாபிமான நோக்கமும் வெளிப்படையாகத் தெரிகிறது. நல்ல படைப்புகளை வழங்குவதோடு, மனிதர்களையும் நாடிப்ப்ழகும் இவருடைய தன்மையினால், சாதாரண மனிதர்களிடையேயும் இவருடைய எழுத்து சென்றடைவதோடு, அவர்களுக்குள் இருக்கும் படைப்பாற்றலையும் வெளிக்கொணரும் வல்லமை பெற்றுவிடுகிறது. மார்க்சிய தத்துவ நோக்குடன் படைப்புகளை விமர்சிக்கும் ஒரு விமர்சக வித்தகர் இவர். பிரபல எழுத்தாளர் வண்ணதாசன் இவருடைய மகனார்.
கேள்வி: தங்களுடைய பதினேழாவது வயதில் ஆரம்பித்த இலக்கியப் பணிகள் பற்றி..?

தி.க.சி. :(மகிழ்ச்சி பொங்க குழந்தையாய் மலர்கிறார்) ஆமாம். என்னுடைய முதல் சிறுகதை பேராசிரியர் நாரண துரைக்கண்ணன் ஆசிரியராக இருந்த, ‘பிரசண்ட விகடன்’ இதழில் வெளிவந்தது. திருவள்ளுவரும், பாரதியாரும், பாரதிதாசனும் எம்முடைய வழிகாட்டிகள். ஒவ்வொரு தமிழனுக்கும் இவர்கள்தானே வழியாட்டியாக இருக்க முடியும்? என் படைப்புத் தொழிலுக்கு ஊக்கம் கொடுத்து எனக்கு குருவாக இருந்தவர் வல்லிக்கண்ணன். அவரில்லையென்றால் இன்று இந்த தி.க.சி. இல்லை.

1941ஆம் ஆண்டில், நெல்லை இந்துக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது வல்லிக்கண்ணன் என்ற என் இலக்கிய குருநாதரைக் கண்டுபிடித்தேன். முழுநேர எழுத்தாளராக ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் தம்முடைய அரசாங்க வேலையை உதறித் தள்ளிவிட்டு தம் குடும்பத்தினருடன் எங்கள் வீட்டிற்கருகில் குடிவந்தவர். நேரம் கிடைத்த போதெல்லாம் அவ்ருடன் கழிந்த என் பொழுதுகள் எனது இலக்கியப்பசிக்குக் கிடைத்த உணவு எனலாம்.

கேள்வி: தாமரை இதழாசிரியராக தங்களுடைய அனுபவம்?

தி.க.சி. : அமரர் ஜீவா அவர்கள் தோற்றுவித்த ‘தாமரை’ என்ற இலக்கிய இதழில் ஆசிரியர் பொறுப்பில், தரமான 100 இதழ்களைத் தயாரித்து, தாமரையின் பொற்காலம் என்ற பெரும் பேற்றைப் பெற்றேன். எழுபதுகளில், தமிழக இடதுசாரி இலக்கியம் தமிழ்ப் பண்புடனும், அதிகமான தத்துவப்பழு இல்லாத வகையிலும், ஒரு வரையறையுடன் வெளிவந்தது. இன்றைய முற்போக்கு இலக்கிய உலகில் சாதனை புரிந்துவரும் பலரையும் இனங்கண்டு ஊக்குவித்து தமிழுக்கு வழங்கிய பெருமை தாமரைக்கு உண்டு. எனக்கு அரசியலிலும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் ஜீவா என்கிற அடலேறுதான்.

கேள்வி : சோவியத், சீன நாவல்கள் பலவற்றை தமிழாக்கம் செய்துள்ளீர்கள். தமிழாக்கம் செய்வதற்கான முறைமைகளின் அடிப்படை கருத்துகள் பற்றி சொல்லுங்கள்

தி.க.சி. மொழிபெயர்ப்பு ஒரு கலை. படைப்பாளியின் மூலம் கெடாமல், வேறு ஒப்புமையை புகுத்தாமல், சொந்த நடையில் நல்ல மொழியில் எளிமையா, கொடுப்பதே நல்ல மொழிபெயர்ப்பு. வார்த்தைக்கு வார்த்தை மாற்றம் செய்ய வேண்டுமென்பது பொருளல்ல. தவறுகளை திருத்திக்கொள்ள சற்றும் தயக்கம் வேண்டியதில்லை. நான் என்றுமே அதற்கு வெட்கப்பட்டதும் இல்லை. எழுதப்பட்ட காலம், அதன் சூழல் இவையெல்லாம் கருத்தில் கொண்டு, அந்த மூலக்கருவில் மாற்றம் வராமல் தம் சொந்த நடையில் புரியும்படி கொடுக்க வேண்டும். சரஸ்வதி ராமநாதன் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்றவர். 1965 - 72 காலகட்டத்தில், நான் தாமரை இதழில் பொறுப்பாசிரியராக இருந்த போது ஆண்டுதோறும் ’மொழிபெயர்ப்பு சிறுகதை மலர்’ ஒன்றை வெளியிட்டு வந்தோம். அதில் சரஸ்வதி ராம்நாத் அவர்களின் ஒரு இந்தி மொழிபெயர்ப்பு சிறுகதை தவறாமல் இடம்பெறும். அதேபோல், ‘கலை மகள்’ இதழில் உதவி ஆசிரியராக இருந்து கொண்டே, (1940-50களில்) மராத்தியிலிருந்து நேரடியாக காண்டேகரின் பதிமூன்று நாவல்கள், மற்றும் நூற்றைம்பது சிறுகதைகளையும் அற்புதமாக தமிழாக்கி, இலக்கிய உலகிலும், எழுத்தாளர்களிடையேயும் ஓர் எழுச்சியை உருவாக்கியவர், கா.ஸ்ரீ.ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாச ஆச்சார்யா. இத்தோடு நிற்காமல், தமிழ் இலக்கியத்தின் பெருமைகளை இந்தி வாசகர்களுக்கும் உணர்த்தும் வகையில் புதுமைப்பித்தன், கல்கி, கு.ப.ரா, வ.வே.சு ஐயர், கல்கி, பி.எஸ்.ராமையா, மகாகவி பாரதியின் கட்டுரைகள் போன்றவற்றை இந்தியில் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார். இந்தியைவிட, தமிழ்தான் சிறந்தது என்று ஆணித்தரமாக வாதிடுவாராம்..

கேள்வி: இன்றைய தமிழ்க் கவிதைகள் மற்றும் இலக்கியங்கள் பற்றி...?

தி.க.சி. : படைப்புகள் சமுதாய நோக்கம் கொண்டவைகளாக இருக்க வேண்டியது அவசியம். திருக்குறளை அடிப்படையாகக் கொண்டு ஆயிரம் கவிதைகள் அழகாகப் புனையலாம். புதுக்கவிதை என்ற பெயரில் எதிர்மறையான கருத்துக்களை அழகு நடையில் கொடுத்து சமுதாயத்தை தீய வழியில் நடத்திச் செல்பவர்கள் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவர்கள். மொழியைப் போன்றே உள்ளார்ந்த கருத்துகளும் இன்றியமையாதவை. மனிதநேயமிக்க அழகியல், அறிவியல், அறயியல் இம்மூன்றையும் ஒருங்கிணைத்து புதிய படைப்புகளை வெளியிடுவதும், படைப்பதுமான பணிகளே இன்றைய காலத்தின் அவசியமாகும்.

தமிழ் உள்ளவரை பாரதி எனும் ஞானசூரியனின் ஒளி வெள்ளம் இவ்வுலகில் பாய்ந்து கொண்டேதான் இருக்கும். புதுமைப்பித்தன், கல்கி போன்ற எத்த்னையோ எழுத்தாளர்கள் மகாகவியின் கதிர்வீச்சுகளாக தமிழ் இலக்கிய உலகில் வாழ்ந்தார்கள், இன்றும் வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை, நமக்குக் கல்கியும் வேண்டும், புதுமைப்பித்தனும் வேண்டும். இருவரும் பாரதியின் குறிக்கோள்களைத் தமிழர்களின் வாழ்விலும், அவர்தம் இதயத்திலும் தம் படைப்புகள் மூலமாக் விதைத்தவர்கள். அவர்களின் பாதையும், இலக்கியத்தரமும் மிக வித்தியாசமானது. ஆயினும் இருவரும் தமிழில் மறுமலர்ச்சி இலக்கியம் படைத்தவர்கள். அதற்காகவேத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு, இடையறாது உழைத்தவர்கள். தமிழ் இலக்கிய வரலாற்றில் சி.சு. செல்லப்பா விட்டுச் சென்ற சுவடுகள் என்றும் அழியாதவை. தற்காலத் தமிழ்க் கவிஞர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்களுள் ஒருவர் கே.சி.எஸ். அருணாசலம். தமிழ் இலக்கிய உலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக, தரமான கவிஞராகவும், சிறுகதை ஆசிரியராகவும், பத்திரிக்கை ஆசிரியராகவும், திரைப்படப் பாடலாசிரியராகவும் கலை, இலக்கிய அமைப்புகளில் செயற்பாட்டு வீரராகவும் திகழ்ந்தவர்.

கேள்வி: தமிழ்ர் வாழ்வில் தாங்கள் எதிர்பார்க்கும் புரட்சிகர மாற்றங்கள் எவை?

தி.க.சி. ”இருக்கும் நிலைமாற்ற ஒரு புரட்சி மனப்பான்மை ஏற்படுத்தல் பிறர்க்குழைக்கும் எழுத்தாளர் கடனாம். பொதுமக்கள் நலம் நாடிப் பொதுக்கருத்தைச் சொல்க. புன்கருத்தைச் சொல்வதில் ஆயிரம் வந்தாலும் அதற்கொப்ப வேண்டாமே” என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

கார்ப்பரேட் கலாச்சாரம் தீவிரமாக வளர்க்கப்பட்டு வரும் இன்றைய தமிழக, இந்திய சூழலில் சிறு பத்திரிக்கைகள் மற்றும் எழுத்தாளர்களின் கொள்கை நெறியும், போக்கும் பாரதிதாசன் பாதையில் இருக்க வேண்டுமென்பது என்னுடைய அழுத்தமான கருத்து. புரட்சிகரத் தமிழ் தேசியம், பன்முக இந்திய தேசியம், மனித நேயமிக்க சர்வ தேசியத்தின் தலைசிறந்த பிரதிநிதிகளான மகாகவி பாரதி, புரட்சிக்கவி பாரதிதாசன், இலத்தீன் அமெரிக்கா மகாகவி பாப்லோ நெரூடா இவர்களின் பாதையில் படைப்பாளிகளின் உள்ளடக்கமும், படைப்புகளும் அமையப் பெறுதல் வேண்டும். மகாகவி பாப்லோ நெரூடாவின் படைப்புகள் தமிழாக்கம் பெற வேண்டும். மக்களின் பண்பாட்டைச் சீரழிக்கும் படுமோசமான உளவியல் யுத்தத்தை பெரும்பான்மையான, அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் தவறான பாதையில் திசை திருப்பும் வகையில் வரிந்து கட்டிக் கொண்டு செயல்படுகின்றன. இதில் எழுத்தாளர்களும், படைப்பாளிகளும் பலிகடா ஆகாமல் இருக்க வேண்டும். தம் மன நிறைவிற்காக எழுதும் எண்ணம் எழுத்தாளர்களிடையே வளர வேண்டும். தரம் காக்கப்பட வேண்டும். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உன்னத இலட்சியங்கள் கொண்டவைகளாக இருக்க வேண்டும்.

தமிழியம், தலித்தியம், பெண்ணியம், சுற்றுச்சூழலியம், விஞ்ஞானப் பூர்வமான மார்க்ஸியம் என்னும் துறைகளில் தமிழ்ப் பண்பாட்டை வளர்க்க முயலும் முற்போக்கு எழுத்தாளர்களும், படைப்பாளிகளும் தகுந்த அங்கீகாரம் பெறுதல் வேண்டும். கடந்த பத்தாண்டுக் காலத்தில் தமிழ் வாசகர்கள், பத்திரிக்கைகள், பதிப்பாளர்களிடையே தரமான இலக்கியங்களையும், படைப்பாளிகளையும் இனங்கண்டு பாராட்டும் போக்கு அதிகரித்து வருகிறது. இலக்கிய மதிப்பு வாய்ந்த நூல்களை வாங்கிப் படிப்பதோடு, அது குறித்து கலந்துரையாடுதல், ஆழ்ந்த சர்ச்சைகளில் ஈடுபடுதல், கருத்தரங்குகள் நடத்துதல் போன்றவற்றில் தமிழ் மக்கள், குறிப்பாக இளம் தலைமுறையினர் மிகுந்த ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சிக்குரிய விசயம். சிந்திக்க விரும்பும் வாசகர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் கூடுகிறது. குறிப்பாக சரிபாதியினராக உள்ள பெண்களின் சிந்தனையில் தீவிர மாற்றம் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. பெண்கல்வி பெரும் முன்னேற்றம் கண்டிருக்கிறது. உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் என்னும் கொள்கைகள் மக்கள் மீது திணிக்கப்படும் இவ்வேளையில், சுதந்திரம், ஜனநாயகம், சமதர்மம், வளமான வாழ்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஆழ்ந்து சிந்தித்து செயல்பட வேண்டிய காலமிது.

ஒரு மனிதநேயமிக்க சிறந்த தமிழறிஞரை சந்தித்த மன நிறைவுடன், அவர் மனமுவந்து வழங்கிய , வே.முத்துக்குமார் அவர்கள் தொகுப்பில் வெளிவந்துள்ள தி.க.சி. அவர்களின் ‘காலத்தின் குரல்’ என்ற அருமையான நூலுடனும் விடைபெற்று வந்தோம்.

 கேள்வி : விஞ்ஞானப்பூர்வமான மார்க்சியம் என்றீர்களே? அதைப்பற்றி சற்று விளக்கமாக.......

இது குறித்து ஒரு நீண்ட கட்டுரையே எழுத வேண்டும். என் உடல் நலமும், அகவையும், அதற்கு இடம் கொடுக்கவில்லை. சுருக்க்மாக பதில் கொடுக்கிறேன்.

விஞ்ஞானப்பூர்வமான மார்க்சியம் என்பது, என் கருத்தில், மார்க்ஸ் - எங்கல்ஸ் - லெனின் கூறிய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு, இந்திய முகமும் குரலும்கொண்ட ஒரு சோசலிசத்தை இந்தியாவில் நாம் அமைப்பதுதான்! இரசியப்பாதை, சீனப்பாதை, வியட்நாம் பாதை, கியூபா பாதை, இவற்றில் அமைந்த அரசுகள் எல்லாம் விஞ்ஞானப்பூர்வமான மார்க்சிய அடிப்படையில் அமைந்தவைதாம்; அந்த அரசுகளும்கூட இன்றைய உலகமய் நவீன - தாராளமய - தனியார்மயச் சூழ்நிலைக்கு ஏற்ப இன்று தம்மைத்தக அமைத்துக்கொண்டு மக்கள் ஜனநாயகத்திற்கும் அரசாகத் திகழ முயன்று கொண்டிருக்கிறது. எனவே ’விஞ்ஞானப்பூர்வமான மார்க்சியம்’ நம் நாட்டில் பெருமளவு வளர வேண்டுமென்றால் அதற்கேற்ற நடைமுறைச் சூழ்நிலைகளை அரசியல், பொருளாதார, சமுதாய கலாச்சாரத் துறைகளில், நாம் - அதாவ்து - இந்திய மக்கள் ஏற்படுத்த வேண்டும்.; அதற்கு இன்றையச் சூழலில் பற்பல ஆண்டுகள் ஆகலாம். எனினும் அந்தப் பாதையில் தத்துவத் தெளிவுடனும், ஸ்தாபன பலத்துடனும் துணிந்து களம் இறங்கிப் போராட வேண்டும்!!

நன்றி : வல்லமை பிரசுரம்




கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...