Thursday, April 3, 2014

பாம்பைக் கண்டால் ! - 2



  
சில இந்தியப் பாம்புகளைப் பற்றி சொல்வதற்கு முன் பாம்பின் உடலமைப்பில் உள்ள சில விசேஷங்கள் பற்றிக் கூற விரும்புகிறேன்.

உடலுருப்புகள்  பாம்பின் உடல் குறுகலாய் நீண்டு ஒரு கொடி போல இருப்பதால் அதன் உள் உருப்புகளும் மெலிந்து நீண்டு இருக்கும்.  மற்ற மிருகங்களைப் போல் அதன் நுரை ஈரல்கள் இராது.  ஒன்றுடன் ஒன்று இணைந்திராமல், வலது ஈரல் நீண்டு உடலின் பாதி தூரம் வரை செல்லும்.  இடது நுரை ஈரல் குட்டையானது.  சில பாம்புகளில் இது இல்லாமல் கூட இருக்கலாம்.  அல்லது மூன்றாவதாக மிகக் குட்டியான ஒரு நுரை ஈரலும் இருக்கலாம்.  இவ்வாறு நீண்ட நுரை ஈரலைக் கொண்டதால் தான் பாம்பு மூச்சு விடுவது மனிதனையோ மற்ற மிருகங்களையோ போல இரண்டு மூன்று வினாடிகளில் முடிந்து விடாமல் பெரியதோர் பலூனிலிருந்து காற்றை விடுவது போல புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..........ஸென்று பல வினாடிகள் நீடிக்கின்றது.

மூத்திரக் காய்கள் இரண்டு உண்டு.  ஆனால் ஒன்றன் பின் ஒன்றாய்.

ருசி பார்த்தல் பாம்பினால் செய்ய முடியாத ஒரு காரியம்.  காரணம் அதன் நாக்கு மணம் நுகர்வதர்க்காக மட்டுமே அமைக்கப்பட்ட ஒன்று.  அதனால் என்ன?  கண்ணால் பார்த்து மணம் நுகர்ந்தால் போதுமே தனக்குப் பிடித்த உணவினைக் கண்டு கொள்ள.

கீழ் வரும் படத்தினைப் பாருங்கள் பாம்பின் உடலுள் உருப்புகள் எவ்வாறு அமைந்துள்ளன என்று.


பாம்பின் வாய்  பாம்பின் தாடைகள், நம் தாடைகளைப் போல் ஒன்றோடொன்று நிரந்தரமாக இணைக்கப் பட்டவை அல்ல.  தேவைப் படும் போது தாடை மூட்டுகள் கழன்று தாடைகளை வேண்டுமளவுக்கு விரித்துக் கொள்ள முடியும்.  அதனால் தான் பாம்பு தன் தலையை விட அதிக பருமனான இரையை கவ்வி விழுங்க முடிகிறது.

இனப் பெருக்கம்  மிருகங்களை முட்டை இட்டுக் குஞ்சு பொரிப்பவை, குட்டி போட்டு பால் கொடுப்பவை என இரு வகையாகப் பிரிப்பார்கள்.  ஆனால் பாம்புகளில் மூன்று வகை உண்டு.  முட்டை இட்டுக் குஞ்சு பொரிப்பவை, முட்டையை வயிற்றுக்குள் வைத்திருந்து அது குஞ்சாக வெளி வரும்போது வெளிக் கொணரும் பாம்புகள் மற்றும் வயிற்றுக் குள்ளேயே கருவினுக்கு முட்டையின் வெள்ளைக் கருவினாலும், தொப்புள் கொடி போன்றதொரு அமைப்பின் மூலம் தன் உடலிலிருந்தே உணவு கொடுத்தும் வளர்த்துப் பின் குட்டி வளர்ச்சி அடைந்ததும் வெளிக் கொணரும் பாம்புகள் என்பவை அவை.

பாம்பின் முட்டைகள் கோழி முட்டை போல கெட்டியான ஓடுகள் கொண்டவை அல்ல.  மெல்லிய தோல் போன்ற ஒன்றுதான் முட்டையின் சட்டை.

பல பாம்புகள், நல்ல பாம்பு உட்பட, முட்டை இட்டபின் அவற்றைப் பற்றிக் கவலைப் படுவதில்லை.  ராஜ நாகம் முட்டைகளை கூடு அமைத்து அதில் இடும்.  மலப்பாம்பு சுமார் முப்பது முதல் நூறு முட்டைகள் வரை இட்டு அவற்றை ஒன்றாகச் சேர்த்து தன் உடலால் சுருட்டி இறுக்க அணைத்துக் கொண்டு அடை காக்கும்.



“உஸ்ஸ்ஸ்ஸ்.........தொந்திரவு பண்ணாதீங்க. நான் அடை காத்துகிட்டு இருக்கேன்.”

பாம்புகள் குளிர் ரத்தப் பிராணிகள் என்று சொல்வார்கள்.  அதாவது அவற்றின் உடல் உஷ்ணம் நம் உடல்கள் போல ஒரே நிலையில் இருக்காது.  வெளியெ என உஷ்ணமோ அதே நிலையில் இருக்கும்.  ஆனால் அடை காக்கும் மலைப் பாம்பு தன் உடலின் உஷ்ணத்தை முட்டைகள் குஞ்சுகளாக மாறத் தேவையான உஷ்ண நிலையான 88 முதல் 90 டிகிரி ஃபேரன்ஹீட் வரையான நிலையில் வைத்துக் கொள்கிறது.  எப்படித் தெரியுமா?  தன் உடலில் உள்ள தசைகளை இறுக்கி விரிப்பதன் மூலம் இந்த வேலையைச் செய்கிறது மலைப் பாம்பு.

விரியன் பாம்புகள் குட்டி போடும் இனம்.

தென் அமெரிக்கப்  பாம்புகளான பச்சை அனகொண்டாவும் போ கன்ஸ்ட்ரிக்டாரும் வயிற்றுக் குள்ளேயே முட்டையியனை வைத்து முட்டைக்குள் இருக்கும் கருவிற்கு, முட்டைக்குள் கருவினைச் சுற்றி இருக்கும் பதார்த்தம் மூலமாகவும், தன் உடலில் இருந்தே தொப்புள் கொடி போன்ற உருப்பின் வழியேயும் உணவளித்து பின் கரு குட்டியாக வளர்ச்சி அடைந்தவுடன் அதை வெளிக் கொணரும்.


பச்சை அனகொண்டா
  

போ கன்ஸ்ட்ரிக்டார்

பாம்புகள் புணருதல்  நல்ல பாம்பும் சாரைப் பாம்பும் புணர்ந்துதான் பின் நல்ல பாம்புகள் முட்டை இடுகின்றன என்று சிலர் சொல்வார்கள்.  இது ஒரு தவறான கருத்து.  ஒரே இனப் பாம்புகள் தான் புணர்ந்து இனப் பெருக்கம் செய்கின்றன.

கீரியும் பாம்பும் : பாம்பின் ஜன்ம விரோதி கீரிப் பிள்ளை.  கீரியின் உணவு பாம்பு.  கீரி பாம்புடன் இயற்கைச் சூழலில் சண்டை போடுவது பார்க்க வேண்டிய ஒன்று.  கீரி தன் அடர்ந்த ரோமங்களை சிலிர்த்துக் கொண்டு தன் உருவத்தினை இரு மடங்குக்குமேல் ஆக்கிக் கொள்ளும்.  பின் பாம்பின் பாதி உடலைப் பிடித்துக் கவ்வுவது போல் பாசாங்கு செய்யும்.  பாம்பு அதனைக் கொத்த வரும்போது தன் தலையைத் திருப்பிக் கொண்டு விடும்.  பாம்பு தன் கண்ணுக்கு உடலெனத் தெரியும் கீரியின் ரோமங்களைத் தாக்கும்.  ஆனால் அதன் விஷப் பற்கள் கீரியின் உடலைத் தாக்காது.  ரோமங்களைத் தான் தாக்கும்.  இப்படியே பல முறை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாகச் சுற்றிச் சுற்றி வந்து கீரி பாம்பினைக் களைப்படையச்செய்யும்.  பாம்பு முற்றிலுமாகக் களைத்திருக்கும் போது கீரி அதன் தலைக்கு சற்று கீழே கவ்விக் கடிக்கும்.  பாம்பின் உயிர் போனபின் மெல்ல மெல்லத் தலையைத் தவிற மற்ற பாகங்களைத் தின்று விடும். 


பாம்பின் எதிரி கீரி

பாம்பின் ஊணவு எலி, பல்லி, பறவைகள், சிறிய  விலங்குகள்.  அது சரி.  பாம்பு யாருக்கு உணவு?  கழுகு, கருடன், கீரி இவற்றுக்கு மட்டும் தானா?

இல்லை.  பாம்பு மனிதனுக்கும் உணவு.  கிழக்காசிய நாடுகளில் பலருக்கு பாம்பு மிகப் பிடித்த உணவு.  தலையை வெட்டி விட்டால் பாம்பு ஒரு மாமிசப் புடலங்காய்தானே?

பாம்பின் ரத்தத்தைக் குடித்தால் ஆணின் வீரியம் அதிகரிக்கும் என நம்புவோரும் உள்ளனர் கிழக்காசியாவில், அதுவும் பாம்பு உயிருடன் இருக்கும்போதெ அதன் உடலில் இருந்து எடுக்கப் படும் ரத்தம்!

“கொடிய விஷமுள்ள பாம்பு எது, விஷமற்ற பாம்பு எது என்று கண்டு பிடிக்க முடியுமா?” என்றால் முடியும் பாம்பின் தலையைப் பார்த்துக் கண்டு பிடிக்கலாம்.


விஷப் பாம்பைக் கண்டறிதல்

1. விஷமற்ற பாம்பின் கண்களின் பாப்பா வட்ட வடிவில் இருக்கும்.  விஷமுள்ள பாம்புகளின் கண்களில் இது நடுவில் சற்றே அகன்று மேலிருந்து கீழாக இரு கோடுகள் போலிருக்கும்.

2.  விஷமற்ற பாம்பின் மேல் தாடையில் கண்களுக்குக் கீழாக செதிள்கள் ஒரு வரிசைதான் இருக்கும்.  விஷமுள்ள பாம்பிற்கு இங்கு இரண்டு மூன்று வரிசைகள் செதிள்கள் காணப்படும்.

3.  விஷப் பாம்பின் மேல் தாடையில் நாசித் துவாரங்களின் பக்க வாட்டில் சிறிய பள்ளம் இருக்கும்.

ஆனால் ஒன்று.  பாம்பு நாம் பார்ப்பதற்காக தலையைக் காட்டிக் கொண்டு அமைதியாக உட்கார்ந்து கொண்டு இருக்க வேண்டுமே! அதற்கு என்ன செய்ய?

பாம்பு ஒருவரைக் கடித்துவிட்டால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாமா?

(தொடரும்)            
                               கல்பட்டு நடராஜன்

No comments:

Post a Comment

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...