Saturday, October 22, 2016

தாய் மொழி!




உலகளாவிய ஆய்வு நிறுவனத்தின் முடிவுகளின்படி, குழந்தைகள், வாசிக்கவும், எழுதவும் கற்கவேண்டிய முதல் மொழி தங்கள் தாய்மொழி மட்டுமேதான்! குறைந்தபட்சம், ஒரு நிமிடத்திற்கு  45 முதல் 60 வார்த்தைகள் வரை சரளமாக வாசிக்க முடிந்தால் மட்டுமே அவர்களால் வாசித்த அந்த விசயத்தை முழுமையாக உள்வாங்க முடியுமாம். இத்தன்மை அவரவர்கள் தாய்மொழியால் மட்டுமே சாத்தியமாகுமாம். இந்த அடிப்படை ஞானம் வாய்க்கப்பெற்ற குழந்தைகள் மிக எளிதாக இரண்டாம் மொழியில் வல்லமை பெற்று சாதனையும் படைத்துவிடுகிறார்களாம்... பெற்றோர்கள் அவசியம் சிந்தித்துணரவேண்டிய விசயம்!

Wednesday, October 19, 2016

தேசிய தமிழ் காவலர்!


பவள சங்கரி
சமீபத்தில் மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பா.ஜ.க மூத்த தலைவர் தேசிய தமிழ் காவலர், தமிழ்வேள் – இல.கணேசன் அவர்களை வல்லமை வாழ்த்துகிறது.




நேற்று பொற்றாமரை கலை இலக்கிய மன்றத்தின் மாதாந்திர இலக்கியக் கூட்டமும், மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதை முன்னிட்டு பொற்றாமரை குழுவினர் மற்றும் நண்பர்களின் பாராட்டு விழாவும் ஒரு குடும்ப விழா போன்று மிக எளிய முறையில் நடைபெற்றது. இலக்கிய உலகின் ஆகச்சிறந்த ஆளுமைகள் ‘எழுத்துச் சித்தர்’ திருமிகு. பாலகுமாரன், திருமிகு.சிவசங்கரி, திருமிகு. திருப்பூர் கிருஷ்ணன், திருமிகு.கவிக்கோ ஞானச்செல்வன், திருமிகு ஹெச்.ராமகிருஷ்ணன் போன்றோர் கலந்துகொண்டு வாழ்த்தினர். சகோதரிகள் குமாரி அஞ்சனி – அஸ்வினி ஆகியோரின் இனிமையான வீணை இசையுடன் இனிதே ஆரம்பித்தது இந்த விழா. ‘வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாள்’ என்று கலைவாணியை காட்சியில் நிறுத்தி, ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ எனத் தொடர்ந்து வாழ்த்தி, ‘குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா’ என மிக அழகானதொரு இசை வேள்வியை நிகழ்த்தி அனைவரையும் இசையில் மெய்யுருகச் செய்தனர். வளர்ந்துவரும் இசைக் கலைஞர்களை உற்சாகப்படுத்தி வரும் பொற்றாமரை அமைப்பு இம்முறை இக்கலைஞர்களை அறிமுகப்படுத்தி கௌரவித்துள்ளார்கள்.


மாதமொரு இலக்கிய அறிமுகம் என்ற வரிசையில், திரு ம.வெ. பசுபதி அவர்கள் அருமையாக ஆசாரக்கோவை பற்றியும், கவிதை உறவு ஆசிரியர் திரு ஏர்வாடி ராதாகிருஷ்ணன் அவர்கள் ‘சொந்தமாய் ஒரு சொர்க்கம்’ என்ற தலைப்பில் உறையாடியதைத் தொடர்ந்து தலைவர் தலைமையுரையுடன் விழா சிறப்பாக நிறைவடைந்தது.