Monday, February 29, 2016

கொரிய – தமிழ் மக்களின் பண்பாடு மற்றும் கலாச்சார ஒற்றுமை



கொரியதமிழ் மக்களின் பண்பாடு மற்றும் கலாச்சார ஒற்றுமைஆய்வுச் சுருக்கம்
பவள சங்கரி
எழுத்தாளர், சமூக ஆர்வலர்

பல்லாயிரம் மைல்களின் இடைவெளியில் இருக்கும் கொரியா மற்றும் தமிழ்நாடு என இரு நாட்டு மக்களின் மொழி வடிவம் மற்றும் கலாச்சார அடிப்படையில் ஒரு ஒற்றுமை இருப்பது போன்ற சுவையான தகவல்களை பல்வேறு அறிஞர்களின் ஆய்வுகள் மூலம் அறிய முடிகிறது. கொரிய மொழி ஆராய்ச்சியாளரும், தமிழ் அறிஞருமானஜங்க் நாம்கிம், தமிழருக்கும் கொரியர்களுக்கும் இருக்கும் பழங்காலத் தொடர்புகளைப் பதிவு செய்து வருகிறார். பொதுவாக ஒரு இன மக்களின் பண்பாடு, கலாச்சாரம் குறித்து எளிமையாக அறிய வகை செய்வது அந்நாட்டு மக்களால் இயல்பாக அன்றாட பேச்சு வழக்கு மொழியில் பயன்படுத்தும் சில, பல சொல்வடைகள் மற்றும் பழமொழிகள் போன்றவைகளே என்றால் அது மிகையாகாது. அதோடு அந்தந்த காலகட்டங்களுக்கேற்றவாறு இயற்கை வளம், மனித நலம், அவர்தம் இயல்பு, சுற்றுச்சூழல் போன்ற பலவற்றையும் பிரதிபலிக்கக்கூடியது கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் படைப்புகள். அந்த வகையில் ஏனைய பல நாடுகளைப் போன்றே கொரியாவும், தம் மொழியை முன்னிறுத்தியே முன்னேறியிருப்பது வெள்ளிடைமலை.  16ம் நூற்றாண்டு ஆரம்பங்களில்ஹங்குல்' என்ற எழுத்து வடிவ மொழியை தாய்மொழியாக ஏற்றுக்கொண்ட   பிறகே கொரிய மக்களின், கல்வித் தகுதியும், பொருளாதார வளர்ச்சியும் பெருமளவில் உயர்ந்துள்ளது. அதற்கு முன்பு சீன மொழியை பயன்படுத்தியுள்ளனர். தென்கொரிய மக்களின்ஹங்குல்' என்ற மொழிக்கும், நம் தமிழ் மொழிக்கும் எழுத்து வடிவத் தொடர்பு உண்டு என்கின்றனர் மொழியியலாளர்கள். இன்னும் சொல்லப்போனால் தமிழிலிருந்து பிறந்தது தான் கொரிய மொழி என்பதை அங்குள்ள எழுத்து வடிவங்கள் தெளிவுபடுத்துவதாகவும் கூறுகின்றனர். பாரம்பரிய கொரிய இலக்கியங்களின் ஆணிவேராகத் திகழ்வது, கொரிய தீபகற்பத்தின் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் பாரம்பரிய நாட்டுப்புற நம்பிக்கைகள் போன்றவைகளே. பொதுவாக கொரிய கவிதைகள் இசைப்பதற்காகவே இயற்றப்படுபவை. இக்கவிதைகளின் வடிவங்களும், நடைகளும் இனிமையான தோற்றங்களை பிரதிபலிக்கக்கூடியதாக உள்ளது சிறப்பு. நாம் இங்கு நாட்டுப்புற வழக்கு மொழிகள், கவிதைகள், பழமொழிகள் போன்ற சிலவற்றை தேர்ந்தெடுத்து அதன் மூலம் இரு நாடுகளுக்கும்  உள்ள ஒற்றுமையை ஆய்வு செய்வதன் மூலம் மேலும் பல சுவையான தகவல்களை வெளிக்கொணர முடிகிறது.