அமெரிக்காவிலிருந்து, இந்தியா வந்து சேரும் அநத நீண்ட பயணம் துளியும் சலிப்பு தட்டவில்லை இருவருக்கும். தங்களின் காதல் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் உன்னத தருணம் அல்லவா அது! இத்தனை நாட்கள் பட்டாம்பூச்சியாய் படபடக்கும் அந்த கண்களும், குழந்தைச் சிரிப்பும், கன்றின் துள்ளலும் எங்குதான் மறைத்து வைத்திருந்தாளோ தெரியவில்லையே என்று, தன் தோளின்மீது தலைசாய்த்து சுகமாக உறங்கும் அந்த வளர்ந்த குழந்தையை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். தன் செய்கை தனக்கே சங்கடத்தை ஏற்படுத்த மெல்லிய புன்னகையுடன் பார்வையை மறுபுறம் திருப்பிக் கொண்டான். அதற்குள் பயணம் முடிந்துவிட்டதா என்று லேசான வருத்தம் கூட வந்தது. இன்னும் 10 நாட்கள்தானே நம் உடமையாகப் போகும் பொக்கிசம்தானே என்று மனதை தேற்றிக் கொண்டு, விமான நிலையத்தில் அவந்திகாவின் உறவினர்களுடன், தன் சகோதரனையும் சந்திக்கத் தயாரானார்கள் இருவரும். அவந்திகாவின் சிவந்த கன்னங்கள், வெட்கத்தினால் மேலும் சிவந்து அவள் அழகின் உச்சத்தை வெளிக்கொணர்ந்தது.
அன்று வெள்ளிக்கிழமை சுப முகூர்த்த நாளில் இளமாறன் மற்றும் அவந்திகா இருவருக்கும், காலை சுப வேளையில் நிச்சயதார்த்தம் முடிவுசெய்யப்பட்டிருந்தது. மங்களம் அழகாக பச்சைப்பட்டு மடிசார் புடவையில் மங்களகரமாக வந்து நிற்க, ராமச்சந்திரன் மிகுந்த அதிர்ச்சியுடன்,
”நான் தான் உன்னை பச்சை பட்டு மட்டும் உடுத்த வேண்டாம் என்று சொன்னேனே, அதற்குப் பிறகும், அதே பச்சைப் புடவையை உடுத்திக் கொண்டுவந்து நிற்கிறாயே.. ஒரு தடவை சொன்னா புரியாதா நோக்கு…”?
“இல்லண்னா இது புது புடவை அதான் ஆசையா உடுத்திண்டேன். உங்களுக்குப் பிடிக்கலேன்னா, மாத்திண்டு வந்திடவா…”?
“பின்ன… அதைத்தானே ஆரம்பத்திலிருந்து சொல்லிண்டிருக்கேன். புரியலயோ நோக்கு.? போய் சீக்கிரமா மாத்திண்டு வா, மணியாறது பார்..”
சரி என்று சொல்லிய்வாறே மளமளவென்று புடவையை மாற்றிக்கொண்டு கிளம்பினாள். அதற்கு மேல் எந்த விளக்கமும் அவரிடம் எடுபடாது என்று நன்றாகவே தெரிந்து வைத்திருந்ததால், எந்த வாதமும் செய்யாமல் சட்டென்று சிகப்பு வண்ண ஆடையை மாற்றிக்
கொண்டு, தலை நிறைய பூவுமாக, முகம் நிறைய பூரிப்புமாக, மலர்ந்த முகத்துடன் கிளம்பினாள்.
உறவினர்கள் அனைவரும் திருமண மண்டபத்தில் ஒன்றுகூடி, ஒரு சிறு ராமநாம பஜனையும் முடித்துவிட்டு, மணமேடையில் சுவாமியும், அம்மனும் போல சர்வ அலங்காரத்துடன் மாறனும், அவந்திகாவும் அமர்ந்திருக்க, மூத்தோர் கூடி நிச்சயதார்த்த ஓலையை வாசித்து, அதில் இரு வீட்டாரும் கையொப்பமிட்டு, மணமகனையும், மணமகளையும் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கும்படி அழைத்தனர். முதலில் மாப்பிள்ளையின் பெற்றோரை அழைத்தனர் பாதபூசை செய்வதற்கு. பெற்றவர்களின் காலில் பூ போட்டு வணங்கி ஆசிர்வாதம் பெறுவார்கள். மங்களம் மாமி உறவினர்களுக்கு பூவும், தாம்பூலமும் கொடுத்துக் கொண்டிருந்தார். கணவர் அழைப்பதைக் கேட்டவர் தாம்பூலத்தட்டை அனுவைக் கூப்பிட்டுக் கொடுத்து மற்றவர்களுக்குக் கொடுக்கச் சொல்லிவிட்டு மணவறை நோக்கி அடியெடுத்து வைத்தவ்ர், சற்று உயரமான மேடையாக இருந்த காரணத்தினால், ஓரத்தில் இருந்த சின்ன இரும்புத்தூணைப் பற்றிக் கொண்டு மேடையின் மீது ஏற எத்தனிக்க …. உடனே வீல் என்ற அலறல் சத்தம் மண்டபத்தையே புரட்டிப் போட்டது. சற்று நேரம் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. திடீரென்று மாறனின் பெரியப்பா, யாராவது உடனே மெயினை ஆஃப் பண்ணுங்கோ.. சீக்கிரம் என்று கத்தியவுடன் தான் அந்த அபாயம் புரிந்தது அனைவருக்கும்.. யாரோ வெளியில் இருந்தவர்கள் சட்டென்று மின் இணைப்பைத் துண்டிக்க, அப்போதுதான் மங்களம் மாமியைப் பிடித்திருந்த மின்சாரம் பட்டென்று தூக்கிப் போட்டது. ராமச்சந்திரன், ”ஐயோ மங்களா…” என்று அலறி விழப்போக மாறன் ஓடிவந்து தந்தையைத் தாங்க, அதற்குள் மற்ற உறவினர்கள் அவசரமாக மங்களம் மாமிக்கு காற்று விசிறி தண்ணீர் தெளிக்க முயல, அதற்குள் யாரோ ஆம்புலன்சிற்கு போன் செய்ய, மண்டபமே பரபரப்பாக செயல்பட்டது. ஆம்புலன்சில், மங்களம் மாமியை தூக்கிப் படுக்க வைத்துக் கூட்டிச் சென்றனர். ராமச்சந்திரனும் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு, தானும் ஓடிச்சென்று ஆம்புலன்சில் ஏறிக்கொண்டார். மாறனும், அவந்திகாவும், மாலையைக் கழட்டி வைத்துவிட்டு, மருத்துவமனை செல்லத் தயாரானார்கள் மற்றொரு காரில்.
மாலை நான்கு மணிக்கு மேல் மங்களம் மாமி கண் விழித்த பின்புதான் அனைவருக்கும் உயிரே வந்தது. ஆனால் கீழே விழுந்ததில் முட்டி எலும்பு விலகி, அத்தோடு கெண்டைக்கால் எலும்பிலும் ஒரு விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், மாவுக்கட்டு போட்டால் ஒரு மாதத்தில் சரியாகிவிடும் என்றும் மருத்துவர் சொன்னதைக் கேட்டவுடன் அனைவருக்கும் மிக்க வருத்தம் தான். திருமணத்திற்கு 10 நாட்களே இருக்கும் நிலையில் இப்படி ஆகிவிட்டதே என்ன செய்வது என்ற பெருங்கவலை ஆட்கொண்டது. அதைவிட அவந்திகாவின் பெற்றோரும், பாட்டி, தாத்தாவும், இப்படி ஒரு சம்பவம் நடந்தது அபசகுனமாகக் கருதி ஒருவேளை திருமணத்தை நிறுத்தி விட்டால் என்ன செய்வது என்று மிகவும் கவலை கொண்டு விட்டனர்… மாறனும், அவந்திகாவும், அதிர்ச்சியின் உச்சத்திலிருந்து இன்னும் மீளாமலே இருந்தனர். அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற கவலை இருவரின் முகத்திலும் தெரிந்தது.
எத்தனையோ சோதனைகளுக்குப் பிறகு கூடிய திருமணம் இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தம் ஒரு புறமும், ஆரம்பத்திலிருந்தே அப்பா பயந்தது போலவே ஆகிவிட்டதே… இனி அவர் என்ன முடிவு எடுக்கப் போகிறாரோ தெரியவில்லையே, இவ்வளவு தூரம் வந்த பிறகு கட்டாயம் இத்திருமணத்தை நிறுத்தும் அளவிற்கு கல்மனது கொண்டவரல்லர் என்றாலும், அம்மாவிற்கு ஏதாவது ஒன்று என்றால் துளியும் தாங்க மாட்டார். எப்படியும் சமாதானம் செய்து விடமுடியும் என்ற நம்பிக்கையும் இருந்தது..
அவந்திகாவின் குடும்பத்தாரின் முகத்திலும் அதே அளவு அச்சம் இருந்தது. தங்கள் மகளின் வாழ்க்கை என்னாகுமோ என்று.
மங்களம் மாமி கண் முழித்தவுடன் தான் ராமச்சந்திரன் முகத்தில் இருந்த கவலை ரேகைகள் சற்றே குறைந்தது. தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது நல்ல வேளை.. அப்பாவின் முகத்தையும், அம்மாவின் நிலையையும் மாறி, மாறி பாவமாக பார்த்துக் கொண்டிருந்த மகனின் எண்ணோட்டங்களைப் புரிந்து கொண்ட அவர்,
“மாறன், அவந்திகாவை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு ஒருநடை சென்று வந்துவிடு” என்று சொன்னவுடன் தான் அனைவரின் முகத்திலும் ஒரு தெளிவே வந்தது.. நல்ல வேளையாக அவர் எந்த தப்பான முடிவும் எடுக்கவில்லை என்பதில் பெருமகிழ்ச்சிதான் என்றாலும், அம்மாவால் ஓடி ஆடி வேலை செய்ய முடியாதே என்று கவலையாகவும் இருந்தது. திருமணத்தை 3 மாதங்கள் தள்ளி வைத்துவிடலாம் என்று கூட நினைத்தான் மாறன். ஆனால் ராமச்சந்திரன் குறித்த நேரத்தில் திருமணம் நடக்க வேண்டும் என்று உறுதியாக இருந்ததில் மகிழ்ச்சியாகவும் இருந்தது. இந்தக் கல்யாணமே வேண்டாம் என்று அத்துனை உறுதியாக இருந்த அப்பாவே, இப்படி ஒரு சம்பவம் நடந்து, அம்மா படுக்கையில் இருக்கும் வேளையில்கூட, பதட்டம் கொள்ளாமல் நிதானமாக யோசித்து ஒருவரையும் பாதிக்காமல் நல்ல முடிவாக எடுத்திருப்பதைக் கண்டு பூரிப்பாக இருந்தது. உரிமையுடன், திருமண காரியங்கள் அத்துனையும் இழுத்துப் போட்டுக் கொண்டு, அம்மாவின் இடத்தில் இருந்து தன்னலம் கருதாமல் செய்து கொண்டிருக்கும் அனுவைப்பார்க்க ஆச்சரியமாக இருந்தது மாறனுக்கு. நட்பாகட்டும், உறவாகட்டும் தன்னைச்சுற்றி உள்ள அத்தனை பேரும் தன்மீது உண்மையான பாசம் கொண்டு, இருப்பதைக் காணும்போது தன் பலம் பன்மடங்கு கூடிப்போனதை அவனால் உணர முடிந்தது. அந்த வரிசையில் இன்று அவந்திகாவும் இணைந்து கொள்ள, ஆனந்தக் கண்ணீருடன், அர்த்தமுள்ள பார்வையை அவள் மீது வீசியபோது, அதனை உணர்ந்து கொண்டதன் வெளிப்பாடாக அவன் கைகளைப் பற்றி ஓர் அழுத்தம் கொடுத்தாள். நல்வரமாக அமைந்த தம் வாழ்க்கையை எண்ணி மனதார அந்த ஆண்டவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டிருந்தான் மாறன்.
சுபமாக நிறைவுற்றது.
படங்களுக்கு நன்றி:
http://cameras.about.com/od/digitalphotographycontest/ig/March-2006-Photo-Gallery/Lovers–Moon.htm
http://spdigitalstudio.blogspot.in/2011/10/marriage.html
நன்றி : வல்லமை