பவள சங்கரி
நுவல்- புத்தக மதிப்புரை
வாழ்வியலின் வண்ணங்கள்!
திருமதி கமலாதேவி அரவிந்தன் அவர்களின் சில ஆய்வுக் கட்டுரைகளின் நுட்பமான கருத்துக்களில்
கவரப்பட்டதன் விளைவு, அவருடைய மற்ற படைப்புகளையும் தேடிப்பிடித்து வாசிக்கத் தூண்டியது. சிங்கையின் முன்னணி
எழுத்தாளர்களின் ஒருவரான திருமதி கமலாதேவி அரவிந்தன் நாவல், சிறுகதைகள், நாடகங்கள், ஆய்வுக்கட்டுரைகள்,
என அனைத்துத் தளங்களிலும்
தம் தனிப்பட்ட முத்திரைகளைப் பதிததவர். சமகால இலக்கியங்களில் இவருடைய எழுத்து நவீனத்துவம்
என்ற வகையில் தனித்து நிற்கக்கூடியது. மலையாள மொழியை தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும்,
தம் சிறு வயது முதலே
தமிழ் மொழியின்மீது கொண்ட தீராக் காதலால் கவிதையில் ஆரம்பித்து, தற்போது தமிழ் இலக்கிய வரலாற்றில்
தமக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிட்டார். பெண் எழுத்தாளர் என்றால் ஒரு வரையறைக்குள்தான்
எழுத முடியும் என்ற இலக்கணத்தை முறியடித்து, வெகு யதார்த்தமாக எந்தக் கட்டுப்பாடும்,
இல்லாமல் சரளமாக எழுதும்
மிக வித்தியாசமான நடை இவருடையது. இதுதான் நவீன பாணி எழுத்தோ என்று எண்ணும் போது பிரம்மிப்பாகத்தான்
இருக்கிறது. ‘நுவல்’ என்ற இந்த தொகுப்பு 13 வித்தியாசமான சிறுகதைகளைக் கொண்டது. ஒவ்வொன்றும் வித்தியாசமான
கதைக்களத்தில் அமைந்துள்ளதும், கவர்ச்சியான த்லைப்புடன் எழுதப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.