Thursday, July 28, 2011
சூர்யோதயம்!
ஒளி பிறந்தது
மலர் மலர்ந்தது
இருள் மறைந்தது!
அறிவெனும் சுடராய் ஒளிர்வாய் - ஆதவனாய்!
பயிரெனப் பணிவாய் நிறைவினால் - சூரியனாய்!
நிதியென நிறைந்திருப்பாய் உளந்தனில் - ஸ்ரீமானாய்!
கருவாய் என்னுள் மலர்வாய் - கிரிகேஸ்வரனே!!
இணைவாய் எனதாருயினினில் - ஞாயிரோனே!!
கணைவாய் கருமை இருளை - கதிரோனே!
எழுவாய் கடல் மீதினிலே - பாஸ்கரனே!
தொழுவாய் மனமே உதயத்தினிலே - விகாதனனே!
இதயத் தாமரையாய் மலர்வாய் - மார்த்தாண்டனே!
துணையாய் நிற்பாய் துதிப்போருக்கு - திரிலோகனே!
பார்க்கும் திசையெல்லாம் பரிமளிப்பாய் - பிரம்மனே!
குன்றினிருந்தும் கிரணமாய் ஒளிர்வாய் - லோகப்பிரகாசனே!
வெண்ணிலவில் ஒரு கருமுகில் (19)
ஞாயிற்றுக் கிழமை என்றாலே காலைக்கதிரவனின் மெல்லிய வெப்பக் கிரணங்கள் மேனியைத் தழுவத் துவங்கும் நொடி வரை சுகமான நித்திரை கொண்டு நிதானமாகக் குளித்து,பொறுமையாக அம்மா கையால் ஆன உணவமுதுடனும், மறு கையில் பாரதியின் கவியமுதுடனும் அன்றைய பொழுதைத் தொடங்குவதில் பேரானந்தம் அனுவிற்கு.மாலையில் சென்று மாமாவைப் பார்த்து வர வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தாள். அப்பா கணிணியில் முகம் புதைத்திருக்க அம்மா சமயலைறையில் பணி மும்முரத்தில் இருக்க,தொலைபேசியின் தொல்லை ஆரம்பமானது….
தேடிச் சோறு நிதந்தின்று-பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம்வாடித் துன்பம் மிக உழன்று
பிறர்வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக் கிரையென மாயும்-
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?
பாரதியின் கவிதை வரிகளை பல முறை வாசித்திருந்த போதினும் அதன் தாக்கம் உயிரின் ஊடே நுழைந்து மெய் சிலிர்க்கச் செய்ய, தொலைபேசியின் நாதம் கூட நாராசமாய் ஒலிக்க அதனை நிறுத்தும் பொருட்டு மெதுவே எழுந்து செல்ல முயன்றாள். அதற்குள் அம்மா சமயலறையிலிருந்தும், அப்பா தன் சயன அறையிலிருந்தும் வெளிவர மூவரும் தொலைபேசியை நோக்கி கரம் நீட்ட, அது என்னவோ தேர்ந்தெடுத்தது அப்பாவின் கைகளைத்தான். அப்பா ரிசீவரை எடுத்து ஹலோ என்று சொல்லும் போது இருந்த முகத் தோற்றம் முற்றிலும் மாறுபட்டிருந்தது அடுத்த நொடி.
“என்ன….மைதிலி, என்னம்மா… என்ன சொல்கிறாய். கொஞ்சம் தெளிவாகப் பேசக் கூடாதா? நீ சொல்வது ஒன்றுமே விளங்கவில்லையே?”
மறு முனையில் மைதிலி அத்தை, அப்பாவின் ஒரே உடன்பிறப்பு. இருவரும் மிக பாசமுள்ள அண்ணன், தங்கை. அத்தை தன்னிடமும் வெளிப்படையாக, ஒரு நல்ல நண்பரைப் போல பல விசயங்கள் பகிர்ந்து கொள்ளக் கூடியவர்.சின்ன விசயங்களுக்கெல்லாம் அதிகமாக உணர்ச்சிவசப்படக் கூடியவர்.என்ன பேசினாரோ தெரியவில்லையே, தந்தை இவ்வளவு பரபரப்பாகும் அளவிற்கு என்று எண்ணத் தொடங்கிய போது
“ஏன் மைதிலி இப்படி எல்லாம் உளறிக் கொண்டிருக்கிறாய்.என்ன ஆச்சு உனக்கு? மாப்பிள்ளையிடம் கொடு, நான் பேசிக் கொள்கிறேன்”
அதற்கு மேல் மறுமுனையில் அத்தை என்ன பேசினாரோ தெரியவில்லை அப்பா தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டு அம்மாவையும், என்னையும் கிளம்பச் சொல்லிவிட்டு தான் பரபரப்பாக கிளம்பத் தயாரானார். அம்மாவும் என்ன ஏது என்று கேட்டாலும் அப்பா சொல்லும் மன நிலையில் இல்லாதது தெரிந்து, சமயலறையில் சென்று அப்படியே அடுப்பை நிறுத்தி விட்டு கிளம்பத் தயாரானார். ஏதோ நடக்கக் கூடாதது நடந்து விட்டது என்பது மட்டும் இருவருக்கும் புரிந்த நிலையில், வழியில் சென்று மீதி விசயங்களைப் பேசிக் கொள்ளலாம் என்ற நினைப்பில் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். காரணம் அத்தையைப் பற்றி அனுவிற்கு நன்றாகவேத் தெரியும். மிகவும் பிடிவாதம் பிடித்தவர். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று பிடிவாதமாக நிற்கக் கூடியவர். அத்தை வீடு இருக்கும் தாம்பரம் செல்வதற்கு எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும் என்பதாலும் நேரத்தைக் கடத்துவதில் பயனில்லை என்பதை உணர்ந்து இருவரும் கிளம்பி வெளியில் வந்து நின்று கொண்டனர். அனுவின் அப்பாவும் அதற்குள் கிளம்பி சிற்றுந்தை எடுத்துக் கொண்டுவந்து வாசலில் நிறுத்திய நிமிடத்தில் இருவரும் ஏறி அமர்ந்தனர்.
அத்தைக்கு திருமணம் ஆகி பத்தாண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. அதனாலேயே சில பிரச்சனைகள் அவ்வப்போது எழும். மற்றபடி அத்தையும் எம்பிஏ படித்து ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணிபுரிபவர். பணியில் புலி என்பதால் அலுவலகத்தில் மிக நல்ல பெயர் அவருக்கு. அதனாலேயே பொறாமை பிடித்தவர்களால் மிகுந்த எதிர்ப்பையும் சம்பாதித்து வைத்திருந்தார். காலம் எவ்வளவுதான் மாறி இருந்தாலும் ஒரு பெண் முன்னேறுவதை சில ஆண்களால் செரிமானம் செய்து கொள்ள முடிவதில்லை என்பதுதான் நிதர்சனம். தங்களை முற்போக்கு எண்ணம் கொண்டவர்களாகக் காட்டிக் கொள்ளும் பல ஆண்களுக்கும் இது போன்று கீழ்த்தரமான எண்ணங்கள் இருப்பதை வெகு நாட்கள் மறைக்க முடியாமல் வெளிப்படுத்தி விடுவார்கள். இது போன்று பல வீணர்களை தம் பாதையிலிருந்து எளிதாக வில்க்கக் கற்றவள் அனு. ஆனால் அத்தையிடமும் அந்தப் பொறுமையை எதிர்பார்க்க முடியவில்லை. ஒரு சில நாட்கள் முன்பு தன்னைச் சந்தித்த போது கூட தன் அலுவலகத்தில் தன்னை எரிச்சலூட்டும் ஒரு சிலர் பற்றி மிக வருத்தமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.
அம்மா, அப்பா சற்று சாந்தமானவுடன் தானே சொல்லுவார் என்று அவர் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்து பொறுமையிழந்து காரணம் கேட்க நினைத்து வாய் திறப்பதற்குள் மிக வேகமாக வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவர் மெதுவாக மைதிலி ஏனோ மிக மனம் நொந்து பேசுகிறாள். இறுதியாக என்னைப் பார்க்க வேண்டுமென்று வேறு கூறுகிறாள். என்ன காரணம் என்றே புரியவில்லை.அதற்கு மேல் கம்மிய குரலுடன் அவரால் தொடர முடியவில்லை. அம்மாவும் ஆழ்ந்த யோசனையில் அமைதியானார்கள்.
அனுவின் மனதில் மட்டும் அத்தையைப் பற்றிய எண்ணங்கள் நிழற்படமாக ஓடியது.அப்பாவிற்கும் அத்தைக்கும் நிறைய வயது வித்தியாசம் என்பதால் அத்தை அப்பாவிற்கு நிறைய செல்லம் கொடுப்பார். சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்து, தன் அண்ணன் மட்டுமே அனைத்துமாய் வாழ ஆரம்பித்ததால் தாய்க்குத் தாயாக, தந்தைக்குத் தந்தையாக இருந்து வளர்த்தார்.வெகு எளிதில் திருமணத்திற்குக் கூட ஒப்புக் கொள்ளவில்லை. சகோதரனின் கட்டாயத்தின் பேரில் மிகத் தாமதமாகவே திருமணத்திற்கு சம்மதித்தார்.அன்பின் மொத்த உருவமான கணவன், தாயாகவே ஒரு மாமியார் என கற்பனைக்கெட்டாத நல்லதொரு குடும்பம் வாய்த்த போதும், எத்தனையோ வைத்தியம் பார்த்தும் ஒரு குழந்தை இல்லையே என்ற ஏக்கம் அதிகம் இருந்தாலும், மாமியாரோ, கணவனோ இன்று வரை எள்ளளவும் கடிந்து கொண்டதில்லை. ஆனாலும் சமீபக் காலங்களில் அத்தையின் போக்கில் நிறைய மாற்றங்கள்.எதிலும் அதிக ஈடுபாடு இல்லாமல், சோர்ந்தே காணப்பட்டது அனுவிற்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. அவரிடம் ஒரு நாள் இது குறித்து வெளிப்படையாகவே கேட்டு விட்டாள்.
இதற்குள் அப்பாவின் மனது என்ன பாடு படும் என்பதையும் அவளால் உணர முடிந்தது. அத்தையின் வீட்டை நெருங்கும் போதே ஒரே படபடப்பாகத்தான் இருந்தது அனைவருக்கும். கடவுளே ஏதும் கூட்டமாக இருக்கக் கூடாதே என்று ஆண்டவனை வேண்டிக் கொள்ளவும் செய்தது. நல்ல வேளையாக கூட்டம் ஏதும் இல்லையாதலால் ஒரு சிறு நிம்மதிப் பெருமூச்சு வெளி வந்தது அனைவரிடமிருந்தும்.
ஆனால் தாழிடப்படாமல் இருந்த கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றபோது, வீடே நிசப்தமாக இருந்தது ஒருவித பயத்தை ஏற்படுத்தியது. வீட்டில் ஒருவரையும் காணவில்லை. கடைசி அறையில் துவண்ட நிலையில், கிழிந்த நாராய் கட்டிலில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்……. அத்தையின் கணவரும் மற்றும் மாமியாரும் வீட்டில் காணவில்லை.பதில் சொல்லும் நிலையிலும் அத்தை இல்லை.அடுத்த சில மணி நேரங்கள் மிகக் கடுமையான காலகட்டமாகத்தான் இருந்தது அவர்களுக்கு.அத்தையை காரில் அள்ளிப் போட்டுக் கொண்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துவிட்டு காத்துக் கொண்டிருந்த இக்கட்டான தருணங்கள்…….
தொடரும்.
Subscribe to:
Posts (Atom)
கழுகும் – சிறுமியும்
கழுகும் – சிறுமியும் அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...
-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
பவள சங்கரி h ttps://www.youtube.com/watch?v=AXVK2I37qbs சமுதாயத்தில் பல புரட்சிகளை ஏற்படுத்திய, சிவவாக்கியர், ‘புரட்சிச் சி...