உலகில் உள்ள சுமார் 3,000 வகையான பாம்புகளில் இந்தியாவில் இதுவரை கணக்கில் வந்தவை சுமார் 270. இவற்றில் மிகக் கொடிய விஷம் கொண்ட பாம்புகள் சில பாம்புகளே.
ஆன்மீக விசாரத்தில் உன்னத நால்வர் என்றழைக்கப் படும் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் என்பது போல பாம்புகள் விசாரத்தில் ‘பெரிய நால்வர்’ என அழைக்கப் படும் நல்ல பாம்பு (The Indian Cobra), கட்டு விரியன் (Krait), கண்ணாடி விரியன் (Russell’s Viper), ரம்பச் செதிள் கொண்ட விரியன் (Saw-scaled Viper) மற்றும் இவற்றுடன் ராஜ நாகம் (King Cobra), பவழப் பாம்பு (Coral snake) என்பவையே இந்தியப் பாம்புகளில் மிகக் கொடிய விஷப் பாம்புகள். இவை மனிதனைக் கடித்தால் உடனே சரியான வைத்தியம் செய்யப்படா விட்டால் ஓரிரு மணி நேரத்திற்குள் கடிபட்டவர் இறப்பது நிச்சயம்.
பாம்புக் கடிக்கான வைத்தியம் பற்றிப் பார்க்குமுன் இந்தப் பாம்புகளைப் பார்க்கலாமா?
நல்ல பாம்பு : விஞ்ஞான ரீதியாக இந்தப் பாம்பிற்கு அளிக்கப் பட்ட பெயர் ‘நஜா நஜா’ என்பதாகும். ‘நஜா’ என்பது ஒரு போர்ச்சுகீசியச் சொல். நல்ல பாம்பிற்கு போர்சுகீசியப் பெயரா? எப்படி வந்திருக்கும்? பல நூற்றாண்டுகளுக்கு முன் போர்ச்சுகீசிய மாலுமிகளும் அவர்களுடன் சென்றவர்களும் உலகெங்கிலும் அவர்கள் கண்ட தாவரங்கள், விலங்குகள், பறவைகள் பற்றிக் குறிப்பெடுத்துக் கொண்டு சென்றனர். ‘நாகா நாகா’ என்று நம் மக்கள் கூறியதை ‘நஜா நஜா’ என்று எழுதிக் கொண்டனரோ அல்லது ஹிந்தி பேசுபவர்கள், “அது மிகக் கொடிய விஷப் பாம்பு. அதன் அருகே போகாதே” என “ந…ஜா ந...ஜா” (Don’t go…don’t go) எனத் தடுத்ததை அவர்கள் அந்தப் பாம்பின் பெயர் ‘நஜா நஜா’ என எடுத்துக் கொண்டனரோ தெரியாது.