பவள சங்கரி
முழுமையாக அந்த நொடியில் வாழுங்கள்!!
“அந்த நொடியில் மகிழ்ச்சியாக இருங்கள், அது போதும். நமக்குத் தேவையானதெல்லாம் அந்த ஒவ்வொரு நொடி மட்டும்தான், அதற்கு மேல் இல்லை”
அன்னை தெரசா
முதல் முறையாக என் அமெரிக்கப் பயணம். நடு இரவில் வீடு வந்து சேருகிறோம். நடுங்கச் செய்யும் கடுமையான குளிர். கும்மிருட்டு. இலையுதிர் காலப்பருவம். கம்பளிக்குள் நுழைந்துகொண்டு சுருண்டு விட்டாலும், காலையில் எழுந்து வெளியே வந்து பார்த்தபோது என் கண்களையே நம்ப முடியாத அளவிற்கு திரும்பிய புறமெல்லாம் தரை முழுவதும் செவ்வாடை போர்த்தது போன்ற அழகிய வண்ண இலைகள். நிமிர்ந்து பார்த்தால் மரங்களிலும் அதே அழகுக் காட்சி. எதிர்பார்க்காத இந்த அழகின் உச்சத்தில் அசந்துபோய் நின்றிருந்தேன். நடைபாதை முழுவதும் பட்டுக்கம்பளம் விரித்தது போன்று மெத்தென்ற இலைகளின் குவிப்பு. ஏதோ புதியதோர் உலகில் நுழைந்துவிட்டது போன்றதொரு பரபரப்பு. உலகமே மொத்தமாக உயிருடன் விழித்துக்கொண்டது போல ஒரு தோற்றம். என் மன உணர்வுகள் அத்தனையும் ஒருசேர விழிப்புணர்வு பெற்றிருந்தது. சூழ்நிலைகளைப் பற்றிய தெளிவான விழிப்புடன் இருந்தது மனது – நம்முடைய அன்றாட வாழ்க்கையில் உணர்வுப்பூர்வமாக பாதிக்கக்கூடிய நிகழ்வுகளை மன நிறைவுடன் எதிர்கொள்வதற்கான பயிற்சியும் இதனை ஒத்ததுதான். ஏதோ ஒரு வகையில் மறைந்திருக்கும் விரும்பத்தகாத எண்ணங்கள் அல்லது அச்சப்படக்கூடியதோ, வெட்கப்படக்கூடியதோ, சங்கடப்படச்செய்வதோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ, சமாளிக்கவோ முடியாமல் போகக்கூடியதோ போன்ற சந்தர்ப்பங்களில், முழுமையான விழிப்புணர்வுடன் செயல்படுவதால் அது நம்மை அதன் விளிம்பில் கொண்டு நிறுத்திவிடும் என்றாலும் அந்த மாற்றம் நம்மை பயமுறுத்தவோ, சிரமப்படுத்தவோ அல்லது வேதனைப்படுத்தக்கூடிய வகையிலோ இல்லாமல், அந்தச் சூழலின் நிதர்சனத்தை யதார்த்தமாக ஏற்றுக்கொள்ளும் வகையில் இலகுவாக்கிவிடும். முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளவும் மனம் சம்மதிக்கும். இதனால் அதற்கான தீர்வும் தெளிவாகிவிடும். சுருங்கச் சொன்னால் அது சுகமான அனுபவமோ அல்லது சுமையான அனுபவமோ இரண்டையும் ஒன்று போல உணரும் உன்னதமான ஞானம் பெறுவோம்!