Saturday, January 29, 2011

பட்ட மரம்.

பட்ட மரம்.

அடர்ந்த வனம். எங்கு நோக்கிலும் கபடமற்று தன்னிச்சையாக வளர்ந்த பசுமையான, வகைவகையான மரம் செடி கொடிகள். வண்ண மலர்கள். சுகந்த மணம் நாசியை நிறைத்து, மதியை மயங்கச் செய்தது........... பளீரென ஒரு மின்னல். அசைந்து, அசைந்து தன்னருகே வருகிறதே.......ஓ ...இது மின்னல் இல்லை. ஏதோ பறவை போலல்லவா இருக்கிறது.......அட ஆமாம் அன்னப்பறவை. பாலையும், தண்ணீரையும் தனித்தனியே பிரித்து விடுமாமே, அந்த அன்னப் பறவை.....தலையை ஆட்டி கிட்டே வந்து உரசி நின்று.........உற்றுப் பார்க்கிறதே, எதனால் என்று தெரியவில்லையே. திடீரென, ஒய்யாரமாக தோகையை ஆட்டியபடி அப்படியே ஒரு வட்டமடித்து, திரும்பி நடக்க ஆரம்பித்தது அது.

நேர்ந்து விட்டது போல பின்னாலேயே போக முயற்சித்து, அது ஓட ஆரம்பித்த போது தானும் ஓடி துரத்திப் பிடிக்கும் நோக்கில், நெருங்கி, நெருங்கி.....ஆகா பிடிக்கப் போகிறோம் என்று கையை நீட்டும் நேரம் அங்கே ஒரு அழகான ராஜ குமாரி. ஆம் ராஜகுமாரியாய் மாறிப்போன அன்னம்.

டொக்.....டொக்......டொக்........என்ன சத்தம். ராஜகுமாரி, நீ எனக்கே, எனக்கா.........

அட பாவி மனுசா......மணி 7 ஆவுது, கனவு கண்டுகினு கீது பாரு.........பொழுதன்னைக்கும் சுட்டி டிவி குழந்தைங்களோட உக்கார்ந்துகினு பாக்குறது. அப்பறம் இப்படிகனவு கண்டு உளர்றது. இதே பொயப்பா பூடிச்சி உனக்கு.

ஏய் இன்னாம்மே ரொம்பத்தான் அலுத்துக்கினுகிற.............

சரி, இன்னா சத்தம் வெளிய?

அதுவா, நீதானே அந்த பட்டுப் போன, காய்க்காம கடந்த கொய்யா மரத்த வெட்ட சொன்ன? அதைத்தான் ஆள் வந்து வெட்டறான்.

எம்புட்டு நாளா சொல்லறேன். கண்டுக்காம இருந்துட்டு இன்னைக்கு என்னா ஞானோதயம்?

அதுவா, இன்னைக்குத் தானே, உங்க அக்கா ஊரில இல்ல, குல சாமி கோயிலுக்கு போயிருக்கா. அதான் இன்னைக்கு வெட்டச் சொன்னேன்.

அவ ஊருக்குப் போறதுக்கும், நீ மரத்தை வெட்டறதுக்கும் இன்னாம்மே சம்பந்தம்? அவகிட்ட எப்பவும் மல்லுகட்டிகினு நிக்கிறது போதாதுனுட்டு, அவ இல்லாத நேரத்திலயும் இப்புடி கரிச்சி கொட்டறியே ஞாயமா?

அடப் போய்யா, உனக்கு என்னைக்குத்தான் இதெல்லாம் புரியப் போகுது. அவளே பாவம், புருசனும் இல்லாம, புள்ளை குட்டியும் இல்லாம, நொந்து போய் பட்ட மரமா வந்து நிக்குறா......இந்த மரத்த வெட்டற போது நீயோ இல்ல அந்த மரவெட்டியோ ஏழு தடவை பட்ட மரம், பட்டமரம்னு சொல்லுவீங்க......அந்த நேரத்துல அந்த புள்ள மனசு என்ன பாடு படும் கொஞ்ச ரோசனை பண்ணிப் பாத்தியா நீ? அதான் அவ வரதுக்குள்ள இந்த மரத்தை வெட்டிப்புடலாம்னு...............

அடி, என் ராசாத்தி, இத்தனை நல்ல மனசா உனக்கு........இத்தனை நாள் இது தெரியாமப் போச்சே..........

Thursday, January 27, 2011

அறிவும் நம்பிக்கையும் பிரியும் இடத்தில் நிற்கும் மனிதன் .


அறிவும் நம்பிக்கையும் பிரியும் இடத்தில் நிற்கும் மனிதன் - ஆசிரியர் திரு ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் அவர்கள்.


திரு இராஜகோபாலாச்சாரி அவர்கள் கூறிய, இந்து மதத்தையும், இந்தியாவையும் காப்பாற்றியவரே சுவாமி விவேகானந்தர்தான் என்பதையும், சுவாமிஜியின், சிகாகோ பயணச் சொற்பொழிவுகளின் மாபெரும் வெற்றியையும், உலகெங்கும் சுற்றியலைந்து, தாய்த்திரு நாட்டிற்குத் திரும்பியபோது, இந்தியாவின் ஆன்மாவே திரும்பி வந்துவிட்டதாக புளங்காகிதமடைந்த இந்திய மக்களின் மன நிலையையும், நடு நிசி நேரம் தன்னுயிர் பிரியும் வேளையில்,[ ஆகஸ்ட் 16, 1886] தன் ஆன்ம சக்திகள் அனைத்தையும் தன்னுடைய மிக நெருக்கமான சீடரான நரேந்திரருக்குத் தாரை வார்த்துக் கொடுத்த ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் வள்ளல் வரை பல விசயங்கள் நமக்குப் பரிச்சயமானதாக இருப்பினும், ஆசிரியரின் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அனைத்தையும் பார்க்கும் போது, பல்வேறு சிந்தனைகள் நம் மனதிலும் விரிவதையும் தடுக்க இயலவில்லை. ஒரு நல்ல நூலின் இலக்கணம் ஒரு வாசகனை கண்மூடித்தனமாக நம்பச் செய்வதைவிட, சுயமாக சிந்திக்கத் தூண்டச் செய்வதாக இருக்க வேண்டும். அந்த வகையில் இந்நூல் வெற்றி பெற்றிருப்பதாகவே தோன்றுகிறது.


சுந்தரத் தமிழ் துள்ளி விளையாடும் படைப்பு!

“இரவும், பகலும் முடைந்து நெய்யப்பட்ட ஆடையாய்ச் செல்கின்றன நாட்கள்.............. அறிவும், அறியாமையுமாய்ச் செல்கிறது மனிதனின் முன்னேற்றப்பாதை”................. இப்படி முன்னுரையின் முதல் வரியிலேயே வார்த்தை ஜாலங்கள் கொண்டு, வாசகர்களை சுண்டியிழுக்கும் நுண்கலை கற்றவர் என்று நிரூபிக்கிறார் ஆசிரியர்.

பறக்க எத்தனிக்கும் தன் குஞ்சுகளைக் காக்கும் பொருட்டு, பெற்ற காக்கைகளின் பரிதவிப்பை, ஒரு கவிதையாக மாற்றியமைத்த பாங்கு, கையில் எடுத்த நூலை கீழே வைக்க முடியாமல் ஒரே மூச்சில் படிக்கத் தூண்டுகிறது.

பதஞ்சலி யோக ஸூத்திரம் தொடங்கி, ஆதாம் ஏவாள் வரை மனம் படுத்திய பாட்டினால், சபிக்கப்பட்ட மனிதனின் நிலையை அழகு கவிதையாக வடித்திருக்கிறார் ஆசிரியர். ‘தான்’ என்ற அகங்காரம் தொலைந்தால்தான் மெய்ஞ்ஞானம் சித்திக்கும் என்பதனை விவரித்திருக்கும் விதம் தெளிந்த நீரோடை..

“ அந்த அனுபவங்களின் விஷத்தையெல்லாம் குடித்துக் கழுத்தில் தேக்கியபடி இந்து சமுதாயத்தின் உன்னதத்தையும், இந்து மதத்தின் ஆக்கப்பூர்வமான உயிர்வடிவத்தையும் தம் உணர்வுக் கண்னால் கண்டு, உள்ளம் கசிந்து காதலாகி வந்துற்ற தீங்கிற்கு நெஞ்சம் விதிர்த்துக் கண்ணீர் மல்கி, உயர்வையே எடுத்துரைத்த நரேந்திரனின் பக்குவம் வியத்தற்குரியது”, என்று [ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்] ஆசிரியர் உள்ளம் உருக, அத்துணை உணர்வுகளையும் சொல்லால் வடித்து, வாசகரை மெய்சிலிர்க்கச் செய்திருப்பதும் நிதர்சனம்.

ஆலகாலத்தை கண்டத்தில் தாங்கிய சிவபெருமானை முன்னிறுத்தியிருக்கும் பாங்கு அவர்தம் ஆன்மீக உணர்வையும் பிரதிபலிக்கிறது.

ஒரு சில இடங்களில் ‘ பரிவ்ராஜக வாழ்க்கை’ போன்று வடமொழிப் பயன்பாடு இருந்தாலும், அதற்கான தமிழாக்கமும் வாசகருக்குப் புரியும் வண்ணம் எளிய நடையில் வழங்கியிருப்பதும் சிறப்பு.

படிப்பறிவற்ற வாழ்க்கையை ‘ஊருண்கேணி’ என்று உவமைப்படுத்திய விதம் அற்புதம்.

” அறிவு என்பது முதலில் நம்பிக்கைகளின் தளைகளை அவிழ்க்கும், சிறைப்படுத்தும் வழக்க நெறிகளினின்றும் மனிதனை புறத்தனாக்கும் “ - என்ற ஆசிரியரின் கூற்று, Bertrand Russellன் "Useless Knowledge ", என்ற கட்டுரையை நினைவு கூறும் விதமாக அமைந்துள்ளது.

நரேந்திரர், விவேகாநந்தராக மாறிய சந்தர்ப்பத்தை நயம்பட எடுத்துரைத்திருக்கின்றார்.

நரேந்திரர் மதக்கல்வியை கையாண்ட விதம் பற்றிய ஆசிரியரின் பார்வை வாசகரையும் சிந்திக்க வைக்கக் கூடியதாகவே உள்ளது.

வேதாந்தம் அமைப்பியல் குறித்த ஆசிரியரின் ஆழ்ந்த ஞானம் வியப்பில் ஆழ்த்துகிறது.

‘ வேதத்திலேயே வந்திருந்தாலும் அறிவுக்குப் பொருத்தமாக இருந்தால் மட்டுமே ஏற்கத் தகுந்தது’, என்ற ஆசிரியரின் தீர்ப்பு பாரபட்சமற்றது.

19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலக் கல்வியின் விடியலில் மகிழ்ந்து அறிவியக்கக் கதிர்களில் குளித்த நெஞ்சங்களின் சூழலை, மனோத்தத்துவ முறையில் ஆய்ந்தறிந்து விளக்கமளித்துள்ளது வரவேற்கத்தகுந்தது.

ஆண்டவன் மீது பக்தர்கள் கொள்ளும் பக்தியை காதலன், காதலி மீது கொள்ளும் தீராக் காதலுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் நவீன வேதாந்தப் போக்கும் காணப்பெறுகிறது.கடவுளின் அருகில் எளிதாகச் சென்றடையும் மார்கத்தை மேலும் எளிதாக்க முயற்சிதிருக்கிறார் ஆசிரியர்.

பிரம்மம் சத்யம், உலகம் மாயை, ஜீவன் பிரம்மமே என்ற அத்வைதத்திற்கு ஆசிரியரின் வியாக்கியானம் தேர்ந்த ஞானமுள்ளதாகவும் பல இடங்களில் ஓஷோவின் தத்துவங்களோடு ஒத்துப் போவதாகவுமே உள்ளது.

விசிஷ்டாத்வைத்தத்தையும் விட்டுவைக்கவில்லை இந்த வித்தகர். ஸ்ரீநாத முனிகள் அருளிய மறைந்து போன ‘யோக ரகஸ்யம்’, நூல் குறித்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சங்கப் புலவர்களின் பார்வையில் காதல் மற்றும் காமத்தின் விளைவுகள், அன்பின் ஐந்திணை என்ற குறியீட்டால் அடி முதல் நுனி வரை அலசி ஆய்ந்திருக்கிறார்.

விவேகாநந்தரின் உபதேசங்களை ஊடுறுவி அதனைத் தெளிவுற தம் பாணியில் விளக்கியுள்ளார்.

ஒரு வேறுபட்ட கோணத்தில், ஹெர்மன் ஹெஸ்லேயின் ‘சித்தார்த்தாவில்’, சித்தார்த்தனின் தனிமையை வெகு நேர்த்தியாக விவேகாநந்தரின் தனிமையுடன் ஒப்பிட்டு , அதன் ரணம் குறித்தும் விவரித்திருக்கிறார்.

உணர்ச்சிச் சூழல்களும், அறிவுச் சுடர்களும் மாறி மாறி வரும் ஒரு பின்னிப் பிணைந்த ஆளுமையாக நம்மில் பதிவு பெறுகிறவர் விவேகாநந்தர் என்ற ஆசிரியரின் கூற்று ஏற்புடையதாகவே உள்ளது.


விவேகாநந்தரையும், நரேந்திரரையும் இரு வேறு உயிர்களாக உருவகப்படுத்தி, இருவரையும் ஒப்புமைப்படுத்தி, இரண்டிற்குமான பிணக்கத்தையும் துல்லியமாக எடுத்துக் காட்டியிருப்பதிலும் வெற்றி கண்டுள்ளார் என்றே கூறலாம்.

மேலை நாட்டு மத நம்பிக்கைகள், அராபிய தத்துவ அறிஞர் அவர்ரோஸ், கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாட்டில், அக்லினாஸ் இப்படி அனைவரின் தத்துவங்களையும் அலசி ஆயத் தவறவில்லை இந்த தத்துவ ஞானி.

சுருங்கச் சொன்னால், விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், ஸ்ரீராமானுஜர், ஆழ்வார்கள் மட்டுமன்றி உலகின் பெரும்பாலான மதங்களையும், தத்துவ ஞானிகளையும் கலந்தாய்ந்து தம் கருத்துக்களையும் உள்ளிருத்தி ஒரு அரிய படைப்பாக்கியிருக்கிறார் ஆசிரியர்.

‘பிற்றை நிலையில் சிந்திக்கும் பொழுது’, என்ற அழகிய தலைப்புடைய இறுதி அத்தியாயம், இம்முழு நூலின் முத்தாய்ப்பாக அமைந்திருக்கிறதென்றால் அது மிகையாகாது.மஜீம்தாரின் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றிய கட்டுரையை , அதன் உணர்வலைகளில் ஏதும் மாற்றம் வந்துவிடக்கூடாது என்ற உந்துதலினாலோ என்னவோ அதனை அப்படியே ஆங்கிலத்திலேயே அளித்துள்ளார்.

குறிப்புதவி நூல்கள் என்று 67 பெயர்கள் கொண்ட ஒரு பெரும் பட்டியலையே குறிப்பிட்டும், மனம் நிறைவடையாத ஆசிரியர், “இப்படியா அப்படியா என்று தீர்ந்து விடாத இத்தகைய தொல்லை இன்பமான அவஸ்தையில் இருந்து கொண்டு தான் இந்த நூலாக்கம் வெளிவருகிறது”, என்று முடித்திருப்பது மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதோடு, திரும்பவும் முதல் பக்கம் நோக்கி பார்வையைத் திருப்பவும் வைக்கிறது....................

இந்த நூல் உண்மையிலேயே மனித குலத்தின் மிகப் பெரிய சமன்பாடுகளில் ஒன்றின் தீர்வு என்பதிலும் மிகையில்லை !!

88 பக்கங்கள் கொண்ட, தமிழினி வெளியிட்டுள்ள இந்நூலின் விலை ரூ.55.

பவள சங்கரி.







Monday, January 24, 2011

கதையே கவிதையாய்...............


கதையே கவிதையாய் !

THE PROPHET - KAHLIL GIBRAN.

அல்முஸ்தபா, அனைவராலும் நேசிக்கப்பட்ட ஜீவன், நிகழ்காலத்தின் விடிவெள்ளியானவன், ஆர்பலீஸ் நகரத்தில் பன்னிரண்டு ஆண்டுகளாக காத்துக் கிடக்கிறான் தான் பிறந்த மண்ணிற்கே தன்னைச் சுமந்து செல்லப் போகும் கப்பலுக்காகக் காத்துக் கிடக்கிறார்.

பன்னிரண்டாம் வருடம், ஏழாவது நாள் அறுவடை சமயம், நகர எல்லையை விட்டு குன்றின் மீதேறி கடற்பரப்பை நோக்கும் போது மூடுபனியினூடே கப்பல் வருவது மங்கலாகத் தெரிந்தது.

இதயக் கதவுகள் விரிந்து திறந்து, அவருடைய இன்ப எல்லை கடல் கடந்து விரிந்தது. அவர் கண்களை மூடி ஆன்மாவின் அமைதியில் பிரார்த்தனை செய்தார்.

ஆனால் குன்றிலிருந்து கீழே இறங்கும் போது ஏதோ ஒரு சோகம் மேலே படர்ந்தது......அவர் இதயம் நினைத்தது :

நான் துன்பம் இன்றி அமைதியாக எப்படி புறப்படப் போகிறேன் ? அல்லது ஆன்மாவின் ரணமின்றி இந்நகரத்தை விட்டு எவ்வாறு வெளியேறப் போகிறேன்?

வேதனையோடு நீண்ட நாட்கள் இந்த சுவற்றுக்குள் கழித்திருக்கிறேன், நீண்ட தனிமையான இரவுகள் : சோகமின்றி அவர் தனிமையையும் வேதனையையும் யாரால் போக்க முடியும் ?

குழந்தையைத் தன் தோளின் மீது ஏந்திக் கொண்டிருந்த ஒரு பெண், குழந்தைகள் பற்றிப் பேசும்படி வேண்டினாள்.

அதற்கு அவர் கூறியதாவது :

உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகளே அல்ல.........

அவர்கள், வாழ்க்கை அது தன் சொந்த ஏக்கங்களின், மகனும், மகளும் ஆவார்கள்.

அவர்கள் உங்கள் மூலமாக வந்திருக்கிறார்களே ஒழிய உங்களிலிருந்து வரவில்லை.

அவர்கள் உங்களோடு இருந்தாலும் உங்கள் உடமைகள் அல்ல.

நீங்கள் உங்கள் அன்பை அவர்களுக்குக் கொடுக்கலாம். ஆனால் உங்கள் எண்ணங்களை அவர்கள் மீது திணிக்க முடியாது.

காரணம் அவர்கள் தங்களுடைய சொந்த எண்ணங்கள் கொண்டவர்கள்

நீங்கள் அவர்களின் உடலை மட்டும்தான் உடமையாக்கிக் கொள்ள இயலுமே ஒழிய அவர்களின் ஆன்மாவையல்ல.

காரணம், அவர்களின் ஆன்மா எதிர்காலம் எனும் இல்லத்தில் குடியிருக்கிறது. உங்கள் கனவிலும் அதனை நீங்கள் நெருங்க முடியாது.

நீங்கள் அவர்களைப் போலவே இருக்க முயற்சிக்கலாம். ஆனால் உங்களைப்போலவே அசலாக அவர்களை உருவாக்க முடியாது.

காரணம் வாழ்க்கை பின்னோக்கிச் செல்லுவதும் இல்லை, இறந்த காலத்தில் நிலைத்து நிற்பதும் இல்லை.

உங்கள் குழந்தைகள் விர்ரென்று விடுகின்ற அம்பிற்குரிய நாணாகத்தான் நீங்கள் இருக்கிறீர்கள்.

அந்த வில்லாளி தொலை நோக்குப் பாதையின் மீதல்லவோ குறிவைத்திருக்கிறான்.

அவன் தன் பலம் கொண்டு, தான் விடும் அம்பு வெகு தூரம் வேகமாக பாய்வதற்கு ஏற்றபடி உங்களை வளைத்துக் கொள்கிறார்கள்.

அந்த வில்லாளியின் கையில், உங்கள் வளையும் தன்மை மகிழ்ச்சிக்குரியதாக இருக்கட்டும்.

அவன் பறக்கக்கூடிய அம்பையே விரும்புவதால், அதற்காக உறுதியாக நிற்கக் கூடிய அந்த நாணையும் அவன் விரும்புகிறான்.

“ அண்ணன் என்னடா.......தம்பி என்னடா அவசரமான உலகத்திலே.............”

”தாய் என்றாலும், பிள்ளை என்றாலும் வாயும் வயிறும் வேறல்லவோ....?”


--------------------------------------------------------------------

கண்ணீரும் சிரிப்பும் !

நைல் நதிக்கரையில், சலனமில்லாத நீரோட்டத்தில், ஒரு கழுதைப்புலியும், முதலையும் சந்தித்துக் கொண்டது. இரண்டும் ஒன்றை ஒன்று நலம் விசாரித்தது.

கழுதைப்புலி முதலையைப் பார்த்து, “ தங்களின் நேரம் எப்படி போய்க் கொண்டிருக்கிறது ஐயா ?” என்றது.

பதிலாக அந்த முதலையும், “ மோசமாக போய்க் கொண்டிருக்கிறது. சில நேரங்களில் நான் வேதனையாலும், வலியாலும் துடிக்கிறேன். ஆனால் மற்ற உயிரினங்களோ எப்பொழுதும், அதற்கென்ன நல்லாத்தான் முதலைக் கண்ணீர் வடிக்கிறது, என்கின்றன. இது மேலும் என்னை வேதனைப்படுத்துகிறது “, என்றது.

கழுதைப் புலியோ, “ நீ, உன் வலியும், வேதனையும் பற்றிப் பேசுகிறாய். ஆனால் என் நிலையைப் பற்றி எண்ணிப்பார். இந்தப் பிரபஞ்ச அழகையும், அதிசயங்களையும், அற்புதங்களையும் கண்டு வியந்து போகிறேன். மகிழ்ச்சியின் எல்லையில் பளபளப்பான பகல் பொழுதைப் போல நானும் சிரிக்கிறேன். அதற்கும் இந்த காட்டுவாசிகள், இது கழுதைப் புலியின் சிரிப்பு என்றுதானே எகத்தாளமாகக் கூறுகிறார்கள்?”, என்றது.

சிரித்தாலும், அழுதாலும் சரியான புரிதல் இல்லையென்றால் வாழ்க்கையே நரகம்தானே..........