Monday, April 25, 2011

காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை - பகுதி -2 (4)


காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை - பகுதி -2 (4)

’பிரயாகையில் முண்டம், காசியில் தண்டம், கயையில் பிண்டம்’ என்று ஒரு பழங்கால வழக்கு உள்ளது.இவற்றின் முக்கிய நோக்கம் பாவம் களைவது. பாவம் அண்டாமல் தடுப்பது. பாவம் நீங்கி இறையோடு ஒன்றுவது .முண்டம் என்பது முடி எடுத்தல், அதாவது பிரயாகை தலத்தில் முடி காணிக்கை செலுத்தி பாவம் தொலைக்க வேண்டுமாம். தெரிந்தோ, தெரியாமலோ எத்துனையோ பாவங்கள் நம் அன்றாட வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் செய்து கொண்டுதானே இருக்கிறோம்! நீத்தார் கடன் தீர்க்க நேர்த்தியான தீர்த்தம் என்ற பெருமையும், வரலாற்றுப் புகழும் கொண்ட புனிதமான கயைத் தலத்தை விட்டு கிளம்பினோம்.

DSC00036.JPG

கயையிலும், சந்த் சௌரா என்னும் இடத்தில், கோவிலுக்கு அருகன்மையில், நாட்டுக்கோட்டை நகர சத்திரம் இருக்கிறது. அங்கு மதிய உணவு கிடைக்கிறது. முன்னாலேயே பதிவு செய்தால்தான் சமைத்துக் கொடுப்பார்கள். காசியிலிருந்து போன் செய்து சொல்லிவிட்டு கிளம்பியிருந்தோம். அதனால், எளிமையான, ஆனால் நல்ல உபசரணையுடன், சுவையான உணவு கிடைத்தது.மதியம் 3.30மணியளவில் கிளம்பினோம். கயையிலிருந்து போத கயா அலது புத்த கயா என்று வழங்கும் வரலாற்றுப் புகழ் வாய்ந்த இடத்திற்குச் செல்ல அரை மணி முதல் 40 நிமிடங்கள் தான் ஆகிறது.

அவதாரங்களில் ஒன்றாகப் போற்றப்படும் நிலைக்குத் தம்மைத் தாமே உயர்த்திக் கொண்ட, புத்த பகவான் அரண்மனை வாசத்திலிருந்து கயைக்கு வந்தவர். புத்த கயா என்னும் இடத்திற்குச் சமீபத்தில் உள்ள உருபேலா என்னும் இடத்தில் தங்கி ஆறு ஆண்டுகள் தவம் இயற்றி, ஞானோதயம் பெற்றதாக வரலாறு கூறுகிறது.இதுவே பௌத்த தர்மமாக பட்டொளி வீசி நாடெங்கிலும் பரவி, திபெத்,ஜப்பான் போன்ற இடங்களையும் ஆட்கொண்டது.

DSC00055.JPG

அமைதியும், புனிதமும் நிறைந்த நிரஞ்ஜனா நதிக்கரையில், கயையிலிருந்து ஏழு மைல் தொலைவில் புத்த கயா அமைந்துள்ளது.

புனித புத்த பூர்ணிமா தினமான,வைகாசி மாதப் பௌர்ணமி தினமே, பகவான் புத்தர் போதி மரத்தினடியில் அறிவொளி பெற்ற நன்னாள். சிரார்த்தம் செய்ய கயை செல்லும் அன்பர்கள் புத்தர் ஞானம் பெற்ற போதி மரத்தை பிரம்மா, விஷ்ணு, சிவனின் உறைவிடமாகக் கருதி வணங்குவதாகக் கூறுவதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது. பார்க்கும் கண்களில்தானே பேதங்கள்! எண்ணத்தில் என்ன நினைக்கிறோமோ அதையேக் காட்சியாக்கும் அவன் அருளை நினைத்து பேரானந்தம் அடைய முடிந்தது.

ஆரம்பத்தில் வேரோடு வெட்டிய அசோக சக்கரவர்த்தியே தான் பௌத்த மதம் தழுவிய பின் அங்கே புதிதாகக் கிளைத்த போதி மரத்தை வழிபட்டு, அங்கேயே புத்த பகவானுக்கு முதல் ஆலயமும் எழுப்பியுள்ளார். அது மட்டுமல்லாமல் புத்த பிட்சுகளுக்காக அவர்கள் தங்குவதற்கு ‘புத்த விஹார்’ம் அமைத்திருக்கிறார். அந்த இடத்தில் நின்ற போது இனம் புரியாத உணர்வுகள் நம் மனதை ஆட்கொள்வதை அறிய முடிகிறது. இன்றும் அந்த இடத்திற்கு ஏதோ அதிர்வலைகள் இருப்பதாக என்னால் உணர முடிந்தது.என் கணவர் மற்றும் பெரும்பாலான ம்க்களிடமும் அதனை வெளிப்படையாக உணர முடிந்தது. ஏதோ ஒரு பரவசம் ஆட்கொண்டதை மறுக்க முடியவில்லை.அசோகர் கட்டிய அக்கோவில் மகா போதி கோவில் என்று வழங்கப்படுகிறது.கால மாற்றத்தினால் சிதிலமடைந்தாலும், அதன் கோபுரத்தைப் புதுப்பித்திருக்கிறார்கள். அந்த கோபுரத்தின் உயரம் 170 அடி. அங்கே பகவான் புத்தபிரான், அமைதியே உருவாக அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார்.
DSC00060.JPG

இந்தக் கோவிலின் மேற்புறத்தில் தான் பகவான் புத்தர் தவமிருந்த போதி மரம் குடையாகப் பரந்து விரிந்து இருக்கும் காட்சி பரவசமூட்டுவதாக உள்ளது. புத்த பகவான் அமர்ந்திருந்ததாகக் கூறப்படும் இடத்தில் ஒரு மேடை எழுப்பப்பட்டு உள்ளது. அங்கே இரு பெரிய அடிச்சுவடுகளும் காணப்படுகின்றன.

அருகில் உள்ள மற்றுமொரு கோவிலில் சுவர்ண விக்கிரமாக மின்னும் பகவான் புத்தரின் திரு உருவச்சிலை! ஆழ்ந்த அமைதியும், மிகுந்த தூய்மையும் மனதிற்கு இனிய அனுபவமாக அமைகிறது. புத்தரின் வாழ்க்கை வரலாறு ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

உலகம் த்ழுவிய ஒரு மதமாக புத்த மதம் பல நாடுகளிலும் பரவியிருந்ததால், திபெத்தியர்கள், பர்மியர்கள், ஜப்பானியர்கள், தாய்லாந்துக்கரர்கள் என்று பல நாட்டினரும் தங்கள் நாட்டுச் சிற்பக்கலையைப் பிரதிபலிக்கும் வண்ணம் இங்கே ஆலயம் எழுப்பியுள்ளதால், அந்நாட்டு மக்களையும், அவர்களுடைய வழிபாட்டு முறைகளையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பும் அமைகிறது.

திபெத்தியர்களது ஆலயம் மகா போதி ஆலயத்திற்கு மேற்கே அமைந்துள்ளது. இவர்கள் தாந்திரிக வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்களாதலால், கோவிலின் கீழ்தளத்தில் சக்கரம் ஒன்று பதித்திருக்கிறார்கள். அதைச் சுற்றினால் பாவம் தீரும் என்பது இவர்கள் நம்பிக்கையாக உள்ளது. அதைச்சுற்ற உடல் வலிமை மிக அதிகம் வேண்டும்...பின்னே.... செய்த பாவத்தை அவ்வளவு எளிதாக தொலைக்க முடியுமா என்ன....

மாடியில் புத்த பகவான் தமது சீடர்களான மௌத் கல்யாயனுடனும், சாரிபுத்ரனுடனும் வீற்றிருக்கும் அழகான சிலை வடிவங்களைக் காணலாம். அந்த இடட்தில் நிற்கும் போது ஏதோ ஒரு காலத்தில் நாமும் இப்படி ஒரு வேளை புத்தரின் பார்வையில் அமர்ந்து அவர்தம் உபதேசம் பெற்றிருப்போமோ என்று எண்ணும் அளவிற்குஅந்த இடம் நம்முள் ஒரு பாதிப்பை ஏற்படுத்துவது இயற்கையே!

ஆலயத்திற்கு வடக்கு புறம் பர்மிய ஆலயம் மற்றும் அடுத்ததாக ஜப்பானியர் ஆலயமும் அமைந்துள்ளது.

தாய்லாந்து ஆலயத்தின் மண்டபத்து விளிம்புகளில் சிறு சிறு வெண்கல மணிகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அம்மணிகள் வாயு பகவானுடன், கலந்து உரையாடும் போது ஜலதரங்கம் வாசிப்பது போன்ற நாதம் எழுப்பி பரவசப்படுத்துகின்றது.நம் உள்ளம் ஒருமுகப்படும் போது, அந்த இன்ப நாதம் நம்மை ஒரு தியான உலகத்தினுள் இட்டுச் செல்வதை உணர முடியும். அந்த இன்பம் பெறுவது நம் கையில்தான் உள்ளது. அதாவது உள்ளத்தை ஒருமுகப்படுத்த வேண்டும்.

நாகார்ஜீன குகைகள் மற்றும் கலோலத் நீர்வீழ்ச்சி ஆகியவைகள் சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய இடங்களாகும். நாங்கள் காணத்தவறிய இடங்களும் அவைகள்தாம்.

புத்த கயாவின் இனிமையான நினைவுகளையும், அங்கு வாங்கிய அழகிய புத்தர் சிலைகளையும் சுமந்து கொண்டு, இரவு 7 மணியளவில் கிளம்பினோம். திரும்ப காசி வந்து இரவு 11 மணியளவில் வந்து சேர்ந்தோம். நாங்கள் இரவு உணவு அருந்த அங்குதான் வருவோம் என்று முன்பே சொல்லி வைத்துவிட்டு சென்றிருந்ததால் எங்களுக்கு உணவு , நாங்கள் தங்கியிருந்த, காசி நாட்டுகோட்டை நகர சத்திரத்தில் தயாராக இருந்தது.நிம்மதியாக உண்டுவிட்டு, மன நிறைவுடன், அன்றைய பொழுது மிக நல்லபடியாக சென்றதை எண்ணி அதற்காக ஆண்டவனுக்கும், உதவிய மற்ற அன்பர்களுக்கும் நன்றி சொல்லி நிம்மதியாக உறங்கச் சென்றோம். அடுத்த நாள் விடியலில் எழுந்து விசுவநாதரை திரும்பவும் தரிசித்து விட்டு மற்ற கோவில்களுக்கும் செல்ல வேண்டுமே......அடுத்து நாங்கள் சென்ற கோவில்களில் மிக இனிமையான, அதாவது இனிப்புகளாலேயே அலங்கரிக்கப்பட்ட கோவில் இருந்ததே........சொல்கிறேன்....சற்று பொருங்கள் சாமி.....

தொடரும்.-



காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை - பகுதி -2 - (4)
Apr 25, 2011
by coral shree



Sunday, April 24, 2011

வெண்ணிலவில் ஒரு கருமுகில் (6)

திகாலை ரம்மியமான வேளையில் விழித்தெழுவது என்பது, சாமான்யமான காரியம் அல்ல. அதையே வழக்கமாகக் கொண்டவர்கள் மட்டுமே எளிமையாக எழக்கூடும். அந்தச் சுகமான வேளையில் பொதுவாக ஆனந்தமாகத் தூக்கம் வரும். ஆனால் எழுந்து பழகியவர்கள், அதுவும் அந்த நேரத்தில் நடைப் பயணம் சென்று பழகியவர்கள் அந்த வழக்கத்தை பெரும்பாலும் மாற்றிக்கொள்வது என்பது பிரம்ம பிரயத்தனமாகவே இருக்கும்.

கல்லூரி நாட்களில் ஆரம்பித்த பழக்கம், இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. நான்கு மணிக்கு டாண்ணென்று அலாரம் இல்லாமலே விழித்து விடுவாள் மங்களா. எழுந்தவுடன் பல் துலக்கி, முகம் அலம்பி, சுவாமி விளக்கேற்றிவிட்டு, தியானம் செய்ய ஆரம்பித்தாள். ஏனோ மாறனின் திருமணப் பேச்சு எடுத்த நாள் முதல் அவளுடைய தியான வேளை சற்று அமைதியற்றுத்தான் இருக்கிறது. அதுவும் குலதெய்வம் கோவில் சென்று வந்ததிலிருந்து ஏதோ ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருக்கிறது. ஆனால் ஆண்டவன் அருள் மீது கொண்ட ஆழ்ந்த நம்பிக்கை, நல்லபடியாக எல்லாம் முடியும் என்ற எண்ணத்தையும் மேலோங்கச் செய்கிறது. எப்படியோ அங்காள அம்மன் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வாள் என்று அம்மனை நினைத்துக் கொஞ்ச நேரம் தியானித்தவள், வாசல் தெளித்துக் கோலம் போட, வெளியே வந்தாள். காலை 5 மணி இருக்கும், இந்த வேளையில், அந்த மயிலாப்பூர், ஜீவன் பீமா காலனியில் உள்ள பெரும்பாலான வீட்டில் வாசலுக்கு நீர் தெளித்திருந்தார்கள்.

வாசலில் பவள மல்லியின் வண்ணக் கோலம், கண்ணையும் அத்தோடு மெல்லிய நாசியை நனைக்கும் அந்தச் சுகந்தம், மனத்தையும் ஒரு சேர நிறைவடையச் செய்தது. விவரமாக இரவே மரத்தினடியில் தார் பாய் போட்டு வைக்கும் வழக்கம் இருப்பதால், அந்த மலர்களுக்கு நோகாமல் மெதுவாக எடுத்து பூக்கூடையில் இட்டு உள்ளே கொண்டு வைத்தாள். வந்து கேட்டைத் திறந்து பின் பெருக்கி, மாக்கோலம் இட்டு, அன்று வெள்ளிக்கிழமையாதலால், செம்மண் கரை கட்டும் போதும்தான்.

‘அட, இன்று வெள்ளிக் கிழமையல்லவா, இன்றுதானே நாள் நன்றாக இருக்கிறதென்று கௌரியின் பெண்ணை மாறனுக்குப் பெண் கேட்கப் போகலாம் என்றாரே, அவரிடம் நினைவுபடுத்த வேண்டும்’ என்று வேகமாகக் கோலம் போட்டுவிட்டுக் கிளம்பினாள்.

ராமச்சந்திரன் விழித்தெழுந்து குளியலறையில் இருப்பதை, தண்ணீர் விழும் சத்தம் உணர்த்தியது. வந்தவுடன் பால் வாங்க பூத் போவது வழக்கம். பால் வாங்கி வருவதற்குள் மங்களம் காபி டிகாஷன் தயாராகப் போட்டு வைத்தால், பால் வாங்கி வந்தவுடன், ஃபிரஷ்ஷாக பில்டர் காப்பி போட்டு மணக்க மணக்க எடுத்து வந்து தருவாள். காபி குடித்து முடிப்பதற்குள் தினசரி, செய்தித்தாள் வந்துவிட வேண்டும். இல்லையென்றால் குட்டி போட்ட பூனையாக வீட்டிற்கும் வாசலுக்குமாக நடக்க ஆரம்பித்துவிடுவார்.

இது, அவருடைய முப்பது வருடப் பழக்கம். ஆனாலும் தன்னுடைய ரயில்வே உயரதிகாரிப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் ஒரு சில மாற்றங்களுடன் இன்றும் தொய்வில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது காலம். வாழ்க்கைச் சக்கரம் பழுதில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் வரை பிரச்சனை இல்லைதான். ஆனாலும் நன்றாக இருக்கும் போதே கடமைகளை முடித்துவிட வேண்டும். முக்கியமான கடமைகள் முடிந்த பிறகு வாழக்கூடிய ஒவ்வொரு நாளையும் ஆண்டவன் கொடுத்த வரமாக வரவுக் கணக்கில் வைத்துக்கொள்ளலாம். அப்போது, வாழ்க்கையில் ஒவ்வொரு படியையும் கடந்து வர, தான் பட்ட பாட்டையெல்லாம் நினைவில் கொண்டு, அந்த அனுபவங்கள், இன்று போராடிக்கொண்டிருப்பவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டு. இருந்தாலும், தன்னுடைய ஜாதகம் குறித்த ஆய்வுப் பணியிலேயே பெரும்பாலான நேரம் செலவிட வேண்டியுள்ளதால் அதையும் ஒரு சேவையாக, தன்னைப் பற்றி தெரிந்தவர்கள் வந்து உதவி கேட்டால் தயங்காமல் இலவசமாக அறிவுரை வழங்குவதில் வள்ளல்தான்.

மங்களாவைச் சங்கடப்படுத்துகிற ஒரு சில விசயங்களில் இதுவும் ஒன்று. சின்னச் சின்ன விசயங்களுக்கெல்லாம், நேரம், காலம், தோஷம் என்று பேசுவது அவளுக்கு அறவே பிடிக்காது. ஆனாலும் இந்த மனிதரிடம் வழக்காடுவது அதைவிட பெரிய காரியம். அதனால் தலையை ஆட்டி விட்டுப் போவது அவளுக்கு உசிதமான காரியமாகிவிடுகிறது. ஒரு தலைவலி என்று வந்து விட்டால் கூட நேரத்தையும் காலத்தையும் கணாக்கு போட்டுக் கொண்டு அதனால் ஏதும் பெரிய பிரச்சனை வந்துவிடும் என்று தேவையில்லாமல் பயந்து கொண்டு, பெரிய மருத்துவமனையில் சென்று காட்ட வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பார். பல நேரங்களில் இந்தப் பழக்கம், மங்களாவைச் சங்கடப்படுத்தியிருக்கிறது.

வயிற்று வலியும் அதிகமான உதிரப் போக்கும் இருந்த படியால் ஸ்கேன் எடுத்துவிட்டு மருத்துவர், கர்ப்பப் பையில் கட்டி இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியபோது, மனிதர் தன்னுடைய அட்டமச் சனியைக் காரணம் காட்டி, அது முடிய ஒரு வருடம் ஆகும், அது வரை அறுவை சிகிச்சையைத் தள்ளிப் போட வேண்டுமென்றும் அடம் பிடித்ததால், அந்த ஒரு வருடம் மருந்து மாத்திரையுடன் எத்துனை துன்பங்களைத் தாங்க வேண்டியிருந்தது என்று இன்று நினைத்தாலும் மங்களாவிற்கு மலைப்பாக இருக்கிறது. அவளுடைய அட்டமச் சனியைவிட, அந்த வலியைத் தாங்கிக்கொண்டு ஒரு வருடம் ஓட்டியது சிரமமாக இருந்தாலும், கட்டி சிறியதாக இருந்ததால் தப்பிக்க முடிந்தது, இல்லையென்றால் மனிதரைச் சமாளிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

ஆனாலும் அந்த ஓராண்டு காலமும், அதற்குப் பிறகு அறுவை சிகிச்சை முடிந்த பிற்பாடு ஓய்வெடுக்கும் வேளையிலும், ஒரு தாயினும் சாலப் பரிந்து, தன்னைக் காத்த கணவனைத் தெய்வமாகவே நினைக்கத் தோன்றியது அவளுக்கு. காரணம், தாயில்லாத தனக்கு, ஒரு தாய் செய்ய வேண்டிய அத்துனை பணிவிடைகளும், அதுவும் உடல் நிலை மோசமாக இருந்த அந்த நேரத்தில், சற்றும் முகம் சுழிக்காமல் செய்ததை ஆயுள் முழுக்க நன்றிக் கடன் பட்டாலும் தீராது என்று அடிக்கடி நினைத்துக்கொள்வாள், கண்கலங்க…..

காப்பியுடன் வந்தவள், கணவன் நாளிதழில் மூழ்கியிருப்பதைப் பார்த்து, தொந்தரவு செய்ய வேண்டுமா என்று யோசிக்கையிலேயே, காப்பியின் மணம் சென்று ராமச்சந்திரனின் கவனத்தை மங்களாவின் புறம் திரும்ப வைத்தது. காப்பியைக் கொடுத்தவள்,

‘‘ஏண்ணா…..இன்னைக்கு வெள்ளிக்கிழமை. நம்ம கௌரி ஆத்துக்கு போலாம்னேளே.. நல்ல நேரம் பாருங்கோண்ணா, இன்று போய் அவாளிடம் ஃபார்மலாக ஜாதகம் சரியா இருக்குன்னு சொல்லிப்பிட்டு, அவாளோட விருப்பமும் தெரிஞ்சுண்டு வந்தோம்னாத்தான், மேற்கொண்டு அடுத்த காரியம் பண்ண முடியும்.’’

‘‘ம்ம்ம்…. இன்னைக்கு வெள்ளிக்கிழமைதானே. சீக்கிரம் கிளம்பு. இராகு காலத்திற்கு முன்னாலேயே போய்ட்டு வரலாம்’’

‘‘சரிண்ணா, அதான் வேகமாகச் சமைச்சிண்டிருந்தேன். இதோ சித்த நாழில முடிச்சிட்டு கிளம்பிடறேன்….’’

=====================

பீஸ் முடிந்து வீட்டிற்கு வந்த ரம்யாவிற்கு மனம் ஒரு நிலையில் இல்லை. தன் கல்லூரிக் காலங்களில் வாழ்க்கை எந்த அளவிற்கு எளிதாக, உற்சாகமாகப் போய்க்கொண்டிருந்ததோ, அதைவிட ஒரு படி மேலே இன்று திரும்பிய புறமெல்லாம், சுற்றி வளைக்கும் பிரச்சினைகள்.. யாரைப் பற்றி இனி தன் வாழ்நாள் முழுவதும் நினைக்கவே கூடாது. அந்தப் பெயர் கூட கண்ணில் படக் கூடாது என்று எண்ணியிருந்தாளோ, அவனே, அதே ரிஷி என்ற பெயரே தன் கண் முன்னே வந்து பழைய நினைவுகளை கிளறி விட்டு விட்டதே..

ரிஷியைச் சந்தித்த அந்த முதல் நாள்…… பசுமையாக நினைவில் இன்றும் இருக்கிறதே….

மறக்கக்கூடிய சந்திப்பா அது..? எவ்வளவு யதார்த்தமான ஆளாக இருந்தவன், ஏன் அப்படி மாறிப் போனான்..? கணக்குப் பார்த்து வருவதா காதல்?

மூன்று வருடக் காதல் அப்படி ஒரு நாளில் முடியக் கூடியது எளிதான காரியமா..? ஆனால் அவனால் முடிந்ததே. தான் மட்டும் வேண்டும். தன் உடன் நிழலாகத் தொடரும் தன் பிரச்சனைகள் மட்டும் விலகியிருக்க வேண்டும் என்றால் அது சாத்தியமாகக் கூடியதா…? இவ்வளவு சுயநலக்காரனாக இருப்பதை எப்படி ஆரம்பத்திலேயே கவனிக்கத் தவறிவிட்டோம் எனப் பல்லாயிரம் முறை கேட்டுக்கொண்ட கேள்விக்கு விடைதான் தெரியவில்லை அவளுக்கு…

எத்தனை சமாதானம் வேண்டுமானாலும் சொல்லலாம் இன்று. ஆனாலும் அவனுடைய சுயநலத்தின் மொத்த வெளிப்பாடாக அவன் இறுதியாகச் சொன்ன சேதிதான் அவளால் இன்றுவரை செரிமானம் செய்ய இயலாத ஒரு விசயமாகத்தானே இருக்கிறது…. ஏன் அப்படி ஒரு முடிவு எடுத்தான். வாழ்க்கை என்ன கூட்டிக் கழித்து விடை தேடும் விளையாட்டா…? ஏதேதோ குழப்ப முடிச்சுகள் இறுக்கிக்கொண்டிருக்க…

“டிரிங்க்….டிரிங்க்…..” போன் மணி ஒலிக்கவும் சுய நினைவிற்குத் திரும்பியவளாக அவசரமாக போனை எடுத்தவள்,

“ஹலோ…”

“ஹலோ, ரம்யாவா..”

“ஆம், நீங்கள் யார்?”

“என் பெயர் வந்தனா. உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும். நீங்கள் இப்போது எங்கே இருக்கிறீர்கள்?”

“நீங்கள் யார். உங்களை எனக்குத் தெரியாதே. பெயர் எங்கோ கேள்விப்பட்டது போல் இருக்கிறது…”

“உங்களுக்கு என்னைத் தெரியாது. ஆனால் எனக்கு உங்களை நன்றாகத் தெரியும். உங்களிடம் கொஞ்ச நேரம் பேச வேண்டும். வீட்டில் தானே இருக்கிறீர்கள்?”

“ஆம் நீங்கள் யார் என்று சொல்லவே இல்லையே..”

“நான் யார் என்று சொன்னால் என்னிடம், மேற்கொண்டு பேசுவீர்களோ, மாட்டீர்களோ தெரியவில்லை…. இருந்தாலும் நான் உங்களிடம் அவசியம் பேச வேண்டும்…. நான் வந்தனா. ரிஷியின் மனைவி….”

இந்த வார்த்தையைக் கேட்டவுடன் இதயமே ஒரு கணம் நின்று விட்டது போல உணர்ந்தாலும் சமாளித்துக்கொண்டு ஏதும் காட்டிக் கொள்ளாமல்,

“சொல்லுங்கள், வந்தனா…..” என்றாள் அமைதியாக.

மாறன், ரிஷி பேசிய விஷயங்கள் குறித்து ரம்யாவிடம் பேச வேண்டுமென, போன் செய்துகொண்டிருக்க…… போன் வந்தனாவிடம் பிசியாக இருப்பது, மாறனுக்குத் தெரிய நியாயமில்லையே…….

(தொடரும்……..