அறிவும் நம்பிக்கையும் பிரியும் இடத்தில் நிற்கும் மனிதன் - ஆசிரியர் திரு ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் அவர்கள்.
திரு இராஜகோபாலாச்சாரி அவர்கள் கூறிய, இந்து மதத்தையும், இந்தியாவையும் காப்பாற்றியவரே சுவாமி விவேகானந்தர்தான் என்பதையும், சுவாமிஜியின், சிகாகோ பயணச் சொற்பொழிவுகளின் மாபெரும் வெற்றியையும், உலகெங்கும் சுற்றியலைந்து, தாய்த்திரு நாட்டிற்குத் திரும்பியபோது, இந்தியாவின் ஆன்மாவே திரும்பி வந்துவிட்டதாக புளங்காகிதமடைந்த இந்திய மக்களின் மன நிலையையும், நடு நிசி நேரம் தன்னுயிர் பிரியும் வேளையில்,[ ஆகஸ்ட் 16, 1886] தன் ஆன்ம சக்திகள் அனைத்தையும் தன்னுடைய மிக நெருக்கமான சீடரான நரேந்திரருக்குத் தாரை வார்த்துக் கொடுத்த ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் வள்ளல் வரை பல விசயங்கள் நமக்குப் பரிச்சயமானதாக இருப்பினும், ஆசிரியரின் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அனைத்தையும் பார்க்கும் போது, பல்வேறு சிந்தனைகள் நம் மனதிலும் விரிவதையும் தடுக்க இயலவில்லை. ஒரு நல்ல நூலின் இலக்கணம் ஒரு வாசகனை கண்மூடித்தனமாக நம்பச் செய்வதைவிட, சுயமாக சிந்திக்கத் தூண்டச் செய்வதாக இருக்க வேண்டும். அந்த வகையில் இந்நூல் வெற்றி பெற்றிருப்பதாகவே தோன்றுகிறது.
சுந்தரத் தமிழ் துள்ளி விளையாடும் படைப்பு!
“இரவும், பகலும் முடைந்து நெய்யப்பட்ட ஆடையாய்ச் செல்கின்றன நாட்கள்.............. அறிவும், அறியாமையுமாய்ச் செல்கிறது மனிதனின் முன்னேற்றப்பாதை”................. இப்படி முன்னுரையின் முதல் வரியிலேயே வார்த்தை ஜாலங்கள் கொண்டு, வாசகர்களை சுண்டியிழுக்கும் நுண்கலை கற்றவர் என்று நிரூபிக்கிறார் ஆசிரியர்.
பறக்க எத்தனிக்கும் தன் குஞ்சுகளைக் காக்கும் பொருட்டு, பெற்ற காக்கைகளின் பரிதவிப்பை, ஒரு கவிதையாக மாற்றியமைத்த பாங்கு, கையில் எடுத்த நூலை கீழே வைக்க முடியாமல் ஒரே மூச்சில் படிக்கத் தூண்டுகிறது.
பதஞ்சலி யோக ஸூத்திரம் தொடங்கி, ஆதாம் ஏவாள் வரை மனம் படுத்திய பாட்டினால், சபிக்கப்பட்ட மனிதனின் நிலையை அழகு கவிதையாக வடித்திருக்கிறார் ஆசிரியர். ‘தான்’ என்ற அகங்காரம் தொலைந்தால்தான் மெய்ஞ்ஞானம் சித்திக்கும் என்பதனை விவரித்திருக்கும் விதம் தெளிந்த நீரோடை..
“ அந்த அனுபவங்களின் விஷத்தையெல்லாம் குடித்துக் கழுத்தில் தேக்கியபடி இந்து சமுதாயத்தின் உன்னதத்தையும், இந்து மதத்தின் ஆக்கப்பூர்வமான உயிர்வடிவத்தையும் தம் உணர்வுக் கண்னால் கண்டு, உள்ளம் கசிந்து காதலாகி வந்துற்ற தீங்கிற்கு நெஞ்சம் விதிர்த்துக் கண்ணீர் மல்கி, உயர்வையே எடுத்துரைத்த நரேந்திரனின் பக்குவம் வியத்தற்குரியது”, என்று [ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்] ஆசிரியர் உள்ளம் உருக, அத்துணை உணர்வுகளையும் சொல்லால் வடித்து, வாசகரை மெய்சிலிர்க்கச் செய்திருப்பதும் நிதர்சனம்.
ஆலகாலத்தை கண்டத்தில் தாங்கிய சிவபெருமானை முன்னிறுத்தியிருக்கும் பாங்கு அவர்தம் ஆன்மீக உணர்வையும் பிரதிபலிக்கிறது.
ஒரு சில இடங்களில் ‘ பரிவ்ராஜக வாழ்க்கை’ போன்று வடமொழிப் பயன்பாடு இருந்தாலும், அதற்கான தமிழாக்கமும் வாசகருக்குப் புரியும் வண்ணம் எளிய நடையில் வழங்கியிருப்பதும் சிறப்பு.
படிப்பறிவற்ற வாழ்க்கையை ‘ஊருண்கேணி’ என்று உவமைப்படுத்திய விதம் அற்புதம்.
” அறிவு என்பது முதலில் நம்பிக்கைகளின் தளைகளை அவிழ்க்கும், சிறைப்படுத்தும் வழக்க நெறிகளினின்றும் மனிதனை புறத்தனாக்கும் “ - என்ற ஆசிரியரின் கூற்று, Bertrand Russellன் "Useless Knowledge ", என்ற கட்டுரையை நினைவு கூறும் விதமாக அமைந்துள்ளது.
நரேந்திரர், விவேகாநந்தராக மாறிய சந்தர்ப்பத்தை நயம்பட எடுத்துரைத்திருக்கின்றார்.
நரேந்திரர் மதக்கல்வியை கையாண்ட விதம் பற்றிய ஆசிரியரின் பார்வை வாசகரையும் சிந்திக்க வைக்கக் கூடியதாகவே உள்ளது.
வேதாந்தம் அமைப்பியல் குறித்த ஆசிரியரின் ஆழ்ந்த ஞானம் வியப்பில் ஆழ்த்துகிறது.
‘ வேதத்திலேயே வந்திருந்தாலும் அறிவுக்குப் பொருத்தமாக இருந்தால் மட்டுமே ஏற்கத் தகுந்தது’, என்ற ஆசிரியரின் தீர்ப்பு பாரபட்சமற்றது.
19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலக் கல்வியின் விடியலில் மகிழ்ந்து அறிவியக்கக் கதிர்களில் குளித்த நெஞ்சங்களின் சூழலை, மனோத்தத்துவ முறையில் ஆய்ந்தறிந்து விளக்கமளித்துள்ளது வரவேற்கத்தகுந்தது.
ஆண்டவன் மீது பக்தர்கள் கொள்ளும் பக்தியை காதலன், காதலி மீது கொள்ளும் தீராக் காதலுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் நவீன வேதாந்தப் போக்கும் காணப்பெறுகிறது.கடவுளின் அருகில் எளிதாகச் சென்றடையும் மார்கத்தை மேலும் எளிதாக்க முயற்சிதிருக்கிறார் ஆசிரியர்.
பிரம்மம் சத்யம், உலகம் மாயை, ஜீவன் பிரம்மமே என்ற அத்வைதத்திற்கு ஆசிரியரின் வியாக்கியானம் தேர்ந்த ஞானமுள்ளதாகவும் பல இடங்களில் ஓஷோவின் தத்துவங்களோடு ஒத்துப் போவதாகவுமே உள்ளது.
விசிஷ்டாத்வைத்தத்தையும் விட்டுவைக்கவில்லை இந்த வித்தகர். ஸ்ரீநாத முனிகள் அருளிய மறைந்து போன ‘யோக ரகஸ்யம்’, நூல் குறித்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சங்கப் புலவர்களின் பார்வையில் காதல் மற்றும் காமத்தின் விளைவுகள், அன்பின் ஐந்திணை என்ற குறியீட்டால் அடி முதல் நுனி வரை அலசி ஆய்ந்திருக்கிறார்.
விவேகாநந்தரின் உபதேசங்களை ஊடுறுவி அதனைத் தெளிவுற தம் பாணியில் விளக்கியுள்ளார்.
ஒரு வேறுபட்ட கோணத்தில், ஹெர்மன் ஹெஸ்லேயின் ‘சித்தார்த்தாவில்’, சித்தார்த்தனின் தனிமையை வெகு நேர்த்தியாக விவேகாநந்தரின் தனிமையுடன் ஒப்பிட்டு , அதன் ரணம் குறித்தும் விவரித்திருக்கிறார்.
உணர்ச்சிச் சூழல்களும், அறிவுச் சுடர்களும் மாறி மாறி வரும் ஒரு பின்னிப் பிணைந்த ஆளுமையாக நம்மில் பதிவு பெறுகிறவர் விவேகாநந்தர் என்ற ஆசிரியரின் கூற்று ஏற்புடையதாகவே உள்ளது.
விவேகாநந்தரையும், நரேந்திரரையும் இரு வேறு உயிர்களாக உருவகப்படுத்தி, இருவரையும் ஒப்புமைப்படுத்தி, இரண்டிற்குமான பிணக்கத்தையும் துல்லியமாக எடுத்துக் காட்டியிருப்பதிலும் வெற்றி கண்டுள்ளார் என்றே கூறலாம்.
மேலை நாட்டு மத நம்பிக்கைகள், அராபிய தத்துவ அறிஞர் அவர்ரோஸ், கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாட்டில், அக்லினாஸ் இப்படி அனைவரின் தத்துவங்களையும் அலசி ஆயத் தவறவில்லை இந்த தத்துவ ஞானி.
சுருங்கச் சொன்னால், விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், ஸ்ரீராமானுஜர், ஆழ்வார்கள் மட்டுமன்றி உலகின் பெரும்பாலான மதங்களையும், தத்துவ ஞானிகளையும் கலந்தாய்ந்து தம் கருத்துக்களையும் உள்ளிருத்தி ஒரு அரிய படைப்பாக்கியிருக்கிறார் ஆசிரியர்.
‘பிற்றை நிலையில் சிந்திக்கும் பொழுது’, என்ற அழகிய தலைப்புடைய இறுதி அத்தியாயம், இம்முழு நூலின் முத்தாய்ப்பாக அமைந்திருக்கிறதென்றால் அது மிகையாகாது.மஜீம்தாரின் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றிய கட்டுரையை , அதன் உணர்வலைகளில் ஏதும் மாற்றம் வந்துவிடக்கூடாது என்ற உந்துதலினாலோ என்னவோ அதனை அப்படியே ஆங்கிலத்திலேயே அளித்துள்ளார்.
குறிப்புதவி நூல்கள் என்று 67 பெயர்கள் கொண்ட ஒரு பெரும் பட்டியலையே குறிப்பிட்டும், மனம் நிறைவடையாத ஆசிரியர், “இப்படியா அப்படியா என்று தீர்ந்து விடாத இத்தகைய தொல்லை இன்பமான அவஸ்தையில் இருந்து கொண்டு தான் இந்த நூலாக்கம் வெளிவருகிறது”, என்று முடித்திருப்பது மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதோடு, திரும்பவும் முதல் பக்கம் நோக்கி பார்வையைத் திருப்பவும் வைக்கிறது....................
இந்த நூல் உண்மையிலேயே மனித குலத்தின் மிகப் பெரிய சமன்பாடுகளில் ஒன்றின் தீர்வு என்பதிலும் மிகையில்லை !!
88 பக்கங்கள் கொண்ட, தமிழினி வெளியிட்டுள்ள இந்நூலின் விலை ரூ.55.
பவள சங்கரி.
எல்லா புத்தகங்களையும் படிச்சி கரைக்கிறீங்க போல.....அசத்தல்..
ReplyDeleteநன்றிங்க மனோ.
ReplyDeleteநல்ல புத்தகத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
ReplyDeleteThank you Chitra.
ReplyDeleteNice....
ReplyDeleteஒற்றை வரியில் கருத்துரை எழுதினால் அது நன்றாக இருக்காது.. தங்களின் உழைப்புக்கும், எழுத்துக்கும் மிக்க நன்றி! பதிவுகளின் வாயிலாக அறிய முடிகிறது தங்களின் அருமையை..! வாழ்த்துக்கள்..!
ReplyDeleteவாருங்கள் தங்கம் பழனி, வணக்கம். நன்றி,
ReplyDeleteமோகனத்தமிழை வெகு அருமையாக உள்வாங்கிக் கொள்ள முயற்சி செய்திருக்கிறீர்கள்!
ReplyDeleteஇந்த விமரிசனத்தை ஒரு விருந்தினர் இடுகையாக என்னுடைய பதிவில் எடுத்தாண்டிருக்கிறேன் அம்மா! புத்தகம் என்னுடைய கைக்கு வந்து மூன்று நாட்களே ஆகிறது. கொஞ்சம் நிறுத்தி நிதானமாக வாசித்துக் கொண்டு, அப்புறம் என்னுடைய மனதில் பட்டதை எடுத்துச் சொல்லலாம் என்பதற்காக, முதலில் உங்களுடைய விமரிசனத்தை வெளியிட்டிருக்கிறேன்.
http://consenttobenothing.blogspot.com/2011/02/faith-and-reason-by-srirangam-v.html
தமிழ்வாசல் குழுமத்தில் மற்றும் உங்களிடம் அனுமதியை வேண்டாமலேயே இதைச்செய்தாயிற்று!