Saturday, June 8, 2013

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (15)



பவள சங்கரி

தடையின்றிக் கேட்கவும், சிந்திக்கவும்
சுயமாய் ஒன்றைக் கண்டறிய முடிகிறபோதும்தான்
உண்மையில் நீங்கள் அறிவுத்திறன்
உடையவராய் இருக்க முடியும்.
ஜே.கிருஷ்ணமூர்த்தி - வாழ்வியல் ஞானி!



ஒரு சிற்றரசன் ஒரு முறை ஒரு பேரரசனுடன் போர் புரிய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டான். படை வீரர்களுக்கு பெரும் பதட்டமான சூழ்நிலை. காரணம், மிகச் சிறிய படையை  உடைய தங்களால் அத்துனைப் பெரிய படையை எதிர்த்து நின்று போரிட முடியுமா என்ற அச்சமே. அரசனின் ஆணையையும் மீற முடியாதே. இந்த எண்ணமே அவர்களை துவண்டு போகச் செய்தது. இதனை உணர்ந்துகொண்ட அரசன் படை வீரர்களை அழைத்து, நம்மிடம் மன உறுதி இருந்தால் எத்தகைய பகைவனையும் சமாளிக்கலாம், நம் மனம் எத்துனை பலம் வாய்ந்ததாக  இருக்கிறதோ அதைக்கொண்டுதான் எதிரியை வீழ்த்த முடியும், அதனால் எக்காரணம் கொண்டும் மனம் தளரக்கூடாது  என்று நம்பிக்கையூட்டும் விதமாக பேசியதோடு, தாங்கள் தங்கியிருந்த காளிமாதா கோவிலின் முன் தங்களுடைய ஆன்ம பலத்தையும் சோதித்துக் கொள்ளலாம் என்று திட்டம் போட்டார். ஒரு நாணயத்தை எடுத்து சுண்டிவிட்டு, தலை விழுந்தால் நாம் போரில் எக்காரணம் கொண்டும் தலைகவிழ மாட்டோம் என்று உறுதியாகச் சொல்லி தேவி முன்னால் சங்கல்பம் செய்துகொண்டு அந்த நாணயத்தை சுண்டிவிட்டார். வீரர்கள் மிக ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்தபோது அரசன் சொன்னது போலவே தலை விழுந்ததாம். உடனே வீரர்களிடம் உற்சாகம் பொங்கியதோடு, காளிதேவியின் அருள் தங்களுக்குப் பூரணமாகக் கிட்டிவிட்டது, இனி தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று உறுதியாக நம்பிய படை வீரர்கள் போருக்குத் தயாராகிவிட்டனர். அதே உறுதியோடும், உற்சாகத்தோடும் போரிட்டவர்கள் இறுதியாக வெற்றி மாலையும் சூடி வந்தனர். எல்லாம் முடிந்து அனைவரும் மகிழ்ச்சியாக நாடு திரும்பியவுடன், தளபதி அரசனிடம் மெல்ல வந்து, ‘அரசே, ஒரு வேளை நீங்கள் நாணயத்தை சுண்டிய பொழுது அதில் பூ விழுந்திருந்தால் என்னவாகியிருக்கும். வீரர்கள் போரிடவேத் தயங்கியிருப்பார்களே, காரியமே கெட்டிருக்குமே’ என்று ஆச்சரியமாகக் கேட்டார். அப்போது அரசன் புன் சிரிப்புடன் ஒன்றுமே பேசாமல் அந்த நாணயத்தை எடுத்துக் காட்டினார். அதில் இரண்டு பக்கமும் தலை மட்டுமே இருந்தது. அரசரின் சமயோசித புத்தியையும், வீரர்களுக்கு மன உறுதியை ஊக்குவிக்கும் விதமாக செயல் புரிந்ததற்கும் முதலில் அரசனின் தன்னம்பிக்கையும், மன உறுதியும் மற்றும் சரியான வழிநடத்தலுமே என்பதை புரிந்து கொண்டார். இந்த தலைமைப் பண்பு மட்டுமே ஒரு காரியத்தை வெற்றிப்பாதையை நோக்கிச் செலுத்துகிறது. 

Tuesday, June 4, 2013

என்ன ஆச்சு சுவாதிக்கு?



பவள சங்கரி

 “சுவாதி.. சுவாதீம்மா.. என்னடா பன்றே. மணி 8.30 ஆகுது. ஸ்கூல் லீவுன்னா இவ்ளோ நேரமா தூங்கறது. எழுந்திரிச்சி வாம்மா. அம்மா, ஆபீஸ் போகணுமில்ல. நீ குளிச்சிட்டு சாப்பிட வந்தாத்தானே உனக்கு டிபன் குடுத்துட்டு நானும் நிம்மதியா கிளம்ப முடியும். வாடா குட்டிம்மா, ப்ளீஸ்.. என் தங்கமில்லையா நீ..”

ஒன்றும் பேசாமல் திரும்பிப் படுத்துக் கொண்ட அன்பு மகளின் போக்கு இந்த மூன்று நான்கு நாட்களாக வித்தியாசமாகத்தான் இருக்கிறதுஎதைக்கேட்டாலும் மௌனம்தான் பதில். கலகலவென பேசித்தீர்க்கும் மகளிடம் இந்த குணம் ரொம்ப வித்தியாசமாகத்தான் இருக்கிறது. எல்லாம் வயசுக் கோளாறாக இருக்குமோ. இந்த வருசம் பிளஸ் டூ வேற. இப்படி இருந்தா எப்படி படிக்கப்போறாளோ. இந்த ஞாயிற்றுக்கிழமை அவளுக்குப் பிடித்த இடமான மாமல்லபுரம் ஃபிஷ்ஷெர்மேன்ஸ் கோவ்விற்கு [Fisherman cove] கூட்டிச்சென்று அவளிடம் மனம்விட்டு பேச வேண்டும். என்ன பிரச்சனைன்னு கேட்கணும். இதுக்கும் மேல காத்துக்கிட்டிருக்க முடியாதலால் பணிப்பெண்ணிடம் கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டுக் கிளம்பினாள். வங்கியின் உயர் அதிகாரியாகிய தானே நேரம் கழித்துச் செல்வது சரியாகாது என்பதால் மாருதியை விரட்டிக்கொண்டு போகவேண்டியதாகியது.