Wednesday, December 1, 2010

தியானம்............

விடியற்காலை....பிரம்ம முகூர்த்த வேளை. தியானத்திற்கான அருமையான நேரம். வஜ்ராசனத்தில் பயிற்சிகள் முடித்து, சுகாசனத்தில் ப்ரணாயாமம் ...........அடுத்து தியானம்.ஆழ்ந்த தியானத்தில் கிடைக்கும் ஒரு இன்பநிலை அது எப்பொழுதும் வாய்ப்பதில்லை. அதற்கெல்லாம் இமயமலைக்குத்தான் போக வேண்டுமோ என்னமோ....

கண்களை மூடி மனதை ஒரு நிலைப்படுத்த முயற்சிக்கலாமென்றா.....ல் “கர, கர,கர”..........மின் விசிறி சத்தம். சரி அதைக் கடக்க முயன்று கொஞ்சம் சிரமம்தான்....அதைக் கடந்தால் கூ......குகூ..........சின்னக் குயிலின் திருப்பள்ளியெழுச்சி. அடுத்து சில வினாடிகள்........’கொக்கரக்கோ’......முருகனின் கொடியிலிருக்கும், செஞ்சேவலின் சுப்ரபாதம் கடந்து, எங்கோ தொலைவில், மசூதியில் அல்லாஹூ..........அக்பர்....கடந்து, தெரு முனை பால் அங்காடியின் சலசலப்பு......இப்படி தெரு முனை வரை பயணித்த மனது வெட்ட வெளியை நோக்கி பயணிக்க ஆரம்பிக்க......

கொஞ்சமாவது மண்டையில மூளை இருக்கா....உனக்கு.......என் தர்ம பத்தினரின் [ தர்ம பத்தினிக்கு ஆண்பால் அதுதானேங்க...]புகழாரம். அவரோட ஒரு முக்கியமான ஆவணத்தில் லேசா ஈரக்கையை வைச்சுட்டேன்....அதுக்கு போய் மண்டை மூளையெல்லாம் ஆராய்ச்சி பண்ணது கொஞ்சம் ஓவர்தானே.......சே, இப்ப போய் இதை எதுக்கு நினைக்கனும், நமக்கு ஒரு சான்ஸ் கிடைக்காமயா போகும்.....அப்ப வச்சிக்கலாம்....

அடடா....காஸ் சிலிண்டர் காலியாகி 5 ,6 நாள் இருக்குமே......இன்னும் புக் பண்ணவேயில்லையே......திடீர்ன்னு டிமாண்ட் வந்தா என்ன பண்றது. முதல் வேலையா காலைல ஆபீஸ் திறந்தவுடன் காஸ் புக் பண்ணனும்......

சரி இனிமேல் எதையும் பற்றி நினைக்கக் கூடாது.......ஓம்.....ஓம்......ஓம்......

டிங்....டாங்க்........வாசலில் அழைப்பு மணி.

அம்மா....கீரை. அடக் கடவுளே, மணி ஆறாயிடுச்சா.....அவசர அவசரமாக அள்ளி சுருட்டிக் கொண்டு....பிறகென்ன அன்றைய கடமைகள் அழைக்க தியானம் அவ்வளவுதான்.

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் அதிர்ஷ்டம் ஒரு முறைதான் கதவைத் தட்டும் என்பார்கள். அப்படித்தான் அன்று என் வீட்டு கதவும் தட்டப்பட்டது. குருஜீக்காக பக்கத்து ஊரில் ஏற்பாடு பண்ணியிருந்த சத்சங்கம் முடிந்து, அந்த ஒரு நாள் அவர் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டவர் வீட்டில் திடீரென ஒரு அசம்பாவிதம் நடந்துவிட, அதன் காரணமாக அவரை அங்கு தங்கவைக்க முடியாத சூழலில் அருகில் இருந்த எங்கள் குடில் நினைவிற்கு வர குருஜியின் புண்ணிய பாதம் படும் பாக்கியம் எங்கள் வீட்டிற்கும் கிடைத்தது.

மிக எளிய மனிதரான அவரைப் பார்த்தால் பெரிய மடத்திற்கு அதிபதியான குருஜீயாக தெரிய மாட்டார். சாதாரண வெள்ளை ஆடை உடுத்தி நம்மில் ஒருவராகத் தான் இருப்பார். பார்வையில் ஒரு தீட்சண்யமும், கண்டவுடன் கையெடுத்துக் கும்பிடத் தோன்றும் தேஜஸ்ஸீம் இருக்கும். தேவையில்லாமல் ஒரு வார்த்தைக் கூடப் பேச மாட்டார். மிக எளிய உணவுப் பழக்கம் இப்படி நிறைய அவரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். எந்த முன்னேற்பாடும் இல்லாமல் அவர் திடீரென வந்ததால், பரபரப்பு ஏதும் இன்றி அமைதியாகவே இருந்தது வீடு.

அந்த நேரத்தில் தான், அடுத்த வீட்டில் குடியிருக்கும், அமுதவல்லி, கையில் ஏதோ கிண்ணத்தில் தூக்கிக் கொண்டு வந்தாள். அமுதவல்லி, குடும்பமே கோவில், கொண்டவனே தெய்வம் என்று வேறு எதிலும் நாட்டம் இல்லாத, சதா குடும்ப வேலையிலேயே மூழ்கிக் கிடப்பவள். வேலை முடிந்தால் நிம்மதியாக தொலைக்காட்சி முன்பு அமர்ந்து விடுவாள். ஜோக்காக இருந்தால் வாய் விட்டு சத்தமாகச் சிரிப்பாள். அதே போல் சோகமான காட்சியென்றாலும் ஐயோ என்று சத்தம் போட்டு அழுது விடுவாள். எதையும் மனதில் போட்டு பூட்டி வைக்கத் தெரியாத வெள்ளந்தியான பெண். பல நேரங்களில் அவளைப் பார்த்து பொறாமையாகக்கூட இருக்கும் எனக்கு. ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் அவர்கள் வீட்டில். குடிகாரக் கணவர் ஒரு புறம், உடல் நலம் குன்றி, படுத்த படுக்கையாகக் கிடக்கும் மாமியார் ஒரு புறம்..... பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் இப்படி பம்பரமாக சுழலும் அமுதவல்லி ஒரு நாள் கூட வாக்கிங் என்றோ, உடற்பயிற்சி என்றோ, தியானம் என்றோ நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. ஆனால் ஒரு நாள் கூட தலைவலி, கால்வலி என்று புலம்பியதும் இல்லை........சலித்துக் கொண்டதும் இல்லை. எப்பவும் உற்சாகம்தான், சுறு சுறுப்பு தான்.

வீட்டிற்குள் நுழைந்தவுடன் வாழும் அறையில் [ அதாங்க ‘லிவ்விங் ரூம்’] குருஜீ புத்தகம் படித்துக் கொண்டு உட்கார்ந்திருந்ததைப் பார்த்தவள் கொஞ்சமும் தயக்கமில்லாமல், அட ஐயா நீங்களா......

உங்களை பல முறை டிவீல பாத்திருக்கேனே.....நல்லா இருக்கீங்களா..... என்றாள்.
குருஜீயும் வெள்ளந்தியான அவளுடைய பேச்சைப் பார்த்து லேசாக புன்னகைத்து விட்டு திரும்பவும் புத்தகத்தில் ஆழ்ந்து விட்டார்.

ஆனால் அவளோ அவரை விட்ட பாடில்லை. ஐயா இந்த சொஜ்ஜி அப்பத்தை சாப்பிட்டுப் பாருங்க நல்லா இருக்கும் என்றாள். நான் சுத்தமாத்தான் பண்ணியிருக்கேன், என்றாள்.

அவரும் திரும்பவும் புன்னகைத்துவிட்டு, இல்லைம்மா, நான் எண்ணெய் பலகாரமெல்லாம் சாப்பிடுவதில்லை, எனக்கு ஒத்துக் கொள்ளாது என்றார்.

திரும்பவும் அவள் கட்டாயப்படுத்த முயற்சிக்க நான் தலையிட்டு, ஒருவாறு அவளை அனுப்பி வைத்தேன்.

சரிங்க ஐயா நான் போய் வாரேன், எங்க வீட்டிற்கும் ஒரு நடை வாங்க ஐயா, என்று கூறிவிட்டு சென்று விட்டாள்.

வெகு நாட்களாக எனக்கிருந்த சந்தேகம். எப்படி இவளால் மட்டும் இவ்வளவு எளிதாக வாழ்க்கையை ஓட்ட முடிகிறது. தன்னைச் சுற்றி நடக்கும் எதுவும் தன்னை பாதிக்காமல் ஒதுக்கி வைக்கும் கலையை எப்படிக் கற்றாள் இவள்..... இன்று குருஜியிடமே கேட்டு தெளிவு பெறும் பாக்கியம் கிடைத்ததை எண்ணி பூரித்துப் போனவள் கேட்கலாம் என்று வாயைத் திறப்பதற்கு முன் அவளுடைய எண்ண ஓட்டங்களைப் புரிந்து கொண்டவராக குருஜி சொன்ன ஓரிரு வார்த்தைகளில் அவளுக்கு தெளிவானது.......

அதாவது தூய்மையான சிந்தனையுடன், எல்லாவற்றிலும் 100 சதவிகித ஈடுபாடு. எந்த வேலை எடுத்தாலும் அதில் நூறு சதவிகித முழுமையான ஈடுபாடு கொண்டு செய்தாலே அதுதானே தியானம். எந்தச் செயலாக இருந்தாலும் மனம் ஒன்றி செயல்பட்டாலே போதும் என்று அவர் கூறிய பிரம்மோபதேசத்தை இன்றும் கடைப்பிடிக்கும் எனக்கு மன நிம்மதி நிறைந்திருப்பதும் மறுக்க முடியாத உண்மை!!



Tuesday, November 30, 2010

பிள்ளை மனம்..........

சசி.....என்ன நான் வந்தது கூட தெரியாம அப்படி என்ன யோசனை.......?

ம்ம்.....ஒண்ணும்மில்லீங்க.......

ஏதோ யோசனையுடனேயே எழுந்து சென்றவள், மணக்க மணக்க ஃபில்டர் காபியுடன் வந்தாள்.

நந்துவிற்கு புரிந்து விட்டது..... ஏதோ விசயம் இருக்கிறதென்று.

அது சரி, சசி உங்க அம்மா வீட்டுக்கு போனியே, அங்கே ஏதாவது பிரச்சனையா? உங்க அப்பா நல்லாத்தானே இருக்கார்?

அதெல்லாம் ஒண்ணுமில்ல......

அவள் ஒன்றுமில்லையென இழுக்கும் போதே ஏதோ இருப்பது தெரிந்தது. சரி அவளே சொல்லட்டும், பார்த்துக்கலாம், என்று கையில் பேப்பரை, எடுத்து காலையில் படிக்காமல் விட்ட மீதியைத் தொடரலாம் என்றால்,

வந்தவுடனே,பேப்பர்தானா......என்று முறைத்தாள்.

சரி என்ன பண்ணலாம் சொல்லு. உங்க அப்பாவிற்கு கண் ஆபரேசன் பண்ண வேண்டும் என்றார்களே, எப்ப பண்ணிக்கப் போறார் உங்கப்பா.....? என்றான் நந்து.

ஆமா. அதைக் கேட்கத்தான் நானும் போனேன். ஆனா எங்க அதப்பத்திப் பேச நேரம்?

ஏன் என்னாச்சு, என்றான் நந்து அக்கரையாக.

என்ன சொல்றது.... அக்கா வந்திருந்தா...நல்லாத்தான் எல்லோரும் பேசிக்கிட்டிருந்தோம். திடீர்ன்னு ஒன்னுமே இல்லாத ஒரு சாதாரண விசயத்திற்கு, வேணுமின்னே சண்டை போடுறா. எப்பவும் ரொம்ப நிதானமா யோசிச்சு எல்லா காரியமும் செய்யக் கூடியவ, இன்னைக்கு ஏன் அப்படி நடந்துக்கிட்டான்னே தெரியல.......

சந்திர சேகர், ஒரு மத்திய அரசு வங்கி ஊழியர். நடுத்தரக் குடும்பம். அப்பா இறந்தவுடன், குடும்பச் சுமை முழுவதும் தன் மேல் விழ, இரண்டு தங்கைகள் திருமணம், தம்பி படிப்பு, இப்படி எல்லா பொறுப்பையும் முடித்து விட்டு, முன் தலை பாதி வழுக்கையானவுடன், தாய்க்குப் பிறகு சமைத்துப் போட ஆள் வேண்டுமே என்ற கவலையில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த வேளையில், சொந்தத்தில் , தாய் தகப்பன் இல்லாத ஒரு பெண் இருப்பது உறவினர் மூலம் தெரிய வர அவன் அம்மா அந்தப் பெண்ணையே பேசி முடித்து வைத்தார்கள். கணவன் கேட்கும் கேள்விக்கு மட்டும்தான் பதில் சொல்லத் தெரியும். மற்றபடி தனக்கென எந்த ஆசாபாசமும் இல்லாத ஒரு ஜீவன். உடுத்திக் கொள்ளும் உடையிலிருந்து, உட்கொள்ளும் உணவு வரை எல்லாமே கணவரின் தேர்வுதான். சுயமாக சிந்திக்கவே தெரியாத , தனக்கென்று எந்த விருப்பு, வெறுப்புமே இல்லாத, குடும்பமே கோவில், கணவனே கண்கண்ட தெய்வம் என வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்.

அமைதியான நிம்மதியான வாழ்க்கை. பெரிய எதிர்பார்ப்பும் இல்லை. அதே சமயம் கடமையிலிருந்து எள்ளளவும் விலகியதுமில்லை. சொல்லிக் கொள்ளும்படி பெரிதான ஆடம்பரமான வாழ்க்கை இல்லாவிட்டாலும், அமைதியான, கடனில்லாத, திட்டமிட்ட வாழ்க்கை. இரண்டு பெண் குழந்தைகள். இருவரையும் பட்டப் படிப்பு படிக்க வைத்து தன் சக்திக்கு இயன்ற வரை சீர் செய்து, திருமணம் செய்து கொடுத்தாகி விட்டது.

மூத்தவள் திரிபுரசுந்தரி [ தன் தாய் இறந்த அதே நாளில் பிறந்ததால் தன் தாயின் பெயரையே சூட்டினார் ], ஒரு தனியார் தொழிற்சாலையில் ஃபிட்டராக பணிபுரியும் ஒழுக்கமான ஒரு பையனுக்குக் கட்டிக் கொடுத்தார். ஆனால், இன்று மாப்பிள்ளை தானும் வாழ்க்கையில் மேல்படிக்குச் செல்ல வேண்டும் என்ற ஆவலில் அந்த வேலையை விட்டு விட்டு, தனியாக தொழில் தொடங்கி ஏதோ செய்து கொண்டிருக்கிறார்.

இளைய மகள் சசிகலாவின் கணவன் ஒரு அரசு வங்கி ஊழியன். தன் தந்தையைப் போலவே, கணவனும் திட்டமிட்ட வாழ்க்கை வாழுவதில் சசிக்கு ஏகப்பட்ட பெருமை. தந்தை பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும், உடல் ஆரோகியமாகத்தானே இருக்கிறது, இன்னும் கொஞ்ச காலம் உழைக்கலாமே என்ற எண்ணத்துடன், தன் நண்பரின் ஜவுளிக் கடையில் கணக்கெழுதும் பணியைச் செய்து கொண்டிருக்கிறார். தந்தை இன்னும் ஓடி ஓடி உழைப்பது மகள்களுக்கு வருத்தத்தைக் கொடுத்தாலும், அவரால் வீட்டில் முடங்கி உட்கார முடியாது என்பதை புரிந்து கொண்டதால் முடிந்த வரை செல்லட்டும் என்று பேசாமல் இருந்தனர் இரு மகள்களும். வங்கியில் இருந்து வந்த பிராவிடண்ட் ஃபண்ட் மற்றும் கிராஜீட்டி பணமெல்லாம் பத்திரமாக வங்கியில் இருந்தாலும், தந்தை உழைத்து சாப்பிடுவதைக் காண ஒரு வகையில் பெருமையாகத்தான் இருந்தது இருவருக்கும்.

தன் மீது உயிரையே வைத்திருக்கும் மகள்களைக் காண நிலை கொள்ளாத பெருமை தந்தைக்கு . வாரத்தில் ஒரு முறையாவது பிள்ளைகள் வந்து தன்னைப் பார்க்காவிட்டால் துடித்துப் போய்விடுவார் அவர்.

அப்படித்தான் அன்றும்பிள்ளைகள் இருவரும் வந்தவுடன், மனைவியைக் கூப்பிட்டு அவர்களுக்குப் பிடித்ததைச் சமைக்கச் சொல்லிவிட்டு, பேரக் குழந்தைகளுடன் விளையாடச் சென்றுவிட்டார். சமையல் முடிந்து குடும்பத்துடன் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு விட்டு, பொழுது சாயும் வேளை வந்ததால், இருவரும் வீட்டுக்குக் கிளம்பும் நேரம்தான், மூத்தவள், காரணமே இல்லாமல் வாக்குவாதம் செய்து சண்டையை வளர்த்து விட்டாள். தந்தை எவ்வளவு சொல்லியும் கேட்காமல், விர்ரென்று கோபத்துடன் தான் சென்றாள். பிறகு சசி தந்தையை சமாதானம் செய்துவிட்டு வந்தாலும், அவர் முகத்தில் தெரிந்த வருத்தம் சசியை என்னவோ செய்தது.அதுதான் அவள் முகத்தில் குழப்பமாகத் தெரிந்தது.

குழப்பம் தீராமல் தன்னால் நிம்மதியாக உறங்கக் கூட முடியாது என்று உணர்ந்த சசி கணவனை தொந்திரவு செய்து உடன் அழைத்துக் கொண்டு அக்காவின் வீட்டிற்குச் சென்றாள். அங்கு போனால் அவளோ சண்டை போட்ட சுவடே இல்லாமல் மிக இயல்பாக குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தவள், இவர்களைப் பார்த்தவுடன், இனிமையாக வரவேற்று உபசரித்தாள்.

சசிக்கு குழப்பம் இன்னும் அதிகமாகிவிட்டது, அப்பா அம்மாவிடம் அப்படி சண்டை போட்டுக் கொண்டு வந்தவளா இவள் என்று சந்தேகம் வர திரும்பவும் ஒரு முறை அந்தச் சூழலை நினைவிற்குக் கொண்டுவர முயற்சித்தாள் சசி. சசியின் முகத்தில் இருந்த குழப்பத்தைக் கண்டும் கணாமல் இருந்தாள் திரிபு. அவளே காரணம் சொல்லுவாள் என்று பொறுமையாக இருந்து சலித்துப் போய் வேறு வழியில்லாமல் அக்காவிடம் கேட்டே விட்டாள் சசி. சகலைகள் இருவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி பற்றி தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுதுதான் அக்கா தான் சண்டை போட்ட காரணத்தைச் சொல்லக் கேட்ட சசிக்கு அழுகை வெடித்துக் கொண்டு வந்துவிட்டது.

ஆமாம் சசி எல்லாம் அப்பா, அம்மாவின் நன்மைக்காகத்தான் நான் அப்படி சண்டை போட்டுக் கொண்டு வந்தேன், என்றாள் அவள்.

மேலும் குழம்பிப் போனாள் சசி, என்ன அப்பா,அம்மாவின் நன்மைக்காகவா..... என்றாள் தயக்கமாக.

ஆம், சசி, உனக்கே தெரியும், மாமா பிசினசை டெவலப் பண்ணப் போறேன்னு சொல்லிக்கிட்டே இருக்காருன்னு.

ஆமா, அதுக்கென்ன இப்ப....

அங்கதான் பிரச்சனையே. அவருக்கு அப்பாவோட பணத்தைக் கேட்கலாம்னு ஒரு நினைப்பு இருக்கு. அப்பா சும்மா தானே பேங்கில் போட்டு வைச்சிருக்கார். பேங்க் வட்டி கம்மியாத்தானே வருது, நாம் அதிகமா வட்டி தரலாம்னு சொல்லறாரு. கட்டாயமா அப்பா ஒரு காலும் மாப்பிள்ளைகிட்ட வட்டி வாங்க சம்மதிக்க மாட்டாரு. அவங்களுக்கு கடைசி காலத்திற்கு இந்தப் பணம் தான் ஆதரவே, பிசினஸ் எப்படி இருக்கும்னு சொல்ல முடியாது. இந்த பணம் அவங்களுக்கு உயிர் நீர் மாதிரி. அதை நாம் ஒரு நாளும் வாங்கக் கூடாது. கொஞ்ச நாள் நான் வராம இருந்தா ஒன்னும் தப்பில்ல. அதுக்குள்ள மாமா பணத்திற்கு வேற ஏற்பாடு பண்ணிடுவாரு. என்ன மனசுக்கு கஷ்டமாத்தான் இருக்கும், வேற வழியில்ல, என்று சொல்லும் போதே அவள் குரல் கம்மி, அழுகை வருவது போல் ஆகிவிட்டாள்.

தன் தமக்கையின் நல்ல உள்ளம் புரிந்தவுடன், அவள் மேல் இருந்த பாசம் இரட்டிப்பாக, ஆதரவுடன் அவளை அணைத்துக் கொண்டாள் சசி............

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...