கேப்டன் லட்சுமி சேகல் (1914 - 2012
கேப்டன் லட்சுமி சேகல் சென்னையில் பிறந்து, மருத்துவராகப் பணியாற்றியவர், சுதந்திரப் போராட்ட வீராங்கனை. இந்திய அரசின்
மிக உயரிய விருதான பத்மபூஷண் விருது பெற்றவர். 1914ம் ஆண்டு, அக்டோபர் திங்கள் 24ம்
நாள் சென்னையில் (அன்றைய மதராஸ் பட்டிணம்) பிறந்தவர், இவருடைய தந்தை டாக்டர் எஸ். சுவாமிநாதன் சென்னை
உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர், அமெரிக்காவில் வானியல் துறையில் முனைவர் பட்டமும்,
கணிதவியலில் பட்டமும் பெற்றவர். சிறந்த குற்றவியல்
வழக்கறிஞர் என்ற தகுதியும் பெற்றவர். தாய் ஏ.வி.அம்முகுட்டி, ஒரு சமூக சேவகி. கேரள மாநிலம் பாலக்காட்டைச்
சேர்ந்தவர். இளம் வயதிலேயே நாட்டுப்பற்று மிக்கவராகவும், மிகுந்த சமுதாய நலம் மிக்கவராகவும், சுதந்திரப் போராட்டத்தில் செயல்
வீராங்கனையாகவும் இருந்தவர். கேரள மாநிலத்தின் பாலக்காடு நகரின், பிரபலமான
ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலட்சுமி சேகல் லேடி லிவிங்ஸ்டன் ஆசிரியப் பயிற்சிக்
கல்லூரியின் பள்ளியில் தம் பள்ளிக் கல்வியைப் பயின்றார். 1930ல் இராணிமேரிக் கல்லூரியில் பட்டப்படிப்பை
தொடர்ந்தார். 1938ல் சென்னை
மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் முடித்து, பின்பு பெண்ணியல் மற்றும் மகப்பேறு மருத்துவ
பட்டச்சான்றிதழ் (diploma) பயின்றார்.
மருத்துவக் கல்வியுடன், அரசியல்
செயல்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தார். அந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியிலும்,
அகில இந்திய பெண்கள் மகாநாட்டிலும் பங்கு
கொண்டிருந்தார். ஆனால் லஷ்மியோ, சுபாஷ்
சந்திரபோஸ் அவர்களின் அதிரடி அரசியலில் ஈர்க்கப்பட்டார்.