பவள சங்கரி
தலையங்கம்
இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் ஆண்கள், பெண்கள் என பாகுபாடின்றி அனைவருக்கும், பேச்சுரிமை, தனி மனித சுதந்திரம், பாதுகாப்பான வாழ்க்கை என அனைத்தும் அனைவரும் பெறும் உரிமை உள்ளது. ஆனால் இவையனைத்திற்குமாக நாம் நிர்ணயிக்கும் அளவுகோல் மட்டுமே நம் இந்தியப் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தைக் கட்டிக்காக்கிறது.
பண்டைக்கால மகளிரின் ஒழுக்க நெறியினை நம் வேதங்கள் அழகாக எடுத்துரைக்கின்றன. வேத காலத்தில் ஒரு ஆண் மட்டுமே குடும்பத் தலைவனாக இருந்திருக்கிறார். ஒரு குடும்பத்தில் ஆண் மகவு பிறப்பதையே பெரிதும் மகிழ்ந்து கொண்டாடியதோடு, அதற்கான பிரார்த்தனைகளையும் மேற்கொண்டனர். வேத காலத்தில் கல்வி என்று எடுத்துக்கொண்டால் பெண்களைப் பொறுத்த வரையில் ஆணுக்கு நிகரான கல்வி வழங்கப்படவில்லை. ஆனாலும் சமூக வாழ்க்கையில் ஆண், பெண் என இரு பாலரும் சம நிலையிலேயே இருந்திருக்கின்றனர். அதாவது ஆண்களைப் போன்றே பெண்களும் அனைத்து விதமான சுதந்திரமும் பெற்றிருக்கின்றனர். மெல்ல மெல்ல அவளே தெய்வ நிலைக்கும் உயர்த்தப்பட்டிருக்கிறாள். ரிக் வேதத்தில் குறிப்பிட்டுள்ளது போன்று அந்தக் காலத்தில் பெண்களின் திருமண வாழ்க்கையில் கட்டுப்பாடும், ஒழுக்க நெறியும் கடைபிடிக்கப்பட்டு வந்ததோடு, விவாகரத்து என்ற ஒரு கோட்பாடே இல்லாமலிருந்திருக்கிறது.