பவள சங்கரி
நம்
சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வது மட்டுமே வெற்றிகரமான
வாழ்க்கையின் பூரண இரகசியம். இந்த உண்மையை உணர்ந்தவர்கள் வாழ்வில் மலர்ச்சி
நிச்சயம். – சுவாமி விவேகானந்தர்
வெற்றிப்
பாதையில் பயணிக்க விரும்புபவர் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான ஒரு
அம்சம், மனதில் சலனமில்லாத மகிழ்ச்சி. ஆம், தெளிந்த நீரோடை போல மனது
தெளிவாக இருக்க வேண்டுமானால் சில அடிப்படைக் கொள்கைகளைக் கட்டாயம்
கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. இதில் மிக முக்கியமானதொன்று, இருப்பதை எண்ணி
மகிழ்வுறாமல், இல்லாததை எண்ணி ஏக்கம் கொள்வது. ஆம், வாழ்க்கையில் அனைத்தும்
எனக்குக் குறைவில்லாமல் கிடைத்தால்தான் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று
எண்ணினால் இந்தப் பிறவியில் அது சாத்தியமில்லை. காரணம் குறையில்லாத மனித
வாழ்க்கை என்பது இதுவரை இல்லை என்பதுதான் சத்தியம். நம்முடைய மகிழ்வான
பொழுதுகளை முழுவதுமாக தின்னக்கூடிய வல்லமை பெற்றது, நம்மிடம் இல்லாத ஒன்றை
எண்ணி ஏக்கம் கொண்டு நிம்மதியைத் தொலைப்பதுதான். மகிழ்ச்சி என்பது என்றுமே
இன்னொருவரால் வரக்கூடியது அன்று. நமக்காக நாமே உருவாக்கிக்கொள்வதே நிலையான
மகிழ்ச்சி. மகிழ்ச்சியோ, துக்கமோ இதில் எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம்
என்பது நம்மிடமே உள்ளது.