கொங்கு நாட்டின் மிகச்சிறப்பான ஒரு விசயம் என்றால் அது உலகின் முதல் தமிழ் இசைக்கல்வெட்டு!
ஈரோடு மாவட்டம், ஈரோடு – காங்கேயம் பாதையில் 12 கல் தொலைவில், அரச்சலூரில், அவல்பூந்துருத்திக்கு அருகில் அமைந்துள்ள பாண்டியர் குழி என்ற இடத்தில் உள்ள கற்குகையில் அமைந்துள்ளது அற்புதமான இந்த தமிழ் இசைக் கல்வெட்டு . இதன் அருகில் ஒரு, ஆண், பெண் உருவங்கள் பொறிக்கப்பட்ட கல்லும் உள்ளது. இதனைப்பற்றிய ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என்கிறார் கல்வெட்டறிஞர் புலவர் இராசு அவர்கள்.
இந்தக் கல்வெட்டை முதலில் 1961 ஆம் ஆண்டில் கண்டு பிடித்தவர் கல்வெட்டறிஞர் புலவர் இராசு அவர்கள். கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கண்டறியப்பட்ட இந்தத்.தமிழ் கல்வெட்டு தொன்மைக்கால தமிழி எனும் எழுத்து பிற்காலத்தில் வட்டெழுத்தாக உருமாற்றம் பெற்றுள்ளதையும், , இசைத்தாள வரிசையைப் பதியும் முதல் ஆவணமாகவும் திகழ்கிறது. சங்ககாலத்திலேயே தமிழர்கள் தமிழிசைக் குறியீடுகளில் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பதும் உறுதியாகிறது. இது சிலப்பதிகாரம் சொல்லும் சதுரப்பாலையைச் சார்ந்த இசைக்குறிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.
பல்லடம் – காளிவேலம்பட்டியைச் சேர்ந்த தூரன் சு. வேலுச்சாமி என்பவர் இதனை ஆவணப்படமாக எடுக்க முயற்சி எடுத்துக்கொண்டுள்ளதும், இவர் ஏற்கனவே பெரியார் மற்றும் ராமானுஜர் ஆகிய திரைப்படங்களுக்கு களப்பணிகள் செய்துள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. என் ‘கடைச்சங்கத்தில் கொங்கு கலாச்சாரம்’ என்ற நூல் பற்றிய சுவையான கலந்துரையாடலும் சிறப்பாக அமைந்தது.