துர்காபாய் ஒரு பெண்ணல்ல்
அவர் ஒரு மனித டைனமோ (மின்னோட்டம் உண்டாக்கும் பொறி)
(சரோஜினி நாயுடு)
”இரும்புப் பெண்” என்று அனைவராலும் பாராட்டப்பெற்ற துர்காபாய் தேஷ்முக், மிக வித்தியாசமான, துணிச்சலான சுதந்திரப் போராட்ட வீராங்கனை மட்டுமல்லாது, தன்னலமற்ற ஒரு சிறந்த சமூகசேவகி, மிக வித்தியாசமான பெண்ணியவாதி.
அரசியலமைப்பு மன்றம் மற்றும் தற்காலிக பாராளுமன்றத்தில், 750 திருத்தங்களுக்கு குறைவிலாமல் கொண்டுவந்தவர். கோடிக்கணக்கான நிதியை மூலதனமாகக் கொண்டு ஆறு பெரிய கல்வி நிறுவனங்களை உருவாக்கி நடத்தி வந்தவர். பயிற்சி பெற்ற சரியாக நிர்வகிக்கப்படும் ஊழியர்கள் மூலமாக பல சமுதாய மாற்றங்கள் கொண்டுவர முடியும் என்ற கனவும் உடையவர். தம்முடைய சுதந்திர தாகத்தின் விளைவாக இளம் வயதிலேயே சிறைக்கம்பிகளைக் கண்டவர். ஒடுக்கப்பட்ட மற்றும், ஒதுக்கித்தள்ளப்பட்ட பெரும்பான்மையான மகளிருக்காகப் போராடியவர். அவருடைய வாழ்க்கை இலக்குகள் நிறைந்ததாகவும், சாதனைக்ளை ஊக்குவிக்கின்ற சம்பவங்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது.
ஜூலைத்திங்கள் 15ம் நாள், 1909ம் ஆண்டு, ஆந்திரப் பிரதேசம், இராஜமுந்திரியில், காக்கிநாடாவின் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். தம்முடைய எட்டாவது வயதிலேயே, ஒரு வசதியான ஜமீந்தார் குடும்ப தத்துப் புத்திரனுக்கு பால்ய விவாகம் செய்து வைக்கப்பட்டார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு , அவர் பருவமடைந்த போதுதான் திருமணம் என்பதற்கான அர்த்தம் புரிந்தது. அதில் விருப்பமில்லாதலால் அந்த திருமண பந்தத்தை முறித்துக் கொண்டு பொது வாழ்க்கையில் ஈடுபட முடிவெடுத்தார். சுப்பாராவ் என்ற தன்னுடைய இளம் கணவரிடமும் தன் மனநிலையைச் சொல்லி புரியவைக்க முடிந்தது அவரால். சுப்பாராவும் அதனை ஏற்றுக் கொண்டு கொஞ்ச காலம் கழித்து ஒரு வழக்கறிஞரின் மகளை திருமணம் செய்து கொண்டார். 30 ஆண்டுகள் அவரோடு வாழ்ந்த பின்பு தம்முடைய மனைவியின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையாக துர்காபாயை நினைத்தார் என்பது ஆச்சரியமான விசயம்.