Sunday, November 18, 2012

சொர்க்க வாசல்! - இன் & அவுட் சென்னை இதழில்




சுவர்க்க வாசல்!

அகக் கண்கள் திறந்து
காட்சிகள் விரிகின்றன.
அழகான நீர் நிலையைக் காண்கிறேன்!
இரு புறமும் கொத்துக் கொத்தாக
மலர்கள் தாங்கிய குறுஞ்செடிகள்.

நீலமேகக் கூரையில்
வெண்பஞ்சுப் பொதிகள்
வெளிர்நீல மலைக் குன்றுகளில்
பனிபடர்ந்த மரக் கன்றுகள்!

அந்தி மயங்கும் நேரம்
கூட்டில் அடையப் போகும்
புள்ளினங்களின் கீச்சுக் கீச்சு கீதம்
மனம் அமைதியில் திளைத்த இன்பம்

அந்த ஓடைக்கரையிலொரு குச்சு வீடு
சின்ன அறையில் நிறைமனதுடன் நான்!
குச்சு வீட்டின் கொல்லைப்புறத்து
பசுமையான வயல் வெளி
நாணம். கொண்ட பயிர்களின் மோனம்

கரையோரத்து மலர்களின் நறுமணம்
குடில்........அழகான குடில்
எளிமையான மனிதரும்
அழகான புள்ளினங்களும்
பகிர்ந்து வாழும் அழகிய குடில்

குடிலின் அருகில் என் சொந்தங்கள் இல்லை
என் சாதி இல்லை - என் மதம் இல்லை
என் இனம் கூட இல்லை
 பெயர் மட்டுமே அடையாளமாக
 அன்பு மட்டுமே ஆதாரமாக

இயற்கையின் இனிமையைக்
கொண்டாடும் இனமாக
அந்த அழகைப் பகிர்ந்து
பருகும் இனமாக
திறந்த இதயத்துடன், பரந்த
மனதுடன் வாழும் இனம்
அங்கு என் அமைதியான
ஆனந்தமான வாழ்க்கை!



நன்றி - இன் & அவுட் சென்னை இதழுக்கு.

2 comments:

  1. வாழ்த்துக்கள் . அருமையான கவிதை .

    ReplyDelete
  2. மிக்க நன்றி பனித்துளி சங்கர்.

    ReplyDelete