Friday, July 27, 2012
திமிர்ந்த ஞானச் செருக்கு!
Tuesday, July 24, 2012
பூமிதி.....
தேவையில்லாத எதிர்பார்ப்புகளே ஒருவரை வாழ்க்கையின் அடிமையாக்குகிறது.. இரவு படித்து முடித்து வைத்த புத்தகத்தின் சில வரிகள் பளிச்சென்று நினைவிற்கு வந்தது தூங்கி முழித்தவுடன்.... அழகாக குளித்து முடித்து நார்மலான காலை வழிபாடு முடித்து மதிய உணவிற்கு இரண்டு சப்பாத்தியும் கொஞ்சம் சன்னாவும் ஒரு சிறிய ஆப்பிளும் எடுத்து பேக் செய்து வைத்துவிட்டு காலையில் கார்ன் ஃபிளேக்ஸ் ஒரு பவுல் அதிவேகமாக விழுங்கிவிட்டு உடை மாற்றி லேசான ஒப்பனையுடன், ஏதோ ஒரு டாப்ஸ் ஒரு ஜீன்ஸ் என்று மாட்டிக் கொண்டு கிளம்பத் தயாராகி இறுதியாக கண்ணாடி முன் நின்று சரி பார்த்தவள் தன்னையறியாமல் புன்னகை பூத்தாள். சமீபத்திய அலுவல் முறை மூன்று மாத ஜெர்மனி பயணம் தன் உடலின் பூசின மாதிரியான ஊளைச்சதையையும் குறைத்ததோடு அழகான பிங்க் வண்ண நிறத்தையும் கொடுத்தது சற்று பெருமையாகவும் இருந்தது.. அக்கம் பக்கம் திரும்பி உடையை சரிபார்த்தபோதுதான் தெரிந்தது டாப்ஸ்ஸை திருப்பி உடுத்தியிருந்தது... தையல் வெளியே தெரிந்ததால்... அடடா இதைக்கூட கவனிக்கவில்லையே.. இரவு சரியான தூக்கமில்லை.. திருமணமாகி மூன்றே மாதத்தில் ஜெர்மனி பயணம்.. இன்னும் கணவனை முழுமையாக புரிந்து கொள்ளும் வாய்ப்பு கூட அமையவில்லை.. ஊரிலிருந்து வந்து மூன்று நாட்களாகியும் அன்பு கணவனை பார்க்க முடியாத ஏக்கம் ஒருபுறம் என்றால், அவனுடைய பட்டும்படாத பேச்சு ஒருபுறம் உறுத்தலாக இருந்தது.. காரணம் ஏதும் புரியவில்லை.
இயந்திர வாழ்கையிலிருந்து மீண்டு வந்தது போல சுகமான ஒரு உணர்வு இந்த மூன்று மாதத்திற்குப்பிறகு! தனிமை என்பது கொடியது என்றால் திருமணம் ஆன சொற்ப நாட்களிலேயே கணவனையும் சரிவர புரிந்து கொள்ளவும் நேரமில்லாமல் கற்பனைத்தேரை முழுமையாக கொண்டுச்சென்று நிலைசேரும் அவகாசமும் இல்லாமல் அதற்குள் கடமை அழைக்க செருமனிப் பயணம். மூன்று மாதங்களும் மூன்று யுகங்களாகக் கழிந்தது சகானாவிற்கு. பெயரைப் போலவே மென்மையான இதயம் கொண்ட அழகு தேவதை.
ஊரிலிருந்து திரும்பி இன்று மூன்றாவது நாள், கணவன் கார்த்தி, அலுவலகப் பயணம் என்று தான் வரும் அதே நாளில் கிளம்பிப் போய் இன்று வருவதாகக் கூறியிருந்தான். அலுவலகம் செல்ல மனம் வரவில்லைதான்... எப்படியும் கார்த்தி வீடு வந்து சேர்வதற்குள் வந்து விடலாம் என கிளம்பினாள்..
மாலை விதவிதமாக கணவனுக்குப் பிடித்த ஐட்டங்களாக டேபிளில் அடுக்கி வைத்துவிட்டு, மேக வண்ண மெல்லிய ஷிப்பான் சேலை (கார்த்தியின் ஃபேவரிட்) உடுத்திக் கொண்டு அதற்கு தகுந்த காது மற்றும் கழுத்திலும் மேட்ச்சாக நீலக்கல் செட் அணிந்து காத்து நின்றாள். ஏனோ மணித்துளிகள் மிகவும் மெத்தனமாக நகர்வது போன்று தோன்றியது... கல்லூரி நாட்களில் இப்படி அடுத்தவருக்காக அலங்காரம் செய்து கொள்வதும் அடிமைத்தனம்தான் என்று எத்துனை முறை வாதிட்டிருப்போம் என்று எண்ணியபோது அவளுக்கே சிரிப்பாக வந்தது.. இன்று கணவன் என்ற பெயரில் சில நாட்கள் முன்பு முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவனை சேர்த்து வைத்தார்கள் பெற்றோர்கள். இன்று அவனுக்காக அவனுக்குப் பிடித்த வண்ணத்தில் உடுத்தி, அவனுக்குப் பிடித்ததைச் சமைத்து அவனுக்காக வழிமேல் விழிவைத்து காத்துக் கொண்டிருப்பதை நினைத்தால் வேடிக்கையாக இருந்தது..
அழைப்பு மணியின் ஒலி அவளுக்குள் பெரும் பரவசத்தை ஏற்படுத்தியது. கதவை திறக்க ஓடியவள் என்ன நினைத்தாளோ திரும்பவும் ஓடி வந்து கண்ணாடி முன் நின்று முன்னும், பின்னும் திரும்பிப் பார்த்து திருப்தியாக ஓடினாள் கதவைத் திறப்பதற்கு. கணவன் ஓடிவந்து அப்படியே கட்டிக்கொள்ளப் போகிறான் என்ற உணர்வே அவளுக்குள் ஏதோ மாற்றத்தை கொண்டு வந்ததன் காரணமாக நடையிலும் ஒரு தள்ளாட்டமும், கண்களிலும் ஒரு மயக்கமும், முகத்திலும் செவ்வரிகளும் ஏற்படுத்தி உதடுகள் துடிக்க மெல்ல கதவைத் திறந்தாள்......
எதுவுமே பேசாமல் அழகு தேவதையாக கண்களில் ஆவல் பொங்க தன் முகத்தையே உற்று நோக்கிக் கொண்டிருக்கும் அன்பு மனைவியை ஏறெடுத்தும் பார்க்காமல், விரைப்பாகச் சென்ற கணவனை அதிர்ச்சியாகப் பார்த்தாள் சகானா... கண்ணே, முத்தே, மணியே என்று தலையில் வைத்து கொண்டாடிய கணவனா இவன்.. என்ன ஆயிற்று இன்று.. தன் கண்களையே நம்ப முடியாமல் ஒன்றும் பேசாமல் அவன் பின்னாலேயே சென்றாள். நொடியில் அத்துனை கனவுக் கோட்டையும் பொடிப்பொடியாக அவமானத்தால் குறுகிப் போனாள்....
இயந்திரமாக நேரே குளியலறை சென்று குளித்து உடை மாற்றி, ஒன்றும் பேசாமல் படுக்கையில் சென்று விழுந்தவனை அதற்குமேல் பொறுக்கமாட்டாமல், அருகில் சென்று,
“சாப்பிட்டுவிட்டு படுக்கலாமே.......”
என்றாள் முன்பின் அறிமுகமில்லாத ஒரு புதிய மனிதரிடம் பேசுவது போல.... எதுவும் பேசாமல் திரும்பி படுத்துக்கொண்ட கார்த்தியின் போக்கு அவளுக்குப் பிடிபடவில்லை.. சென்ற இடத்தில் ஏதும் பெரிய பிரச்சனையாக இருக்குமோ. காலையில் எழுந்தால் சரியாகிவிடும் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டு, தனக்கும் சாப்பிட பிடிக்காமல் குளிர்சாதனப்பெட்டியில் வைக்க வேண்டியதை வைத்துவிட்டு கட்டிலின் ஓரத்தில் சுருண்டு படுத்துக் கொண்டாள். பசியும், மனக்குழப்பமும் சேர்த்து இரவு தூக்கம் முழுவதையும் விழுங்கிவிட்டது.
விடியவிடிய தூங்காததன் அசதி முகத்தில் சூரிய ஒளி அடிக்கும் வரை தூங்கச் செய்துவிட்டது.. அடித்துப் பிடித்து எழுந்தவள் கணவன் கிளம்பி சென்றிருப்பதைக் கண்டு மேலும் அதிர்ச்சியுடன் ஒன்றுமே தோன்றாமல், யோசிக்கவும் நேரமில்லாமல், பரபரவென அலுவலகம் கிளம்பினாள், இரண்டு துண்டு ரொட்டியை வாயில் போட்டுக் கொண்டு.
நான்கு நாட்கள் ஆகிவிட்டது. இப்படியே கண்ணாமூச்சி ஆட்டம் ஆடியாகிவிட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை எப்படியும் கார்த்தியிடம் மனம் விட்டு பேசிவிட வேண்டும் என்ற முடிவுடன் இருந்தாள். இதற்குமேல் பொறுமையாக இருப்பது சரியாகாது என்று கண்டும் காணாமல் விலகிச் செல்பவனை வழிமறித்து, பேச முயற்சி செய்தாள். அதற்குள் படுக்கையறையில் அவனுடைய கைபேசி ரீங்காரமிட ஒன்றும் பேசாமல் ஒதுங்கி நின்றாள்..
எதிர்முனையில் தன் மாமியார் என்பது புரிந்தது. ஏதோ பலமான வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. இந்த மூன்று நாட்களும் தன் கிராமத்திற்குத்தான் சென்று வந்திருப்பான் போல. ஒரு விசயம் தெளிவாகப் புரிந்தது. ஏதோ தன்மீது கோபமாக இருக்கிறான் என்றும் தன் மாமியார் தனக்காக பரிந்து பேசிக்கொண்டிருப்பது கணவனுடைய கோபத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. காரணம்தான் புரியவில்லை. இவ்வளவு கோபமாக விவாதிக்கும் அளவிற்கு தன்னிடம் எந்த குறையும் இல்லையே.. மனதில் தோன்றிய அலுப்பு மேற்கொண்டு பேசமுடியாமல் தடுத்தது.
ஞாயிற்றுக்கிழமை என்றாலே வழமையாக வரும் உற்சாகம் கூட தொலைந்து போனது. காலை உணவு எப்படியும் கார்த்திக்கு தேவையிருக்காது. வீட்டில் நான்கு நாட்களாக சாப்பிடவில்லை என்பதால் சமைக்கும் ஆர்வமும் இல்லை அவளுக்கு. சமையலறையில் உருட்டும் சப்தம் கேட்டு எழுந்து போனவள் அங்கு கார்த்தி முட்டை ஆம்லெட் போட்டுக் கொண்டிருப்பது பார்த்து, மனம் கேட்காமல் ”நான் உதவலாமா” என்று தயங்கித் தயங்கிக் கேட்டாள். உடனே அவன் அவளுடைய கண்களை ஆழ்ந்து உற்று நோக்கியதை சற்றும் எதிர்பார்க்கவில்லை அவள். தன்னையறியாமல் பார்வை தாழ்ந்தாலும் அந்த அவனுடைய பார்வையில் பல விடையிறுக்க வேண்டிய கேள்விகள் தொக்கி நிற்பது புரிந்தது அவளுக்கு.
பொறுமையாக ஆம்லெட்டும், பிரட் டோஸ்ட்டும் போட்டுக் கொண்டு வந்து டேபிளில் அமர்ந்து மெதுவாக சகானா இருக்கும் பக்கம் பார்வையை ஓட்டியவன், அவள் சோபாவை விட்டு எழுந்து போய் ஒரு கோப்பையில் கார்ன் பிளேக்ஸ் போட்டுக் கொண்டு எடுத்து வருவ்தைக் கண்டவுடன் மௌனமானான். சாப்பிட்டு முடித்தவுடன் எப்படியும் தன்னிடம் கேள்விகள் வரும் என்பது தெரிந்ததால் பொறுத்திருந்தாள்.
“போலீஸ் ஸ்டேசன் போயிருக்கியா”?
எடுத்த எடுப்பில் இப்படி ஒரு கேள்வி அவனிடமிருந்து எதிர்பார்க்கவிலலை.
“ம்ம்ம்.. ஆம்.. போயிருக்கேனே..” என்றாள் தடுமாற்றத்துடன்.
“ஒரு பொம்பிளைக்கு இதெல்லாம் தேவையா” என்று நீதிமன்றத்தில் இருந்து வந்திருந்த ஒரு தபாலை தூக்கிப்போட்டுவிட்டு அவன் அழுத்தமான பார்வையுடன் கேட்ட கேள்வி அவளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
நன்கு படித்து நாகரீகமாக் உடுத்தி, நாகரீகமாக சாப்பிட்டு, தன்னை மிகவும் சமூக நலனில் அக்கறை கொண்ட மாடர்ன் சிந்தனையாளனாக காட்டிக் கொள்ளும் கார்த்திக் பற்றிய தன்னுடைய கணிப்பு தவறி விட்டதை நொடியில் புரிந்து கொண்டாள்.
“என்ன கேட்ட கேள்விக்கு இன்னும் சரியா பதில் வரலையே..” மீண்டும் அதே அதிகாரத்தோரணை.
“என்ன பதில் வேண்டும். நான் தான் சொன்னேனே.. ஆம் என்று”
“அதைத்தான் கேட்கிறேன்.. இதெல்லாம் உனக்குத் தேவையா என்று. உடனடியாக இந்தப் பிரச்சனையிலிருந்து நீ விலக வேண்டும். அப்பொழுதுதான் நாம் நிம்மதியாக சேர்ந்து வாழ முடியும். அதுமட்டுமல்ல இது போல இன்னொரு முறை நடக்காது என்ற உத்திரவாதமும் கொடுத்தால்தான் அடுத்ததைப் பற்றி நாம் யோசிக்க முடியும்”
“புரியல.. அடுத்ததைப்பற்றி என்றால்.... ?”
“ஆம் இனிமேல் நீ எப்படி இருக்கப்போகிறாய் என்பதை வைத்துதான் நம் வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறது என்று முடிவு செய்ய முடியும்”
“இப்போதே நல்லாத்தானே இருக்கேன்.. நீங்கள் சொல்வதை தெளிவாகச் சொன்னால் நல்லாயிருக்கும் .. இப்படி மூடு மந்திரம் எல்லாம் வேண்டாமே..”
“சரி, தெளிவாகவே சொல்கிறேன்.. இனிமேல் பெண்பிள்ளையா இலட்சணமா வேலைக்குப் போனோமா, வந்தோமான்னு வர வேண்டும். போற இடத்தில் பெரிய ஹீரோயின் மாதிரி வேலையெல்லாம் காட்டாமல் இருக்கனும். உனக்கு ஒரு பிரச்சனையின்னா என்னால உன் பின்னால எல்லாம் அலைஞ்சிட்டிருக்க முடியாது”
ஓ... இப்போது புரிந்தது சகானாவிற்கு கார்த்திக்கின் பிரச்சனை என்னவென்று.. எந்த பதிலும் சொல்ல முடியாமல் அவனை ஆழ்ந்து பார்த்த பார்வையில் அவனும் ஏதோ யோசிப்பவனாக மௌனமானான்..
இரவு முழுவதும் உறக்கமில்லாமல் தவித்தபோதும், கணவனின் மெல்லிய குறட்டை ஒலியும் சற்று வேதனையை அதிகப்படுத்தியது. தன்னைப்பற்றிய நினைவு சிறிதும் இல்லாதவனாக தன் கடமை முடிந்துவிட்டதாக ஆனந்தமாக உறங்குபவனை என்ன சொல்ல முடியும்..
சகானா அப்படி ஒன்றும் அன்னை தெரசா போன்று சமூக சேவகியெல்லாம் இல்லை.. ஆனால் தன் கண் முன்னால் நடக்கும் ஒரு அநியாயத்தைக் கண்டும் காணாமல் போகும் அளவிற்கு மனிதாபிமானமற்ற மிருகமும் அல்ல. இப்படி ஒரு பெரிய பிரச்சனையாக அந்த சிறிய சம்பவம் வந்து சேரும் என்று அன்று அவள் நினைக்கவில்லைதான்.. ஆனாலும் இருவரும் ஒருவரைப் பற்றி மற்றவர் முழுமையாக புரிந்து கொள்வதற்கு இது அடித்தளமாக அமைந்ததை நினைத்து அந்த வருத்தம் காணாமல் போனது..
அன்று தன்னுடைய இருசக்கர வாகனம் பழுதானதால் டவுன் பஸ்ஸில் சென்றுவர வேண்டிய சூழல். மாலை வீடு திரும்பும் போது பேருந்தில் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணற எப்போது கீழே இறங்குவோம் என்று துடித்துக் கொண்டிருந்தபோதுதான் தனக்கு சற்று முன்னால் ஒரு நடுத்தர வயதுடைய பெண் தோளில் மாட்டியிருந்த கைப்பையை ஒருவன் பிளேடு போட்டு அடியில் கிழித்து, உள்ளேயிருந்து ஒரு கவரில் இருந்த பணத்தை வெகு இலாவகமாக எடுத்துக் கொண்டிருந்தான்.. அந்தப் பெண் ஏதும் அறியாதவளாக அப்படியே கம்பியை பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள். நேருக்கு நேராக முதல் முறையாக இப்படி ஒரு திருட்டைக் கண்டவுடன் அதிர்ச்சியில் ஏய்.. என்று கத்திவிட்டாள். அடுத்த நொடி அவனுடைய கோபமான பார்வை தன்னை ஊடுறுவியது.. என்ன நினைத்தாளோ, சட்டென்று அவனை எட்டிப்பிடித்து விட்டாள், சத்தம் போட்டுக் கொண்டே..
பணம் திருட்டு கொடுத்த அந்தப் பெண்ணும் அதை உணர்ந்து கொண்டு சத்தம் போட ஆரம்பிக்க, பேருந்தில் அருகில் இருந்தவர்களும் கூச்சலிட இறுதியில் போலீஸ் ஸ்டேசன் நோக்கி பேருந்து செல்ல வேண்டியதாகிவிட்டது. அங்கு ச்மரசம் செய்யப்பட்டு அவனிடமிருந்த பணம் இருந்த கவரை போலீசார் வாங்கிக் கொடுத்த போது அந்தப் பெண் தான் 50000 ரூபாய் வைத்திருந்ததாகவும், வெறும் 4000 மட்டும் திருப்பிக் கொடுத்திருப்பதாகவும் சொல்லிக் கதறினாள். ஆனால் போலீசாரோ அவளை பொய் சொல்கிறாயா என்று மிரட்டிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண் தன் மகளின் திருமணத்திற்காக கையில் இருந்த நகையை விற்று பணம் பண்ணிக்கொண்டு வந்ததற்கான ஆதாரத்தை காட்டிக் கொண்டிருந்தாள். இந்தப்பிரச்சனை இழுத்துக்கொண்டு போனதால் வந்த வினைதான் இது.
இப்படியே பாதியில் விட்டுவர முடியாமல் அந்தப் பெண்ணிற்கு நியாயம் கிடைக்க வேண்டுமே என்று தனக்குத் தெரிந்த இலவச சட்ட வ்ல்லுநரையும் ஏற்பாடு செய்து கொடுத்தாள். இது எப்படி தன் வாழ்க்கைக்கு இடைஞ்சலாக முடியும் என்பதுதான் புரியாத புதிராக இருந்தது அவளுக்கு.
அடுத்த நாள் காலை எழுந்தவுடன் அவன் நேரிடையாக வந்து கேட்டான்., ”என்ன முடிவு செய்திருக்கிறாய்?” என்று....
என்ன முடிவு செய்ய வேண்டும் என்று புரியவில்லை. அவன் தன்மீது கொண்டிருக்கும் அபரிமிதமான அன்பும், தனக்கே உடமையான சொத்தை பத்திரமாக பாதுகாத்துவைத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வும்தான் தன்மீது இத்துனை கோபம் கொள்ளச் செய்கிறது என்பதை உணர்ந்தாலும், தன்னால் மேற்கொண்டு என்ன செய்ய முடியும் என்று யோசிக்க வேண்டியதாகவே இருந்தது... கார்த்திக் மட்டும் மிகவும் உறுதியாக இருந்தான். மேற்கொண்டு இது போன்று பிரச்சனைகள் இனி வராது என்று அவள் உறுதியளித்தால் மட்டுமே தன்னால் சேர்ந்து வாழமுடியும் என்பதில்...
சகானா எதுவுமே பேசாமல் துணிமணிகளை அடுக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து லேசாக அதிர்ச்சியடைந்தாலும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் பேசாமல் இருந்தான். அவள் தாய் வீட்டிற்குக் கிளம்புகிறாள் என்று தெரிந்தும் தடுக்காமல் மௌனமாக இருந்ததே அவனுடைய கோபம் குறையாததை தெரிவித்தது.
காலம்தான் இதற்கு தீர்ப்பு சொல்லக்கூடும்.. வீட்டிற்கு பெட்டியுடன் முகம் நிறைய கவலையுடன் வந்த மகளின் பெற்றோர் ஒன்றும் புரியாமல் தவித்துக் கொண்டிருக்க, கார்த்தி தன்னைப்புரிந்து கொண்டு விரைவில் வந்து ஏற்றுக் கொள்வான் என்று காத்துக்கொண்டிருக்கிறாள் சகானா..
நன்றி : திண்ணை வெளியீடு
கற்பித்தல் - கலீல் ஜிப்ரான்
கழுகும் – சிறுமியும்
கழுகும் – சிறுமியும் அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...
-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
பவள சங்கரி h ttps://www.youtube.com/watch?v=AXVK2I37qbs சமுதாயத்தில் பல புரட்சிகளை ஏற்படுத்திய, சிவவாக்கியர், ‘புரட்சிச் சி...