Thursday, November 2, 2017
Tuesday, October 31, 2017
யாரடி நீ மோகினி!
அணிந்துரை
சிறுகதைத் தொகுப்புகளை வாசித்து உள்வாங்கி உணர்வதும் ஓர் கலை என்றே சொல்லலாம். ஆம், ஒவ்வொரு கதையின் சூழலையும் அது எழுதப்பட்ட பின்னணியையும் அதன் காலகட்டங்களை உணரவும் தெளிவான புரிதலும், சிந்தனையும் தேவை. ஆழ்ந்த கருத்துகளை உடைய கதைகளாயின் அவை அதற்குத் தகுந்த அமைதியான மன நிலையில் வாசிக்கவேண்டிய ஒன்றாகும். அப்போதுதான் அதன் சாரத்தை உள்வாங்கவியலும்.
“நீ உன் வீட்டு சன்னல் கதவைத் திறந்து பார். அங்கே நடப்பதை எழுது” என்பார் சுஜாதா.
‘சுஜாதாவின் விஞ்ஞான சிறுகதைகள்’ என்ற தலைப்பில் தமது எம்.பில். ஆய்வை முடித்துள்ள சகோதரர் திருமுருகன் சுஜாதா அவர்கள் போகிற போக்கில் சொல்லிச்சென்ற வாசகங்களை சிரமேற்கொண்டாற்போன்று அதே போக்கில் தமது சிறுகதைகளை வடிவமைத்திருக்கிறார். குடும்ப வாழ்க்கை பற்றிய சித்திரம் ஒவ்வொரு மனிதரின் மனதிலும் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்தவையாகவே இருக்கும். அமைதிக்கும் அன்புக்கும் உறைவிடமாக இருக்கவேண்டிய இல்வாழ்க்கை சில நேரங்களில் ஒருவரையொருவர் உணர்வுப்பூர்வமாகத் தாக்கிக்கொள்ளும் களமாக மாறிவிடும் நிலை ஏற்படுவதும் உண்டு. குடும்ப வாழ்க்கையின் ஆதாரமான காதல் என்ற அந்த மென்மலர் பூக்க ஆரம்பித்த தருணத்தில் சம்பந்தப்பட்டவர்களை அதனினும் மென்மையாக மாற்றிவிடுவதோடு வானில் பறக்கவும் செய்துவிடுகிறது. ஆனால் அந்த காதலுக்குத் துரோகம் நேருகையில் அதற்கு நேர்மறையாக வீறு கொண்டெழும் மனோபாவம் ஒருவரை கொலை செய்யும் அளவிற்கு மாற்றியும் விடுகிறது என்பதைச் சித்தரிக்கும் கதை, ‘நேற்று இன்று நாளை’ என்ற முதல் கதை.
இராமன் காட்டிற்குச் செல்ல புறப்படும்போது சீதை தானும் உடன் வருவதாக அடம் பிடிக்கும் சமயத்தில் இராமன் அடர் வனத்தில் எதிர்கொள்ள வேண்டிய இன்னல்கள் குறித்து தெளிவாக எடுத்துக்கூறி மறுத்தபோதும் சீதை, ‘நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு?’ என்று கூறி இராமபிரானுடன் அந்த அடர்ந்த காட்டிற்குச் செல்லத் துணிகிறாள். பிரிவுத் துயர் என்பது காட்டு வாழ்க்கையை விடக்கொடியது என்பதை உணர்த்தும் அற்புதமான வரிகள்! கதாசிரியரின் ‘நீ இல்லாமல்...’ என்ற சிறுகதை மனைவியை இழந்த ஒரு முதியவர் படும் துயரை தெள்ளென விளக்கும் நிதர்சனம்.
காதலுக்குக் கண்ணில்லை என்ற கதையில் நல்ல திருப்பு முனையை வைத்து தலைப்பையும் நியாயப்படுத்துகிறார்.
சாதி இரண்டொழிய வேறில்லை என்று எத்தனை ஆன்றோர்கள் அறுதியிட்டு உரைத்தாலும் அன்றாட வாழ்க்கையில் சாதிக்கு உள்ள முக்கியத்துவம் இன்றுவரை ஒழிந்தபாடில்லை என்பதை வெளிப்படையாகச் சொல்லும் காதல் சாதி என்ற கதை நச்..
‘அறுந்த செருப்பு’ எனும் கதையில் சோகம் பிழியச்செய்யும் சம்பவங்களை நேரில் கண்டதுபோல் விளக்குகிறார். எதிர்பாராத முடிவும் உள்ளத்தை ஊடுறுவி வதைக்கக்கூடியது.
வரதட்சணைக் கொடுமையை மண்டையில் சம்மட்டியால் அடித்து விளங்கச் செய்யும் கதைதான் ‘முற்பகல் செய்யின்’.
‘அபூர்வம்’ எனும் கதையும் நல்ல திருப்பத்துடன் முடிவடைகிறது.
காதல் வேட்டை, என் இனிய தேவதை, பொய்க் காதல், காதல் தோல்வி ஆகிய கதைகள் காதலின் பல்வேறு பரிமாணங்களை சுவையாக எடுத்துரைப்பதாக உள்ளன. காதலில் நேர்மறை, எதிர்மறை, நம்பிக்கைத் துரோகம், காதலுக்காக நட்பிற்கு செய்யும் துரோகம் என்று ஆழ்ந்து நோக்க வேண்டிய பல கருத்துகளை மேலோட்டமாக எடுத்துரைத்திருக்கிறார்.
‘மரம்’ என்ற சிறுகதை இத்தொகுப்பின் முத்தான கதை என்று சொல்லலாம். ஒரு சிறுமியின் வாயிலாக ஆழ்ந்த கருத்துகளை உள்ளத்தை உருக்கும் வகையில் யதார்த்தமாக, பொட்டில் அறைந்தது போன்று சொல்லியிருப்பது பாராட்டிற்குரியது.
‘யாரடி நீ மோகினி’ என்ற இத்தொகுப்பின் தலைப்பிற்குரிய கதையும், ‘கண்டுபிடி கண்டுபிடி’, கொலை ஆகிய சிறுகதைகள் மூலம் மெல்லிய நகைச்சுவை உணர்வுடன் விழிப்புணர்வூட்டும் சில விசயங்களை எளிமையாகக்கொடுக்க முயன்றிருக்கிறார்.
மொத்தத்தில் ‘யாரடி நீ மோகினி’ என்ற சிறுகதைத் தொகுப்பு நவரசங்களையும் உள்ளடக்கியதொரு தொகுப்பாகவே அமைந்துள்ளது. இது இவருடைய இரண்டாவது நூல் என்பது இவர்தம் சரளமான நடையால் அறிய முடியாமல் போகிறது. ஆகச்சிறந்த எழுத்தாளர் சுஜாதாவை முன்மாதிரியாகக்கொண்ட இவருடைய எழுத்துகள் மென்மேலும் பிரகாசிக்க உளமார்ந்த வாழ்த்துகள். சிறுகதை உலகில் புதியதொரு மைல்கல்லாக இவருடைய படைப்புகள் வலம் வரும் என்று நம்புவோம்!
அன்புடன்
பவள சங்கரி
எழுத்தாளர்
நிர்வாக ஆசிரியர், வல்லமை இணைய இதழ்,
mail to : coraled@gmail.com
Subscribe to:
Posts (Atom)
கழுகும் – சிறுமியும்
கழுகும் – சிறுமியும் அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...
-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
பவள சங்கரி h ttps://www.youtube.com/watch?v=AXVK2I37qbs சமுதாயத்தில் பல புரட்சிகளை ஏற்படுத்திய, சிவவாக்கியர், ‘புரட்சிச் சி...