Friday, February 20, 2015

வரம் வேண்டும்!


பவள சங்கரி



வரம்வேண்டும் பராசக்தி நீவரவேண்டும்
மனம்வேண்டும் நதிபோலோடவே நாளும்
பகடையாயுருட்டும் விதியின் ஆட்டமும்
சிதறும் சிந்தையாவும் சீர்பெறவேண்டும்
கபடமில்லா உடுக்கையாய் நேயம்வேண்டும்
தீதறியாதோர் திண்ணம் தீயாயொளிரும்
திட்பமும் மனம்நோகாமல் விலகவேண்டும்
நன்னெறியால் நயந்தநேசம் கூடவேண்டும்
தன்னைத்தானுணரும் தவம் சித்திக்கவேண்டும்
மண்ணைப் பொன்னாய் தரிசிக்கும் சித்தமும்
நீயருளல் வேண்டும்! பண்ணில் இசையாய்
விண்ணில் மேகமாய் பொழியும் பராசக்தியே
கண்ணில் காவியமாய் உதிக்கும் நாயகியே
உன்னில் என்னைக்காணும் வரமளித்தருள்வாயே!

Wednesday, February 18, 2015

சுட்டும் விழிச்சுடர்! - தாய்மையைக் கொண்டாடுவோம்!


பவள சங்கரி

தாய்மையைக் கொண்டாடுவோம்!
தாய்மை என்பது ஒரு பெண்ணிற்கு வரம். ஒரு பெண்ணின் வாழ்க்கை பூரணத்துவம் பெறுவதே அவளுடைய தாய்மைக்குப் பிறகுதான். இன்றைய சூழலில் பெண்களுக்கு தாய்மைப் பேறு கிடைப்பதில் பல இடர்பாடுகள் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்களும் இருக்கின்றன. குழந்தை உருவானவுடன் அது நல்லபடியாகப் பிறக்க வேண்டுமே என்ற கவலை ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கத்தான் செய்கிறது. முதல் மூன்று மாதக் காலங்களிலிருந்தே தாயின் எண்ணங்கள் குழந்தைக்கும் செல்கிறது. தாய்மைக் காலத்தில் தாய் மன அழுத்தத்தில் இருந்தால் பிறக்கும் குழந்தைக்கும் அதன் பாதிப்பு இருக்கலாம் என்கிறது ஆய்வுகள். குழந்தை உருவானவுடன் தாய், தந்தை, குழந்தை என அம்மூவருக்குமான தொடர்பு ஏற்படுவதை நம்மால் மனப்பூர்வமாக உணர முடியும்.
சமீபத்திய ஆய்வுகள், மகப்பேறு காலங்களில் பெண்களுக்கு மன அழுத்தம் காரணமாக பாதிப்புகள் ஏற்படுவதாகத் தெரிவிக்கின்றன. ஏழு நாடுகளில், பத்தொன்பது மையங்களில், ஆய்வு செய்ததில் 8,200 க்கும் அதிகமான பெண்கள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதை வெளிப்படுத்தியுள்ளனர். மன அழுத்தத்தினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பிரசவ நேரத்தில், முன்சூல் வலிப்பு, கர்ப்பகால நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வரலாம் என்கின்றனர். 10 முதல் 20 சதவிகித தாய்மார்கள், மன அழுத்தம், பதட்டம், இறுமுனை கோளாறு ஆகியவைகள் பிரசவ காலத்திலும்,அதன் பிறகு ஓராண்டிற்கும், பலவிதமான பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறார்கள். ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் சரிவும் இதற்குக் காரணமாகலாம் என்கின்றனர் வல்லுநர்கள். பிறக்கப்போகும் குழந்தையையும் பாதிக்கும் இந்த நோய்க்கான காரணமும் அதன் தீர்வும் குறித்து சிந்திக்க வேண்டிய காலகட்டம் இது.

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...