எந்த சக்தியும் படைப்பாற்றலின் குறுக்கே தடையாக நிற்கவியலாது என்பதற்கு சிறந்த உதாரணம் - தாமஸ் கார்லைல் என்ற பிரித்தானிய வரலாற்றாசிரியர், எழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், தத்துவவாதி, கணிதவியலாளர். (திசம்பர், 04, 1795 - பிப்ரவரி, 05, 1881)
அவரது படைப்புகளில் மிக முக்கியமானது, பிரஞ்சுப் புரட்சி, 3 தொகுதிகள். The French Revolution, 3 vol. (1837), (1858-65)
இந்த பிரெஞ்சுப் புரட்சி நூலின் முதல் தொகுதியின் முழுமையான கையெழுத்துப் பிரதியை சிறப்பாக முடித்துவிட்ட மன நிறைவில் அதனை தனது நண்பரான தத்துவஞானி ஜான் ஸ்டூவர்ட் மில் என்பவரிடம் கருத்தைப் பெறுவதற்காகக் கொடுத்துள்ளார். அவர் அதை வாசிக்க ஆரம்பிப்பதற்குள்ளாகவே அவருடைய பணிப்பெண், அதன் மகத்துவம் குறித்து அறியாதவர், தற்செயலாக அதை வெண்ணீர் காய்ச்சுவதற்காக எரித்துவிட்டார். இதனால் மனமுடைந்து விரக்தியில் சில நாட்கள் கழிந்த பின்னர், கார்லைல் ஒரு நாள் தன் இல்லத்தின் சாளரம் வழியாக கட்டிடம் கட்டும் தொழிலாளர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் அந்த செங்கல் கட்டிடங்களை அடுக்கடுக்காக மீண்டும், மீண்டும் அடுக்கிக் கொண்டிருப்பதைக் கண்டவரின் எண்ணத்தில் ஒரு புத்துணர்வு தோன்றியது. விரக்தியான மனநிலையிலிருந்து மீண்டு வந்தவர், முதல் பகுதியை மீண்டும் எழுதுவதற்கு முன்பு இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகளை புதிதாக எழுதினார். அந்தக் காலத்தின் வரலாற்று படைப்புகளில், மிகச் சிறந்ததாகக் கருதப்பட்ட இவருடைய இந்த படைப்புக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது.
கார்லைலின் பாணி மிகவும் வித்தியாசமாகவும், சிறப்பியல்புடையதாகவும் இருந்தது. இயல்பான நாவலாசிரியரின் அல்லது வரலாற்றாசிரியரின் பாணியில் இல்லாமல், இரண்டிலிருந்தும் வேறுபட்ட கூறுகள் இருந்தபோதிலும். அவர் கண்களுக்கு முன்பாக நிகழ்ந்த நிகழ்வுகளைப் பற்றி கருத்து தெரிவிப்பது போலவும், சில வரலாற்று கதாபாத்திரங்களை நேரடியாகவும் தெளிவாகவும் அணுகிய வகையில் எழுதினார். இதனாலேயே ஏனைய மற்ற வரலாற்றாசிரியர்களிடம் ஆழ்ந்த விரோதப் போக்கை வளர்த்துக் கொண்டார். தொழில்முறை வரலாற்றாசிரியர்களின் தனிப்பட்ட புறநிலைத்தன்மை அவருடைய எழுத்துக்களில் இல்லை என்பதே அவருடைய தனித்தன்மை மற்றும் சிறப்பு!