Thursday, January 16, 2020

திருவள்ளுவர் விழா






இன்று திருவள்ளுவர் தினம். வி.ஐ.டி. வேந்தர். கல்விக்கோ. விசுவநாதன் அவர்களின் தமிழியக்கத்தின் சார்பில் மாவட்டம் தோறும் திருவள்ளுவர் விழா எடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் எஸ். எஸ். எம். கல்லூரியில், உயர்திரு.வி.ஜி.பி. சந்தோஷம் ஐயா அவர்கள் நிறுவியுள்ள பிரம்மாண்டமான ஐயன் சிலைக்கு, ஊர்வலமாக எடுத்து வந்த மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது, குமாரபாளையம் நகரசபைத் தலைவர் உயர்திரு தனசேகரன் அவர்கள் தலைமையில், நாமக்கல் மாவட்டச் செயலாளர் திரு இளங்கோவன் அவர்களின் ஏற்பாட்டில், குமாரபாளையம் தமிழ் சங்கமும் இணைந்து நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தேறியது. அனைவருக்கும் திருவள்ளுவர் தின நல்வாழ்த்துகள்.

Wednesday, January 15, 2020

மலர்ந்திருப்போம் மணம்வீசும் மலர்களாய்!




மலர்ந்திருப்போம் மணம்வீசும் மலர்களாய்!
குளிர்ந்திருப்போம் குற்றால அருவியாய்!!

ஆண்டான் அடிமையெனும் பேதங்களில்லை
கொண்டான் கொடுத்தானெனும் சங்கடங்களில்லை
இனம் நிறம் மதமெனும் மயக்கங்களில்லை
மழலையர் பதின்மர் முதியோரெனும் பிரிவினைகளில்லை

மலர்ந்திருப்போம் மணம்வீசும் மலர்களாய்!
குளிர்ந்திருப்போம் குற்றால அருவியாய்!!

மனம் குணம் குற்றம் குறையெனும் இழிவுகளில்லை
இகம் பரம் வானம் பூமியெனும் பாரபட்சங்களில்லை
செல்வந்தன் வறியோன் வேடதாரியெனும் கபடங்களில்லை
சொந்தம் சுற்றம் உறவு பகையெனும் விகல்பங்களில்லை

மலர்ந்திருப்போம் மணம்வீசும் மலர்களாய்!
குளிர்ந்திருப்போம் குற்றால அருவியாய்!!

கதறல் சிரிப்பு கவலை களிப்பெனும் கருத்துக்களில்லை
 வளர்க வளமும் நலமும் பெருகவெனும் வாழ்த்துக்களில்லை
சிற்றின்பம் பேரின்பம் சிறுமை பெருமையெனும் சாத்திரங்களில்லை
இல்லறம் துறவறம் துணைநலம் மக்கட்செல்வமெனும் கோட்பாடுகளில்லை

மலர்ந்திருப்போம் மணம்வீசும் மலர்களாய்!
குளிர்ந்திருப்போம் குற்றால அருவியாய்!!

வேதவித்தகன் மகோன்னதன் மகிழ்நன்னெனும் மாச்சரியங்களில்லை
சொந்தக்காரன் மாற்றான் தோட்டத்துக்காரனெனும் உறவுகளில்லை
கல்லாய் பேயாய் கணங்களாய் வல்லசுரராய் காணும் காட்சிகளில்லை
கனிரசமாய் கற்கண்டாய் கார்மேகமாய் கரடுமுரடாய் பகுத்துணர்வதில்லை

மலர்ந்திருப்போம் மணம்வீசும் மலர்களாய்!
குளிர்ந்திருப்போம் குற்றால அருவியாய்!!

திருமண பந்தம் மரண பிம்பம் எனும் வேறுபாடுகளில்லை
கருணை வள்ளல் முரட்டு சிங்கமெனும் முட்டுக்கட்டைகளில்லை
கற்பகத்தரு கற்றாழை தாமரை தாழம்பூவெனும் தரவரிசைகளில்லை
கொண்டாடுவோர் குறைகாண்போர் குத்திக்கிழிப்போரெனும் பரிகாசங்களில்லை

மலர்ந்திருப்போம் மணம்வீசும் மலர்களாய்!
குளிர்ந்திருப்போம் குற்றால அருவியாய்!!