Thursday, April 3, 2014

பாம்பைக் கண்டால்.... 1


பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்!

ஆமாம் எனக்கும்தான். பாம்பு பற்றிய பல கட்டுக் கதைகள் கூட சுவையாகத்தான் இருக்கும். எத்தனை திரைப்படம் பாம்பு பற்றி எடுத்தாலும் ஓடத்தான் செய்கிறது. அதென்னமோ பாம்பு என்று சொன்னாலே எல்லோருக்கும் கண்ணில் பளிச்சென்று ஒரு மின்னல் வந்து போகும் இல்லையா? 

சமீபத்தில்  தினமணியில் கண்ட ஒரு செய்தி:

பாம்புக்கு காது கேட்குமா? தொடர்ந்து குறிவைத்து தாக்குமா? பாம்புக்கு வார்க்கப்படும் முட்டையும், பாலையும் அது குடித்து விடுகிறதா? கொம்பேறிமூக்கன் தன்னால் கடித்து இறந்தவரை எரிக்கும் வரை மரத்தில் மறைந்திருந்து பார்க்குமா? இவையெல்லாம் உதகையில் நடைபெற்ற பாம்புகள் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்ற பார்வையாளர்களிடமிருந்து கேட்கப்பட்ட கேள்விகள்.

 புவி வெப்பமடைதல் அபாய அளவுகளைக் கடக்கத் தொடங்கியதிலிருந்து அனைத்து பகுதிகளிலுமே தட்பவெப்பநிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக பாம்புகளே இல்லையெனவும், அப்படியே இருந்தாலும் அவை விஷத்தன்மை அற்றவையே என்ற நிலைதான் மலை மாவட்டமான நீலகிரியில் இருந்தது. ஆனால், அண்மைக்காலமாக குடியிருப்பு பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும், சாலையோரங்களிலும் பாம்புகள் காணப்படுகின்றன.


 எனவே, நீலகிரி மக்களும் பாம்புகளைக் குறித்து தெரிந்து கொள்ளவும், அவை கடித்தால் உடனடி முதலுதவி என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளவும் சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது. இதில் பாம்புகளைக் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டோர் முதல் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் பாம்புகளை பிடித்து அப்புறப்படுத்துவோர் வரை பல்வேறு தரப்பினரும் 
 பங்கேற்றனர்.

 இக்கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்த உதகை அரசு கலைக்கல்லூரியின் உதவி பேராசிரியரும், சென்னை பாம்பு பண்ணையின் முன்னாள் இணை இயக்குநருமான 
 டாக்டர் கண்ணன் நம்மிடம் தெரிவித்ததாவது:

 ""பாம்புகள் என்றாலே ஒருவித பயம் உள்ளது. அதுதான் பாம்புகளைக் குறித்த பல்வேறு தவறான தகவல்களுக்கும் காரணமாகும். பயம், மூடநம்பிக்கை, குறைந்துவரும் வன வளம், வாழ்விடங்கள் குறைப்பு போன்றவை பாம்புகளின் அழிவுக்குக் காரணமாக அமைகின்றன.
 பாம்புகளுக்கு மனிதர்களைப்போல வெளிப்புற செவியில்லாமல் உட்புற செவி மட்டுமே உள்ளதால் அதிர்வுகளை மட்டுமே அவை உணரும். அவற்றிற்குக் காது கேட்காது. அதிர்வுகளுக்கு ஏற்ப நகரும். அதனால், இவை துரத்திச் சென்று மனிதர்களைக் கடிக்கும் என்பது கற்பனையானதே. அதேபோல, பாம்புக்கு மூளைத்திறன் குறைவு என்பதால் அவற்றால் சிந்திக்க முடியாது. எனவே, பாம்புக்கு முட்டையும், பாலும் வைத்தால் அதை அவை குடித்து விடுகின்றன என்பது நம்பிக்கைதானே தவிர, உண்மையல்ல.
 அதைப்போலவே கொம்பேறி மூக்கன் பாம்பு தான் கடித்து இறந்தவரை மயானத்தில் எரிக்கும் வரை அங்குள்ள மரத்தில் மறைந்திருந்து பார்க்கும் என கூறப்படுவதும் தவறானதாகும். கொம்பேறி மூக்கனுக்கு விஷத்தன்மையே கிடையாது. தவறான தகவல்களால்தான் பாம்புகளைக் குறித்து ஒரு பீதி நமக்குள் உள்ளது.

 பாம்புகள் உழவனின் நண்பர்களாவர். சராசரியாக ஒரு ஜோடி எலி ஆண்டுக்கு தனது குடும்பத்தில் 880 குட்டிகள் உருவாக காரணமாக அமைகின்றது. இவ்வாறு நூற்றுக்கண்க்கில் பெருகும் எலிகளை மனிதர்களால் கட்டுப்படுத்த முடியாது. பாம்புகளால் மட்டுமே அவற்றை கட்டுப்படுத்த முடியுமென்பதால் தட்டுப்பாடில்லாமல் உணவு தானியங்கள் கிடைப்பதற்கு பாம்புகள் அவசியமானவையாகும்.
 குளிர் ரத்த பிராணியான பாம்புகளால் நீலகிரி போன்ற குளிரான பகுதிகளில் இருக்க முடியாது என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது நீலகிரி மலைப்பகுதியிலும் பல்வேறு வகையான பாம்புகள் வசிக்கத் தொடங்கி
 யுள்ளன. 

 இந்தியாவில் 283 வகையான பாம்புகள் உள்ளன. இவற்றில் 62 வகை பாம்புகள் விஷத்தன்மை கொண்டவையாகும். இவற்றில் 4 வகையான பாம்புகள் மனிதர்களின் வசிப்பிடங்களைச் சுற்றி மட்டும் வாழும் தன்மை கொண்டவை'' என்றார்.

 இக்கருத்தரங்கில் பங்கேற்ற சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் டாக்டர் பூபதி கூறியதாவது:

 ""பருவநிலை மாற்றங்களால் பாம்புகளில் பல வகை ஏற்கெனவே அழிந்துவிட்டன. ஒருசில வகையான பாம்புகளும் அழிவின் விளிம்பில் உள்ளன.

 உலகிலுள்ள பாம்புகளில் 10 சத பாம்புகள் இந்தியாவில்தான் உள்ளன. தரையில் உள்ள பாம்புகள் விஷத்தன்மை கொண்டவையாக இருந்தாலும், கடல் பாம்புகள் விஷத்தன்மையற்றவையாகும். பொதுவாக அவை யாரையும் கடிப்பதுமில்லை. விஷத்தன்மை கொண்ட நாகப்பாம்பு கடித்தால் கண்டிப்பாக மரணம் என்பதும் தவறான தகவலாகும். பயத்தின் காரணமாகவே மனநிலை பாதிக்கப்பட்டு உயிரிழப்பிற்கு ஏதுவாகிறது.

 இந்தியாவில் சுனாமி ஏற்பட்ட பின்னர் நிகோபார் தீவுகள் ஒன்றரை அடி உயரம் கீழேயும், அந்தமான் ஒன்றரை அடி உயரம் உயர்ந்துவிட்டதாகவும் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இதுபோன்ற மாற்றங்களும் பாம்புகளின் வாழ்விடங்களை அழிப்பதோடு அவற்றின் இடப்பெயர்ச்சிக்கும் ஏதுவாகிறது. 
 எனவே, பாம்புகளைக் குறித்த பீதியை போக்கிக் கொள்வதோடு அவற்றைக் குறித்தும் தெரிந்து கொண்டால் பாம்புகளை நம்மால் காப்பாற்ற முடியும். இயற்கையின் சக்கரத்தில் பாம்புகளுக்கும் பிரதான இடமுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது'' என்றார்.

 இந்த கருத்தரங்கைத் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் பாம்புகளைப் பிடித்து பாதுகாப்பாக வெளியேற்றுவதைக் குறித்து வனத்துறையினருக்கான பயிற்சி முகாமும் நடத்தப்பட்டது.



பாம்புகள் பற்றி திரு கல்பட்டு நடராஜன் ஐயா அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய மிக சுவாரசியமான தொடரினை அவரது அனுமதியின் பேரில் இங்கு அளிக்கிறேன்.  மிக்க நன்றி ஐயா.  அதன் முதல் பகுதி இங்கே:



பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டது, “கருடா சௌக்யமா? என்று.



“அவரவர் இடத்தில் இருந்தால் எல்லோரும் சௌக்யமே”, என்றே கருடன் சொன்னது.


சரி பாம்பின் இடம், அதான் வீடு, எது என்றால் புற்றென்றுதான் எல்லோரும் சொல்வார்கள்.  “அது என்ன பாம்பு தானாகக் கட்டிகொண்ட வீடா? அல்லது வாடகை வீடா?” என்றால் இரண்டும் இல்லை.  பலவந்தமாக ஆக்கிரமித்துக் கொண்ட வீடு அது. 

புற்று என்பது கறையான்கள தாம் வாழக் கட்டிக் கொண்ட வீடு.  அந்தப் புற்றுகளுக் குள்ளோ அல்லது எலி வளைகளுக் குள்ளோ புகும் பாம்புகள் வீட்டு சொந்தக் காரர்களைத் தன் உணவாக்கிக் கொண்டு மிக மிக சௌகரியமாகக் குடும்பம் நடத்தும்.



வீட்டைக் கட்டியது நாங்கள். குடி வந்தவரோ கூசாமல் தின்கிறார் எங்களை என்கின்றனவோ இந்தக் கரையான்கள்?



கரையான்


எலிகளின் கதையும் இதேதான்.  பாம்புகளுக்கு மிகவும் பிடித்த உணவு எலிகளும் தவளைகளும்.

நம் நாட்டில் உற்பத்தியாகும் தானியங்களில் சுமார் 20 முதல் 25 சத விகித வரையான தானியங்களைத் தின்று தீர்ப்பது எலிகள் என்கின்றனர் நிபுணர்கள்.  அந்த எலிகளின் வளைகளைத் தங்கள் வீடுகளாக்கிக் கொண்டு, எலிகளை உணவாக்கிக் கொண்டு, அவற்றின் பெருக்கத்தைக் கட்டுக்குள் வைப்பது பாம்புகள்.  இப்போது சொல்லுங்கள் பாம்புகள் நம் நண்பர்களா இல்லையா என்று.                      

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள்.  ஆனால் எல்லாப் பாம்புகளுமே உயிர் கொல்லும் விஷம் கொண்டவை அல்ல.  ஆனால் எவை கடித்தால் உயிருக்கு ஆபத்து, எவை கடித்தால் ஆபத்து இல்லை என்று எப்படித் தெரியும்?  அதனால் தான் பாம்பைக் கண்டவுடன் அதை அடித்துக் கொன்று விடுகிறார்கள் பலரும். 

பாம்பு தானாகச் சென்று யாரையும் கடிப்பதில்லை.  நாம் அதைத் துன்புறுத்தினாலோ அல்லது தப்பிப் போய் மிதித்து விட்டாலோ தான் அது நம்மைக் கடிக்கும்.

அன்டார்டிகா கண்டத்தைத் தவிற மற்ற எல்லாக் கண்டங்களிலும் பாம்புகள் உள்ளன. பாம்புகளில் கிட்டத்தட்ட சுமார் 3000 வகையான பாம்புகள் உள்ளன. இவற்றுள் சுமார் 534 வகைப் பாம்புகளே மிகக் கொடிய விஷம் கொண்டவை.

இந்த மூவாயிரம் வகையான பாம்புகளில் பத்தே சென்டி மீடர் நீளத்தில் மண் புழு போன்றிருக்கும் செய்யான் பாம்பிலிருந்து (Leptotyphlops carlae)  அனகொண்டா என்ற 7.5 மீடர் பாம்பு, மற்றும் 9.0 மீடர் நீளமுள்ள மலைப் பாம்பு வரை உள்ளன.  பல ஆண்டுகளுக்கு முன் 15 மீடர் நீளம் வரை உள்ள பாம்புகள் (Titanoboa cerrejonensis) கூட இருந்தனவாம்.


செய்யான் பாம்பு

செய்யான் பாம்பிற்குக் கண் பார்வை கிடையாதாம்.

இந்த செய்யான் பாம்பு மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்றான பார்படாஸில் மட்டுமே காணப்படுகிறது எனச் சொல்கின்றனர் பாம்பு பற்றி அறிந்தோர்.  ஆனால் இந்தப் பாம்பை நான் பல முறை பார்த்திருக்கிறேன் நம் ஊர்களிலும்.  இது எந்த அளவுக்கு நாம் நம்மைச் சுற்றி உள்ளவை பற்றிக் குறிப்புகள் எடுத்து வைக்கிறோம்,  அவற்றைப் பற்றி ஆராய்ச்சிகள் செய்கிறோம் என்பதைக் காட்டுகிறது.

மிகச் சிறிய பாம்பினைப் பார்த்தோம்.  மிகப் பெரிய பாம்பைப் பார்க்க வேண்டாம்?  அதுதான் மலைப் பாம்பு,  சுமார் 9 மீடர் நீளம் வரை வளரக் கூடியது.


மலைப் பாம்பு

மலைப் பாம்பின் உணவு பறவைகள் மற்றும் சிறிய மிருகங்கள் ஆகும்.  வாயினால் கவ்விப் பிடித்த இரையினை தன் உடலால் சுற்றி வளைத்துப் பின்னர் தனது தசைகளை இறுக்கிக் கொண்டே போய் அவற்றின் உயிரை எடுத்து விடும்.  அந்த இறுக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது அனுபவித்துப் பார்த்தால் தான் தெரியும்.

மலைப்பாம்பு அதன் உயிருக்கு ஆபத்து என்று வந்தாலொழிய தரையில் மெதுவாகத்தான் ஊர்ந்து செல்லும்.  மரத்தின் மீதும் ஏறும்.  தண்ணீரில் நன்றாக நீந்திச் செல்லும்.

வயிறு புடைக்க உண்ட பின் சில நாட்கள் பட்டினி கிடக்கும் உண்ட இரையின் உடல் அளவு பொருத்து.  ஒரு பாம்பு இரண்டு வருடம் வரை பட்டினி கிடந்ததாகக் கூடக் குறிப்பில் உள்ளது.

கட்டுரை என எழுதும்போது “நான்” வருவது தவிர்க்கப் பட வேண்டிய ஒன்று.  ஆனால் இது படித்துப் பட்டம் பெறுவதற்காக எழுதும் கட்டுரை அல்ல.  பாம்பைப் பற்றி ஒரு நிபுணர் எழுதப் போகும் கட்டுரையும் அல்ல.  பாம்பைப் பற்றி ஒரு பாமரன் எழுதப் போகும் கட்டுரை.  ஆகவே நடுவில் “நான்” நுழைவதை நீங்கள் மன்னித்துக் கொள்ளத் தான் வேண்டும்.

திருச்சியில் சிங்காரத்தோப்பு என்று ஒரு இடம்.  அதில் உள்ள வீடுகள் எல்லாம் கிருஸ்துவர்களாக மாறிய முன்னாள் அந்தணர்கள் வீடுகள்.  அவர்கள் வீட்டில் பேசுவது  அக்ரகாரத் தமிழில்.  ஆடிக்கழைப்பது, தீபாவளி கொண்டாடுவது, தாலி கட்டிக் கொள்வது என எல்லாம் உண்டு.  ஆனால் பொட்டு வைத்துக் கொள்ள மாட்டார்கள்.  சர்ச்சுக்குப் போவார்கள். அவர்களில் ஒருவர் கலஞ்சென்ற தம்பு ஐயர்.

தம்பு ஐயர் ஒரு பிராணிகள் விரும்பி.  அவர் வீட்டில் ஒரு நரி, ஒரு குரங்கு, ஒரு முதலை, கீரிப் பிள்ளைகள், சில முயல்கள், சில பாம்புகள், கிளி, காடை, கௌதாரி என்று பறவைகள் என ஒரு குட்டி மிருகச் சாலையே  வைத்திருந்தார். குறவர்கள் அவரது நண்பர்கள்.  தங்கு தடையின்றி விலங்குகளுக்கு ஆகாரம் வர வேண்டுமே அதற்காகத்தான்.

அவரது பொக்கிஷங்களை பார்த்துக் கொண்டு வரும்பு போது பாம்புகள் வைத்திருக்கும் இடத்திற்கு வந்தேன்.  “பாம்பிற்கு என்ன உணவளிப்பீர்கள்? எப்படி அளிப்பீர்கள்?” என்று நான் கேட்க அவர், “இதோ பார்”, எனச் சொல்லி பக்கத்தில் இருந்த ஒரு மூங்கில் கூண்டிலிருந்து ஒரு கௌதாரியை எடுத்து பாம்பு ஒன்று இருந்த கண்ணாடிப் பெட்டிக்குள் போட்டர்.  அவர் போட்ட அதே கணம் மின்னல் வேகத்தில் மேலெழும்பி அந்தப் பாம்பு கௌதாரியைக் கவ்விப் பிடித்தது.  பின் தன் உடலால் கௌதாரியைச் சுற்றிக் கொண்டு அதனை இறுக்க ஆரம்பித்தது.  ஓரிரு நிமிஷங்களுக்குள் கௌதாரியின் மடங்கி இருந்த கால்களும் விரல்களும் நீண்டு விரிந்தன.  அதன் உயிர் பிரிந்தது.  ஆனால் பாம்பு அதன் பிடியை விடவில்லை.  சில மணி நேரங்கள் வரை அப்படியே இறுக்கிப் பிடித்து வைத்திருக்குமாம் அது..  அவரை ஏன் நான் பாம்பின் இரை பற்றிக் கேட்டடேன் என வருந்தினேன்.

பின் அவர் வேறு ஒரு கண்ணாடித் தொட்டியில் இருந்த ஒரு குட்டி மலைப் பாம்பின் முதுகில் ரெண்டு தட்டுத் தட்டிக் கையில் எடுத்து அதை என் முன் கையில் வைத்தார்.  அது மெல்ல நகர்ந்து என் கையைச் சுற்றி கொண்டது.  பின் மெதுவாக என் கையை இறுக்குவதை உண்ர்ந்தேன்.  சில வினாடிகளில் அதன் இறுக்கம் அதிகமாகிக் கொண்டே போனது.  என் கையில் ரத்த ஒட்டம் நின்று போனதோ என்னவோ விரல்கள் மறத்துப் போக ஆரம்பித்தன.  நான், “அதை எடுத்து விடுங்கள்”, எனக் கத்தினேன்.  “நீயே எடு” என்றார்.  நான் வாலைப் பிடித்து எடுக்கப் போனேன்.  தம்பு ஐயர் என்னைத் தடுத்து நிறுத்தி முதலில் அதன் முதுகில் மெதுவாக ரெண்டு தட்டுத் தட்டி விட்டு எடு.  இல்லை என்றால் அது உன்னை கடிக்கலாம்.  பின அதன் வாய்க்குள் இருந்து உன் கையை எடுப்பது கடினம்”, என்றார்.   அவர் சொன்னபடி செய்து மெல்ல அதன் வாலைப் பிடித்து சுற்றிச் சுற்றி பாம்பை என் கையிலிருந்து கழற்றினேன்.  அன்று அனுபவத்தில் தெரிந்து கொண்டேன் பாம்பு எப்படி இறுக்கிப் பிடித்துத் தன் இரையைக் கொல்கிறது என்று.  உடும்புப் பிடி என்பார்களே அதை விடப் பல மடங்கு கெட்டியானது தான் பாம்புப் பிடி.

அன்று இரவு உணவு உண்ணப் பிடிக்கவில்லை.  காரணம் ஓரு கொலை நடக்கத் துணை போன குற்ற உணர்வுதான்.

சரி என் கதையை விட்டு பாம்பின் கதைக்கே திரும்புவோம்.

நகர்தல் : பாம்பின் கால் பாம்பறியும் என்பர்.  ஏனெனில்  பிறர் கண்களுக்குத் தெரியும் படியான புறக் கால்கள் இல்லை பாம்பிற்கு.  அதன் ஒவ்வொரு செதிளுமே இரு கால்கள்தான்.  அதன் உடலில் சாட்டை போல் நீளமான முதுகெலும்பில் இருந்து முளைத்துள்ள விலா எலும்புகள் தசைகள் உதவி கொண்டு செதிள் களை இயக்க பாம்பு இடம் விட்டு இடம் நகர்கிறது. மரம் ஏறுகிறது.  நீந்துகிறது.

மெதுவாகச் செல்லும் போதும், மணல் பாங்கான இடங்களில் செல்லும்போதும் வளைந்து வளைந்து செல்லும் பாம்பு வேகமாக ஓட நினைத்தால் நேர் கோட்டிலே வெகு வேகமாகப் பறக்கும், வானில் அல்ல தரையில்தான்.  அப்படி நேர் கோட்டில் போகும்போது அதன் முதுகில் அலைகளென எழும்பி இறங்கும் அசைவுகள் முன்னிருந்து பின் செல்வதைக் காணலாம்.

நுகர்தல் :  பாம்பிற்கு மிக நல்ல நுகரும் சக்தி உண்டு.  எலி போன்ற தன் இரை சென்ற பாதையினைக் கண்டறிவது இந்த மிகத் துல்லியமான நுகர் சக்தியால் தான்.  ஆனால் நம்மைப் போல் நாசிகளால் நுகர்வதில்லை பாம்புகள்.  பின் எப்படி நுகர்கின்றன அவை?

ஒவ்வொரு வினாடியும் தன் இரண்டாகப் பிளந்த நாக்கினை வெளியே நீட்டி இப்படியும் அப்படியுமாக பல திசையிலும் திருப்புகிறதே அது ஏன் தெரியுமா?  நுகர்வதற்காகத் தான்.

ஒலி கேட்டல் :   “மகுடியின் இசையில் மயங்கியது நாகம்” என்கிறார்களே அது உண்மையா என்றால் இல்லை.  பிடாரனின் கை அசைவுகளை கண் வாங்காது பார்ப்பது, பிடாரன் நம்மைத் தாக்க வருகின்றானா அல்லது நாம் அவனைத் தாக்க வேண்டுமானால் அதற்குத் தக்க தருணம் எது என்ற சிந்தனையில்தான்.

“இடியேருண்ட நாகம் போல்....” இது எந்த அளவு உண்மை?  உண்மை.  நூற்றுக்கு நூறு உண்மை.  பாம்புகளுக்கு இடியின் ஒலியைக் கேட்கவும் முடியும்.  மற்ற ஒலிகளையும் கேட்கவும் முடியும்.  ஆனால் அவ்வாறு கேட்பதற்கு  நம்மைப் போன்று புறச் செவிகள் கிடையாது.  அகச் செவிகள் உண்டு.  அந்த அகச் செவிகள் அதன் உடலில் உள்ள ஒவ்வொரு செதிளோடும் நரம்புகள் மூலம் இணைக்கப் பட்டிருக்கும்.   ஒலிகள் தரையில் உண்டாக்கும் அதிர்வுகளைச் செதிள்களின் மூலம் உணர்ந்து ஒலிகளைக் கேட்டறிகிறது.

ஒளி காணல் :  பாம்பின் கண்களுக்கு இமைகள் கிடையாது.  அவை எப்போதுமே திறந்திருக்கும், தூங்கும் போதும் கூட.  தூங்கும் போது வெளிச்சம் இடையூறாக இருக்குமே? என்ன செய்ய?  அப்போது பாம்பு தன் கண்களில் உள்ள பாப்பாவை (Pupa) இடைவெளி இல்லாது இறுக்க மூடிக் கொள்ளும்.

விஷம் :  “பாம்பிற்குப் பல்லில் விஷம்.  தேளுக்குக் கொடுக்கில் விஷம்.   அந்த ஆளுக்ககு உடம்பு பூரா விஷம்.”  இந்தக் கூற்றுகள் எவ்வளவு தூரம் உண்மை?  பின்னது இரண்டும் நூற்றுக்கு நூறு உணமையாய் இருக்கலாம்.  முன்னது ஐம்பது சத வீதம் உண்மை.  பாம்புக்குப் பல்லில் விஷம் இல்லை.  அது விஷத்தினை வைத்தியர் ஊசி கொண்டு மருந்து ஏற்றுவது போல் பல்லின் வழியாக நம்முள் செலுத்துகிறது.  விஷம் இருப்பது அண்ணத்தின் மேலாக உள்ள பையில்.


http://encarta.msn.com/media_701681865_761578341_-1_1/snake_fangs.html
கிலு கிலுப்பை எனத் தன் வாலினால் சல சல ஒலி எழுப்பும் பாம்பு அதன் விஷப் பற்கள் வெளியே தெரிய

பாம்பு தன் இரு விஷமேற்றும் பற்களை விமான ஓட்டி தரையை விட்டு மேலே விமானம் எழும்பிய உடன் சக்கரங்களை உள்ளிழுத்துக் கொள்வது போல உள்ளிழுத்துக் கொள்ளவோ, மடக்கிக் கொள்ளவோ முடியும்.  அது மட்டுமல்ல. விமான ஓட்டி உள்ளிழுத்த சக்கரங்களைப் பலகைகள் வந்து மூடிக் கொள்வது போல தசைகள் பக்க வாட்டில் இருந்து உள் நோக்கி நகர்ந்து அப் பற்களை மூடிக் கொள்ளும்.

பாம்பின் விஷம் பிறரைத் தாக்குவதற்காகவோ அதன் தற்காப்பிற்காகவோ அல்ல. அது தன் இரையினைக் கொல்வதற்காகவோ அல்லது மயக்கமுறச் செய்வதற்காகவோ அல்லது இரையினை எளிதாக ஜீரணிப்பதற்குத் தயாராக்கவோ தான்.

தோலுரித்தல் :  தோலுரித்தல் என்றதும் சிலர் மணி பர்ஸ், இடுப்புக் கச்சை இவை செய்வதற்காகத் தோலை உரிக்கிறார்களே அப்படி என்று எண்ணி விடாதீர்கள்.  பாச்சை, வெட்டுக்கிளி, இடையான், தேள் போன்ற சில பூச்சிகள் வளர்ச்சிக்குத் தடையாக மாறும் கெட்டி அடைந்த தோலின் புறச் செல்களிலிருந்து சட்டையைக் கழற்றி எறிவது போல வளியே எறிகின்றனவே அது பற்றிதான் சொல்கிறேன் இங்கு.  பாம்பு அவ்வப் போது தன் சட்டையைக் கழற்றிப் போடும். 

பாம்பு சட்டை உரிப்பது வளர்ச்சிக்காக அல்ல.   அதனைக் கடித்து
சத்தினை உரிஞ்சும் பேன் போன்ற பூச்சிகளிடமிருந்தும், வேறு பல கிருமிகளிடமிருந்தும் விடுதலை பெறவும், கீரல்கள் மிகுந்த மற்றும் இறந்து போன வெளி செல்களை விட்டெறியவும் தான்.

சட்டை உரிக்கும் நேரம் வந்தால் வெளிப் புறச் செல்களுக்கு உள்ளாக அண்மையில் இருக்கும் செல்கள் திரவமாக மாறி வழுக்கலை அளிக்கிறது.  சட்டையின் வால் பக்கத்தை சொறசொறப்பான குச்சிகளில் ஒட்டச் செய்து அதிலிருந்து தன் உடலை மெல்ல வெளியே இழுத்துக் கொள்கிறது.

நாக ரத்தினம் :  “வயது முதிர்ந்த பாம்புக்குக் கண் சரியாகத் தெரியாது.  அதன் தலையில் உள்ள விஷம் கெட்டி அடைந்து ரத்தினமாக மாறும்.  அதனை இரவில் பாம்பு கக்கிவிட்டு அந்த ரத்தினம் வீசும் ஒளியில் தன் வேலைகளைச் செய்யும்.”  இது உண்மையா, கட்டுக் கதையா?  பின்னது என்றே நான் சொல்வேன்.




தொடரும்…    
                            

1 comment:

  1. பாம்பின் சில தகவல்கள் அறியாதவை... நன்றி...

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...