Monday, February 28, 2011

கரை சேரும் அலைகள்.



தீபாவளி விடுமுறை முடிந்த சமயம் என்பதால் இரயிலில் கூட்டம் அதிகம். ஆனாலும் முன்பதிவு செய்திருந்ததால் உட்கார இடம் கிடைத்தது, முகுந்தனுக்கு.

நான்கு வருடங்களுக்கு முன்பு ஊரைவிட்டு, லண்டன், புறப்பட்ட நாள் நினைவிற்கு வந்தது. அந்த மனநிலை இன்று நினைத்தாலும், இதயத்தில் பந்தை உருட்டிவிட்டது போல ஒரு உறுத்தல்.

காதல் மனைவி, அன்பை மட்டுமே வாரி இறைத்தவள், முதன் முதலில் ஒரு சின்ன உயிர் தன் கருவில் உருவானதை வெட்கமும், மகிழ்ச்சியும் கலந்த புன்னகையுடன், அனிதா சொல்லிய விதம் இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது. எத்தனை அன்பான முகம் அது. ஒரு முறை கூட அவள் கடிந்து பேசிய நினைவே இல்லை.எத்தனை முறை வேதாளம் ஓதிய தேவாரம் போல அவளுக்கு அறிவுரைகள் மணிக்கணக்காக அள்ளி வழங்கியிருப்பேன், அவள் என் வசம் மட்டுமே இருக்க வேண்டுமே என்ற பேராசையில். அத்தனைக்கும் மெல்லிய புன் சிரிப்பொன்றையே பதிலாக பெற முடியம் அவளிடமிருந்து. அத்துனை முயற்சிகளும் ஒரு நாள் விழலுக்கிறைத்த நீராகப் போகிறது என்று அன்று நினைக்கவில்லையே நான்?

இரயில் புறப்படும் நேரமானதை வழியனுப்ப வந்த உறவினர்களின் பரபரப்பும், வெளியில் ஓரமாக நின்று வேகவேகமாக இறுதி வரை இன்பம் என்று, இழுத்து புகைத்து விட்டு தூக்கி எறிய மனம் வராமலே, வேறு வழியின்றி தூக்கி எறிந்துவிட்டு அவசரமாக பச்சைவிளக்கைக் கண்டவுடன் முண்டியடித்துக்கொண்டு ஏற வருபவர்கள் என்று வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. இந்த நேரத்தில் தான் இரண்டு குழந்தைகளை இழுத்துக் கொண்டு கையில் பெட்டியையும் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு ஒரு பெண்மணி ஓடி வருவதைக் கண்ட போது தன்னையறியாமல் உதவும் எண்ணம் மேலோங்க, ஓடிச் சென்று பெட்டியை வாங்கிக் கொள்ளவும், அந்தப் பெண் பெரிய பெண் குழந்தை 5 வயது இருக்கும் மேலே கையைப் பிடித்து ஏற்றிவிட்டு, அடுத்த 2 வயது இருக்கும் ஆண் குழந்தையை தூக்கிக் கொண்டு ஏறினார்.

இருக்கை எண்ணைப் பார்த்து உட்கார்ந்து சற்றே மேல் மூச்சு வாங்க இளைப்பாறினாள்.

அவர்கள் இருக்கை என் இருக்கையின் எதிர் புறம் இருந்தது. குழந்தைகள் இரண்டும் தாயின் இரு புறமும் சாய்ந்து நின்று கொண்டு விகல்பமில்லாமல், என் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தன. அந்தக் குழந்தைகளின் முகத்தைப் பார்த்தவுடன், ஷாம்லியின் முகம் திடீரென்று அதிசயமாக நினைவிற்கு வந்தது. ஷாம்லியை நினைத்தாலே ஏனோ மனம் ஒரு நிலையில் இருப்பதில்லை. மனசு பாரமாகி எந்த வேலையும் ஓடாது. அதனாலேயே பெரும் பாலும் அவள் நினைவையே தவிர்த்து விட வேண்டியதாகிறது.

ஷாம்லிக்கு இப்போது சரியாக 4 வயது 20 நாட்கள். ஷாம்லி பிறந்த 20 ஆம் நாள்தான் நான் ஊரை விட்டே போகவேண்டும் என்ற திடமான முடிவுடன், அலுவலகத்தில் வாதிட்டு லண்டன் பிரிவில் பணி மாற்றம் வாங்கிச் சென்றேன். இல்லையென்றால் இந்நேரம் என் நிலை எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கக் கூட முடியவில்லை. காரணாம் நான் அன்று இருந்த சூழல் அப்படிப்பட்டது................

ஷாம்லி எவ்வளவு அழகு. சுருட்டை முடி, குண்டு கன்னம், அதில் அழகான குழிகள், தகதக்கும் நிறம், சொப்பு உதடு, முட்டைக் கண்கள் என்று அப்படியே அவள் அம்மாவைக் கொண்டிருக்கிறாளே?இத்தனைக்கும் அவளை புகைப்படத்தில் மட்டுமே பார்த்திருக்கிறேன் பிறந்த குழந்தையாக இருந்த போது பார்த்தது.அதுவும் வேண்டா வெறுப்பாக.... எப்படி அவளை நினைவில் கொண்டால் நிம்மதியாக இருக்க முடியும். ஆனால் எத்துனை துரதிருஷ்டமான குழந்தை இவள். பெயர் கூட அவள் அத்தை, அதான் என் ஒரே சகோதரி, அவள் தானே வைத்தாள். பிறந்து கையில் வாங்கிய நேரம் முதல் அவள் தானே அவளுக்கு தாயாகவும், தந்தையாகவும் இருந்து கவனித்துக் கொள்கிறாள். நான் போய் முன்னால் நின்றால் என்னை அப்பா என்று கூப்பிடுவாளோ மாட்டாளோ தெரியவில்லை.

எப்படி என்னை அப்பா என்று கூப்பிட முடியும், அவளிடம் ஒரு முறையேனும் போனிலாவது அன்பாக நாலு வார்த்தை பேசியிருந்தால் கூட பரவாயில்லை....அது கூட நான் செய்யவில்லையே, பின் எப்படி என் மீது பாசம் வரும் அவளுக்கு. இந்த நான்கு வருடமாக அவளை புகைப்படத்தில் மட்டுமே பார்த்திருக்கிறேன். நேரில் பார்க்கும் தைரியமே இல்லையே? இப்போது கூட அம்மா உடல் நிலை மோசமாக இருப்பதால் அவர் என்னைப் பார்க்க வேண்டும் என்று மிகவும் கட்டாயப் படுத்தியதால் தானே வர வேண்டியதாகி விட்டது.என்ன செய்வது வாழ்க்கையில் இப்படி எல்லாம் நடக்கும் என்று கனவிலேனும் நினைக்க வில்லையே. எல்லாம் காலக் கொடுமை...............

ஷாம்லி உருவான அந்த நேரம் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அதுவும் என் அன்பு மனைவியின் சாயலிலேயே அவள் குணத்துடனேயே ஒரு பெண் குழந்தை பிறக்க வேண்டுமென்று எத்தனை ஆசைப்பட்டேன். ஆனால் இன்று அப்படி பிறந்தும் அவளை ஏறெடுத்தும் பார்க்க முடியாத நிலை. அதிக கடவுள் பக்தி இல்லாத நான் கூட விரதம் எல்லாம் இருந்ததற்கு அம்மாவும், தங்கையும் எப்படியெல்லாம் கிண்டல் செய்தார்களே! அவ்வளவு அன்பும் ஆசையும் ஒரு நொடியில் மாயமாய் மறைந்து விட்டதே இடி போன்ற அந்த செய்தியால்.

அந்த நாள் .......வாழ்க்கையில் என்றுமே நினைக்கவே கூடாது என்றுதானே நாட்டை விட்டே செல்ல திட்டமிட்டேன். ஆனால் எங்கு போனாலும், நம்மோடு நிழலாக ஒட்டிக் கொண்டு வரும் நினைவுகளை எங்கே சென்று புதைப்பது......நான் தூங்கினால் கூட அது விழித்துக் கொண்டு என்னை விறைத்துப் பார்க்கிறதே........

அம்மா........அக்காவைப் பாரு, என் பொம்மையைப் புடுங்கறா......ம்ம்ம்ம் போடீ...........

குழந்தையின் மழலைக் குரல் கேட்டு பளிச்சென நினைவு விலகியது........

அதற்குள் அம்மா சமாதானம் படுத்தியும் குழந்தைகள் இருவரும், அந்த பொம்மைக்கு போட்டி போடுவதைத் தடுக்க முடியவில்லை தாயினால். 5 வயது பெரிய குழந்தைக்கூட இப்படித்தான் அடம் பிடிக்குமா?அப்போ ஷாம்லி இப்படித்தான் இருப்பாளோ. இல்லை இன்னும் ஒரு படி மேலே போய் தாயில்லாமல், அத்தையிடம் வளர்வதால் இன்னும் மோசமாக வளர்ந்திருப்பாளோ?

குழந்தைகள் இருவரும் அடம் பிடித்து அழிச்சாட்டியம் பண்ண ஆரம்பிக்க, அந்தத் தாய்க்கு தர்மசங்கடம் ஆகிவிட்டது. நான் ஏதாவது செய்யலாமே என்ற எண்ணத்தில், அந்த சின்ன குழந்தையை கூப்பிட்டு, உன் பெயர் என்ன என்றேன். அந்த குழந்தை மௌனமாக என்னை முழித்துப்பார்க்க, மூத்த பெண் குழந்தை, அவன் பேர் விஷால் என்றது.

விஷால் குட்டி, இங்கே வாங்க.......என்றேன் அன்பாக.[ அட எனக்குக் கூட இவ்வளவு அன்பாக குழந்தையை கொஞ்சத் தெரியுமா?]

அந்தக் குழந்தையும் என்னை உற்று பார்த்து விட்டு, என் கையில் இருந்த செல் பேசியைப் பார்த்துவிட்டு, வரலாமா என்று யோசித்தது. நானும் அதையே காட்டி, பாட்டு கேட்கலாம் என்று சொல்லி அருகே அழைத்தேன். குழந்தையும், அந்த போனுக்காக அருகில் வந்து, மடியின் மீது அமர்ந்து கொண்டு, அந்த செல் பேசியை வாங்கிக் கொண்டது.........

குழந்தையின் ஸ்பரிசம் பட்டவுடன், மனம் ஏனோ திரும்பவும், ஷாம்லியை நினைத்துக் கொண்டது. ஒரு புறம் அவள் மீது பாசம் இருப்பதாக தோன்றினாலும், மறு கணமே அவள் தாயின் நினைவு வந்து அதை மழுங்கச் செய்து விடுகிறது. என்ன கொடுமை இது.............

அன்று காலை வழக்கம் போல் அனிதா விடியற் காலையிலேயே எழுந்து விட்டாள். பிரசவ நேரம் நெருங்கி விட்டதே, இப்படி விடியலில் எழுந்து, இத்தனை வேலை செய்ய வேண்டுமா என்று கேட்டால், புன்னகை மாறாமல், அப்போதான் குழந்தை ஈசியா பிறக்கும் என்றாள். வார்த்தைகளை அளந்து பேசுவதற்கு அவளிடம் பயிற்சி எடுக்க வேண்டும். அத்தனை கஞ்சம் வார்த்தைகளில். பாதி வினாக்களுக்கு புன்னகை தான் பதிலாகக் கிடைக்கும் அவளிடமிருந்து.

அன்று வெள்ளிக் கிழமை. வாசல் கூட்டி மெழுகி, கோலம் போட்டு, குளித்து, சாமி விளக்கேற்றி வைத்து விட்டு, நீண்ட கூந்தலின் நுனியில் சிறு முடிச்சுப் போட்டு, அழகாக நெற்றியில் பொட்டிட்டு, மேலே ஒரு கோடு திருநீறு மெல்லிதாக இட்டு, கையில் காப்பி டம்ளருடன் சென்று கணவனின் முன் நெற்றியில் லேசாக முத்தமிட்டு எழுப்பினாள். இதுதான் அவளுடைய அன்றாட வழக்கம் திருமணமான அந்த மூன்று ஆண்டுகளாக.

அன்றும் அப்படித்தான் எழுப்பினாள். அவனும்வழக்கம் போல அவளை இழுத்து................அதற்குள் அவள் ஸ்ஸ்ஸ்ஸ்....என்று முனகவும், அவன் சடாரென எழுந்து என்னம்மா, என்னாச்சு, வலிக்கிறதா என்றான் ஆதரவாக.

அவள் வாய் இல்லை என்று முனுமுனுத்தாலும், முகம் காட்டிக் கொடுத்தது, அவளுக்கு ஏதோ சிரமம் இருப்பதை. உடனே, நான் வேகமாக எழுந்து படுக்கையை விட்டு கீழே இறங்கி,

அனிதா, என்னம்மா, என்ன செய்கிறது. அம்மாவைக் கூப்பிடட்டுமா என்றேன். அவள் இன்னும்கொஞ்ச நேரம் பாக்கலாமே, அம்மா பாவம் தூங்குவார்கள், என்றாள்.

” சரி, நான் போய் வேகமாக குளித்து விட்டு வருகிறேன். அதற்குள் அம்மா எழுந்து விடுவார்கள். பார்க்கலாம் ”என்று சொல்லிவிட்டு, அவசரமாக ஓய்வறை நோக்கி ஓடினேன். மனதில் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது.

குளித்து விட்டு வெளியே வந்தால் வீட்டில் ஒரே பரபரப்பு. அம்மா, எழுந்திருந்தார்கள். அனிதாவிற்கு பிரசவ வலி ஆரம்பித்திருந்தது. முன் நெற்றி வேர்த்து, கண்கள் சிவந்து, முகத்தில் ஒரு பயம் தெரிந்தது. அம்மா இருப்பதையும் மறந்து, அவளருகில் சென்று அவளை அணைத்துக் கொண்டு, ஒன்றும் பயப்படாதே, சீக்கிரம், நம்ம பாப்பா வெளியே ஓடி வந்திடுவா. உனக்கு சிரமமே கொடுக்க மாட்டா என் செல்லம், என்றேன் ஆதரவாக அவள் தலையைக் கோதியபடி......

அம்மாவும், சண்டி வலி போல்தான் இருக்கிறது. டாக்டர் இன்னும் 15 நாட்கள் இருப்பதாகக் கூறினாலும், முதல் பிரசவம் பற்றி சொல்லவே முடியாது. எதுக்கும் ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் செல்லலாம் என்றார்கள். எனக்கும் அதுதான் சரியாகப் பட்டது. அம்மாவும் அவசரமாக ஓடிச்சென்று, சீரகக் கஷாயம், பசு வெண்ணை போட்டு காய்ச்சி கொண்டு வந்து கொடுத்தார்கள். சண்டி வலி என்றால் இதிலேயே சற்று குணம் தெரியும். ஒரு வேளை சூட்டு வலியாக இருந்தாலும் இதற்கு நல்லகுணம் தெரியும், பார்க்கலாம். என்றார்கள்.

ஆனால், அனிதா அந்த கஷாயம் பாதிக்கூடக் குடிக்கவில்லை....அதற்குள் நல்ல வலி வந்துவிட்டது அவள் முகத்திலேயேத் தெரிந்தது. இனி ஒரு கணமும் தாமதிக்கக் கூடாது என்ற வேகத்துடன், போர்டிகோவிலிருந்து, காரை வெளியே எடுத்து வைப்பதற்குள் அம்மா அவளுக்குத் தேவையான துணிமணிகள், பொருட்கள் எல்லாம் எடுத்துக் கொண்டு தயாராக அவளையும் கூட்டிக் கொண்டு வெளியே வந்தார்கள்.

மருத்துவமனையில் சென்று, அடுத்த இரண்டு மணித்துளிகள் நிமிடங்களாகக் கரைந்து விட்டது. அனிதாவிற்கு வலி அதிகமாகிக் கொண்டிருந்தது..........அம்மா.....அம்மா..

மடியில் உட்கார்ந்திருந்த குழந்தை தன் அம்மாவைக் காட்டி கையை நீட்டிக் கொண்டிருந்தது. நினைவுகள் தடைபட, ஒரு பெரு மூச்சு பலமாக வெளியே வந்தது. குழந்தை கீழே இறங்கி தாயிடம் போய் ஒட்டிக் கொண்டது. விட்டுப் போன நினைவுகள் தொடர ஆரம்பித்தது........

அனிதா வலியால் துடிப்பதும், முனகுவதும், வெளியே கேட்டது. மருத்துவர் பிரசவ அறையை விட்டு வெளியே வந்து, தன்னை அழைத்த போதே, அவர் ஏதோ ஏடாகூடமாக சொல்லப் போகிறார் என்பது தெரிந்து விட்டது அவர் முக பாவத்தில். குழந்தை நிலை மாறி இருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்துதான் குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என்று கையெழுத்து வாங்கி சென்றவர்கள், சில மணி நேர போராட்டங்களுக்குப் பிறகு, மருத்துவர் சேயை மட்டுமே காப்பாற்ற முடிந்தது, தாயைக் காப்பாற்ற முடியவில்லை என்றும் அதற்கு மேல் அவர் சொன்ன காரணம் எதுவுமே காதில் விழவில்லை.

ஆயிற்று இன்னும் 2 மணி நேரத்தில் வீட்டிற்குச் சென்றுவிடலாம்.நான்கு வருடத்திற்குப் பிறகு எல்லோரையும் பார்க்கப் போகிறேன் என்ற மகிழ்ச்சி இருந்தாலும், என்னை இன்முகம்கொண்டு வரவேற்கும் என் அன்பு தெய்வம் இல்லாத வீட்டிற்குள் செல்ல வேண்டுமே என்ற வேதனையும் இருக்கத்தான் செய்தது. ஷாம்லியைப் பார்க்கப் போகிறோம் என்ற ஆவலும் இல்லாமல் இல்லை. என்னதான் வருத்தத்தில் இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும், பெற்ற பாசம் எவ்வளவு நாள் தான் மறைக்க முடியும். அந்த பாசம் மட்டுமே இப்போது தன்னை இழுத்து வந்திருக்கிறது என்பதனை மறுக்கவும் அவன் தயாராக இல்லை..............

ரயில் நிலையம் வந்து சேர்ந்தவுடன், பேராவலுடன், சன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். என் தங்கை வந்திருந்தாள். அவள் கண்களும் என்னைத்தேடி அலை பாய்ந்து கொண்டிருந்தது. அவளுடன் வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று என் கண்களும் தேட ஆரம்பித்திருந்தன. ஆனால் அவளுடன் வேறு யாருமில்லை.

வண்டியை விட்டு இறங்கும் போதே இனம் புரியாத ஒரு இன்ப நினைவு ஒட்டிக் கொண்டது. நான்கு வருடங்களுக்குப் பிறகு என் குட்டி தேவதை மட்டுமல்லாது, மற்ற என் பந்தங்களையும் காணப்போகிறோம் என்ற மகிழ்ச்சியே. வேகமாக என் கைகள் பரவலாகச் சென்று அன்புத் தங்கையை அணைத்துக் கொண்டது.

’அட, என்ன பிரியங்கா, இவ்வளவு வெயிட் போட்டுட்டே. ரொம்ப டயட் கான்சியஸ்ஸா இருப்பே. என்ன ஆச்சு?’

‘ அட , நீ வேற, இப்ப சிரமப்பட்டு 3 கிலோ குறைச்சிருக்கேன். என்ன பண்ணாலும் டெலிவரியின் போது ஏறின வெயிட் இன்னும் குறைய மாட்டேங்குது.’

‘வீட்டில் எல்லோரும் எப்படி இருக்காங்க?’

என் கண்களில் தெரிந்த ஏக்கத்தை உணர்ந்தவளாக, ’ம்ம்..... எல்லோரும் வருவதாகத்தான் பிளான். ஆனால் நீ விரும்பமாட்டாய் என்பதால்தான் நான் ஒருவரையும் அழைத்து வரவில்லை’.

ஷாம்லி பற்றி கேட்க நினைத்து மனதை மாற்றிக் கொண்டேன். ஆனால் அதை உணர்ந்தவளாக,

’ ஷாம்லி பத்தி கேட்க மாட்டாயா?’ என்றாள்.

நானும், ‘ ஷாம்லி இருப்பது உன்னிடம் அல்லவா. அவளுக்குத் தாய்க்குத் தாயாகவும், தந்தைக்குத் தந்தையாகவும் இருந்து நீங்கள் பார்த்துக் கொள்ளும் போது நான் ஏன் கேட்க வேண்டும்?’ என்றேன்.

‘ என்ன இருந்தாலும், பெற்றவர்கள் போல் ஆகுமா?’

கார் பண்ணை வீட்டிற்குள் நுழைந்தது. அங்கு நிறைய பேர் வந்திருந்தார்கள். நாலைந்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன.கார் வந்து நிற்பதைப் பார்த்தவுடன் அருகில் ஓடி வந்தனர். பிரியங்காவின் இரு குழந்தைகளும் ஓடி வந்து, மாமா என்று கையைப் பிடித்துக் கொண்டனர். அடுத்த வீட்டு குழந்தைகள் போல, மற்ற இரு குழந்தைகளும் புது முகங்களாக இருந்தன. என் கண்கள் ஷாம்லியைத் தேடின.

அவளோ தூரமாக நின்று கொண்டு யாரோ மூன்றாம் மனிதரைப் பார்ப்பது போல என்னைப் பார்த்தாள். அந்த குறுகுறுக்கும் பார்வையில் ஒரு ஏக்கம் தெரிவது போல் இருந்தது எனக்கு.கையை ஆட்டி அருகே அழைத்தேன், ஆனால் அவளோ, அதை சட்டை செய்ததாகத் தெரியவில்லை. இதை கவனித்த பிரியங்கா,

ஷாம்லிக் குட்டி, இங்கே வாம்மா, பாரு அப்பா கூப்பிடுறாரு, வாம்மா, என்றாள்.

ஷாம்லி என்னைப் பார்த்த பார்வையில் எந்த உணர்வும் பெரிதாக இருந்ததாகத் தெரியவில்லை. சலனமேயில்லாத ஒரு பார்வையை வீசிவிட்டு திரும்பிக் கொண்டாள். மனதை சுரீரெனத் தைத்தது. சமாளிக்க செய்த முயற்சி முகத்தில் வெளிக்காட்டி விட்டது. பிரியங்காவும் இதை கவனிக்காமல் இல்லை.

‘ஷாம்லி, இங்க வாம்மா, அப்பாவிற்கு பாட்டி இருக்கும் அறையைக் காட்டுகிறாயா? பாட்டி அப்பாவிற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்களே’, என்றாள்.

ஷாம்லி ‘ நான் விளையாடப் போகிறேன். நான் கூட்டிகிட்டுப் போக மாட்டேன்’, என்றாள்

ப்ரியங்கா தன் மகன் மதனை அழைத்து, மாமாவை பாட்டியிடம் கூட்டிச் செல்லும்படி சொல்லிவிட்டு, ஷாம்லியையும் உடன் செல்லும்படிக் கூறினாள். குழந்தை இப்போது ஒன்றுமே பேசாது மதன் பின்னால் வந்தாள். ஏதாவது ஒரு வார்த்தையாவது தன்னிடம் பேச மாட்டாளா என்று மனம் ஏங்கியது.

‘ குட்டிம்மாவிற்கு ஸ்கூல் லீவா இப்போது’? என்று பொதுவாக கேட்டேன். அவளோ தலையை ஆட்டிவிட்டு திரும்பிக் கொண்டாள்.

மதன் அம்மா இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றான். அம்மா ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது. அம்மா என்று கூப்பிடப் போனேன். அதற்கு மதன்,

‘பாட்டி தூங்கும் போது எழுப்பக் கூடாது. அம்மா திட்டுவாங்க’, என்றான்.

உடனே ஷாம்லி, ‘ இல்ல பெரியவங்க எழுப்பினால்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. நாம சத்தம் போட்டு எழுப்பினாத்தான் திட்டுவாங்க’, என்றாள்.

ஷாம்லியின் இந்த பக்குவமான பேச்சு எனக்கு மிகவும் பிடித்தது. பிரியங்கா நல்ல ஒழுக்கத்துடன் அவளை வளர்த்திருப்பது மனதிற்கு நிறைவாக இருந்தது. அம்மா என்னைப் பார்த்தவுடன் உணர்ச்சிவசப் பட்டவராக கண் கலங்கினார். பழைய நினைவுகள், நான் ஊரை விட்டு போக வேண்டிய நிலைக்கு ஆளான அந்த நினைவு வந்து அம்மா கண்ணில் கண்ணீர் தாரையாக ஒழுக, எனக்கும் அது தொற்றிக் கொண்டு விடுமோ என்ற சங்கடத்தில், சமாளிக்க முயன்றேன். ஆனால் அம்மாவோ சமாளிக்க முடியாமல் அழத் தொடங்கியதைக் கண்டு ஷாம்லியின் முகம் வாடியது. ஒருவாறு அம்மாவை சமாதானம் செய்து சிறிது நேரம் உடன் அமர்ந்திருந்து விட்டு, குளித்து விட்டு வருவதாகச் சொல்லி எழுந்தேன்.

மதன், ’ மாமா நான் வந்து உங்க ரூமைக் காட்டட்டுமா’ என்றான்.

ஷாம்லியும் அவன் பின்னாலேயே வந்தவள் ஏனோ என்னிடம் மட்டும் முகம் கொடுத்தே பேசவில்லை.

அடுத்த நாள் பிரியங்கா, என் முக வாட்டத்தைக் கண்டவுடனே புரிந்து கொண்டாள், என் கவலையை.

‘இரண்டு, மூனு நாள் ஆனா, சரியாயிடும், கவலைப்படாதே அண்ணா. இன்றுதானே முதன் முதல் உன்னைப் பார்க்கிறா. நீயும் அவகிட்ட போனில் கூட பேசறதில்ல்ல. பின்ன எப்படி அப்பான்னு பாசம் வரும் அவளுக்கு.

தனக்கும் இது தெரிந்த காரணமாக இருந்தாலும், மனது அதைத் தாங்கிக் கொள்ளும் பக்குவத்தைப் பெறவில்லை. அந்த பிஞ்சு மனசிற்குள் தன் மீது பாசமே இல்லையோ என்று மனது ஏங்கும் ஏக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சரி, இதுவும் நல்லதற்குத்தான், இன்னும் 15 நாட்களில் ஊருக்குக் கிளம்பப் போகிறோம். அதற்குள் இவள் அதிக பாசம் காட்டினால் ஒரு வேளை கிளம்பும் நேரம் சங்கடமாக இருக்குமே என்று சமாதானம் செய்து கொள்ள முயன்றேன்.

என்ன அண்ணா ஆழ்ந்த யோசனை ? ஷாம்லி குழந்தைதானே கொஞ்சம் சமாதானம் செய்து அவள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்து தாஜா பண்ணத் தெரியாதா உனக்கு. அவளும் அப்படி ஒன்றும் அடம் பிடிக்கும் குழந்தை இல்லை. சமத்துக் குட்டி. அவளுக்கு டெட்டி பேர் [ கரடிக் குட்டி பொம்மை] என்றால் ரொம்ப விருப்பம். நிறைய நான் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். இருந்தாலும் புதிதாக வாங்கிக் கொடுத்தால் மிக ஆசையாக கையிலேயே வைத்துக் கொண்டிருப்பாள். நீ வாங்கி வந்திருக்கும் இத்தனை பொம்மைகளைவிட, ரிமோட் கார்களைவிட அவளுக்கு அந்த டெட்டி பேர் தான் அவ்வளவு பிடிக்கும்.

சே, என் குழந்தையைப் பற்றி இதுவரை இது கூட தெரிந்து கொள்ளாமல் போனேனே என்று என் மீதே எனக்கு கோபமாக வந்தது. அது சரி, காலம் என் மனக் காயங்களை ஆற்றுவதற்கு எடுத்துக் கொண்ட அளவு சற்று அதிகம் தான்.........அது என்னா சாதாரண ரணமா விரைவில் ஆறுவதற்கு......இதயத்தையே குத்திக் கிழித்த ரணமாயிற்றே. அந்த வடுவே இன்று இத்தனை வேதனைப் படுத்துகிறதே.....

அடுத்த நாளே என் வேலைகளைத் துவங்க ஆரம்பித்து விட்டேன், ஷாம்லியை வழிக்குக் கொண்டுவருவதற்கு. அவளை அருகில் அழைத்து, கொஞ்ச மனம் துடித்தது. ஆனால் அவள் அதை சற்றும் உணராதவளாக சட்டை செய்யாமல் அவள் பாட்டிற்கு விளையாடிக் கொண்டிருக்கிறாள். மாமா மோட்டர் பைக் எடுத்தால், தன்னையும் ஒரு ரவுண்டு அடிக்க வேண்டும் என ஆசையாக ஓடிவருபவள், நான் எத்தனை முறை கெஞ்சிக் கேட்டாலும், என்னுடன் கடைக்குக் கூட வர மறுக்கிறாள்.

நாட்களோ வெகு வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. ஷாம்லியோ அதை துளியும் உணருவதாக இல்லை. ஒரு நாள் ஷாம்லியிடம் எப்படியாவது பேசி தன் பாசத்தைப் புரிய வைக்க வேண்டும் என்ற உறுதியான நினைவுடன் அவளைத் தேடிக் கொண்டு தோட்டத்திற்குச் சென்றேன். அங்குதான் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. அங்கு சென்ற போது ஷாம்லி தனியாக ஒரு கல்லின் மீது அமர்ந்து கொண்டு, கையில் ஏதோ ஒரு சிறிய பொம்மையை வைத்துக் கொண்டு அதை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாள். சற்று நேரம் தொலைவில் நின்று அவளையே ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் அனிதா ஒரு வேளை சிறு வயதில் இப்படித்தான் இருந்திருப்பாளோ. அவளுடைய சிறு வயது போட்டோ கூட பார்த்ததில்லையே............

நான் அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருப்பது உணர்ந்தவளைப் போல அப்படியே திரும்பி என்னைப் பார்த்தவுடன், பார்வையை தாழ்த்திக் கொண்டாள் எந்த மாற்றமுமில்லாமல். ஆனால் நான் ஒரு முடிவாக அவளருகில் சென்று,

‘ ஷாம்லிக் குட்டிக்கு அப்பாவைப் பார்த்தா பயமா, ஏன் கிட்டேயே வர மாட்டேங்கறீங்க?’ என்றேன்.

அதெல்லாம் ஒன்னுமில்ல. உங்களுக்குத்தான் என்னைப் பிடிக்காதே. அதான்.....

இல்லையே, யார் சொன்னது... எனக்கு ஷாம்லிக்குட்டின்னா ரொம்ப பிடிக்குமே. அதனால் தான் நிறைய பொம்மை சட்டையெல்லாம் வாங்கி வந்தேன்.

உங்களுக்குப் பிடிச்சிருந்தா அப்ப ஏன் ஒரு வாட்டி கூட நீங்க என் கூட போனில் கூட பேசலை... நீங்க சும்மா சொல்றீங்க. உங்களுக்கு என்னைப் பிடிக்காது.....

இருதயத்தை கவ்வி இழுத்தது எனக்கு ஷாம்லியின் பதில்.....என்ன செய்வதென்றே புரியவில்லை.

ஷாம்லிக் குட்டி அப்பா ஊருக்குப் போகப் பொறேன் தெரியுமா?

தெரியுமே. நீங்க வந்த போதே தெரியும். நீங்க கொஞ்ச நாள் இருந்துட்டு சீக்கிரம் திரும்ப போயிடுவீஙகன்னு.....

உனக்கு அப்பா ஊருக்குப் போறேன்னு வருத்தமா இல்லையா.........என்றேன்.

இல்லையே, எனக்குத்தான் இங்கே அத்தை, மாமா, பாட்டி, மதன், சீனு எல்லாம் இருக்காங்களே. நான் நல்லா ஜாலியாத்தானே இருக்கேன் அவங்கக் கூட...

இதற்கு மேல் அவளிடம் என்ன சொல்லி புரிய வைப்பது என்று தெரியவில்லை.அதற்குள் மதனும், சீனுவும் அருகில் வந்து என்ன மாமா ஷாம்லி உங்க கூட பேச மாட்டேங்கிறாளா என்றனர்.

அதெல்லாம் ஒன்னுமில்ல கண்ணா. சரி வாங்க எல்லோரும் கடைக்குப் போகலாம் என்றேன்.

அவர்கள் இருவரும் அம்மாவிடம் கேட்க வேண்டும் என்று ஓடினால், ஷாம்லி அவ்ர்களுக்கு முன்பாக வேகமாகச் சென்று, அவள் அத்தையிடம், பெற்ற தந்தையுடன் வருவதற்கு அனுமதி கேட்டுக் கொண்டிருக்கிறாள். மனதிற்கு அது பெரும் வேதனையைக் கொடுத்தாலும், அவள் எவ்வளவு அழகாக வளர்க்கப்பட்டிருக்கிறாள் என்பதை அறிந்து மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. குழந்தைகள் எல்லோரையும் கடைக்கு அழைத்துச் சென்று அவர்கள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்து கூட்டி வந்தேன். ஷாம்லியுடன் சேர்ந்து இருப்பதற்கு இதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு, தினமும் அவர்களை பார்க், கடை என்று முடிந்த வரை வெள்யே கூட்டிச் சென்றேன்.இருந்தாலும் நான் எதிர்பார்த்த மாற்றம் ஷாம்லியிடம் வரவேயில்லை.

அன்று இரவு படுக்கையில் புரண்டு கொண்டே அனிதாவையும், ஷாம்லியையும் நினைத்துக் கொண்டு வெகு நேரம் கண் விழித்துக் கொண்டிருந்தேன். காரணம் அடுத்த நாள் நான் ஊருக்குக் கிளம்ப வேண்டும். 20 நாட்கள் போனதே தெரியவில்லை. எல்லோரையும் விட்டு விட்டு குறிப்பாக என் செல்ல மகள் ஷாம்லிக் குட்டியை விட்டுப் போகவே மனம் இல்லை. என்ன செய்வது அவள் தான் என்னை புரிந்து கொள்ளவே இல்லையே............நான் செய்த பாவம்.........

அடுத்த நாள் என் முகம் இரவு முழுதும் உறக்கம் இல்லாததைக் காட்டிக் கொடுத்து விட்டது. ப்ரியங்காவும் அம்மாவும் மிகவும் மனம் நொந்துப் போனார்கள். இனிமேல் எங்கேயும் போக வேண்டாம் இங்கேயே இருந்து விடலாமே என்று கட்டாயப் படுத்திக் கொண்டிருந்தார்கள். இதைத்தானே வந்ததிலிருந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் என் மனமோ அதைப் பற்றி நினைத்துப் பார்க்கக் கூடத் தயாராக இல்லை. ஒரு வழியாக பேக்கிங் எல்லாம் முடிந்தது. ப்ரியங்கா செய்து கொடுத்த பலகாரங்கள், எல்லாம் பேக் செய்தாகி விட்டது. அம்மாவை சமாதானம் செய்து 6 மாதத்தில் திரும்ப வருவதாகக் கூறிவிட்டு கிளம்பியாகி விட்டது.

கார் வந்து தயாராக நிற்கிறது. டிரைவர் பெட்டியெல்லாம் எடுத்து டிக்கியில் வைத்துவிட்டார். ப்ரியங்கா, அவள் கணவர் குழந்தைகள் மதன் சீனு எல்லோரும் அருகில் வந்து நின்று கொண்டார்கள். நடக்கவே சிரமம் பட்ட அம்மாவும் மெதுவாக நர்சின் கையைப் பிடித்துக் கொண்டு என்னை வழியனுப்ப வெளியே வந்தார்கள். இவ்வளவு பேர் சுற்றி இருந்தும், கண்கள் என்னவோ ஷாம்லியைத் தான் தேடியது. அவள் அருகிலேயே வரவில்லை. கேட்டிற்குப் பின்னால் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்தாள்.........இப்பொழுது கூட அருகில் வர மனசில்லாமல் இருக்கிறாளே, என்ன பெண் இவள் என்று லேசாகக் கோபம் கூட எட்டிப் பார்த்தது. இருந்தாலும் கிளம்பும் நேரத்தில் இது சரியல்ல என்றும் மனது சொல்ல, அவள் அருகில் அழைத்தால் மட்டும்வரவாப் போகிறாள் என்று எண்ணிக் கொண்டு, கையை ஆட்டினேன் அருகில் வரும்படி.

ஆனால் அதிசயமாக, அதற்காகவே காத்துக் கொண்டிருந்தவள் போல அடுத்த நொடி ஓடி வந்து என்னைக் கட்டிக் கொண்டாள் நான் எதிர்பார்க்காமலே.............

கண்களில் கண்ணீர் என்னையறியாமலே வழிந்து கொண்டிருக்க ஷம்லியின் முகத்தைத் திருப்பிப் பார்த்தால் அவள் கண்களிலும் கண்ணீர் வழிய, அப்பா........என்றாள்.

முதல் முறையாக இத்தனை அன்பை, கனிவை, பாசத்தை அந்த அழைப்பில் கேட்க முடிந்தது.....

இருதயமே வெடித்து விடுமோ என்று ஒரு கணம் தோன்றியது......அவ்வளவு படபடப்பு.......

கன்னம்மா..........என்னடா.........ஏம்மா அழறே.......என்றேன் தொண்டை கம்ம.....அதற்குமேல் வார்த்தை வரவில்லை.

அவளோ, அப்பா...நீங்க ஊருக்குப் போக வேணாம்ப்பா.......எனக்கு நீங்க வேணும். நாம் இங்கியே இருக்கலாம்ப்பா........

இதைக் கேட்டவுடன் மனம் ஒரு கனம் ஆகாயத்தில் எம்பிக் குதிக்க ஆரம்பித்து விட்டது...............அனைவரின் முகத்திலும் நிம்மதியும்,மகிழ்ச்சியும் காண முடிந்தது......


--