Thursday, November 22, 2012

SAND AND FOAM (Khalil Gibran) - மணலும், நுரையும்! (4)






பவள சங்கரி


செவியொன்றைத் தாரும் எமக்கு, குரலொன்றைத் தருவேன் யான் உமக்கு.
நம் மனம் என்பதோர் நுரைப்பஞ்சு; நம் இருதயமோ ஓர் சிற்றாறு.
நம்மில் பெரும்பாலானோர் ஓடுவதைக் காட்டிலும் உறிஞ்சுவதைத் தேர்ந்தெடுப்பது ஆச்சரியமன்றோ?
நீவிர், பெயர் இடாததோர் வாழ்த்துரைக்காகக்கூட ஏங்கிக் கிடந்த தருணம் மற்றும் காரணம் அறியாமலேயே வருத்தம் கொள்ளும் போதும், உண்மையில், பின்னரும், வளரக்கூடிய அனைத்துப் பொருட்களுடன் நீவிரும் வளர்ந்து கொண்டுதானிருக்கிறீர் மற்றும் உன்னதமான உம் சுயம் நோக்கியும் உயர்ந்து கொண்டுதானிருக்கிறீர் நீவிர்.

Wednesday, November 21, 2012

நம்பிக்கை ஒளி! (7)






பவள சங்கரி

நம்பிக்கை ஒளி! (6)

நம்முள் இருப்பது அனைத்துமே நல்ல குணங்கள், தம்மால் அனைவருக்கும் உதவியே அன்றி உபத்திரவம் இல்லைபோன்ற எண்ணங்களெல்லாம் நம்மையறியாமல் நமக்குள் ஒரு செருக்கை விதைதுவிடுவதோடு அது விரைவாக எதிர்வினையையும் கூட ஏற்படுத்திவிடுகிறது. தான்என்ற அகங்காரம் என்று இதைத்தான் சொல்கிறார்களோ? எது எப்படியோ, மாலதிக்கு எல்லா விசயங்களிலும் தானே முடிவெடுக்கும் வழமை ஊறிவிட்டது. கேள்வி கேட்கும் நிலையில் இருந்த அக்காவும் இன்று இல்லை, சின்னம்மாவிடம் பகிர்தல் மட்டுமே சாத்தியம். பரமு தன்னைவிட இளையவள். இந்த நிலையில் தான் செய்வது சரி என்ற முடிவிற்கு வர தீர யோசித்துத்தான் செயல்படுகிறாள். ஆனாலும் அனுபவம் இல்லாத சில விசயங்களில் என்ன முடிவு எடுப்பது என்று குழப்பமே மிஞ்சுகிறது. உற்ற தோழமையோ, தக்க ஆலோசனை வழங்கக்கூடிய உறவோ இல்லாத வேதனை அப்போதுதான் வெளிச்சம் கொண்டது. தாயையும், தமக்கையையும் நினைத்து மனம் வேதனையடைந்ததுதான் கண்ட பலன்.

Monday, November 19, 2012

பாதையும் பயணமும்! - வெற்றி நடை தீபாவளி மலரில்!




பாதையும் பயணமும்!

விரிநத பாதைகள் இரண்டும்
தெளிவாகத்தான் இருந்தது
தோற்றத்தில்.

ஒரே நேரத்தில் இரு
பயணம்
சாத்தியமில்லை.

உற்று உற்று நோக்கி
விலக்கியது கீழான கணக்கில்.
அடுத்தொன்று சிறந்ததுதானா?

நடையைக் கட்டினேன்
சந்தேகத்துடனே.
சென்ற தொலைவும்
அதிகமில்லை.

உள்ளிருந்து உறுத்திய
சந்தேகமுள் தேர்ந்தெடுத்ததைத்
தவறென்று குத்தியது.

விலக்கிய அடுத்தொன்றை
ஏற்கத் துடித்த மனம்
கடந்து போன காலத்தைக்
காட்டி அச்சமூட்டியது.

தத்தித்தத்தி குழந்தையாய்
நடைபயின்று தளர்வுடன்
வாடி நிற்கும் நேரம்

சாலை இரண்டும் இணையும்
முகட்டில் பூத்துக் குலுங்கும்
பூவின் மணம்

அலைபாய்ந்த மனமும்
கடந்து வந்த பாதையை
விலக்கி மற்றொன்றை
நோக்கி நகர்ந்தது.

தொலைத்த காலத்தினூடே
வழியே வழியை உணர்த்த
மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை.

போதியாய் புரிய வைத்தது...
தவற விட்டது பாதையை
அல்லவென்று!


நன்றி : வெற்றி நடை இதழ்


Sunday, November 18, 2012

சொர்க்க வாசல்! - இன் & அவுட் சென்னை இதழில்




சுவர்க்க வாசல்!

அகக் கண்கள் திறந்து
காட்சிகள் விரிகின்றன.
அழகான நீர் நிலையைக் காண்கிறேன்!
இரு புறமும் கொத்துக் கொத்தாக
மலர்கள் தாங்கிய குறுஞ்செடிகள்.

நீலமேகக் கூரையில்
வெண்பஞ்சுப் பொதிகள்
வெளிர்நீல மலைக் குன்றுகளில்
பனிபடர்ந்த மரக் கன்றுகள்!

அந்தி மயங்கும் நேரம்
கூட்டில் அடையப் போகும்
புள்ளினங்களின் கீச்சுக் கீச்சு கீதம்
மனம் அமைதியில் திளைத்த இன்பம்

அந்த ஓடைக்கரையிலொரு குச்சு வீடு
சின்ன அறையில் நிறைமனதுடன் நான்!
குச்சு வீட்டின் கொல்லைப்புறத்து
பசுமையான வயல் வெளி
நாணம். கொண்ட பயிர்களின் மோனம்

கரையோரத்து மலர்களின் நறுமணம்
குடில்........அழகான குடில்
எளிமையான மனிதரும்
அழகான புள்ளினங்களும்
பகிர்ந்து வாழும் அழகிய குடில்

குடிலின் அருகில் என் சொந்தங்கள் இல்லை
என் சாதி இல்லை - என் மதம் இல்லை
என் இனம் கூட இல்லை
 பெயர் மட்டுமே அடையாளமாக
 அன்பு மட்டுமே ஆதாரமாக

இயற்கையின் இனிமையைக்
கொண்டாடும் இனமாக
அந்த அழகைப் பகிர்ந்து
பருகும் இனமாக
திறந்த இதயத்துடன், பரந்த
மனதுடன் வாழும் இனம்
அங்கு என் அமைதியான
ஆனந்தமான வாழ்க்கை!



நன்றி - இன் & அவுட் சென்னை இதழுக்கு.

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...