Friday, August 12, 2011

வெண்ணிலவில் ஒரு கருமுகில் (20)




பவள சங்கரி

பொதுவாக பெரும்பாலான பெண்கள், தங்கள் சூழ் நிலையைக் கருத்தில் கொண்டு உள்ளத்தில் எண்ணுவதையெல்லாம் குறிப்பாக தனக்கு ஏற்படும் பிரச்சனைகளைக் கூட வெளிப்படையாகச் சொல்லத் தயங்குவது இயற்கை.அதுவே பல நேரங்களில் அப் பிரச்சனையை உருவாக்குபவர்களுக்கு சாதகமாகிப் போவதும் உண்டு. அவர்களுடைய முகத்திரை கிழிக்கப் படாமல் காக்கப் பட்டும் விடுகிறது. 21ம் நூற்றாண்டில் எண்ணற்ற சாதனைகள் பல புரிந்து கொண்டிருந்தாலும், அடிப்படையில் உள்ள அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற அந்த நால்வகை குணமும் அவளுக்குள் ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் வெளிப்பட்டு காட்டிக் கொடுத்து விடுவதும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. சக மனிதர்களின் பொய் முகங்களைக் கண்டு ஏமாற்றம் கொள்வதோடு அதனால் மனதளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொள்வதோடு தன்னைச் சார்ந்தவர்களுக்கும் சங்கடங்களை ஏற்படுத்துவதும் இயல்பாகிப் போகிறது. அறிவுப் பூர்வமாக எதிர்த்து நிற்கத் துணிந்த பேதைகள் கூட சில நேரங்களில் உணர்வுப் பூர்வமான தாக்குதலில் துவண்டு போய் எளிதாக தோற்றும் விடுகிறார்கள் என்பதும் நிதர்சனம். இந்தப் போக்கு மாறுவதற்கு இன்னுமொரு நூற்றாண்டு ஆகும் போலும்.!

அனுவின் அத்தை அகிலாவிற்கு இதே பிரச்சனைதான். பணி என்று வந்து விட்டால் நேரம் காலம் இல்லாமல் தன் எல்லையைத் தொடும் வரை தன்னிலை மறந்து உழைப்பவள். பாவம் அந்த உழைப்பே அகிலாவிற்கு பல எதிர்ப்புகளை சம்பாதித்து வைத்து விட்டது. பணியில் அவளை போட்டி போட்டு வெல்ல முடியாத கோழைகள் மறை முகமாக உணர்வுப் பூர்வமாக தாக்க முற்பட்டதன் விளைவே இன்று அகிலாவின் உயிர்ப் போராட்டத்தின் எல்லை வரை கொண்டு வந்து விட்டிருக்கிறது. கணவனும், மாமியாரும் உறவினர் வீட்டு விசேசத்திற்கு வெளியூர் சென்றிருக்கும் வேளையில் இப்படி ஒரு தற்கொலை முயற்சி எடுக்கும் அளவிற்கு செல்லத் தூண்டியிருக்கிறது.

அனு, அகிலா அத்தையை எப்போதும் ஒரு நல்ல தோழியாகவே எண்ணி அவளிடம் தன் கல்லூரி கலாட்டாவிலிருந்து, தனக்கு வரும் காதல் கடிதங்கள் வரை அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் வழக்கம் கொண்டிருந்தாள். ஞாயிற்றுக் கிழமை என்றாலே தன் அண்ணனின் வீட்டிற்கு செல்வதற்கும் அனுவைச் சந்திக்கப் போகும் உற்சாகத்திலும் பரபரப்பாகி விடுவாள் அகிலா. ஆனால் ஒரு சில வாரங்களாக சரியாக அண்ணன் வீட்டிற்குக் கூட வரவில்லை. பல காரணங்கள் சொல்லி மழுப்பி விட்டாள். அனுவும் மாமாவின் உடல் நிலை கருதி அங்கு அடிக்கடி செல்ல வேண்டிய தேவை ஏற்படவும் அகிலா அத்தையைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் விட்டிருக்கிறாள்.

பழமை மற்றும் நாகரீகத்திற்கும் இடையே இருக்கும் அந்த மெல்லிய கோடு படுத்தும் பாடுதான் இது போன்ற சம்பவங்கள். இரண்டையும் கட்டிக் கொண்டு அழும், முன்னேறத் துடிக்கும் ஒவ்வொரு பெண்ணின் இன்றைய நிலையாகவே இது இருக்கிறது. மனம் விட்டு வெளியில் பேசக் கூடத் தயங்கும் சூழ்நிலை ஏற்படுத்தி விடுகிறது. . இந்த போக்கு மாறிக் கொண்டிருக்கிற கால கட்டம் என்றாலும், பணிக்குச் சென்று, தன் நேர்மையான உழைப்பின் மூலம் முன்னேறத் துடிக்கும் பல பெண்களின் வாழ்வில் கூட இப்படி சில சம்பவங்கள் நடந்து கொண்டுதானிருக்கிறது. சட்டம் மூலம் எத்தனை தான் பாதுகாப்பு கொடுத்தாலும் பெண்களாகப் பார்த்து துணிச்சலையும், அத்தகைய புல்லுறுவிகளை எதிர்த்துப் போராடும் தைரியத்தையும் வளர்த்துக் கொள்வது மட்டுமே இதற்கான சரியான தீர்வாக இருக்க முடியும் என்று பல முறை அனுவும், அகிலாவும் வாதிட்டிருக்கிறார்கள். இருந்தும் அகிலாவால், பிரச்சனை என்று வந்திருக்கும் வேளையில் எதிர் கொள்ள முடியாமல் தவித்து கோழைத்தனமான முடிவு எடுக்கும்படி ஆனது வருத்தத்திற்குரிய விசயமகும்

அனு மெதுவாக தன் தந்தையின் அருகில் சென்று அமர்ந்து அவர் கைகளை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டு, ஆதரவாக அவர் முகத்தை உற்று நோக்கியவள், அவருடைய சோகமான முகத்தைப் பார்த்து மேலும் சங்கடம் அதிகமாக,

“ அப்பா, கவலைப் படாதீர்கள். அத்தை கட்டாயம் நல்லபடியாக குணம் அடைந்து வந்து விடுவார்” என்றாள்.

ஆனாலும் அகிலா ஏன் இப்படி செய்தாள், அவளுக்கு என்னதான் அப்படி ஒரு பிரச்சனை என்று அவர் பெரும் குழப்பத்தில் இருப்பது தெரிந்தாலும் மருத்துவரை எதிர்பார்த்து அவர் என்னதான் சொல்லப் போகிறார் என்று பரபரப்பாக உட்கார்ந்திருந்தார்..

சற்று நேரத்தில் மருத்துவர் வந்து அகிலா அபாயக் கட்டத்தை தாண்டி விட்டதாகக் கூறிய பின்பு தான் அண்ணனின் முகத்தில் ஒளியே வந்தது……மூச்சை பலமாக இழுத்து ஆழ்ந்த நீண்ட பெரு மூச்சாக வெளி விட்டு, ஓரளவிற்கு தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டவர், அன்புத் தங்கையைக் காண அருகில் சென்று ஒரு தாயாய் தலையை வருடிக் கொடுத்தார். ஏனோ முதன் முறையாக தன்னுடைய வளர்ப்பில் ஏதும் குறைபாடு இருக்குமோ என்ற வருத்தம் தோன்ற ஆரம்பித்தது. பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக , தைரியம், நம்பிக்கை அனைத்தையும் ஊட்டியே வளர்த்தார் தன் தங்கையையும், மகளையும் இரு கண்களாக.

ஒரு பெண் உயர் பதவிக்கோ, அல்லது இரவு பகலாக உழைத்து உத்தம நிலைக்கு வந்தாலும் ஊர் அதை ஒப்புக் கொள்வதில்லை. இது இன்று நேற்று அல்ல, பல்லாண்டுக் காலங்களாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. 1900 ங்களிலேயே, மேரி கியூரி அம்மையார் இரவு பகலாக உழைத்து, புற்று நோய் சிகிச்சைக்குப் பயன்படும் , ரேடியம் வெளிப்படுத்தும் காமா கதிர்கள் பற்றிய அரிய கண்டு பிடிப்புக்காக நோபல் பரிசு பெற்ற போது கூட ஊர் மக்கள், அவர் கணவர் சொல்லிக் கொடுத்து தான், இவர் நோபல் பரிசு வாங்கினார் என்று சொன்னார்களாம். இருந்தும் மறுபடியும் ஆய்வுப் பணியில் ஈடுபட்டு பொலேனியம், ரேடியம் என்ற கதிர் இயக்கம் கொண்ட இரண்டு புதிய பொருட்களை க்ண்டுபிடித்து திரும்பவும் இரண்டாவது முறையாக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்று தன்னை நிரூபித்தார். இந்த சம்பவத்தை அண்ணன் பல முறை சொல்லக் கேட்டவள். இருப்பினும் தேவையான நேரத்தில் அது கை கொடுக்காமல் போனது வேதனைக்குரிய விசயமானாலும், ஆண்டவன் அருளால் மறு பிறவி எடுத்து வந்தது ஆறுதலாக இருந்தது. அனு போல யதார்த்தமாகவும், தெளிவான முடிவெடுக்கக் கூடிய துணிச்சலான குணமும் சற்று குறைவு தான் அகிலாவிடம்.அதனாலேயே, இப்படி ஒரு கோழைத்தனமான முடிவு எடுக்கச் செய்தது அவளை.

கல்லும், முள்ளும் நிறைந்த கரடு முடனான வாழ்க்கைப் பாதையில் பாதம் நோகாமல், மெல்லடி வைத்து கடக்கத் தெரிந்தாலே பரந்த வான் வெளியில் வெற்றிக் கனியை எட்டிப் பிடிக்க முடியும். அதைத் தக்க வைத்துக் கொள்ளும் திறனும் கை வந்த கலையானால், பின் எந்தவொரு தடைக் கல்லையும் எளிதாக நெட்டித் தள்ளும் பக்குவமும் தானே வந்து விடுமே…… இதை பால பாடமாகவே ஊட்டி வளர்த்தும் தங்கை இப்படி ஒரு காரியம் செய்து விட்டாளே என்ற அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாமல் தான் இருந்தார் அந்த அன்பு அண்ணன். அனு மட்டும் அத்தை நலமானால் போதும், எப்படியும் அவர் மனதை தன்னால் தேற்ற முடியும் என்ற நம்பிக்கையுடன் தெளிவாக இருந்தாள். மடியில் கனம் இல்லாத வரையில் வழியில் பயம் இலையே!

ரம்யா ஊருக்குக் கிளம்ப தயாராக வேண்டிய தருணம் வந்ததால், அவள் தன்னுடைய பணிகளுக்கிடையேயும் அவந்திகாவின் ஓவியக் கண்காட்சி பங்கேற்பு குறித்த வேலைகளில் தன்னால் முடிந்த வரை உதவிக் கொண்டிருந்தாள். அவ்வப்போது மாறன் உடன் வந்து கலந்து கொண்டாலும், ஏனோ அவன் முகத்தில் இருந்த இருக்கம் அவந்திகாவிற்கு லேசான உறுத்தலை ஏற்படுத்தியது.இது பற்றி ரம்யாவிடம் பேச எண்ணினாலும் ஏதோ தயக்கம் தன்னை தடுப்பதையும் உணர முடிந்தது அவளால். ஓவியக் கண்காட்சி பங்கேற்பின் பணிகள் அழுத்தத்தினால் மேற் கொண்டு சிந்திக்க நேரமின்றி தள்ளிப் போட்டு வைத்தாள்.

அவந்திகாவின் ஓவியங்களின் ஒவ்வொரு அங்கமும், சிந்திக்கக் கூடிய வகையில் அமைந்திருந்தது ரம்யாவிற்கும், மாறனுக்கும் ஆச்சரியம் ஏற்படுத்தியது. எத்துனை திறமைகள் என்று மலைப்பாக இருந்தது. சங்க கால கோவலன் நாயகி கண்ணகியின் பாண்டிய மன்னனின் சபையின் வீராவேசக் கோலத்தின் வண்ண ஓவியம் முதல் தற்கால அமைதியின் மறு உருவான அன்னை தெரசா வரை உயிருள்ள ஓவியங்கள் அவள் கை வண்ணத்தை பிரதிபலித்தது. அது மட்டுமன்றி நற் சிந்தைகளை ஊக்கு விக்கக் கூடியதும், குழந்தை தொழிலாளர்கள் போன்ற ஒழிக்கப்பட வேண்டிய அவலங்கள் குறித்த ஓவியங்கள் மற்றும் நம் இந்திய மக்களின் வாழ்க்கையின் அடித் தளமான கூட்டுக் குடும்பப் பிணைப்பு இப்படி பல கோணங்களிலான ஓவியங்கள் பல்லோரைக் கவர்ந்தது. அவந்திகாவிற்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டு மழை குவியத் துவங்கிய போதும், மாறனிடமிருந்து பெரிதாக பாராட்டு ஏதுமில்லா விட்டாலும், குறைந்த பட்சம் ஒரு சிறிய புன்னகையாவது இருந்திருக்கலாமோ என்று தோன்றியது அவந்திகாவிற்கு. ஒரு வேளை பெண்களை மதிக்கத் தெரியாத அகம்பாவம் பிடித்தவனாக இருப்பவனோ அல்லது தான் என்ற அகந்தை கொண்டவனாக இருப்பவனோ என்று சிந்திக்க ஆரம்பித்தாள்.

ஓவியக் கண்காட்சி நிறைவுற்று , வீடு நோக்கிய சிற்றுந்து பயணம் போதும் மாறனின் இறுகிய முகம் ரம்யாவிற்கும் சற்று உறுத்தலாக இருந்தாலும் , எங்கே தான் அவந்திகாவிடம் நெருக்கமாக பேச வேண்டி வந்துவிடுமோ என்ற அச்சம் அவனுடைய போக்கில் தெரிந்ததால் அதைக் கலைக்க மனமற்றவளாக அமைதி காத்தாள். சென்னைக்குச் சென்று கொஞ்சம் கொஞ்சமாக மாறனின் தந்தையுடன் பேச்சுக் கொடுத்து புரிய வைக்க முயற்சி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்திருந்ததால் மேற் கொண்டு ஏதும் அது பற்றி பேசாமல் விட்டு விட்டாள். ஆனால் அவந்திகா மட்டும் யோசிக்க ஆரம்பித்திருந்தாள்………

ரிஷி அன்பு மனைவியின் உடல் நலக் கோளாறு காரணமாக , கண்ணைத் திறக்க முடியாத அளவிற்கு கடுமையான காய்ச்சலில் அவதிப் பட்டுக் கொண்டிருந்தவளை கவனிக்கும் பொருட்டு விடிய விடிய உறங்க முடியாமல் கண் விழித்திருந்தவன், அசதியால் கண் அயர்ந்து விட, சுள்ளென்று சூரிய ஒளி முகத்தில் பட, வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து, மனைவியின் அருகே செல்லும் போதே, அவள் காய்ச்சல் சற்றும் குறையாமல் அனத்திக் கொண்டிருப்பது தெரிந்தது. உள்ளுக்குள் இருந்த மருந்தின் வேகம் குறைய ஆரம்பித்தவுடன் காய்ச்சலின் வேகம் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. இனியும் பொறுத்து பலனில்லை என்பதால் அவளை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லத் தயாரானான்.

வீட்டின் அருகில் இருக்கும் ஒரு பல் துறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றவன், அங்கு எடுக்கப்பட்ட பல் வேறு சோதனைகளைக் கண்டு மிரண்டு போனான். மருத்துவர் ஏதோ பெரிய பெயராகச் சொல்லப் போகிறார் என்பது மட்டும் தெரிந்தது. அவன் எதிர்பார்த்தபடியே, ரிஷியின் மனைவிக்கு ஏற்கனவே இருந்து, சரியாகி விட்டது என்று பாசாங்கு காட்டி ஒளிந்து கொண்டிருந்த புற்று நோய்க் கிருமிகள் மீண்டும் தலை காட்ட ஆரம்பித்ததன் விளைவுதான் இந்த கடுமையான காய்ச்சல் என்று மருத்துவர் கூறிய செய்தி அவன் மார்பில் ஈட்டியாகப் பாய்ந்தது. உடனடியாக புற்று நோய் மருத்துவ மனையில் சேர்க்க வேண்டும் என்றும் மருத்துவரின் ஆலோசனைப்படி அரண்டு போய் ஆக வேண்டியதைப் பார்க்கக் கிளம்பினான் ரிஷி……………

தொடரும்.



படங்களுக்கு நன்றி

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...