Friday, September 6, 2019
Monday, September 2, 2019
தங்கமே .. தங்கம்
தங்கமே ...... தங்கம்!
பவள சங்கரி
இந்திய மக்கள்
சேமித்து வைத்திருக்கும் தங்கத்தின் மதிப்பு 95 ஆயிரம் கோடி டாலர்கள் அதாவது
சுமார் 50 லட்சம் கோடி ரூபாய்கள் என்று சர்வதேச ஆய்வு நிறுவனமான மக்குவேரி
தெரிவிக்கிறது. நம் மக்கள் நகைகளாகவும்,
தங்கக்காசுகளாகவும் சேமித்து வைத்திருக்கும் இந்த தங்கம், நாட்டின் மொத்த
உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 50 சதவீதமாக இருக்கலாம் என்பது இவர்கள் கணிப்பு! அதாவது இந்தியர்களின் இந்த தனிப்பட்ட சேமிப்பாக
இருக்கும் தங்கம் உலகின் மொத்த தங்கக் கையிருப்பில் சுமார் 11% இருக்கும் என்ற ஆச்சரியமான தகவல்களையும் இந்த அறிக்கை அளிக்கிறது. நம் மக்களைப் பொருத்தவரை தங்கம் என்பது ஒரு அலங்காரப் பொருள் என்பதல்லாது,
ஒரு பாதுகாப்பான சேமிப்புக் கருவி என்ற அளவில் தனித்து நிற்பதை உணர முடிகிறது.
ஒரு
குடும்பத்தின் செல்வ நிலையை மதிப்பிடும் முக்கியக் காரணிகளில் தங்கத்திற்கு
சிறப்பான ஒரு இடம் உள்ளது. இது ஒரு ஆடம்பரப் பொருள் என்ற நிலையைத் தாண்டி வாழ்க்கையின், குறிப்பாக பெண்களின் பாதுகாப்பிற்காக சேமிக்கப்பட்டு வரும் இன்றியமையாத
சொத்தாகக் கருதப்படுகிறது.
தங்க நகைகள்
என்பது தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
அழகிற்கும் ஆடம்பரத்திற்காகவும் மட்டுமே நகைகள் என்பதல்லாமல், உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காகவும் இவைகள்
பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பல வகையான நம் பாரம்பரியச் சம்பிரதாயங்களைப்
போல நகை அணிவதிலும் மறைமுகமாக விஞ்ஞான கருத்துகளைக்
கொண்டிருக்கிறார்கள் நம் தமிழர்கள்.
நகைகள் அணிவதன்
மூலம் நம் உடலில் உள்ள பல முக்கியமான வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடலின் ஒவ்வொரு
உறுப்புகளும் பராமரிக்கப்படுகின்றன என்றும் கூறப்படுகின்றது. அதிலும் ஆபரணங்கள் தங்கத்தில்
அணியப்படுவதன் காரணம் இந்தியா போன்ற பூமத்தியரேகைக்கு அண்மையில் இருக்கும் நாடுகள்
வெப்பமான நாடுகள். தங்கம் அணிவதன் மூலம் இந்த வெப்பத்தை ஓரளவிற்குக் குறைத்துக் கொள்ள
ஏதுவாகும் என்று நம்பப்பட்டு வருகிறது. உடலோடு ஒட்டி உறவாடும் இந்த தங்க ஆபரணங்கள்
தங்கள் மேனி அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளவை என்ற நம்பிக்கையும் வலுவாக உள்ளது.
பலவிதமான நவநாகரீக, பல்வேறு உலோகங்களால் ஆன நகைகள் சந்தைக்கு வந்தாலும்
இன்றும் தங்க நகைகளின் மதிப்பு மட்டும் சற்றும் குறைந்துவிடவில்லை. குறிப்பாகப் பெண்கள்
எத்துணை ஏழ்மை நிலையில் இருந்தாலும்கூட ஒரு பொட்டுத் தங்கமாவது அணிந்திருக்க வேண்டும்
என்று விரும்புவார்கள்.
மக்கள் விரும்பி
விரல்களில் அணியும் மோதிரம் மன அழுத்தத்தைக் குறைக்கவும், இனிமையான பேச்சுத் திறன்,
அழகான குரல் வளம் போன்றவற்றை ஊக்குவிப்பதோடு. இதயக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் போன்றவை நீங்கவும் உதவுவதாக
நம்பப்படுகிறது. இதே போன்று வளையல்கள், வெள்ளி மெட்டி,
வெள்ளிக் கொலுசு போன்ற அனைத்து ஆபரணங்கள் அணிவதற்கும் ஒவ்வொரு வகைக்
காரணம் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
தமிழர்கள்
தங்கள் செல்வ மகளின் திருமணத்தின் போது தங்கள் சக்திக்கு ஏற்ப நகைகள் அணிவித்து
புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைப்பது வழக்கம். ஆதி காலத்திலேயே இந்தியாவின் செல்வ
நிலையை அறிந்த வேற்று நாட்டவர்கள், மிக ஆர்வமாக கடல்வழி வாணிபத் தொடர்பு
கொண்டிருந்தனர். சங்க காலத்தில் உரோம் நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையிலான
வணிகம் நடைபெற்றதற்குச் சான்றாக உரோமானியக் காசுகள் தமிழகத்தில் அகழாய்வுகளில்
கிடைத்துள்ளன. அவைகளில்
திண்ணன், எதிரான் சேந்தன் என்ற பெயர்கள் பிராமி எழுத்துக்களில்
பொறிக்கப்பட்டுள்ளன. சேந்தன் என்பவர் அகநானூற்றுப் பாடலில்
குறிப்பிடப்பட்டிருக்கிறார்.
தங்க நகை பயன்பாடு
எந்த காலத்தில், யாரால் முதன்முதலில்
முன்னெடுக்கப்பட்டது என்ற ஐயம் எழுவது இயல்பான ஒன்றுதான். சுமேரிய
நாகரிகம் உலகின் மிகப் பழமையான நாகரிகங்களுள் ஒன்று. உலகிலேயே
முதன் முதலில் மெசபதோமியாவில் (தற்போதைய ஈரான், ஈராக்) தங்கம் ஓர் புனிதமானப் பொருளாக
மட்டுமன்றி ஆடம்பரம், அலங்காரம் என அனைத்துக்குமானதாகப் பயன்படுத்தப்பட்டது.
அதன்பின் அதே காலகட்டத்தில், எகிப்தியர்களும் தங்கத்தை சுத்திகரிக்கும் கலையைக் கண்டுபிடித்தனர்.
தங்கத்தை ஆபரணமாகப் பயன்படுத்தினர். 4 -5ஆம் நூற்றாண்டுகளைச்
சேர்ந்த மன்னர்கள் சிலர் தங்க நாணயங்களை வெளியிட்டனர். பொ.ச.மு.
560 – பொ.ச.மு. 546இல் லிடியா என்ற தற்போதைய மேற்கு துருக்கி
மன்னர் கிரீசசு முதன் முதலில் மீப்பெரும் அளவில் சுத்தமான தங்க நாணயங்களை அறிமுகப்படுத்தினார்.
உலகிலேயே முதன் முறையாக வர்த்தகப் பயன்பாட்டுக்கும் கொண்டுவரப்பட்ட சிங்கம் மற்றும் காளையின் முகங்களைக் கொண்ட அரச
முத்திரை பதிக்கப்பட்டிருந்த நாணயம் இதுதான் என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை
சங்ககாலந்தொட்டு, பல்வேறு அரச மரபினர்களால் அக்கம், மாடை, கழஞ்சு,
அன்றாடு நற்காசு, கருங்காசு, ஈழக்காசு என பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு
புழக்கத்தில் இருந்த நாணயங்கள் பொன்னாலும், வெள்ளியாலும், செம்பாலும்
செய்யப்பட்டிருந்தன. மீப்பெரும் கொள்முதல், இராணுவம், அரச
நடவடிக்கைகள் போன்றவைகளுக்கான கட்டணங்களுக்காகத்
தங்க நாணயங்கள் பயன்படுத்தப்பட்டன. புலவர்களும், பாணர்களும் அரசனை
வாழ்த்திப்பாடி பரிசுப்பொருள்களுடன்
பொற்காசுகளும் பெற்றுச் சென்றுள்ளதை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகின்றது.
சோழர் காலக் கல்வெட்டுகள் குறிக்கும் காசு, பழங்காசு, மாடை முதலிய
தங்க நாணயங்களில் 127 நாணயங்கள் தவளேச்சுரத்தில் அகழாய்வில் கிடைத்துள்ளதும்
குறிப்பிடத்தக்கது.
சேரநாட்டின்
மிளகு, பாண்டிய நாட்டின் முத்து, சோழநாட்டின் துணிவகைகள் போன்றவைகள் உரோமானிய
மக்களை மிகவும் கவர்ந்ததால் பொன், வெள்ளி ஆகியவற்றால் செய்த காசுகளை பண்டமாற்றாகக்
கொடுத்து அவைகளை வாங்கியுள்ளனர். இதற்குச் சான்றாக அகழாய்வில் பல உரோமானியக்
காசுகள் தமிழகத்தில் கிடைத்துள்ளதைக் குறிப்பிடலாம்.
தங்கம் மற்றும்
வெள்ளியின் விலை எவ்வாறு நம் நாட்டில் நிர்ணயிக்கப்படுகிறது? அன்றாடம் இதன் விலையில் மாற்றம் ஏற்படுவது ஏன்?
தங்கமும் வெள்ளியும்
உலகின் பொதுச் சொத்தாகக் கருதப்படுவதால் அவற்றின் விலையும் உலகம் முழுவதும் ஒரே சீராக
இருக்க வேண்டியதும் அவசியமாகிறது. அந்தந்த நாட்டின் பண மதிப்பின் அடிப்படையிலேயே தங்கம், வெள்ளியின் விலை மாறுபடுகிறது.
நம்மூர் பங்குச்
சந்தைகள் போன்று பிரித்தானியத் தலைநகர் இலண்டனில், புல்லியன் எக்சேஞ்ச் என்று ஒன்று
உள்ளது. தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் சந்தை
இது தான். உற்பத்தி மற்றும் தேவையை ஒட்டுமொத்தமாகக் கட்டுப்படுத்தும் இந்த புல்லியன்
எக்சேஞ்சில் 14 வங்கிகள் பங்குதாரர்களாக உள்ளன. இவற்றில் 11 வங்கிகள் ஸ்காட்லாந்தைச்
சேர்ந்தவை. இவை தங்கச் சுரங்கங்களுடன் ஒப்பந்தம் செய்து, உற்பத்தி அளவுக்கேற்ப சந்தை
விலையை நிர்ணயிக்கின்றன. உற்பத்தி மற்றும் தேவையை ஒட்டுமொத்தமாகக் கட்டுப்படுத்துவது
இந்த புல்லியன் எக்சேஞ்ச் தான். அங்கத்தினர்களான வங்கிகள் ஒன்றுகூடி, அறிவிக்கும் விலையே,
உலகம் முழுவதும் அன்றைய விலையாக, தீர்மானிக்கப்படுகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு
வீழ்ச்சியடைந்தாலோ, தங்கச் சுரங்கங்களில் உற்பத்தி குறைந்தாலோ, கச்சா எண்ணெயின் விலை
குறைந்தாலோ, தங்கத்தில் முதலீடு செய்வதும், அதன் தேவையும் அதிகரித்துவிடுகிறது. TROY-OUNCE என்பது தங்கத்தின் எடையினை அளக்கப்
பயன்படும் அடிப்படை அலகு.
பொதுவாக இணைய வழி
வர்த்தகம் தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதன் முக்கிய காரணியாகச் செயல்படுகின்றது. இந்த
இணைய வழி வர்த்தகத்தின் முக்கியமான அம்சம் என்றால் அது, நேரடியாகப்
பணம் எதுவும் செலுத்தாமலே, வெறும் வாய் வார்த்தைகள் அல்லது இணைய
மடல் மூலம் கூட தங்களுக்குத் தேவையான அளவில், இத்தனை கிலோ தங்கம்
ஒதுக்கிவைக்க வேண்டி பதிவு செய்துவிட்டால், அவர்கள் கணக்கில் அந்தத் தங்கம் சேர்க்கப்படும்.
அதாவது ஒட்டுமொத்தமாக ஓரிருவரே இந்தியாவிற்குத் தேவையான தங்கத்தை, அயல் நாட்டிலிருந்தும்
பதிவு செய்துவிடலாம். இந்த வகையில் தங்கத்தின்
தேவை செயற்கையாக அதிகரிக்கப்படும் அபாயம் நேர்ந்துவிடுகிறது. ஆக, தங்கம் விலையை பெரும்பாலும் இணைய வர்த்தகமும், மிகச் சொற்பமான அளவில் மட்டுமே
தனிமனிதத் தேவையும் நிர்ணயிக்கின்றது.
2014 ஆம்
ஆண்டில் தங்கம் அதிகம் உற்பத்தி செய்த நாடுகளில், முதன்மையாக சீனாவும் அதனைத்
தொடர்ந்து ஆசுத்திரேலியா, உருசியா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, பெரு ஆகிய நாடுகளும்
விளங்கின.
2014 ஆம் ஆண்டில்
உலக அளவிலான தங்க உற்பத்தி 2860 டன். நம்
இந்தியா இதே ஆண்டில் 1.56 டன் தங்கத்தை மட்டுமே உற்பத்தி செய்துள்ளதோடு
843 டன் தங்கத்தை நுகர்வு செய்து உலகளவில் இரண்டாம் இடத்தில்
இருந்துள்ளது. கடந்த 2015 -16 ஆம் நிதியாண்டில்
ரூ.1.80 இலட்சம் கோடி மதிப்புள்ள தங்கத்தை நம் இந்தியா இறக்குமதி
செய்துள்ளது.
உலக தங்க கவுன்சில்
வெளியிட்டுள்ள மதிப்பீட்டின்படி இந்தியாவுக்கான தங்கம் பயன்பாடு , சென்ற ஆண்டில்
771 டன்னாக இருந்ததாகவும், இந்த ஆண்டில் சற்றுக் குறைந்து 700 டன்னாக மட்டுமே இருக்கும்
என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாகத் தங்கத்துக்கான தேவை 700 டன் முதல் 800 டன் வரையில்
இருக்கும் என்று உலக தங்க கவுன்சிலின் நிர்வாக இயக்குநரான சோமசுந்தரம் கூறியுள்ளார்.
2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை மட்டுமே, 480 டன் தங்கத்தை பல்வேறு அரசாங்கங்களின் ரிசர்வ் வங்கிகள் வாங்கியுள்ளன என்ற தகவலையும்
அறிய முடிகின்றது. நம் நாட்டின் ரிசர்வ் வங்கி 40 டன் தங்கத்தை வாங்கியதன் மூலம் மொத்த இருப்பு 592 டன்னாக
அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே தங்கம் விலை ஏறிக்கொண்டிருக்கிறது
என்பதும் குறிப்பிடத்தக்கது. பொதுவாக இறக்குமதி செய்யப்படும்
பொருட்களுக்கு அமெரிக்க டாலரிலேயே பணம் கொடுக்க வேண்டும். அந்த
வகையில் இந்திய உரூபாய்க்கு எதிராக அமெரிக்க டாலர் மதிப்பு கூடும்போதும் நம் நாட்டில்
தங்கம் விலை அதிகரிப்பதைத் தவிர்க்க இயலாது. இதோடு முக்கிய நாடுகளில்
அரசியல் மாற்றங்கள், நிலையற்ற தன்மை, போர்
மூளும் அபாயம், போன்ற பல்வேறு சர்வதேச காரணங்களும் தங்கம் விலை
ஏற்றத்தை நிர்ணயித்துவிடுகின்றன.
பொதுவாக, தங்கத்தின்
மதிப்பு காரட் அடிப்படையில் அளவிடப்படுகிறது. சொக்கத் தங்கம் என்றழைக்கப்படும் சுத்தமான
தங்கம், 24 காரட் மதிப்புடையது. 100 சதவீதம் தூய்மையானதாக இருந்தாலும் நகை செய்ய உகந்ததாக
இருப்பதில்லை. நகைக்கு பயன்படுத்தப்படும் 91.67 சதவீதம் சுத்தமான தங்கம் 22 காரட் கொண்டது
என்று கூறப்படுகிறது. இருப்பினும் 75 சதவீதம் சுத்தத் தங்கமான 18 காரட்டையே நகை செய்வதற்குப்
பயன்படுத்தினாலே அது அரிதான விசயம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
உலகமயமாக்கத்தின்
பின்னர், உள்நாட்டுப் பொருளாதார அம்சங்களோடு, சர்வதேச அம்சங்களும் சேர்ந்து தங்கத்தின்
விலையைப் பாதிக்கின்றன. சமீபத்தில் நம் இந்திய மைய அரசால் சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை
அறிக்கையில் தங்கத்திற்கான இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தங்கத்தை அன்னியச்
செலாவணிகளுக்கு ஈடாக சேமித்து வைக்கும் நாடுகளில் முன்னணியில் இருப்பது, உலகின் பொருளாதார வளமிக்க நாடான அமெரிக்கா ஆகும்.
சமீபத்திய புள்ளிவிவரப்படி அமெரிக்க நாட்டு அரசிடம் 8,132 டன், அதாவது 8,13,2000 கிலோ தங்கம்
சேமிப்பில் உள்ளது. அந்நாட்டின் மொத்த செலாவணி கையிருப்பில் 73%
என்பதும் குறிப்பிடத்தக்கது. நம் இந்திய நாடு 10-வது இடத்தில் 557.70 டன் தங்கம் இருப்பு கொண்டுள்ளது.
நிலத்தடியில் தனி
நிலையில், சுரங்கத்தில் புதைந்திருக்கும் தங்கம் பாறைகளின்
மீது ரேகை போன்று படர்ந்திருப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இந்தப் பாறைகளில் வெடி வைத்துத் தகர்த்த பின்பு இரசாயன (வேதியியல்) முறையில் தங்கத்தைப்
பிரித்தெடுக்கிறார்கள். அதனை மின்பகுப்பு முறையில் சுத்தம் செய்து பின் பயன்படுத்துகிறார்கள்.
உலகில் மொத்தமாகக்
கிடைக்கக் கூடிய தங்கத்தில் பாதி அளவிற்கு தென் ஆப்பிரிக்காவில் கிடைக்கின்றது.
கனடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஆசுத்திரேலியா, கொரியா , தென் அமெரிக்கா , இந்தியா
ஆகிய நாடுகளில் தங்கம் வெட்டி எடுக்கப்படுகிறது. கர்நாடகா மாநிலத்தில் கோலார்
தங்க வயல் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. ஆனாலும் தற்போது இந்த
கோலார் தங்கச் சுரங்கம் மூடப்பட்டதால் தங்கத்தின் உற்பத்தி வெகுவாகக்
குறைந்துள்ளது. அண்மைக் காலமாக இலங்கையிலும் மிகச் சொற்ப அளவில்
தங்கம் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.
நாணயம் (Currency) என்பது பொருட்களையும் சேவைகளையும்
பரிமாறிக் கொள்வதற்கான ஒரு "பரிமாற்ற அலகு" என்பார்கள். ஒரு நாட்டின் நாணய மதிப்பு கணக்கிடப்படுவதில் தங்கம் பெரும் பங்கு வகிக்கிறது.
அதாவது ஒரு நாடு எந்த அளவிற்கு அவர்களின் நாணயம் அல்லது பணத்தை அச்சடிப்பது என்பதை
நிர்ணயிக்கும் சக்தி இந்த தங்கம் மட்டுமே. ஒவ்வொரு நாடும் தங்கள்
மத்திய வங்கி ( ரிசர்வ் வங்கி) யில் தங்கத்தை கையிருப்பில் வைத்திருப்பார்கள். அவரவர்கள்
இருப்பு வைத்துள்ள தங்கத்தினுடைய மதிப்பிற்கு ஏற்றவாறு மட்டுமே அந்த நாட்டு
அரசாங்கம் செலாவணி அல்லது நாணயம் அல்லது ரூபாய் நோட்டுகளை வெளியிட்டுவருகிறது.
அந்தந்த நாட்டின் செலாவணியை குறிப்பிட்ட எடையளவு தங்கத்திற்கு மதிப்பிடுவார்கள்.
தங்கம் மென்மையான உலோகம் என்பதால் தூய்மையான தங்கத்தில் மட்டும்
செய்யப்படும் நகைகள், நாணயம், உறுதியாக இருக்காது என்பதால் தங்கத்துடன் ஒரு
குறிப்பிட்ட அளவு செம்பு அல்லது வெள்ளி போன்ற உறுதியான உலோகங்களைக் கலந்து
அணிகலனும் பண்டம், பாத்திரங்களும் செய்கின்றனர். பேனா முள், கைக்கடிகார உறுப்புகள் ஆகியவையும் தங்கத்தால்
செய்யப்படுகின்றன. தங்கத்தை மிக மெல்லிய தகடாகவோ அல்லது கம்பியாகவோ அடிக்கலாம் என்பதால்
வேண்டிய வடிவில் ஆபரணங்கள் செய்யலாம்.
மது அல்லது சாராயத்தில் தங்கத் துகள்களை
சிறிதளவு அரைத்து பொடியாக்கிப் பருகுவர் . இதனை தங்கபஸ்பம் என்று கூறுவர் .
தங்கபஸ்பம் பருகினால் மேனி பொன் போன்று பொலிவடையும் என்று பலரும் நம்புகிறார்கள்.
வரலாற்று காலந்தொட்டு
நச்சுத்தன்மையற்ற தூய தங்கம் அரிய உலோகமாகவே கருதப்பட்டு வந்தது. 24 காரட் சுத்தத் தங்கம் என்றாலும் இதில் ஆபரணங்கள்
செய்ய முடியாது. 22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன.
22காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற
மற்ற உலோகமும் கலந்ததாகும். 18 காரட் என்பது 75 சதவீதம் தங்கமும், 14 காரட் என்பது
58.5 சதவிகிதம் தங்கமும், 9 காரட் என்பது 37.5 சதவீதம் தங்கமும் கலந்ததாகும்.
சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தங்கத்தின் மதிப்பு கிடைக்கின்றது.
பழங்காலந்தொட்டு
நம் நாட்டின் ஆலயங்கள், ஆன்மீக மடங்கள் போன்றவைகள் தங்கக் கருவூலங்களாகவும் செயல்பட்டுள்ளதை அறிய
முடிகின்றது. ஒரிசாவின் ஒரு சைவ மடத்தில் கோவில் கருவறை
முழுவதும் தங்கத்திலான செங்கல்லால் கட்டியுள்ளனர். அந்தக்
கோவிலின் பரம்பரைப் பூசாரி ஒருவர் ஒவ்வொரு கல்லாக எடுத்து விற்கும்போது மாட்டிக்
கொண்டதால் இந்த விசயம் வெளியே தெரிய வந்தது. அதுபோல
திருவனந்தபுரம் பத்மநாபர் கோவிலில் பாதாள அறையில் தங்க ஆபரணங்கள் குவிந்து கிடந்த
செய்தியும் நாம் அறிவோம்.
கொள்முதல்
செய்யப்படும் தங்கத்தில் 37% மட்டும் அணிகலன்கள் செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. 30% எலக்ட்ரானிக்ஸ் தொழில்துறையிலும், 30% மருத்துவம்,
மின்துறையிலும், 3% இதர செயல்பாடுகளுக்கும்
பயன்படுத்தப்படுகின்றன. தங்கம் எளிதில் மின்கடத்தி என்பதும்
குறிப்பிடத்தக்கது. அணிகலன் செய்வதற்காக மட்டும் ஒவ்வொரு
ஆண்டும் 3 முதல் 4 டன்கள் தங்கம்
இறக்குமதி செய்யப்படுகிறது என்றால் மீதக்கணக்கைப் போட்டுக்கொள்ளலாம்.
தங்கத்தின்
விலையைப் பொருத்து, சட்டப்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட விலைகள் வேறு, வணிகர்கள்
அவரவர்கள் திறமைக்கேற்றவாரு வாங்கும் விலை நிர்ணயிக்கப்படுவதாகவும்
சொல்லப்படுகிறது.
நாம் நகையை
வாங்கும்போதும் அதில் கலந்திருக்கும் செம்பிற்கும் சேர்த்தே பணம் கொடுக்கிறோம். தங்கத்திலாவது
செம்பு இவ்வளவு சதவிகிதம் என்பது உறுதியாகத் தெரிகிறது. ஆனால்
வெள்ளியில் சேர்க்கப்படும் 20% அலுமினியத்திற்கும் சேர்த்துதான் வெள்ளியின் விலை தருகிறோம்.
சில
மாதங்களுக்கு முன்பு ஒரு பத்திரிக்கை செய்தியில் படித்த ஆச்சரியமான நிகழ்வு ஒன்று
நினைவிற்கு வருகிறது. வெளிநாட்டுக்காரர் ஒருவர் தாம் வாங்கிய நகைகளுக்கு தங்கத்திற்கு உரிய விலை
மட்டுமே கொடுக்க முடியும், அதில் கலந்திருக்கும் செம்பிற்கு
அதற்குரிய விலையும், பௌதீக விதிப்படி எந்தவொரு பொருளும்
மறைந்து விடாது என்ற வகையில் சேதாரம் என்பதையும் தன்னிடமே திருப்பிக் கொடுக்க
வேண்டும் என்றும் விவாதம் செய்து பெற்றிருக்கிறார் .. இப்படித்தான் நகைக்கடைகள்
செழிப்படைகின்றன என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். மக்களின்
ஏமாற்றம் நகைக்கடைக்காரர்களின் ஏற்றம் (இலாபம்) என்பதே நிதர்சனம்!
சேதாரக் கதை!
ஒரு அரசருக்கு
வெகு நாட்களாக (தங்கபஸ்பம்
சாப்பிடுபவர் போல) ஒரு சந்தேகம். சேதாரக்
கணக்கில் இவ்வளவு தங்கம் வீணாகிறதே, அதெல்லாம் என்ன ஆகும்,
எங்கே போகும் என்பதுதான் அது. அதனைப்
போக்கிக்கொள்வதற்காக ஒரு முறை ஒரு பொற்கொல்லரை அழைத்து அவருக்குத் தமது அரண்மனையிலேயே ஒரு தொழிற்கூடம் அமைத்து,
தகுந்த பாதுகாப்புடன் 2 கிலோ தங்கத்தில்
ஆபரணம் செய்யப் பணித்தார். இறுதியில் நகை செய்து
முடித்தபின்பு ஒன்றரை கிலோ தங்கத்திற்குரிய ஆபரணங்கள் மட்டுமே கணக்குக்
கொடுத்திருக்கிறார் அந்தப் பொற்கொல்லர். மீதமெல்லாம்
சிந்திச் சிதறிய சேதாரக் கணக்காக்கிவிட்டு கிளம்பிவிட்டார். அரசருக்கோ
பெரும் ஆச்சரியம். இத்தனை பாதுகாப்பையும் மீறி அந்த சேதாரம்
எப்படி காணாமல் போனது என்பதுதான். அரசர் அந்த பொற்கொல்லரைத்
தனியே அழைத்து மிரட்டி, உண்மையைச் சொன்னால்
சிரைச்சேதத்திலிருந்து தப்பிக்கலாம் என்று கூறியவுடன் அந்த பொற்கொல்லரும் உண்மையை
எடுத்துரைத்தார். அதாவது அன்றாடம் வேலை முடிந்தவுடன் கை,
கால்கள் அலம்பும் இடத்திலிருந்து தண்ணீர் செல்லும் சாக்கடையின் நேரே
அவருடைய மகன் ஒரு சல்லடையுடன் நிற்பாராம். அங்கு அடித்து
வரும் தங்கத்தை அந்த சல்லடை மூலம் அரித்து எடுத்துச் சென்று விடுவாராம் ... இப்படியே அரை கிலோ தங்கம்
அடித்துச் சென்றிருக்கிறது சேதாரமாக என்பதை அறிந்து ஆச்சரியத்தில் உறைந்து
போனாராம் அரசர்!
வெப்பத்
தடுப்பு உடைகள், சூரியக் கண்ணாடிகள், விண்வெளி உடைகள் போன்றவற்றிலும் தங்கம்
பயன்படுத்தப்படுகின்றது. வெப்பத்தையும் மின்சாரத்தையும் நன்கு கடத்தும் இந்த உலோகம் காற்றில் தன்
நிறம் மங்குவதோ அன்றி துரு பிடிப்பதோ கிடையாது என்பதால், எப்போதும் பளபளப்பாகவே
இருக்கும். 100 ° செல்சியசு வெப்பநிலை வரை ஓசோன்
தாக்குதலையும் எதிர்க்கும் சக்தி வாயந்தது. அந்த வகையில் உலகில்
தங்கம் கொள்முதல் செய்யாத நாடுகள் என்பது ஏதுமில்லை என்பதும் முக்கிய செய்தி!
நன்றி - கோகுலம் கதிர்
Subscribe to:
Posts (Atom)
-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
பவள சங்கரி h ttps://www.youtube.com/watch?v=AXVK2I37qbs சமுதாயத்தில் பல புரட்சிகளை ஏற்படுத்திய, சிவவாக்கியர், ‘புரட்சிச் சி...