Saturday, November 5, 2011

முதிதை!

சுவாமி விவேகானந்தரின் முதிதை! [மொழி பெயர்ப்பு]

பவள சங்கரி

’முதிதை’ , என்பது நம்முடைய ஆழ்மனப்பதிவுகளை முற்றிலும் அழிக்கக் கூடிய விஞ்ஞானப்பூர்வமான மற்றும் திட்டவட்டமான ஒழுங்குமுறை! எதிர்மறை சக்திகளுக்கு நம்மை வெளிப்படுத்திக் கொள்வதன் மூலம் விரும்பத்தகாத எண்ணப்பதிவுகளை திரட்டுவது வெகு எளிது. ஆயினும் அதனை அழிப்பது எளிதான காரியம் அன்று. முதிதை – தியானம் என்பது தீய எண்ணப்பதிவுகளை களைந்தெடுத்து நல்ல எண்ணப்பதிவுகளை மட்டும் பதியச் செய்யும் முறைமை. அன்றாடம் முறையாக தியானப் பயிற்சி மேற்கொள்பவர்கள் அவ்வளவு எளிதாக எதிர்மறை உணர்வுகளால் ஆட்கொள்ளப்படுத்தப்பட மாட்டார்கள். அவர்களால் , தீமை விளைவிக்கக்கூடிய உணர்வுகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளும் பிரமாதமான மனோவலிமையை வளர்த்துக் கொள்ள இயலும்!

படத்திற்கு நன்றி

Friday, November 4, 2011

வெண்ணிலவில் ஒரு கருமுகில்!(25)

பவள சங்கரி
” என்றும் மறவாதே……. நீண்ட காலம் நாம் பிரிந்திருக்க நேர்ந்தாலும் என்றும் மறவாதே…!” [ Chang mu sang yu ] – தலைவர் தேஜூன் பார்க் மற்றும் யாசௌகா” என்ற கட்டுரையில் தங்கள் இருவரின் உண்மையான நட்பைப் பற்றி தேஜூன் பார்க் சுவைபட எழுதியதை வாசித்துக் கொண்டிருந்தாள் அவந்திகா இரவு வெகு நேரம் உறக்கம் வராமல். “மாற்றம் என்ற நூலில், உண்மையான சிறந்த நட்பு பொன்னினும் உறுதியானதும் மற்றும் ஆர்க்கிட்டை விட அதிக மணம் பரப்பக் கூடியதுமாகும் என்பதாலேயே, அரிய அந்த உண்மையான நட்பை பொன்னும், ஆர்கிட்டும் [kumnan] போன்றதொரு நட்பு என்று வர்ணிக்கப்பட்டுள்ளது” என்ற அந்த வாசகத்தை படித்துக் கொண்டிருந்தவளுக்கு திடீரென மாறனின் நினைவு வந்தது. நல்ல நட்பின் இலக்கணமாக அவனுடைய பழக்க வழக்கங்கள் இருந்ததால்கூட இருக்கலாம், அவனைப் பற்றிய நினைவு வந்ததற்கு.
நல்ல நட்பைப் பற்றி எண்ணும் போது நல்ல நண்பர்களின் பிம்பங்கள் விழித்திரையில் தோன்றுவது இயல்புதானே. அந்த வகையில் மாறனைவிட நட்பிற்கு இலக்கணமாக இருக்கும் வேறொருவரைக் காண்பதும் அரிது என்று நினைத்த பொழுது, நல்ல நண்பரே வாழ்க்கைத் துணையாக தொடர்ந்து வருவதின் மன நிறைவையும் உள்ளம் நாடத்தான் செய்தது அவந்திகாவிற்கு. எப்படியும் விரைவில் இதுபற்றி மாறனிடம் பேச வேண்டும் என்றும் எண்ணியிருந்தாள்.
அன்று காலை தன்னை அலுவலகத்தில் இறக்கிவிட வந்தவன் வழக்கம்போல மெல்லிய புன்னகையுடன் நிறுத்திக் கொண்டான். ஏனோ இவனுக்கு மட்டும், அதுவும் தன்னிடம் மட்டும் இத்தனை வார்த்தை பஞ்சம் என்று எண்ணிக் கொண்டவள் இனியும் தாமதியாமல் தானே பேச்சை ஆரம்பித்து விடுவது என்றும் முடிவெடுத்தாள்.
” மாறன், மாலை வீட்டிற்குப் போனதும், என்ன செய்வீர்கள்”? [ தேவையில்லாமல் ஏதோ கேட்கிறேனோ?] என்ற குழப்பம் வார்த்தைகளில் தெரிய…….
ஏன் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறாள், என்ற ஐயத்துடனே, “ ஏன், ஒன்றும் பெரிதாக இல்லை, சிலநாட்கள் ஜிம்மிற்கு செல்வேன். சில நாட்கள் மாலுக்கும், காய்கறி வாங்குவதற்கும் இந்தியன் ஸ்டோர்ஸ் செல்ல வேண்டியதும் இருக்கும்”…. இதெல்லாம் எதற்கு கேட்கிறாய் என்பது போன்ற பார்வையுடன், நெற்றியில் முடிச்சுவிழ உற்று நோக்கினான்.
“ இல்லை… சும்மாதான் கேட்டேன். … நேற்று என் அப்பா போன் செய்தார். ” என்று கூறி சற்றே நிறுத்தினாள். அவனிடம் ஏதும் பதில் கேள்வி வருமோ என்ற ஆவல் அவள் பார்வையில் தெரிந்தது. இதற்கு மேல் எப்படி வார்த்தைகளை வளர்த்துவது என்று புரியாத குழப்பமும் முகத்தில் தெரிந்தது. இருந்தாலும் இன்று எப்படியும் பேசிவிட வேண்டும் என்ற உறுதி மட்டும் இருந்தது.
மாறனோ எதையும் தெரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லை என்பதை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டாலும், அதன் காரணம் தெரியாமல் தலையே வெடித்து விடும் போன்ற நிலைமையில், நல்ல முடிவை நாடி அன்று பேச்சை ஆரம்பிக்கவும் செய்தாள்.
“ அப்பா என் திருமணம் பற்றி பேச்செடுத்தார். வழ்க்கம் போல மாப்பிள்ளைகளின் போட்டோக்கள் அனுப்புவதாகக் கூறினார்……… விரைவில் முடிவெடுக்க வேண்டுமாம்”
’இதையெல்லாம் ஏன் என்னிடம் சொல்கிறாய்’ என்பது போல ஒரு பார்வையை வீசினான்.
“ அப்பாவிடம் உங்களைப்பற்றி சொல்லலாம் என்று நினைத்திருக்கிறேன். கட்டாயம் அவர் புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன்” என்றாள்.
‘ என்னைப்பற்றியா…? என்னைப்பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது. புரியும்படி பேசினால் பரவாயில்லை அவந்திகா” என்றான்.
இவன் உண்மையிலேயே புரியாமல் கேட்கிறானா அல்லது வேண்டுமென்றெ தன்னை பழி எடுக்கிறானோ என்பது புரியாமல் விழித்தாலும், எப்படியும் இன்று இவனிடம் பேச்சை ஆரம்பித்துவிட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தாள். தூங்குவது போன்று நடிப்பவனை எழுப்புவது சற்று சிரமமான காரியம் தான் என்பதும் புரியாமல் இல்லை அவளுக்கு.
“ மாறன்….. நான் ஆரம்பத்தில் தங்களிடம் கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டேனோ… அந்த கோபம்தான் இன்று இப்படி கண்டும் காணாமல் இருப்பதற்கான காரணமோ…?”
“ என்ன ஆச்சு அவந்திகா இன்று உங்களுக்கு? என்னென்னவோ பேசுகிறீர்கள். ஒன்றுமே விளங்கவில்லையே….? “
“ம்ம்ம்…. மாறன் இன்னுமா புரியவில்லை. இதற்கு மேல் எப்படி சொல்லி விளங்க வைப்பது என்று தான் எனக்கும் புரியவில்லை. சரி நேரிடையாக மேட்டருக்கு வருகிறேன். அப்பாவிடம் உங்களைப்பற்றி எடுத்துச் சொல்லலாம் என்று இருக்கிறேன். நான் சொல்வதை அப்பா கட்டாயம் கன்சிடர் பண்ணுவார். நான் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க மாட்டேன் என்பதிலும் நம்பிக்கை உண்டு அவருக்கு” என்று படபடவென தெளிவாக பேசி முடித்து அவன் பதிலுக்காகக் காத்திருப்பவள் போல அவன் முகத்தையும் அவன் வாயிலிருந்து வரப்போகும் வார்த்தைகளுக்காகவும் ஆவலாகக் காத்திருந்தாள்.
“ என்ன முடிவு? தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை. என்ன சொல்ல வறீங்க….? கொஞ்சம் தெளிவாகச் சொன்னால் பரவாயில்லை” என்றான் நிதானமாக.
அடக்கடவுளே, இதைவிட ஒரு பெண் எப்படி தெளிவாக, தம் மனதில் அவன் மட்டும் இருக்கிறான் என்பதைக் கூற முடியும் என்பது விளங்காமல், விழிக்க ஆரம்பித்தாள். ஒரு வேளை காலம் கடந்து விட்டதோ என்றுகூட அச்சம் கொள்ள ஆரம்பித்தாள். முதல் முறையாக தான் உதாசீனப்படுத்தப்பட்டது போன்று உணர ஆரம்பித்தாள்.
மாறனுக்கும் இலை மறைவு காய் மறைவாக விசயம் புரிந்தாலும், தற்போது ஏதும் செய்ய இயலாத நிலையில் புரிந்து கொள்ளாதது போல இருப்பதே பாதுகாப்பாக இருப்பது போல உணர வாய் மூடி மௌனமானான். ஆனாலும் அவள் விடுவதாக இல்லை. அப்படி என்னதான் குழப்பம் அவன் மனதில் என்று அறிந்து கொள்ளும் ஆவலில் இருந்தாள் அவள்
அவந்திகாவிடம் இது பற்றி மேற்கொண்டு பேசும் எண்ணம் தனக்கு இல்லை என்பதை தன்னுடைய பொதுவான தட்பவெப்ப நிலை குறித்த பேச்சின் மூலம் விளங்க வைக்க முயற்சித்தான் அவன். குழப்பமும் , லேசான மன அதிர்வும் அவளை பாடாய்ப்படுத்த செய்வதறியாது வாய்மூடி மௌனமாக சிற்றுந்தை விட்டு இறங்கி தலை கவிழ்ந்து கண்கள் கலங்க, அனைத்தையும் மென்று முழுங்கி, அலுவலகம் நோக்கி நடந்தாள் ……. மனபாரம் தாங்காதவளாக……….
அனுவிற்கு பலவிதமான கற்பனைகள் அலைமோதின. ரம்யா பேச வேண்டும் என்று சொன்னதில் ஒரு அழுத்தம் இருந்தது புரிந்தது. அவளைச் சந்தித்துப் பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தாள். என்ன விசயமாக இருக்கும்…. மாறன் ஏதும் சொல்லி அனுப்பியிருக்கலாமோ அல்லது அவருக்கு ஏதும் பிரச்சனையாக இருக்குமோ என்று குழப்பமாகவும் இருந்தது. விசயம் முழுமையாகத் தெரியாமல் பெற்றோரையும் குழப்ப வேண்டாம் என்று முகத்திரை போட்டுக் கொண்டு பணிக்குச் செல்லத் தயாரானாள்.
செல்பேசி கிளிப்பேச்சுப் பேசி அழைக்க, இந்த நேரத்தில் யாராக இருக்கும், ஏற்கனவே நேரமாகிவிட்டதே என்று நினைத்துக் கொண்டே அதன் வாயைப் பொத்த, எதிர் முனையில், இனிய குரலில் காலை வணக்கம் கூறி பொழுது இனிமையாக மலர வாழ்த்தையும் தெரிவித்த ரம்யாவின் குரலை எளிதாகவே அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது.
“ ஹலோ, அனு, உங்களை சந்திக்க வேண்டுமே. ஆபீஸ் கிளம்பிவிட்டீர்களா?”
“ ஆமா… சொல்லுங்க ரம்யா. எப்படி இருக்கீங்க ?”
“ ம்ம்…. நல்லா இருக்கேன். ஆபீஸ் கிளம்பும் நேரம் தொந்திரவு கொடுக்கிறேனோ?”
“ அதெல்லாம் இல்ல.. சொல்லுங்க. ஏதும் அவசரமா ரம்யா”
“ இல்ல உங்ககிட்ட கொஞ்சம் பேசனும். அதான் எங்கே,எப்போ சந்திக்கலாம்னு கேக்கத்தான் கூப்பிட்டே.ன்.’
“ ஓ அப்படியா. சரி. இன்று மதியம் நாம் லஞ்ச்சிற்கு ஆபீஸ் பக்கத்தில் இருக்கிற ரெஸ்டாரெண்ட் போகலாம் வாங்க ரம்யா…”
“ அதுவும் சரிதான். மதியம் நான் ஆபீஸிற்கு வரேன். சந்திக்கலாம். நீங்க இப்ப கிளம்புங்க அனு”
“ சரி. கட்டாயம், சந்திக்கலாம். பை ரம்யா”
ரம்யா அப்படி என்னதான் சொல்லப்போகிறாளோ என்று சற்று சிந்திக்கவும் தோன்றியது அவளுக்கு. எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று தயாராகத்தான் இருந்தாள் அவள் மன உறுதியுடன்!

Sunday, October 30, 2011

வாழ்க்கை வாழ்வதற்கே!

மனித வாழ்க்கை கிடைத்தற்கரிய அரியதோர் வரம். இதனை எந்த அளவிற்கு நாம் உணர்ந்துள்ளோம் என்பது ஐயமாகவே உள்ளது. உலக பக்கவாத தினமான இன்று, பக்கவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்கான விழிப்புணர்வு பெறுவதற்கான அவசர தேவை ஏற்பட்டுள்ள தருணம் இது என்பதை உலக பக்கவாத அமைப்பு (WSO) தெரிவித்துள்ளது.

குடும்பம்,குழந்தைகள் எதிர்காலம், தொழில் என்று விரைவாக சுழன்று கொண்டிருக்கிற காலச்சக்கரம், இந்த 50 வயதில் தன் உடன் பிறப்புகளை அடிக்கடி சந்தித்து அளவளாவும் வாய்ப்பை வெகுவாகக் குறைத்து விட்டிருந்தது வையாபுரிக்கு. ஆம், தான் பிறந்து வளர்ந்த பசுமையான கிராமத்தை விட்டு, பிழைப்பைத் தேடி பட்டணம் வந்து சேர்ந்து கிட்டத்தட்ட இந்த 27 ஆண்டுகளில் தன்னுடைய வாழ்க்கைத்தரம் ஓரளவிற்கு உயர்ந்திருந்தாலும், நகர, நாகரீக வாழ்க்கை கற்றுக் கொடுத்த தீய பழக்கங்களான மதுவும், புகைப்பழக்கமும், தவிர்க்க முடியாமல் தொற்றிக் கொண்டதும் நிதர்சனமாகிப்போனது அவருக்கு. உடன் பிறந்த ஒரே தங்கையையும் அதே கிராம வாழ்க்கையில் இணைந்திருக்க, ஏதோ ஆடிக்கொரு முறை, அம்மாவாசைக்கொரு முறையே தன் தங்கையை காணக்கூடிய வாய்ப்பு அமைவதும் வாடிக்கையாகி விட்டது.

அன்றும் அப்படித்தான், ஒரு ஆண்டிற்குப் பிறகு தங்கையைக் காண வருவதாகத் தகவல் கொடுத்து விட்டு சென்ற மனிதர், பேருந்தை விட்டு இறங்கி புகை வண்டி, தண்டவாளப் பாதையைத் தாண்டிச் சென்றால் வெகு அருகிலேயே தங்கையின் இல்லம் இருப்பதால் நடந்து சென்றவர், அன்புத் தங்கை தனக்காக வழி மேல் விழிவைத்து தண்டவாளத்தின் மறுபுறம் காத்திருந்தவர் , சகோதரரைக் கண்ட ஆர்வத்தில், புகை வண்டி வருவதைக்கூட கவனியாமல், வேகமாக தண்டவாளத்தைக் கடக்க முயல….. அந்தோ… பரிதாபம். வெகு விரைவாக வந்த புகை வண்டியில் அடிபட்டு உடல் இரண்டாக சிதறியதைக் கண் முன்னால் கண்ட சகோதரர் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனவர், மயங்கிச் சரிந்தார். மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டவருக்கு பக்கவாதம் வந்துள்ளதாக மருத்துவர்கள் அறிவித்தனர். உடலின் வலது புறம் முழுவதுமாக செயலிழந்த நிலையில் வாய் பேச்சும் தடைபட்டு, தொழிலும் முடங்க…. பல மாதங்கள் வரை படுக்கையில் இருக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.

ஒவ்வொரு ஆறு வினாடிக்கும் ஒருவர் இந்த பக்கவாத நோயினால் பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. மற்றெந்த நோயைவிடவும் இந்த பக்கவாத நோய் அதிகளவிலான உயிர் இழப்பை ஏற்படுத்துகிறது. வருடத்திற்கு சுமார் ஆறு மில்லியன் மக்கள் இந்த பக்கவாதத்தினால் உயிரிழக்கின்றனர். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, புகைப்பழக்கம் உள்ளிட்ட காரணங்களே பக்கவாத நோய் ஏற்பட வழிவகுக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அக்டோபர் 29 ஆம் தேதி உலக பக்கவாத தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருமுன் காப்பதே புத்திசாலித்தனம் அல்லவா. அந்த வகையில் மருத்துவர்கள் கூறும் பக்கவாதத்திற்கு எதிரான ஆறு முக்கிய சவால்கள் :

1) விழிப்புணர்வு கொள்ள வேண்டிய சில முக்கிய விசயங்கள் : உயர் இரத்த அழுத்தம், சக்கரை மற்றும் இரத்தத்தின் கொழுப்புச் சத்தின் அதிகளவு ஆகியன.

2) எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும், அன்றாட உடற்பயிற்சி பழக்கம்

3) உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு கொள்வதன் மூலம், உடல் எடை அதிகம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.

4) கட்டுப்பாடான மதுப்பழக்கம்.

5) புகைப்பிடிக்கும் வழக்கத்தை முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.

6) பக்கவாத நோயின் அறிகுறிகள் குறித்த முன்னெச்சரிக்கையின் விழிப்புணர்வு மிக அவசியமானதாகும்.

இந்தியாவில் இந்நோய் அண்மைகாலமாக அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 50 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே தாக்கி வந்த இந்த பக்கவாத நோய் . அண்மைக்காலமாக 20 லிருந்து 30 வயதிற்குட்பட்டவர்களை அதிகமாக தாக்கத்தொடங்கியுள்ளது. இந்நோயால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில், ஒரு லட்சம் பேரில், தோராயமாக 130 முதல் 225 பேருக்கு இந்நோய் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. மேலும், இந்தியாவில் மட்டுமே ஒரு நாளைக்கு 2 ஆயிரம் பேர் இந்நோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மனித மூளையின் ஒரு பகுதி செயலிழப்பதால், பக்கவாதம் ஏற்படுகிறது. இதனால், உடலின் ஒரு பகுதி செயல் இழந்து, உடல் உறுப்புகள் இயங்காமல் படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பேச முடியாமலும் போகிறது. இதற்கு உரிய சிகிச்சை முறைகள் இருக்கின்றன. அதனை குறித்த நேரத்தில் சரியாக மேற்கொண்டால் விரைவாக இதிலிருந்து மீண்டு வரவும் வாய்ப்புள்ளது.

தினசரி மூன்று கதலி வாழைப்பழங்களை சாப்பிடுவதன் மூலம் பக்கவாதம் ஏற்படுவதைத் தவிர்‌‌க்க முடியும் என்று ஆய்வுகள் மூலம் பிரிட்டிஷ் மற்றும் இத்தாலிய ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. காலை உணவுக்குப் பின் ஒன்றும், பகல் உணவுக்குப் பின் ஒன்றும் பின்னர் மாலை வேளையில் ஒன்றுமாகச் சாப்படுவது மூலம் உடலுக்குத் தேவையான பொட்டாசியத்தை பெற முடிகின்றது என்கின்றனர். அதன்மூலம் மூளையில் இரத்தக் கட்டுக்கள் ஏற்படுவது 21 ‌விழு‌க்காடு தடுக்கப்படுகின்றதாம்.

பசளிக் கீரை, விதைவகைகள், பால், மீன், பருப்பு வகைகள் போன்ற பொட்டாசிய உணவு வகைகளை உட்கொள்வதன் மூலமும் பக்கவாதம் நோயைத் தடுக்க இயலும் என்றும் கூறப்படுகிறது.

தினசரி உணவில் 1600 மில்லி கிராம் பொட்டாசியத்தைச் சேர்த்துக் கொண்டாலே போதுமானது என்றும் அமெரிக்க இதய நோய்கள் பற்றிய குறிப்பேடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. வாழைப்பழத்தில் சராசரியாக 500 மில்லி கிராம் பொட்டாசியம் அடங்கியுள்ளது. இது இரத்த அழுத்தத்தை சீர்படுத்தி உடலின் நீர்த்தன்மை சமநிலையையும் பேணுகின்றது எ‌ன்றும் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

நல்ல ஆரோக்கியமான பழக்க, வழக்கமும் , நோய் குறித்த முழுமையான விழிப்புணர்வு இவைகளே இந்த உயிர்க்கொல்லி நோயிலிருந்து நம்மைக் காக்கவல்லது என்பதே நிதர்சனம்.

படத்திற்கு நன்றி

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...