Friday, April 4, 2014

பாம்பைக் கண்டால் .... ! (3)





உலகில் உள்ள சுமார் 3,000 வகையான பாம்புகளில் இந்தியாவில் இதுவரை கணக்கில் வந்தவை சுமார் 270.  இவற்றில் மிகக் கொடிய விஷம் கொண்ட பாம்புகள் சில பாம்புகளே.

ஆன்மீக விசாரத்தில் உன்னத நால்வர் என்றழைக்கப் படும் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் என்பது போல பாம்புகள் விசாரத்தில் ‘பெரிய நால்வர்’ என அழைக்கப் படும் நல்ல பாம்பு (The Indian Cobra), கட்டு விரியன் (Krait), கண்ணாடி விரியன் (Russell’s Viper), ரம்பச் செதிள் கொண்ட விரியன் (Saw-scaled Viper) மற்றும் இவற்றுடன் ராஜ நாகம் (King Cobra), பவழப் பாம்பு (Coral snake) என்பவையே இந்தியப் பாம்புகளில் மிகக் கொடிய விஷப் பாம்புகள்.  இவை மனிதனைக் கடித்தால் உடனே சரியான வைத்தியம் செய்யப்படா விட்டால் ஓரிரு மணி நேரத்திற்குள்  கடிபட்டவர் இறப்பது நிச்சயம். 

பாம்புக் கடிக்கான வைத்தியம் பற்றிப் பார்க்குமுன் இந்தப் பாம்புகளைப் பார்க்கலாமா?

நல்ல பாம்பு :  விஞ்ஞான ரீதியாக இந்தப் பாம்பிற்கு அளிக்கப் பட்ட பெயர் ‘நஜா நஜா’ என்பதாகும்.  ‘நஜா’ என்பது ஒரு போர்ச்சுகீசியச் சொல். நல்ல பாம்பிற்கு போர்சுகீசியப் பெயரா? எப்படி வந்திருக்கும்?  பல நூற்றாண்டுகளுக்கு முன் போர்ச்சுகீசிய மாலுமிகளும் அவர்களுடன் சென்றவர்களும் உலகெங்கிலும் அவர்கள் கண்ட தாவரங்கள், விலங்குகள், பறவைகள் பற்றிக் குறிப்பெடுத்துக் கொண்டு சென்றனர்.  ‘நாகா நாகா’ என்று நம் மக்கள் கூறியதை ‘நஜா நஜா’ என்று எழுதிக் கொண்டனரோ அல்லது ஹிந்தி பேசுபவர்கள், “அது மிகக் கொடிய விஷப் பாம்பு.  அதன் அருகே போகாதே” என “ந…ஜா ந...ஜா” (Don’t go…don’t go) எனத் தடுத்ததை அவர்கள் அந்தப் பாம்பின் பெயர் ‘நஜா நஜா’ என எடுத்துக் கொண்டனரோ தெரியாது.


நல்ல பாம்பு மற்ற பாம்புகளைப் போலவே நல்ல பாம்புதான்.  தானாக வந்து மனிதனை கடிக்காது, அதனை மிதித்தாலோ அல்லது கொல்ல முயற்சித்தாலோ தான் தன் விஷப் பற்கள் கொண்டு மனிதனை அது தீண்டும்.





நல்ல பாம்பின் தலை - முன்னும் பின்னும்

நல்ல பாம்பு அதன் உயிருக்கு ஆபத்து வருகிறது என்று எண்ணினாலோ, அல்லது அதை நாம் சீண்டினாலோ, படமெடுக்கும்.  தன் உடலின் மூன்றில் ஒரு பகுதியை செங்குத்தாகத் தூக்கி நிறுத்திக் கொண்டு, கழுத்தின் தசைகளைப் பக்க வாட்டில் பட்டையாக விரித்துப் பெரு மூச்சு விட்டு எதிரிகளை, “கிட்டெ வராதே.  வந்தால் கொன்று விடுவேன்” என முன் எச்சரிக்கை செய்யும் ஒரு செய்கையாகும் படமெடுப்பது என்பது.

நல்ல பாம்பு படமெடுக்கும் போது அதன் விரித்த படத்தின் பின் புறம் மூக்குக் கண்ணாடி போன்ற ஒரு குறியீடு தெரியும்.  இந்த மாதிரி குறியீடு கொண்ட நல்ல பாம்பினை ஆங்கிலத்தில் மூக்குக் கண்ணாடி அணிந்த நல்ல பாம்பு (Spectacled cobra) என்பார்கள். 

ஒரு வகை நல்ல பாம்பின் தலையில் இது ஒற்றைக் கண்ணாடி வடிவில் இருக்கும்.  இந்த வகை நல்ல பாம்பினை ஒற்றைக் கண்ணாடி அணிந்த நல்ல பாம்பு (Monocled cobra) என்பார்கள். 

கட்டு விரியன்:  நல்ல பாம்பினும் கொடிய விஷம் கொண்ட பாம்பு இது.  நல்ல வேளையாக பகலில் படுத்துறங்கி இரவில் மட்டும் வெளி வரும் பாம்பு இது.  இதன் குறுக்கு வெட்டுத் தோற்றம் வட்டமாயில்லாமல் ஒரு முக்கோண வடிவில் இருக்கும்.  உடலில் பட்டை அடித்தது போன்ற வண்ணம் கொண்டிருக்கும்.


http://en.wikipedia.org/wiki/Bungarus
மஞ்சளும் கருப்புமான பட்டைகள்
கொண்ட கட்டு விரியன்.



Photo Credit: Dr. Muhammad Sharif Khan
கருமை நிறப் பட்டைகளுடன் ஒரு கட்டுவிரியன்.

கண்ணாடி விரியன்:  இந்த வகைப் பாம்புகளுக்கு இப்பெயர் வரக் காரணம் இதன் உடல் பூராவுமே மூக்குக் கண்ணடிகள் போட்டாற் போன்ற வண்ணத் திட்டுகள் இருப்பது தான்.  கண்ணடி விரியன் களில் பல வகை உண்டு.  அவற்றில் இரண்டு “ரஸ்ஸல்’ஸ் விரியன்  (Russell’s viper), ரம்பச் செதிள் கொண்ட விரியன்  (Saw-scaled viper) என்பவை ஆகும்.


   
      http://en.wikipedia.org/wiki/File:Daboia_head.jpg                      http://en.wikipedia.org/wiki/File:Echis_carinatus_sal.jpg
கண்ணாடி விரியன் பாம்பு                                          ரஸ்ஸல் கண்ணாடி விரியன்

1972ல் விஜயவாடாவில் ஒரு நாள் எனது கிருஸ்துவ சக அதிகாரி ஒருவருடன் எங்கள் வீட்டு வாசல் வராந்தாவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.  வாசலில் இருந்த முசுக்கொட்டை செடியருகே (Mulberry tree) பத்துப் பதினைந்து கட்டெறும்புகள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து செல்வது போல என் கண்ணில் பட்டது.  சற்று கூர்ந்து கவனித்ததில் எனக்குப் புரிந்து விட்டது அது என்னவென்பது. அப்போது விஜயவாடாவில் நாகபஞ்சமி என்ற சினிமா ஓடிக் கொண்டிருந்தது.  நண்பர் திடீரெனக் கேட்டார், “உங்கள் மதத்தில் நல்ல பாம்பினை தெய்வமாகக் கொண்டாடுகிறீர்கள்.  இது உண்மையா? அல்லது கட்டுக் கதைகளா?” என்று.  “அது உண்மையோ இல்லையோ எனக்குத் தெரியாது.  இப்போது உங்களுக்கு ஒரு உண்மையான பாம்பினைக் காட்டவா?” என்றேன்.  “எங்கே? எங்கே” காட்டு” என்றார் அவர்.  நண்பர் மேத்யூ குட்டியை முசுக் கொட்டை செடியருகே அழைத்துச் சென்று அங்கு வளைந்து வளைந்து செல்லாமல் கிட்டத் தட்ட நேர் கொட்டில் சென்று கொண்டிருந்த ஒரு சின்ன பாம்பினைக் காட்டினேன்.  அதன் முன்னே ஒரு குச்சியை நீட்டினேன்.  குட்டிப் பாம்பு தன் உடலை விருட்டென வளைவுகளாக இழுத்துக் கொண்டு குச்சியினை பக்க வட்டாகத் தாக்கியது. பாம்புகளைப் பற்றி சிறிதளவு படித்திருந்த எனக்குப் புரிந்து விட்டது அந்தப் பாம்பு கண்ணாடி விரியனின் குட்டி என்று.  அடுத்த வினாடி ஒரு பெரிய கல்லை அதன் மேல் தூக்கிப் போட்டுப் பரலோகம் அனுப்பி விட்டார் மேத்யூ குட்டி.  ஏன் அவருக்கு நான் பாம்பைக் காட்டினேன் என வருந்தினேன் அன்று.

ராஜ நாகம்:  (King cobra)  ராஜ நாகம் நல்ல பாம்பில் ஒரு வகை.  ஆனால் இரண்டு வித்தியாசங்கள்.  ஒன்று இதன் உணவுகளில் மிக முக்கியமானது மற்ற  பாம்புகள்  (அதனால் தான் ராஜ நாகம் என்ற பெயரோ?)   மற்றொன்று இது சிறு குச்சிகள் சரகுகளைத் தன் உடலால் நகர்த்தி நகர்த்தி இரண்டடுக்கு ‘வீடு’ (கூடு) கட்டி கீழ் தளத்தில் முட்டைகள் இட்டு, மேல் தளத்தில் படுத்துறங்கும்.  ராஜ நாகம் தன் ‘வீட்டினை’ மிகுந்த ஆக்ரோஷத்துடன் பாது காக்கும்.



உலகில் உள்ள கொடிய விஷப் பாம்புகளில் மிகப் பெரிய பாம்பு ராஜ நாகம்.  இது சுமார் 18.5 அடி வரை வளரக் கூடும். நல்ல பாம்பினைப் போலவே இந்தப் பாம்பும் படமெடுக்கும்.

இதன் கண் பார்வை மிக மிகக் கூர்மையானது. சுமார் 300 அடி தூரத்தில் நகரும் ஒரு இரையினை இது கண்டறியும் சக்தி படைத்தது என்கின்றனர் வல்லுனர்கள்.


பவளப் பாம்பு : (Coral snake). பவளம் என்றதும் பலதேசப் பெண்களுக்கு ஆபரணமாக அணிய ஆசை வரும்.  மஞ்சள், சிவப்பு, கருப்பு வர்ணப் பட்டைகளைக் கொண்ட இந்தப் பாம்பு பார்க்க மிக அழகாக இருக்கும்.



 http://www.team-bhp.com/forum/attachments/4x4-off-roading/91469d1232383511-snakes-coral.jpg 

அழகாக இருக்கிறதே எடுத்து அணியலாமோ என்று எண்ண வேண்டாம்.  மிகக் கொடிய விஷம் கொண்ட பாம்புகளில் இதுவும் ஒன்று.

சில விஷமற்ற பம்புகள்:  விஷமற்ற பாம்புகள் என்றவுடன் இவற்றுக்கு முற்றிலுமாக விஷம் இராது என எண்ணி விட வேண்டாம்,  இந்த வகையில் சிலவற்றிற்கு விஷம் இருந்தாலும் அது மிக மிகக் குறைந்த வீரியமுடையதாகத் தான் இருக்கும்.  இவ்வகைப் பாம்புகளில் மூன்றினைப் பற்றிப் பார்க்கலாம்.

1. கொடி அல்லது சாட்டைப் பாம்பு (Vine or Whip snake):  நீண்டு மெலிந்து கொடி அல்லது சாட்டை போல் இருக்கும் இப் பாம்பில் பச்சை நிறத்தில் இருப்பவற்றை பச்சைப் பாம்பு என்றும், பழுப்பு நிறத்தில் உள்ளதை கொம்பேரி மூக்கன் என்றும் நிறத்தினை வைத்து அழைப்பார்கள் நம் தமிழ் நாட்டில்.  இதனை கண் கொத்திப் பாம்பு என்று அழைப்பவர்களும் உண்டு.

இந்த இரு வகைப் பாம்புகளுமே மிக மிகக் குறைந்த வீரியம் கொண்ட விஷம் உள்ள பாம்புகளே.  அவை கடித்தால் கடித்த இடத்தினைச் சுற்றி சிறிதளவு வீக்கமும், வலியும் இருக்கும்.  மூன்று நாட்களில் வலி குறைந்து அல்லது மறைந்து விடும்.

இந்தப் பாம்புகள் தாழ்வான மரக் கிளைகள் அல்லது செடிகளில் இருந்து கொக்கி போலத் தொங்கிக் கொண்டு இருக்கும்.  அவ்வாறு தொங்குவது தரையில் ஓடும் தன் இரையான ஓணான், பல்லி, சுண்டெலி இவற்றினைக் கண்டறிந்து தாக்கிப் பிடிப்பதற்கே.

கொம்பேரி மூக்கனின் தலை மேலிருந்து பார்த்தாலும் சரி, பக்க வாட்டில் இருந்து பார்த்தாலும் சரி ஒரு நீண்ட முக்கோண வடிவில் காணப்படும்.                            


http://en.wikipedia.org/wiki/Ahaetulla_nasuta
பச்சைப் பாம்பில் இரு வகை
.
கொம்பேரி மூக்கன் பற்றி நம் நாட்டில் இரு செய்திகள் பரவலாக உலவி வரும்.

1.  “கொம்பேரி மூக்கன் மனிதனின் கண்களைக் குத்துவதற்காகத் தான் மரக் கிளைகளில் இருந்து தொங்கிக் கொண்டிருக்கும்.”

2.  “கொம்பேரி மூக்கனை ஒருவர் கொல்ல நினைத்து அடித்தால் அது அவரைத் தீண்டி விட்டு அவர் இறந்தாரா, இறந்தவரின் உடலை எரித்தார்களா இல்லையா எனப் பார்ப்பதற்காக அருகிலேயே தொங்கிக் கொண்டிருக்கும்.  புகை கண்ட பின்னர்தான் அது அங்கிருந்து மறையும்.”

இந்த இரண்டில் முன்னதில் ஓரளவு உண்மை இருக்கலாம்.  காரணம் இதுதான்.  மரத்திலிருந்து தொங்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாம்பினை நாம் அணுகும் போது அது நம் கண்கள் அசைவதைத் தப்பாக தனது இரை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றெண்ணி நம்மைத் தாக்கும் வாய்ப்பு உள்ளது.

இரண்டாவது முற்றிலும் கட்டுக் கதையே.

நான்கு வருடங்களுக்கு முன் எங்கள் வீட்டில் தோட்ட வேலை செய்து கொண்டிருந்த இருவர் அடித்துப் பிடித்து உள்ளே ஓடி வந்து, “சார் ஒரு கழி கொடுங்க.  பாம்பு ஒண்ணு வந்துருக்கு” என்றனர்.  கழியைக் கொடுக்காமல் நான் வெளியெ வந்து பார்த்தேன்.  “பாம்பு எங்கே?” என்றேன்.  அவர்கள் ஒரு மல்லிகைச் செடியியைக் காட்டினர்.  அதில் ஒரு பச்சைப் பாம்பு.  அதன் வாலைப் பிடித்து மெல்ல வெளியே இழுத்துத் தூக்கிப் பிடித்தேன். அவர்கள், “சார் அது கண்ணெக் கொத்தீடும்” என அலற நான் சிறிதும் பதட்டப் படவில்லை.  அந்தப் பாம்பினை புதர் மண்டி இருந்த பக்கத்து காலி மனையில் கொண்டு விட்டேன்.  கண் இமைக்குமுன் தன்னுடலை சற்றும் அசைவின்றி புதருக்குள் இழுத்துச் சென்றது அது.  என்ன கொள்ளை அழகு தெரியுமா பச்சைப் பாம்பு?


ஓலைப் பாம்பு :  ஓலைப் பாம்பு நம் தோட்டங்களில் சாதாரணமாகக் காணப்படும் ஒரு வகைப் பாம்பு.  “ஓலைப் பாம்பு ஒன்றினை அடித்தால் ஒன்பது வரும்”, என்பார்கள்.  இது ஓரளவு உண்மையே.  சொந்த அனுபவத்தில் சொல்கிறேன்.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பது, நாற்பதுகளில் திருச்சி, பொன்மலையில் நான் வசித்து வந்தபோது எங்கள் வீட்டுத் தோட்டத்திற்கு நிறைய பாம்புகள் வரும்.  அடிக்கடி அடிப்போம். ஒரு முறை புதராக மண்டிக் கிடந்த கொடி சம்பங்கியில் ஒரு பாம்பினை அடிக்கப் போய் அங்கிருந்து நாலா பக்கமும் பல பாம்புகள் சிதறி ஓடின.  எங்களுக்கு ஒரே ஆச்சரியம், திகில்.  அப்படி நடக்கக் காரணம் ஓலைப் பாம்புகள் கூட்டமாக வாழும் இயல்புடையவை என்பதுதான் எனப் பின் நாட்களில் அறிந்தேன்.
சாரைப் பாம்பு :  இதன் ஆங்கிலப் பெயர் ‘Rat snake’.  இப் பெயர் ஒரு காரணப் பெயர்.  இந்தப் பாம்பின் பிரதான உணவு எலிகள்.


http://en.wikipedia.org/wiki/File:Yellowratsnake-1-.jpg

சாரைப் பாம்புகளில் சுமார் 32 வகையான பாம்புகள் உள்ளனவாம்.

இப்பாம்பு பற்றிப் பரவலாக நிலவி வரும் எண்ணம் இது நல்ல பாம்பின் காதலன் என்பது.  தவறான ஒரு கருத்து இது.  இப்படி ஒரு தவறான எண்ணம் வரக் காரணம் இதன் உருவமும் நிறமும் நல்ல பாம்பினைப் போல இருப்பதுதான்.

பாம்புகளைப் பற்றிப் பார்த்தோம்.  அடுத்த கடடுரையில் பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதைப் பார்ப்போம்.

(தொடரும்)                                  

நடராஜன் கல்பட்டு

2 comments:

  1. நல்ல பாம்பு போன்றே மிகவும் நல்லதோர் பதிவு.

    >>>>>

    ReplyDelete
  2. //“அது மிகக் கொடிய விஷப் பாம்பு. அதன் அருகே போகாதே” என “ந…ஜா ந...ஜா” (Don’t go…don’t go) எனத் தடுத்ததை அவர்கள் அந்தப் பாம்பின் பெயர் ‘நஜா நஜா’ என எடுத்துக் கொண்டனரோ தெரியாது.//

    இருக்கலாம். ’

    ’அடியாத்தா மங்கலம்’ என்றோர் இரயில்வே ஸ்டேஷனுக்கு இதேபோல ஒரு காரணத்தால் தான் வெள்ளைக்காரர்கள் பெயர் வைத்துள்ளனர் என ஒரு பெரியவர் சொல்லிக்கேள்விப்பட்டுள்ளேன்.

    வெள்ளைக்கார ரயில்வே குழுவினர், ஸ்டேஷனுக்குப் பெயர் வைக்க அங்கு வந்தபோது, வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பெண்களிடம் ஊரின் [கிராமத்தின்] பெயர் என்ன என்று ஆங்கிலத்தில் கேட்டுள்ளனர்.

    ஆங்கிலம் தெரியாத அந்தப்பெண்கள், தங்களுக்குள் சற்றே விபரம் தெரிந்த + சற்றே தூரத்தில் வேலை செய்துகொண்டிருந்த பொம்பளையான மங்கலத்தை ...... “அடி ...... ஆத்தா ..... மங்கலம் ..... இங்கே கொஞ்சம் வாயேன், இவனுங்க ஏதோ கேட்கிறானுங்க” என கத்தி அழைத்துள்ளனர்.

    உடனே அந்த ஸ்டேஷன் பெயர் ’அடியாத்தா மங்கலம்’ என வந்தவர்கள் குறித்துக்கொண்டு சென்று விட்டனராம். ;)))))

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...