Friday, October 18, 2013

ஆனந்தக் கூத்து!


பவள சங்கரி



அண்டமெனும் ஆலயமதில் ஆனந்தக்கூத்தாடுகிறான்
பிண்டமாய்ப்போகும் ஊனுடம்பும் ஆலயம்தான்
அண்டமும் பிண்டமும் ஆனந்தத்தின் ஆணிவேர்
கொண்டதும் கொடுத்ததும் ஞானக்கூத்துவனின் இச்சை

இடகலை பிங்கலை சுழிமுனைகளின் இம்சையால்
மடமாந்தர் படும்துயர் பரமனவன் பார்வையால்
நடனமாடும் நாதமாய் நசுக்கிய முயலகனாய்
படமெடுத்து ஆடும் பாவவினைகள் பற்றறுத்துப்போகுமே!

Wednesday, October 16, 2013

சுயம் எங்கே?


பவள சங்கரி



 சங்கீதம் தெய்வத்தின் சன்னதி
தேவகானம்.

மயிலின் நடனம் மாதவம்
மகோன்னதம்.

கிளியின் மொழி கிளர்ச்சி
பேரின்பம்.

காற்றின் குளுமை சுகம்
சுதந்திரம்

Monday, October 14, 2013

ஓம் ஆதிபராசக்தி அன்னையே போற்றி!


பவள சங்கரி



கோலமயிலென தோகைவிரித்தாடினாள்
கோதைநாயகி!

புள்ளிமானென துள்ளியாடினாள்
புவியரசி!

அன்னநடையுடன் அகம்குளிர்ந்தாள்
அங்கையற்கண்ணி!

சிம்மத்தை சிம்மாசனமாக்கினாள்
சிம்மவாகினி!

குயிலோசையில் குழைந்துபோனாள்
குமரிக்கன்னி!

தத்துங்கடலோசையில் ஆர்ப்பரித்துநிற்கிறாள்
தத்துவநாயகி!

தகதகவெனத்தகிக்கும் கதிரொளியானாள்
திரிபுரசுந்தரி!

ஓம்எனும் அகர உகர மகர நிலையானவள்
ஓம்காரநாயகி!

மாணிக்கவீணையேந்தி மாதவம்புரிபவள்
மாணிக்கநாச்சி!

கரும்புவில்லேந்தி கடைக்கண்காட்டியவள்
கண்ணபுரநாயகி!

கமலநயனவடிவாய் காமரூபமானவள்
கமலபாரதி!

சுவர்ணரூபமாய் சொக்கிநிற்கிறாள்
சுவர்ணமால்யாயிணி!

சரணம் சரணம் சரணம் 
உன்திருப்பாதம் சரணம்!

காத்தருள் காளியே!

பவள சங்கரி




வெற்றிவாகினியே வீரத்திருமகளே
ஊரெல்லாம் குதூகலமாய்
கூடிக் களித்திருக்கையில்
பாடிப்பரவசமாய் ஓருயிர்
பத்ரகாளியுந்தன் பதம்பணிந்தே
நித்தமுன்நாமம் கூவியழைத்து
வெதும்பியழ பாவியானென 
பரிதவித்து உனைத்தொழ
சூழும்துயர் களையாமல்
எங்கனம் செல்வாயோநீயே


கங்கனம்கட்டாமலே காவலுக்கு
நில்லாமலே சொல்லெலாம்
நிறைந்தாலும் சுள்ளென்று
தீக்கனல் சொரிந்து தள்ளென்று
தவிக்கவிட்டு பகடையாயுருட்டி
பச்சிளம்குழவியாய் பாசவினைக்காய்
ஏங்கிஏங்கி மாய்ந்துமாய்ந்து
மருண்டுநிற்கும் பேதைதனை
தளிர்க்கரம் நீட்டி தாவியணைக்காமல்
தீக்கனல்மூட்டி சுட்டெரித்து
அச்சமூட்ட குற்றமென்னசெய்தேன்?


குவிந்த இதழ் முத்தமிட்டது
உன்திருநாமம் மட்டும்தானே
பணிந்தசிரம் தொட்டணைத்தது
உந்தன்பாதமலர்மட்டுமன்றோ
விரிந்தகூந்தலில் விருப்பமாயமர்ந்தது
 இதயமலர் என்பதையறியாயோ
இரத்த நாளங்களனைத்தும்  சுற்றியுனை
உருகிஉயிர் உன் காலடியில் 
மருகிமயலாகி மடிந்துஒளிருதே
அறியாயோ நீயே! வரம் அருளாயோ தாயே!


ஆங்காரம் அடியோடு ஒடுங்கி
ஓங்காரமாய் நிற்கும் தேவியுந்தன்
பாதாரவிந்தம் சேரும்நாள் எந்நாளோ
வாழும் உயிர்களனைத்தும்
பாழும்பந்தத்தில் உழலாமல் 
சித்தம்சீராய் சிந்தைதெளிவாய் 
நம்பிக்கை ஒளியாய் நயமான
கற்பகத்தேரில் கனிவாய் பவனிவரும்
அற்புதக்காட்சி! கருத்தில் நிறைந்த 
கற்கண்டாய் கனிரசமாய் மலர்ந்த காட்சி!
சொற்பதங் கடந்த மௌனமொழிக்காட்சி!
கருணைக்கடலே! காக்கும் அன்னையே!
காத்தருள் காளியே! சிம்மவாகினியே!

படத்திற்கு நன்றி:


Sunday, October 13, 2013

சரசவாணியே! சகலகலாவல்லியே!


பவள சங்கரி

சரசவாணியே! சகலகலாவல்லியே!



வீணையேந்திய சகலகலா வாணியே
வேதங்களின் விழுப்பொருள் நாயகியே
வெண்டாமரையிலுறையும் அன்னையே
வேண்டுவதெல்லாம் அறிவோய் நீயே!

நூல்வடிவாய் நின்ற நாயகியே
பால்வடியும் கவிமாலையானவளே
கல்மனமும் கனிந்துருகும் காதலாலே
சொல்வனமாய் திகழும் உன்னருளாலே!