Wednesday, January 18, 2012

வெண்ணிலவில் ஒரு கருமுகில்!(29)

எவர் ஒருவருடைய நெஞ்சு ஏழை மக்களுக்காகத் துயரத்தில் அழுமோ, அவரையே நான் மகாத்மா என்பேன்சுவாமி விவேகானந்தர்.
தந்தையிடம் மிக எளிதாக தன் நிலையைப் புரிய வைத்துவிட முடியும் என்ற தன்னுடைய நினைப்பு சரியில்லையோ என்று தோன்றியது அவந்திகாவிற்கு. தன் மகளை ஜோசியம், ஜாதகம் என்ற காரணம் காட்டி நிராகரித்த ஒரு குடும்பத்தில் திரும்ப வலிய சென்று , தன் பெண்னைக் கொடுக்க எந்த தந்தைக்குத்தான் மனம் வரும்? அந்த வகையில் அவந்திகாவின் தந்தை தன் மகளுக்காக , அவளுடைய மகிழ்ச்சிக்காக, விரும்பிய வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் உரிமை கொடுப்பதற்காக தம் எண்ணத்தை மாற்றிக் கொண்டதோடு, மாறனை மனதார ஏற்றுக் கொள்ளவும் செய்ததும் உணர முடிந்தது அவளால்……
புத்தாண்டு வருகிறதென்றால் உடன் ஒரு பரபரப்பும் தொற்றிக் கொள்ளும். செல்லப்போகும் ஆண்டின் பல்சுவை நினைவலைகளை அசைபோடுவதே தனி சுகம் என்றாலும், ஒரு வயதும் கூடப்போவதும் சிறு கலக்கம் ஏற்படுத்துவதும் உண்மைதானே. நாட்கள், வாரங்கள், மாதங்கள் என்று உருண்டோடி, மளமளவென மறு வருடம் ஓடி வருவதும் வாடிக்கையாகி விடுகிறது. தன் சிநேகிதிகளில் பெரும்பாலோனோர், வாழ்க்கையில் செட்டிலாகி குழந்தை குட்டியுடன் இருக்கும் போதும் இவ்வளவு நாட்கள் திருமண ஆசை என்பது பெரிதாக ஏதும் இல்லாவிட்டாலும் இப்போது ஏனோ அந்த ஆசை முளைவிட்டு, செடியாகிக் கொண்டிருந்தாலும், அதற்குக் காரணமானவன் மட்டும் சம்பந்தமில்லாதவன் போல சட்டை செய்யாமல் இருப்பது அவந்திகாவிற்கு சிறு கலக்கமேற்படுத்தினாலும், இப்புத்தாண்டில் அனைத்தும் நன்றாகவே நடக்கும் என்ற நம்பிக்கை வேரும் துளிர்விடத்தான் செய்தது. ‘ தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற அந்தப் பூரிப்பில் முகம் மலரவும் செய்தது. அதை வெளிப்படுத்தும் விதமாக அழகானதொரு பரிசுப் பொருளும் தேடிப்பிடித்து வாங்கி வைத்திருந்தாள்.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு எப்படியும் நண்பர்கள் அழைப்பார்கள் . அன்று எப்படியாவது மாறனிடம் வெளிப்படையாகப் பேச வேண்டும் எனவும் முடிவெடுத்திருந்தாள்.
மாறன் எப்படியும் வந்து தன்னை அழைத்துப் போவான், அந்த நேரத்தில் மனதில் இருப்பவைகளை பட்டென்று போட்டு உடைத்துவிட வேண்டுமெனவும் முடிவு செய்திருந்தாள். ஆனால் மாறன் தன் பெற்றோரிடம் பேசிக்கொண்டிருந்ததால் நண்பரை அனுப்பி அழைத்து வரச் சொல்லியிருந்தான். சற்று ஏமாற்றமாக இருந்தாலும் , சரி அவன் இருக்கும் இடத்திற்குத்தானே செல்கிறோம் என்ற ஆறுதலும் இல்லாமலில்லை. மூச்சுக்கு முன்னூறு முறை முயற்சி செய்தும் வழக்கம் போல் எடுத்த எடுப்பில் பேசத் தயக்கம் மட்டும் தவிர்க்க முடியவில்லை அவளால். ஓவியங்களில் காதலையும், துயரத்தையும், மகிழ்ச்சியையும் தெளிவாக வெளிப்படுத்த முடிந்த தன்னால், தன் மன ஓவியத்தை வெளிக்கொணர முடியாமல் போனது ஆச்சரியமாகவும் இருந்தது. பெண்மைக்கேயுரிய அந்த நாணம் அவளைத் தடுத்தாலும், இதற்குமேல் மறைத்து வைத்தால், காலம் கடந்த சூழலில் இதற்கான தேவையே இல்லாமலும் போகலாம் என்ற நிலையில் பேச வேண்டிய கட்டாயம் வந்ததையும் உணர்ந்ததால் வந்த வினைதான்……
ரம்யா தான் செய்யப் போகும் காரியம் குறித்து மாறனிடம் ஏதும் பேசவில்லை. அவன் மறுக்கலாம் என்பது ஒரு காரணமாக இருப்பினும், எல்லாம் நல்லபடியாக முடித்து விட்டு ஒரு சர்ப்பிரைஸ் கொடுக்க வேண்டும் என்ற ஆவலும்தான். அவள் எதிர்பார்த்ததை விட காரியங்கள் சரியாக எளிதாக நடந்து
கொண்டிருந்தாலும் மாறனின் தந்தை மட்டும் பிடி கொடுக்காமல் பேசியது சற்று அச்சம் கொடுத்தது. எப்படியும் தன் மகனிடம் இது பற்றி பேசுவார். அப்போது மாறன் தன் நிலை குறித்து அவரிடம் உறுதியாக பேச வேண்டுமே என்ற கவலையும் எழாமல் இல்லை.. அது பற்றி அவன் தந்தை மாறனிடம் பேசுவதற்கு முன்பு தான் பேசிவிட வேண்டும் என்று அவசரமாக அடுத்த நாளே அவனுக்குப் போன் செய்தாள். இதை சற்றும் எதிர்பாராத மாறன் அவன் அப்பா அதை எப்படி எடுத்துக் கொள்வாரோ, அதனால் அவர் உடல் நிலை திரும்பவும் கெட்டு விட்டால் என்ன ஆவது என்ற கவலையும் தொற்றிக் கொண்டதால், பேச நா எழாமல் மௌனம் காத்தான்.
“ மாறன் என்ன ஆச்சு… லைனில் இருக்கிறாயா’? என்றாள் ரம்யா.
“ ஆம் ,ரம்யா. நீ கொஞ்சம் அவசரப்பட்டு விட்டாயோ என்று தோணுதுப்பா….”
“ இல்லப்பா… பூனைக்கு யாராவது மணி கட்டித்தான் ஆகனும் இல்லையா.. உன்கிட்ட நானும் பலமுறை சொல்லிட்டேன். நீ கேட்பதாக இல்லை. அதான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன். அனு நான் எதிர்பார்க்காத அளவிற்கு மிக உயர்ந்த குணம் கொண்டவளாக இருக்கிறாள். ஒரு வகையில் நீ அவளை மிஸ்
பன்னுவதும் தவிர்க்க முடியாததுதான். ஆனா உனக்கு நல்ல ராசிப்பா. இரண்டு பேரில் யார் கிடைத்தாலும் உன் அமைதியான வாழ்க்கைக்கு உத்திரவாதம் உண்டு”
“ சரி… சரி. ஓவரா ஓட்டாதே. அப்பா என்ன முடிவா சொன்னார்?”
“ அதுதான் உன் கையில்தான் இருக்குது. யோசிக்கலாம் என்றார் .. பிடி கொடுக்காமலே. ஆனா, நல்லவேளையா ரொம்ப எமோஷனலா இல்லாம, அமைதியா கேட்டுக்கிட்டார்.. அது வரைக்கும் பரவாயில்லை. கட்டாயம் உன்கிட்ட பேசித்தான் முடிவெடுப்பார். நீ உறுதியா அவர்கிட்ட உன் நிலையை எடுத்துச் சொல்ல வேண்டும். இனி என் கையில் ஏதுமில்லை. நானும், அனுவும் பேச வேண்டியதை பேசி விட்டோம். நீதான் உன் அப்பாவை சம்மதிக்க வைக்க வேண்டும்.”
“ கொஞ்சம் அவசரப்பட்டு விட்டாயோன்னுதான் திரும்பவும் சொல்லத் தோணுது ரம்யா. அவர் கண்டதையும் யோசிச்சு உடம்பைக்
கெடுத்துக்குவாரோன்னு பயமா இருக்குப்பா..”
“ அப்படீல்லாம் ஒன்னும் ஆகாது. நல்லதையே நினைப்போம். பாசிட்டிவ்வா எடுத்துக்கிட்டு அப்பாகிட்ட தெளிவா உறுதியா பேசுப்பா.. எல்லாம் சரியாகிடும். “
மாறன் இனி தானே பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை வந்தது அவளுக்கு. போனை பேசி முடித்த மறு வினாடி அவளுடைய கைபேசி திரும்பவும் சிணுங்கவும் , ‘ரிஷி ஏன் இந்த வேளையில் கூப்பிடுகிறான்’ என்ற யோசனையில் புருவத்தை நெரித்துக் கொண்டே கைபேசியின் பச்சை விளக்கின் மீது மெல்லிய விரல்களால் அணைத்தாள்.
“ ரம்யா.. சாரி…யா.. இந்த நேரத்தில் உன்னை தொந்திரவு செய்வதற்கு. வேறு வழியில்ல. வந்தனாவிற்கு திரும்பவும் உடல் நலம் சரியில்லாமல் போய் விட்டது. இப்போது மருத்துவமனையில் தான் இருக்கிறோம். உன்னைப் பார்க்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறாள். அவளிடம் போனை கொடுக்கிறேன்.
ஒரு வார்த்தை பேசேன் “ என்றான்.
“ ஹலோ, வந்தனா.. எப்படி இருக்கீங்க.. ”
.” ……………….”
“ம்ம்…. ம்ம்.. என்னால் திரும்ப அங்கு வருவது சிரமம் வந்தனா. பர்சனலா கொஞ்சம் வேலை இருக்குங்க. இன்னும் ஒரு வாரத்தில் நான் ஊருக்குக் கிளம்ப
வேண்டுமே..”
“…………..”
“ சரி.. சரி… அமைதியாக இருங்கள். நாளை வருகிறேன். இப்போது ரெஸ்ட் எடுங்கள்”
அடுத்த நாள் ஆட்டோ பிடித்து கேன்சர் மருத்துவமனை நோக்கிச் சென்றாள். ஏனோ உள்ளே செல்லும்போதே மனம் கனப்பதை தவிர்க்க முடியவில்லை. எத்தனை விதமான நோயாளிகள்… ஒரு சிறுவன்.. 10 வயது இருக்கலாமோ.. கண்ணில் புற்று நோயாம். ஒரு கண்ணை எடுத்து விட்டார்களாம். மற்றொரு கண்ணில் ஏற்கனவே கிரிக்கெட் பந்து அடித்து பிரச்சனையாக இருக்கிறதாம். அந்தத் தாய் அடுத்த அறை பெண்மணியிடம் சொல்லி அழுது கொண்டிருப்பதைக் கேட்ட ரம்யாவிற்கு ஈரக்குலையே நடுங்கியது. ஆண்டவனின் இந்த விளையாட்டை எதில் சேர்க்க முடியும்.. எத்தனையோ நாயன்மார்களின், ஆழ்வார்களின் கதை மூலம் ஆண்டவனின் திருவிளையாடல்களையும், இறுதியில் பக்தர்களை ஆண்டவன் ஆட்கொண்டு அருள் புரிவதையும் கேட்டிருக்கிறோம். ஆனால் இந்த வகை திருவிளையாடலை எதில் சேர்க்க முடியும். என்ன விமோசனத்தை எதிர்பார்க்க முடியும்…..
வந்தனாவைப் பார்த்தவுடன், கிழிந்த நாராகக் கிடக்கும் அவள் வதனத்தைப் பார்த்தவுடன் அவளையறியாமல் கண்கள் கலங்கி விட்டன. கீமோதெரபி கொடுத்ததால் அவ்வளவு களைப்பாக இருப்பதாக ரிஷியின் மூலமாக தெரிந்து கொண்டாள். பின், தான் ரம்யாவிடம் தனியாக பேச வேண்டும் என்று வந்தனா கூறியதால், ரிஷி பெரும் சந்தேகத்துடன், நெற்றியை சுருக்கிக் கொண்டு வெளியில் வந்து நின்று கொண்டான். கண்ணாடிக் கதவு வழியாக வந்தனா வாயசைப்பதும், ரம்யா தலையசைப்பதும், அவ்வப்போது வந்தனாவின் தலையை வருடுவதும், அவள் கையைப் பிடிப்பதும், ரம்யா வேகமாக தலையசைப்பதும் , ஏதோ நிழற்படம் போல தெரிந்தாலும், வந்தனா என்னதான் பேசியிருப்பாள் என்று புரியாமல் குழப்பமாக இருந்தது ரிஷிக்கு. ரம்யா எப்படி எடுத்துக் கொள்வாளோ என்ற குழப்பம் வேறு அவனுக்கு.
ஆனால் ரம்யா வெளியே வந்து ஒரு வார்த்தைக்கூட அதைப் பற்றி பேசாமல், வந்தனாவை அருகில் இருந்து ஜாக்கிரதையாக கவனித்துக் கொள்ளுங்கள் என்று மட்டும் சொல்லிவிட்டு கிளம்பி விட்டாள்…..
அன்று முழுவதுமே எந்த வேலையும் ஓடாமல் , மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்ததது. மற்ற கடமைகள் அழைக்க ஒருவாறு சமாளித்துக் கொண்டு அடுத்த வேலையைப் பார்க்கத் தயாரானாள்.
மாறனுக்கு அப்பாவிடம் எப்படிப் பேசுவது என்று ஒரே தயக்கம். ஆனால் இந்த வாய்ப்பை எப்படியும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அவசியமும்
இருந்தது. போனை அம்மா எடுத்தவுடன், ”என்னப்பா மாறா.. இப்படி பன்னிட்டே.. எதுவானாலும் என்கிட்ட மறைக்கலாமா..?” என்றவுடன் சற்று வருத்தமாக இருந்தாலும்,
“ இல்லம்மா…. அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமப் போனதால , அவருக்கு அதிர்ச்சி கொடுக்க வேண்டாமேன்னுதான்… “ என்று மென்று முழுங்கினான்.
சரிம்மா.. அப்பா என்ன சொன்னார். ரம்யா அப்பாவை ஏதும் வருத்தப்பட வைக்கலியே…?
“ இல்லப்பா, அவ பாவம் ரொம்ப பயந்து, பயந்துண்டுதான் பேசினாள். உன் மேல இருக்கற அக்கரையில்தான் பேசறாள்னு தெரிஞ்சதால அப்பாவும் அவகிட்ட கடிந்து ஏதும் பேசவும் இல்ல.. கோவிச்சுக்கவும் இல்ல. ஆனாலும் அவகிட்ட மனம் திறந்து பேச முடியல அவரால. என்கிட்டதான் புலம்பிக்கிட்டே இருக்கார். தேவையில்லாம அனாவசியமா ஒரு நல்ல பெண்ணை ஏன் வேண்டாம்னு சொல்லப் போறேன்னு கேட்கிறார். ?”
“ பின்ன என்னம்மா பிரச்சனை.. ஜாதகத்துல கொஞ்சம் யோக பலன் கம்மியா இருந்தாலும் பரவாயில்லம்மா. நான் நிம்மதியா வாழ முடியும்”
“ அதில்லப்பா…. வந்து…. ”
அனு வருத்தப்படுவான்னு யோசிக்கிறேளா…. நான் வேணுமானா பேசட்டுமா அனுகிட்ட..?”
“ ம்ம்.. அது மட்டும் காரணமில்ல. அப்பா பயப்படுற விசயமே வேற… எனக்கு அது சரியா , தப்பான்னு தெரியல… உங்க அப்பா அளவுக்கு நேக்கு ஜாதகத்துல பழக்கம் இல்லே. ஆனாலும் அவரோட சேர்ந்து கொஞ்சம் ஏதோ சொன்னால் புரியறது.. அதான் பிரச்சனையே…”
“ அப்படி என்னம்மா பிரச்சனை. இன்னும் ஏன் மறைக்கிறேள்.. என்னன்னு சொல்லுங்கோ. நானும்தான் தெரிஞ்சிக்கிறேனே…”
“ அப்படி இல்லப்பா.. நேக்கு தெரிஞ்ச வகையில அந்தப் பொண்ணை நீ கல்யாணம் பண்ணிண்டா நேக்கும், அப்பாவுக்கும் ஆகாதாம். திருமணத்திலேயே பிரச்சனையும் வருமாம். இன்னும் சொல்லப் போனா உன் வெளிநாட்டு வேலைக்குக் கூடப் பிரச்சனை வருமாம்.. அதனால்தான் அப்பா புலம்பிண்டிருக்கார்..”
“ அம்மா நீங்க நம்பறேளா இதெல்லாம்… படிச்சவா கூட இப்படீல்லாம் சொல்லிண்டிருந்தா எப்படீம்மா…?”
“ நோக்கு தெரியாதா.. அப்பாவுக்கு இதில் எவ்வளவு நம்பிக்கையின்னு…. அவர் மனசை மாத்தனும்னுதான் நானும் நினைச்சுண்டிருக்கேன்.. பார்ப்போம். ஆண்டவன் கிருபையால எல்லாம் நன்னா நடக்கும். நீ ஒன்னும் வருத்தப்படாதே… சரியா?”
“ இல்லம்மா… நேக்கும் அப்பா பத்தி தெரியுமோன்னோ.. நானும் அவரை வருத்தப்பட வைக்க வேண்டாமேன்னுதான் இதைப்பத்தி ஏதும் பேசாம இருந்தேன்… ஆனா, ரம்யா எனக்கே தெரியாம அங்கே வந்து எல்லாத்தையும் போட்டு உடைச்சுப்பிட்டா.. அப்பா ரொம்ப கோபப்பட்டாராம்மா..?”
“ அதெல்லாம் ஒன்னுமில்ல… எல்லாம் சரியாயிடும். என்ன நீ முன்னாடியே சொல்லியிருந்தா, அந்தப் பொண்ணு அனு மனசில அத்தனை ஆசையை வளர்த்திருக்க வேனாமில்லையா.. பாவம் அந்தப் பொண்ணு இல்லையா…”
மாறனால் இதற்கு எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. அம்மா சொல்வதும் சரிதானே.. அனுவின் பூப்போல மனசை நோகடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டதே. இது எவ்வளவு பெரிய பாவம்.. குழப்பம் அதிகமானதே தவிர குறையவில்லை. நல்லவேளையாக அப்பா கோவிலுக்குச் சென்றிருக்கிறார். இந்த மன நிலையில் அவருடன் பேச வேண்டாம் என்றே தோன்றியது. எது எப்படி இருந்தாலும் தன் சுய நலத்திற்காக யார் மனதையும் நோகடித்து எந்த முடிவும் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்பதில் மட்டும் தெளிவாக இருந்தான். அம்மாவிடமும் அதையே சொல்லிவிட்டு அப்பாவிடம் பிறகு பேசுவதாகச் சொல்லி தொடர்பைத் துண்டித்தான்.
அப்பப்பா… எப்படி இந்தச் சூழலை எதிர்கொள்ளப் போகிறோம் என்ற குழப்பம் முகத்தில் வெளிப்படையாகத் தெரிந்தது. இன்னும் சற்று நேரத்தில் அவந்திகா வந்து விடுவாள். இயன்றவரை முகத்தில் எதையும் காட்டாமல் இருக்க முயற்சிக்க வேண்டுமே? அகத்தின் அழகு முகத்தில் தெரியாமல் மறைக்க இயலுமா…? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
தொடரும்.

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...