Wednesday, April 18, 2012

வெண்ணிலவில் ஒரு கருமுகில்!(33)

மாறனின் அம்மா, மங்களம் சாமி கும்பிட்டுவிட்டு கோவிலிலிருந்து வெளியே வந்து கொண்டிருக்கிறார். ஒத்தையடிப் பாதை வழியாக நடந்து வந்தே ஆக வேண்டும். திடீரென்று சாலையோர தோட்டத்திலிருந்து கருநாகம் ஒன்று சீறிப்பாய்ந்து மளமளவென்று வெளியே வந்துவிட்டது. மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தவர்கள் காதில் புஸ்…… புஸ் என்று ஒரு சத்தம் வித்தியாசமாக வர இருவரும் சட்டென்று திரும்பிப் பார்க்க, அங்கு கருநாகம் ஒன்று மூன்று சுற்று போட்டு தலையை உயர்த்திக் கொண்டு படம் எடுத்து ஆடிக்கொண்டிருந்தது. பகீர் என்றது இருவருக்கும். அந்த நாகத்தின் பார்வை முழுவதும் மங்களத்தின் மீதே இருந்தது. சட்டென்று இருவரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஆட்டத்தை நிறுத்திவிட்டு சரசரவென ஓடத்துவங்கிய அந்த விசநாகம், மங்களம் இருந்த திசை நோக்கி ஓடிவர, செய்வதறியாது திகைத்த மங்களம் ஓட எத்தனிக்க அதுவும் பின்னாலேயே துரத்திக் கொண்டு ஓட, ராமச்சந்திரனோ, ஒன்றுமே புரியாமல் தானும், மங்களா, மங்களா.. என்று கத்திக் கொண்டே பின்னால் ஓட, தலைசுற்றி, கண்கள் கட்டி மயங்கும் நிலையில், மங்களம் உடுத்தியிருந்த பச்சை வண்ண பட்டுப் புடவை மட்டும் லேசாக தெரிய…

”மங்களா.. மங்களா.. பாத்து… பாத்துப்போடீ…….. மங்களா.. ஐயோ மங்களா…. “

ராமச்சந்திரன் போட்ட சத்தத்தில் அசந்து உறங்கிக் கொண்டிருந்த மங்களம் எழுந்து, வியர்த்துக் கொட்டி உடகார்ந்திருந்த கணவனைக் கண்டவுடன், என்னமோ ஏதோவென்று நடுங்கிப்போனாள். தண்ணீர் எடுத்துக் கொடுத்து சற்று ஆசுவாசப்படுத்தி காரணம் கேட்டபோதுதான் தெரிந்தது, ஏதோ கெட்ட கனவு கண்டு பயந்து போயிருப்பது. மணி நான்காகிவிட்டது, இன்னும் ஒரு மணி நேரத்தில் பால்காரரே வந்துவிடுவார். கணவரிடம், உடனே அவசரமாக எழுந்திருக்க வேண்டாம், கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு மெதுவாக எழுந்தால் போதும் என்று சொல்லிவிட்டு எழுந்து போய் பல் துலக்கி, முகம் கழுவி வந்தவள், உட்கார்ந்து கொண்டே இருந்த கணவரைக் கண்டு,

“என்னன்னா… என்ன ஆச்சு? இன்னும் உட்கார்ந்துண்டே இருக்கேள்.. சித்தநாழி ரெஸ்ட் எடுங்கோண்ணா”

“மங்களா, நேக்கு என்னமோ மனசே சரியில்லடி.. இது ஏதோ துர்சகுனமா தெரியறது. மனசுக்கு சங்கடமா இருக்கு”

:”அதெல்லாம் ஒன்னும் ஆகாதுண்ணா.. பயப்படாதேள். மாறனோட கல்யாணம் நல்லபடியா முடிஞ்சா எல்லாம் சரியாயிடும். அந்த குழப்பம்தான் உங்களை பாடாய்ப் படுத்தறது. நம்ம குலதெய்வம் கோவில்ல நல்லபடியாத்தானே வாக்கானது நேத்து போனபோது ”

“ம்ம்ம்.. முதன்முதல்ல நாம மாறனோட கல்யாண விசயமா கோவிலுக்குப் போனபோது, தேங்காய் அழுகி போயிடுத்தே.. மறந்துட்டியா.. இப்ப இப்படி ஒரு கனவு வேற..”

“அதெல்லாம் ஒன்னும் ஆகாதுண்ணா.. மனதை குழப்பிக்காதேள். முதலடி எடுத்து வச்சாச்சு. இனி எல்லாம் தானா நடக்கும்”

வாசலில் பால்காரர் மணி அடிக்க மங்களம் எழுந்து போய்விட்டாலும், ராமச்சந்திரன் தனக்குள்ளேயே ஏதோ பேசிக் கொண்டார்.. அத்துனை குழப்பம் அவர் மனதில் இருந்தது.. நேற்றுதான் அவந்திகாவின் வீட்டில் சென்று பேசிவிட்டு, ஜோசியரிடம் சென்று நிச்சயதார்த்தம் மற்றும் மற்ற விசயங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிட்டு வந்தார்கள். இன்றுதான் மாறனைக் கூப்பிட்டு விசயத்தைச் சொல்லி லீவிற்கு அப்ளை பண்ணச் சொல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தால் இப்படி ஒரு கனவு.. என்னமோ ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டு படுக்கையைவிட்டு எழுந்தார்.

மாறனின் போன் வரும்போது எதையும் வெளிக்காட்டக்கூடாது என்று முடிவெடுத்ததால், உற்சாகத்தை சிரமப்பட்டு வரவழைத்துக் கொண்டார். இன்னும் 40 நாட்கள்தான் இருந்தது திருமணத்திற்கு. நிச்சயதார்த்தம் முடிந்து ஒரே வாரத்தில் திருமண தேதியும் குறித்தாகிவிட்டது. அப்பொழுதுதான் இரண்டு பேரும் வந்து திருமணம் முடித்துவிட்டு கிளம்ப முடியும். இனி தேவையில்லாமல் எதையும் யோசித்து குழப்பிக் கொள்ளக் கூடாது என்ற முடிவுடன் முகத்திலும் உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு காலைக்கடன்களை முடித்துக்கொண்டு, மகனின் அழைப்பிற்காகக் காத்திருந்தார். மனைவி மணக்க மணக்க பில்டர் காபியுடன் வந்தவள் கணவனின் மாற்றம் கண்டு மனநிம்மதியும் கொண்டாள். சில விசயங்களை மனதில் தேவையில்லாமல் சுமந்து கொண்டிருப்பதுதான் வேதனையே… நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போனால் வேலையும் ஒழுங்காக நடக்கும், மனப்பாரமும் குறையும். வாழ்க்கை கொடுத்த அனுபவப்பாடம் அருமையாக வேலை செய்தது.

அடுத்தடுத்து காரியங்கள் மளமளவென்று நடக்கத்துவங்கின. சிலபேர்களின் ராசி ஒரு காரியத்தைத் துவங்கி வைத்தால் அது மளமளவென எல்லையைத் தொட்டுவிடும். அப்படி ஒரு ராசி ரம்யாவிற்கும்! தந்தை இந்த நல்ல விசயத்தை தன்னிடம் சொன்னவுடன், மாறன் செய்த முதல் வேலை ரம்யாவிற்கு போன் செய்து ஆனந்தக் கண்ணீருடன் இந்த நல்ல செய்தியை பகிர்ந்து கொண்டதுதான். ரம்யாவிற்கும் மிகுந்த மனமகிழ்ச்சி. நல்ல நட்பின் உன்னதம் அங்கு பளிச்சிட்டது.

அவந்திகாவும், மாறனும் அன்று இரவு முழுவதும் ஆரம்பத்திலிருந்து அனைத்து கதைகளையும் அலசிக் கொண்டு பொழுது விடிந்தது கூட தெரியாமல்,அலாரம் அடித்த சத்தத்தில் சுய நினைவிற்கு வந்து, அதற்குப் பிறகு அவசர அவசரமாக காலைக்கடன்களை முடித்து பணிக்குத் தயாரானார்கள்..எவ்வளவு பெரிய போராட்டத்திற்குப் பிறகு இந்தக் கிளிகள் உல்லாசமாகப் பறக்கப்போகிறது அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட ஓர் இரவு போதாதே. இருப்பினும் கடமை அழைக்க தம் வழியில் இருவரும் செல்ல வேண்டியதாகி விட்டது. வழியெல்லாம் மாறனின் மனஓட்டத்திற்கு ஏற்றவாறு நீ பாதி… நான் பாதி கண்ணே என்ற பாடல் ஒலித்து மகிழ்ச்சியைக் கூட்டியது.. அடுத்து இருவரும் அலுவலகத்தில் விடுமுறைக்கு விண்ணப்பிக்கவும், ஊருக்குச்செல்லத் தயாராகவும் நாட்கள் நிமிடமாகக் கரைந்து கொண்டிருந்தது.

திருமண ஏற்பாடுகள் வெகு விரைவாக நடந்து கொண்டிருந்தது. அவந்திகாவின் வீட்டிலும் மிக்க மகிழ்ச்சியுடன் மகளின் திருமண ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். ராமச்சந்திரன் மட்டும் மனதின் ஓரத்தில் ஒரு சிறு உறுத்தலுடனேயே வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தார். ஆயிற்று மகன் வரப்போகும் நாளும் நெருங்கிவிட்டது. உற்சாகத்தில் மனம் துள்ளினாலும் கடவுள் நம்பிக்கை முன் எப்போதும்விட மிக அதிகமாகவே இருந்தது.

அனுவின் திருமணத்திற்கான முயற்சியும் நல்லபடியாக முடிந்தது மிகுந்த மன நிறைவை ஏற்படுத்த , தன் சகோதரியின் மகிழ்ச்சியிலும் பங்கு கொள்ள முடிந்தது. மாறனின் திருமணத்திற்கு ஒரு மாதம் தள்ளிதான் அனுவின் திருமணம் என்பதால் அவர்களும், மூத்த மகனின் குடும்பத்தாரும் வந்து, வீடே கலகலப்பிற்கு பஞ்சமில்லாமல் இருந்தது.

மாறனும், அவந்திகாவும் ஒன்றாகவே கிளம்புவதற்கான பயண ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர். மகிழ்ச்சியின் எல்லையில் மிதந்து கொண்டிருந்தனர் என்றுதான் கூற வேண்டும். ரம்யாவிடம் அதிகமாக பேசும் வாய்ப்புகூட குறைந்து போனது மாறனுக்கு. அன்று எப்படியும் கொஞ்ச நேரமாவது அவளிடம் பேச வேண்டும் என்று அதற்கான சந்தர்ப்பம் பார்த்திருந்தான். அவளே மாறனைத் தேடிக்கொண்டு ஓடிவந்தாள்..

“மாறன்.. ரிஷி மெயில் செய்திருக்கான்.. ஒரு ஹேப்பி நியூஸ்ப்பா… “

“ ஹேய்.. உன்னைத்தான் தேடிக்கிட்டிருந்தேன். எங்க போன… “?

“இல்லப்பா.. காலையில வர அவசரத்தில ஒன்னும் சாப்பிடாம வந்துட்டேன். ஒரே பசி, அதான் காண்டீன் பக்கம் போயிட்டு வந்தேன்”

“சரி. ’சொல்லு என்ன அவ்வளவு அவ்சரமா வந்த.”

“ம்ம்.. ஆமாம் மாறன். வந்தனாவிற்கு, இப்ப புதிதா கொடுத்த ட்ரீட்மெண்ட் நல்லா ஒத்துக்கிச்சாம். இனி அவ உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையாம். நான் கும்பிட்ட தெய்வம் கைவிடவில்லை. வந்தனா கட்டாயம் பிழைக்க வேண்டும். நல்லவர்கள் வாழ வேண்டும்.”

அதற்குமேல் அவளால் பேச முடியவில்லை.. கண்கள் கலங்கி தொண்டை கம்மி, மௌன்மானாள். ரம்யாவிற்கு எவ்வளவு நல்ல மனது என்று ஆச்சரியமாக இருந்தது மாறனுக்கு. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமே என்ற கவலையும் உடன் வந்து வாட்டியது. தன் திருமணம் முடிந்தவுடன் முதல் வேலையாக ரம்யாவிற்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் முயற்சியில் இறங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். ரம்யாவின் பெற்றோரும் பலமுறை தன்னிடம் கூடச் சொல்லி புலம்பிவிட்டார்கள். அவர்களையும் திருப்திப்படுத்த வேண்டும். அத்ற்கேற்றார்போல் முழுமூச்சுடன் இறங்கி செயல்பட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

நிச்சயதார்த்தத்திற்கு நாள் நெருங்கிவிட்டதால் மாறனும்,அவந்திகாவும் ரொம்பவே மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள். இருவரும் சேர்ந்து ஊருக்குக் கிளம்பியாகிவிட்டது. ஒன்றாகப் பயணம் செய்யப்போகிற ஆனந்தம் வேறு, பலவிதமான கற்பனைகளுடன் மணித்துளிகள் நகர்ந்து கொண்டிருந்தன.

அடுத்த இதழில் முடியும்


நன்றி : வல்லமை

Tuesday, April 17, 2012

பாதை


பாதை தெளிவாகத்தான் இருக்கிறது.
பயணம்தான் கையகப்படவில்லை!

பாதையும் பயணமும் நேர்ப்பட்டாலும்
கோழையாய் மனம் மறுதலிக்கிறது.

வெறுமையாய் கிடக்கும் பாதையாயினும்
பொறுமையாய் காத்துக்கிடக்கிறது காலம்.

வெறுமையும் பொறுமையும் இருந்தாலும்
வறுமையும் சோகமுமாய் கழியுதுகாலம்.

முள்ளாய் கிடக்கும் மரமும் பூத்துக்குலுங்கும்
கல்லாய் கிடக்கும் பாதையும் பூவாய்நிறையும்

முள்ளும் கல்லும் பக்குவமாய் ஆக்கினாலும்
சுயமும் கனமும் இழந்தே கழியுதுகாலம்

நம்பிக்கை ஒளிவீசும் வான்மேகம்
தம்கைநம்பி வாழும் குதூகலம்

பாதையும் பாதையும் இணையும் காலம்
வான்மேகமாய் பொழியும் ஆனந்தகீதம்.


பி.கு. உப்புமடச்சந்தி பதிவர் ,அருமைத் தோழி ஹேமாவின் கவிதைப் போட்டிக்காக எழுதுயது. நன்றி ஹேமா.


Sunday, April 15, 2012

அன்பெனும் தோணி.......




2012ல் உலகம் அழிந்துவிடும் என்கிறார்களே.. இது உண்மையா அம்மா? என்று வினிதா என்கிற வினு கேட்டது அவள் அம்மாவிற்கு ஆச்சரியமாக இருந்தது.

“இது என்ன கேள்வி வினு. உன் எண்ண்ம் ஏன் இப்போது இதில் போகிறது...? “

“இல்லமமா, புவி வெப்பமயமாதலும் இதற்கொரு காரணம் என்று படித்தேன்.. அதான்”

”அதிருக்கட்டும், இப்ப இதெல்லாம் பேசற காலமா வினு, உனக்கே இது நியாயமா இருக்கா...”

வினுவின் அம்மா கோமதிக்கு பெரும் கவலையாகி விட்டது. இருக்காதா பின்னே.... திருமணம் ஆகி 3 நாட்களே ஆன ஒரு புது மணப்பெண், அதுவும் அன்றுதான் முதல் இரவு காணப்போகும் ஒரு இளம்பெண்! ஒவ்வொரு பெண்ணும் பலவிதமான கற்பனைகளும், கனவுகளும் சுமந்து கொண்டு அரை மயக்கத்தில் அந்தரத்தில் மிதந்து கொண்டிருக்கும் பருவமல்லவா அது? தான் அதே பருவத்தில் மதிமயங்கி செய்த ஒரு காரியத்தை இன்றுவரை உறவினர்கள் கிண்டல் செய்து பேசிக்கொண்டுதானே இருக்கிறார்கள். பின்ன, டேப் ரிக்கார்டரில் தன் புதுக்கணவருக்கு மிக விருப்பமான ஒரு டூயட் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, அவரோ ஓரக்கண்ணால் தன்னை விழுங்கப் பார்க்க, நாணமும், பரவசமும் ஒருங்கே பின்னலிட, என்ன செய்கிறோம் என்பதே அறியாமல், வளைந்து, நெளிந்து சுவரோரம் நின்று கொண்டிருந்தவள், அலைபாயும் கைகளோ, தன்னிச்சையாக அந்த டேப் ரிக்கார்டரில் சொருகி இருந்த ஒயரை இழுத்து.... அருகில் இருக்கும் கணவருக்கும் அதே நிலை. சுற்றி என்ன நடக்கிறது என்பதே புரியாமல் வைத்த கண் வாங்காமல் புது மனைவியையே பார்த்துக் கொண்டிருக்க..... வீட்டில் இருக்கும் மற்ற உறவினர்களோ இந்த புதுமணத் தம்பதியினரின் நிலை கண்டு ஊடே புகுந்து கலைக்கவும் விரும்பாமல், சூழலின் அபாயமும் கண்டு ஒதுங்கவும் முடியாமல் தவிக்க.... அடுத்த கட்டமாக அந்த ஒயரை எடுத்து அப்படியே வாயில் வைக்க கைகள் எத்தனிக்க இதற்கும் மேல் பொறுமை காக்க முடியாத என் மாமா ஓடி வந்து,

“ஏய்....ஏய்.. கோமதி, என்னம்மா பன்ற.... என்னது இது”
என்று போட்ட சத்தத்தில் இருவரும் சுய நினைவிற்கு திரும்ப, வீட்டில் ஒரே சிரிப்பு மழைதான். இன்றும் அவ்வப்போது இந்த சம்பவத்தைச் சொல்லி சிரிப்பதுண்டு.

ஆனால் இந்த பெண் என்னடாவென்றால் இப்படி ஒரு சூழலில் உலகம் அழியப்போறதைப் பற்றி பேசுகிறாள் என்றால், இவள் மனதில் எத்துனை அச்சமும், குழப்பமும் இருக்கும். இருக்கத்தானே செய்கிறது... இதுதானே பிரச்சனையே. இல்லையென்றால் 15 நாட்களில் மேட்ரிமோனியலில் பார்த்து தேர்ந்தெடுத்து ஒரு மாப்பிள்ளைக்கு, ஜோசியம், ஜாதகம் என்று காரணம் காட்டி திருமணத்தை இவ்வளவு அவசரமாக செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறதே. ஆண்டவன் அருளால் இனி நடப்பதெல்லாம் நல்லதாக நடக்க வேண்டும்...எத்துனை போராட்டங்கள், எத்துனை ஜகதலப்பிரதாபங்கள் செய்திருக்கிறோம் இந்த திருமணம் முடிப்பதற்குள். இவள் என்னடாவென்றால், அத்தனையும் வீணாக்கிவிடுவாள் போலிருக்கிறதே, கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அவளை சமாதானப்படுத்தினாலும், அன்று இரவு எந்த பிரச்சனையும் இல்லாமல் மகளின் முதல் இரவு நல்லபடியாக நடக்க வேண்டுமே என்ற பேரச்சம் கொண்டு வந்துவிட்டது மகளின் போக்கு!

திருமணம் முடிந்து மூன்று நாட்கள் ஆகியும் இன்றும் மாப்பிள்ளை வீட்டில் உறவினர் கூட்டம் குறைந்தபாடில்லை. ஒரே விருந்தும், கும்மாளமுமாக,திருமண வீடென்றால் எப்படி இருக்க வேண்டுமோ அந்த இலக்கணம் சற்றும் மாறாமல் அப்படியே இருந்தது. ஆனால் வினுவின் அம்மா,அப்பா மற்றும் தம்பியின் முகங்களில் மட்டும் ஏதோ கிலி பிடித்தது போன்று இருந்ததை ஒருவரும் நல்ல வேளையாக தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. புது இடம் என்பதால் சங்கடமாக இருக்கும் போல என்று நினைத்துக் கொண்டார்கள். இரவு விசேசத்திற்குத் தயாரானார்கள். குழந்தைகளையெல்லாம் தூஙகச் சொல்லி ஒரு அறையில் தாத்தா பாட்டியுடன் செட்டில் செய்துவிட்டு, சோபன அறையை அலங்காரம் செய்ய ஆரம்பித்தார்கள். கோமதியும், கணவரும், தாங்கள் செய்ய வேண்டிய முறைக்கு சற்றும் குறைவில்லாமல் நிறைவாக அனைத்துச் சீர்களும் செய்தாலும், ஏதோ குறைபாடு இருப்பது போலவே ஒரு தோற்றம் இருந்து கொண்டிருந்தது அவர்களுக்கு. இதெல்லாம் மனப்பிரமைதான் என்று சமாதானப்படுத்திக் கொண்டாலும், அடுத்த வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது.

கோமதி மகளை கூட்டிச்சென்று தனி அறையில் உட்கார வைத்து பல அறிவுரைகள் சொல்லிக் கொண்டிருந்தாள். திருமணம் முடிந்த இந்த மூன்று நாளும் மகள் கண்ணயரவே இல்லாதலால் தானும் உறக்கம் தவிர்த்தலால் தலைவலி லேசாக எட்டிப் பார்த்தது. அவளைத் தூங்கச் சொல்லும் தைரியமும் வரவில்லை கோமதிக்கு. விடியவிடிய விளக்கு எரிந்து கொண்டே இருந்தது இவர்கள அறையில், இந்த மூன்று நாட்களாக. இன்று மாப்பிள்ளையுடன் சென்று உறங்க வேண்டுமே என்ற கவலை மிக அதிகமாகிவிட்டது. சொல்வதற்கெல்லாம் மிகவும் பவ்யமாக தலையாட்டிக் கொண்டிருந்த மகளின் மிக பயந்த சுபாவம் கண்டு பரிதாபமாக இருந்தது.

படபடவென கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. மாப்பிள்ளையின் சகோதரி, திருமணம் ஆகி ஆறு மாதங்கள்தான் ஆகிறது அவளுக்கு. இன்னும் அந்த புதுப்பெண் நாணம் போகவில்லை. அண்ணி அம்மா உங்களை வரச்சொன்னாங்க என்றாள். கோமதியும் மகளை கிளம்பும்படி சாடை செய்தாள். தலை குனிந்தவாறு தயங்கித் தயங்கி மாமியார் இருக்கும் அறையின் முன் சென்று நின்றாள்.

”வாம்மா வினு ஏன் இன்னும் பழகமாட்டேன் என்கிறாய். ரூமிற்குள்ளேயே அடைந்து கிடக்கிறாயே, வெளியே வந்து கலகலப்பாக எல்லோரிடமும் பேசக்கூடாதா?” என்றார்.

ஒன்றும் பேசாமல் தலை குனிந்தவாறு நின்றிருந்த மருமகளை, மிக அடக்கமான பெண் என்று நினைத்துக் கொண்டு, தன் மகளைக் கூப்பிட்டு, அண்ணியையும், அவர்கள் குடும்பத்தாரையும் முதலில் சாப்பிட வைத்துவிட்டு, வினுவை அலங்காரம் செய்து ரெடி பண்ணி, கோவிலுக்கு போய் வரச் சொன்னார். இரவு கோவிலில் அர்த்தசாம பூசையில் கலந்து கொண்டு, சுவாமிக்கு பொன்னூசல் பாடிவிட்டு, மாப்பிள்ளை சுவாமியின் பல்லக்கு தூக்கி, கோவில் சுற்றிவந்து பூசை முடிந்தவுடன் வீடு வந்து பின்புதான் முதலிரவு அறைக்கு அனுப்புவார்கள். ஒரு வார்த்தைக் கூட பேசாமல் தலை கவிழ்ந்த வண்ணம், சிவ்ந்த கன்னமும், ரோசா இதழுமாக அவள் அழகு தன்னை சுண்டியிழுக்க, பார்வையாலேயே தன் அன்பு மனைவியைத் தின்று கொண்டிருந்தான் மாப்பிள்ளை விதுரன். எல்லாம் அடங்கி, அந்த இனிய பொழுதும் வந்தது. மணப்பெண்ணை அலங்காரம் செய்து, அழகு தேவதையாக அறையில் அனுப்ப தயாரானார்கள். சம்பிரதாயமாக புத்தி சொல்ல வேண்டுமே என பெரியவர்கள் சிலர் வந்து கூச்சமில்லாமல் வெளிப்படையாக பேச ஆரம்பிக்க, மாப்பிள்ளையின் தங்கை அவர்களைப் பார்த்து,

”பாட்டீஸ் போதும், போதும் உங்கள் புத்திமதிகள், அண்ணியே மனோதத்துவத்தில் டாக்டர் பட்டம் வாங்கினவங்க தெரியுமில்ல. அவங்களே பல பேருக்கு புத்தி சொல்றவங்க, அவங்களுக்குப் போய் நீங்க புத்தி சொல்றீங்களாக்கும்...” என்று இழுத்தவுடன் அவர்கள் புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு தாங்கள் சொல்ல வந்ததை சுருக்கமாகவே சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்கள்.

ஆனால் கோமதிக்கு மட்டும் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருந்தது. படிப்பில் எவ்வளவு கெட்டிக்காரி தன் மகள் என்று நினைக்கும் போது பெருமையாக இருந்தாலும்... மனோதத்துவத்தில் முதுநிலை பட்டம் பெற்ற பின்பு டாக்டரேட் பட்டமும் வாங்கனும்னு அடம்பிடிச்சப்ப தடுக்க மனசு வரவில்லை.. ரொம்ப பயந்த சுபாவம் கொண்ட பெண், வெளியூரில் தனியாகத் தங்கி படிக்க வேண்டுமே என்று பயந்த காலமும் உண்டு. ஆனால் அதெல்லாம் அந்த முதல் வருடம் மட்டும்தான். அதற்கு பிறகு மற்ற குழந்தைகள் போல தைரியமாக தனியே போய்வர பழகி விட்டாள். மாநிலம் விட்டு அடுத்த மாநிலம் சென்று படிக்கும் அள்விற்கு தேறிவிட்டதால் கவலை இல்லாமல்தான் இருந்தனர் பெற்றோர். ஆனால் பி.எச்.டி பட்டம் படிக்கும் போதுதான் அந்தப் பிரச்சனை தலை தூக்கியது. மிக ஆழ்ந்து படிக்கக் கூடிய பழக்கம் அவளுக்கு. அந்தப் பாடத்துடன் அப்படியே ஒன்றிப் போய்விடுவாள். இன்று இருக்கும் இந்த பிரச்சனைக்கு இதுகூட ஒரு காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் அவளுக்கு அடிக்கடி வருவதுண்டு...

அன்று கல்லூரியிலிருந்து திடீரென்று அழைப்பு வரும்வரை மகளைப் பற்றி பெருமை பொங்க, தங்கள் குடுமப்த்திலேயே அதிகம் படித்தவள் என்று புளங்காகிதம் கொண்டிருந்தார்கள். கல்லூரி முதல்வர் உடனடியாக கிளம்பி வரும்படி போன் செய்தவுடன் , என்ன, ஏது என்று கேட்கக் கூட திராணியில்லாமல், காரை எடுத்துக் கொண்டு பெற்றோர் கிளம்பி விட்டனர். கல்லூரி முதல்வரைச் சென்று சந்திக்கும்வரை வழியில் எப்படி சென்றோம் என்ற உணர்வு கூட இல்லாமல் பலவற்றையும் யோசித்துக் கொண்டுதான் சென்றார்கள். ஆனால் அங்கு சென்று முதல்வரிடம் பேசியபின்பு, அவர் சொன்ன அந்த விசயம் அவர்கள் இருவரையும் அப்படியே புரட்டிப் போட்டுவிட்டது. தாங்கள் துளியும் நினைத்துக்கூடப் பார்த்திராத ஒரு விசயத்தை அவர் சொன்னார். தங்கள் அன்பு மகள் வினு, அதிகமாக சத்தம் கேட்டால் கூட விலுக்கென்று பயம் கொள்பவள், இருட்டைக் கண்டால்கூட நடுக்கம் கொள்பவள், இன்று அவளைப் பார்த்து மற்ற மாணவிகள் பயந்து கொண்டு அவளுடன் தங்க மறுக்கிறார்களாம். அதனால் அவளை தனி வீடு பார்த்து தங்கவைத்துக் கொள்ளும்படி முதல்வர் அறிவுறுத்தியிருக்கிறார். காரணம் கேட்ட போது அவர் சொன்ன விசயம் ஈரக்குலையையே நடுங்கச் செய்தது.

வினுவின் கல்லூரி முதல்வர், அவளுக்கு 'Medical students syndrome', என்ற பிரச்சனை உள்ளதாகச் சொன்னபோது, முன்பின் அறிந்திராத ஒரு புது செய்தியாக இருந்ததன் காரணமாக ரொம்பவும் பயந்து விட்டனர் பெற்றோர் இருவரும். கருத்தூன்றி பயிலும் மாணவர்கள், இது போன்று, பாதிக்கப்படலாமாம். அதாவது, வியாதிகளைப் பற்றி படிக்கும் போது அந்த வியாதி தன்னையே தாக்கிவிட்டதாக கற்பனை செய்து கொள்வார்களாம். வினுவிற்கு டிப்ரஷன் என்ற மனச்சோர்வு நிலை ஏற்பட்டிருப்பதால், பகலெல்லாம் ஒழுங்காக கல்லூரிக்குச் செல்பவள், இரவானால், தனிமையில் இருக்கும் போது, ஓவென்று அழ ஆரம்பித்திருக்கிறாள். அந்த அழுகை சாதாரண அழுகை போன்று இல்லாமல் மிக வித்தியாசமான ஒரு சத்தம் கொடுத்து அழுதிருக்கிறாள். அறையில் உடன் தங்கியிருக்கும் மாணவிகள் பயந்து கொண்டு, வார்டனிடம் புகார் செய்ய, முதல்வ்ர் வரை செய்தி போய் இப்போது பெற்றோரை வரவழைத்து தீர்வு தேட வேண்டியதாகியுள்ளது.

அத்ற்குப் பிறகு கோமதி படிப்பு முடிய இருந்த 6 மாதமும் பெங்களூருவில் ஒரு வீடு எடுத்து மகளுடனேயேத் தங்கி, படிப்பையும், அவளுடைய உடல் நலத்தையும் ஒருசேர கவனித்து வந்தாலும், இந்த அழுகை நிலை மட்டும் மாறாது அடிக்கடி தொந்திரவு கொடுத்துக் கொண்டுதான் இருந்தது. கல்லூரி விட்டு வரும் மகளை ஒரு நொடியும் தனித்து விடாமல், அவளை அரவணைத்து, மருத்துவர் சொன்னபடி ஒழுங்காக கவனித்துக் கொண்டிருந்தாள். ஆச்சு.... படிப்பும் முடிந்துவிட்டது. மருத்துவரின் ஆலோசனைப்படி உடனே திருமணம் செய்தால் அந்த வாழ்க்கைச் சூழலின் மாற்றம் அவளை முழுமையாக குணப்படுத்திவிடும் என்ற நம்பிக்கையும் இருந்ததும் உண்மைதான். ஆனால் அதற்குள் எத்துனை போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது, அவளுடைய பிரச்சனை வெளியில் தெரியாமல் மறைப்பதற்கு... நெருங்கிய உறவினர்களோ அல்லது நண்பர்களையோக்கூட அண்டவிடாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

படிப்பு முடிந்து, பெங்களூருவில் வீட்டை காலி செய்துவிட்டு மகளை சொந்த ஊருக்குக் கூட்டி வந்தாகிவிட்டது. ஒரு வாரம் அமைதியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. நன்றாக கலகலவென்று பேசிக்கொண்டு, சுறுசுறுப்பாக இருந்தவள், ஒருவரும் எதிர்பார்க்காத நேரம் திடீரென, மாலை நேரம், தெருவே அமைதியாக இருக்கும் வேளையில், வினு ஓவென்று வித்தியாசமாக கத்த ஆரம்பித்துவிட்டாள். அத்துனை மெல்லிய குரல்வளம் கொண்ட ஒரு பெண்ணால் இப்படியும் ஒரு சத்தம் எழுப்ப முடியுமா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு, மாடி அறையில் தனியாக இருந்து கொண்டு அவள் போட்ட சத்தம் பயங்கரமாக வெளியே எதிரொலிக்க ஆரம்பித்து விட்டது. கோமதிக்கு தலையே சுற்றி விட்டது. அரக்கப் பறக்க ஓடிச்சென்று மகளிடம் அமர்ந்து கொண்டு அவளுக்கு தைரியம் சொல்லி, மனதை வேறு திசையில் திருப்பி சமாளித்து விட்டாள். ஆனாலும் அன்றாடம் இதே பிரச்சனை தலைதூக்க் ஆரம்பித்த போது, எவ்வளவுதான் முயன்றும் வெளியில் தெரியாமல் மறைக்க முடியவில்லை. உடனடியாக திருமண ஏற்பாடுகள் செய்ய முடிவெடுத்து காரியங்கள் ஆரம்பித்தும் வைத்தாகிவிட்டது. இதற்கிடையில், வீட்டிலிருந்து வித்தியாசமாக அடிக்கடி வரக்கூடிய சத்தம் குறித்து அக்கம் பக்கத்திலுள்ளவர்களுக்கு ஐயம் எழ, ஒரு நாள் அந்தப் பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டிய நேரமும் வந்துவிட்டது. ஆம், காலனியில் குடியிருப்பவர்களில் சிலர் ஒன்றுகூடி வந்துவிட்டார்கள், காரணம் கேட்டுக் கொண்டு. வினு எங்கே ஏதும் உளறி விடுவாளோ என்ற அச்சத்தில்,

“வினு போய் எல்லோருக்கும் டீ போட்டு எடுத்து வாம்மா”

என்று சொல்லி அவளை அனுப்பிவிட்டு, அந்தத் தாய் அந்த நேரத்தில் சமயோசிதமாக அப்பழியைத் தூக்கித் தன்மீது போட்டுக் கொண்டாள். குடும்பத்தில் சில பிரச்சனைகளால் சரியாக உறக்கம் இல்லாமையால், டிப்ரஷன் வந்துவிட்டது என்றும், அதற்கு மகள்தான் தனக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்றும் ஏதோ சொல்லி சமாளித்து அனுப்பி வைத்தாள். ஆனாலும் அவர்கள் முகத்தில் இருந்த சந்தேக ரேகை அவர்கள் பெரிதாக அதை நம்பவில்லை என்பதைப் புரிந்து கொள்ளுப்படியாகத்தான் இருந்தது. இந்த சூழலில்தான் திருமண ஏற்பாடு நடந்து முடிந்துள்ளது.

தாங்கள் விரும்பியபடி உறவுகளிலேயே மருத்துவம் படித்த மாப்பிள்ளை இருந்தாலும், மேட்ரிமோனியில் பார்த்து, முன்பின் அறியாத ஒரு வரனையே முடிவு செய்துள்ளார்கள். அவளுடைய பிரச்சனையையும் மறைத்து வைத்து, ஆண்டவனின் பெயரில் அனைத்துக் காரியங்களும் நடந்து கொண்டிருக்கிறது....

திருமண வைபவத்தின்போது மணப்பெண்ணிற்கே உரிய அந்த நாணத்தில் மகளின் தாமரை முகம் மேலும் மலர, பளபளத்த அவள் கன்னமும், ஓரக்கண்ணால் அடிக்கடி தம்பதிகள் இருவரும் காதல் மொழிகள் பரிமாறிக் கொள்வதையும் கண்ட பெற்றோருக்கு சற்றே ஆறுதலாக இருந்தது.

ஆச்சு இன்று மாப்பிள்ளையும், பெண்ணும் தனியே சந்திக்கக் கூடிய காலமும் வந்து விட்டது. வினுவிற்கு தன் மேலேயே நம்பிக்கை இல்லை. எந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்ளப் போகிறோமோ என்ற அச்சம் படபடப்பை ஏற்படுத்தியிருந்தது. பால் சொம்புடன் உள்ளே சென்றவளின் கண்களில் இருந்த அந்த அச்சம் மணமகன் விதுரனுக்கு வித்தியாசத்தை ஏற்படுத்தவில்லை. முன்பின் அறியாத ஒரு ஆடவனை முதன்முதலில் ஒரு தனியறையில் சந்திக்கும் பெண்ணிற்கு இயல்பாக இருக்க வேண்டிய அச்சம்தானே அது.... கணவன் அரவணைப்பின் மூலமாக பாதுகாப்பு கொடுக்கக்கூடிய அந்த வாய்ப்புதானே தம்பதியரின் நெருக்கத்தை அதிகமாக்குகிறது? அதுதான் அங்கு நடந்தது. அதிகம் பேச விரும்பாத வினு, அவனுடைய அணைப்பில் கட்டுண்டு இருந்தபோது தன் மனம் மிக இலகுவாக இருப்பதை உணர்ந்தாள்...

பிரசவ அறையில் மகளை அனுப்பிவிட்டு தத்தளிக்கும் ஒரு பெற்றோரின் மனநிலையில் வினுவின் பெற்றோர் விடியவிடிய பொழுதைக் கழித்தனர், தங்கள் அறையில். எப்போது பொழுது விடியும் மகளைப் பார்க்கப் போகிறோம் என்று காத்துக் கொண்டிருந்தனர், அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு. கதவு மெலிதாக தட்டப்படும் ஓசை கேட்டது. இன்னும் முழுதாக விடியாத நேரத்தில் யாராக இருக்கும் என்று லேசான படபடப்புடன் கதவைத் திறந்தவளுக்கு இன்ப அதிர்ச்சியாக மகள் வினு, அழகாக குளித்து நாணத்துடன் முகம் சிவக்க கையில் காபி டம்ளருடன் நின்றிருந்தாள். அதைக்கண்டவுடன், ஆனந்தக் கண்ணீர் வழிந்தோட மகளை அணைத்துக் கொண்டாள், காபி டிரேயை வாங்கி கீழே வைத்துவிட்டு. அவளுடைய பார்வையில் இருந்த மயக்கம் அனைத்தையும் நொடியில் விளங்க வைத்துவிட்டது தாய்க்கு. ஆனால் இந்தப் பிரச்சனை முடிவிற்கு வந்துவிட்டதா என்று தெரியவில்லையே....

அன்று மதியமே அந்த இளம் கிளிகள் தேனிலவிற்கு கிளம்பத் தயாராகிவிட்டன. வினுவின் பெற்றோரும் தங்கள் ஊருக்குக் கிளம்பினாலும், உள்ளுக்குள் ஒரு அச்சம் இருந்து கொண்டுதான் இருந்தது. அது மிக விரைவாக வெளிப்படவும் செய்தது. மகளும், மருமகனும், வால்பாறை சென்றிருந்தாலும், எந்த நேரத்தில் என்ன செய்தி வருமோ என்று பெற்றோர் அஞ்சியபடியே அந்த நேரமும் வந்துவிட்டது. அடுத்த நாளே மருமகன் விதுரனிடமிருந்து தொலைபேசி அழைப்பு... அவர்கள் இருவரையும் உடனே கிளம்பி வால்பாறை வரும்படி.

தாங்கள் எதிர்பார்த்திருந்த அந்த இறுதிக்கட்டம், தங்கள் மகளின் வாழ்க்கையை நிர்ணயிக்கப்போகிற அந்த முக்கியமான கட்டம்! மாப்பிள்ளை என்ன சொல்லப் போகிறாரோ என்ற அச்சமும், மகள் என்ன செய்திருப்பாளோ என்ற கவலையும் ஆட்டிப்படைக்க மிகவும் குழப்பமானதொரு சூழலில் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. மாப்பிள்ளையைப் பார்த்தால் நல்ல குணவானாகத் தெரிந்தாலும், மகளின் இந்த பிரச்சனை சாதாரணமானதுதான் என்று தங்களுக்குப் புரிந்தாலும், நன்கு படித்து, நல்ல தகுதியான பணியில் இருக்கும் ஒரு அழகிய இளைஞன் எப்படி நடந்து கொள்ளப் போகிறாரோ தெரியவில்லையே என்ற படபடப்பு அப்பட்டமாக வெளியே தெரியத்தான் செய்தது.

மாப்பிள்ளை விதுரனும் அதைப் புரிந்து கொள்ளாமல் இல்லை. ஆனாலும், அதிகம் பழக்கமில்லாத மாமனார், மாமியாரிடம் சற்று தயக்கமும் இருந்தது. என்ன சொல்லப்போகிறாரோ என்று பதைபதைத்து வந்தவர்களுக்கு, மாப்பிள்ளை அமைதியான புன்சிரிப்புடன், வாங்க... வாங்க என்று வரவேற்ற போதே பாதி பாரம் குறைந்துவிட்டது.

ஆம், முதலில் தான் சில பொருட்கள் வாங்குவதற்காக வினுவை அறையில் தனியே விட்டுவிட்டு வெளியே போய் வருவதற்குள் அவள் அழுது அரற்றியிருந்திருக்கிறாள். கதவைத் திறந்து உள்ளே வந்து பார்த்தவருக்கு நிலைமை சட்டெனப் புரிந்திருக்கிறது. குளிர்சாதன அறை என்பதால் சத்தம் வெளியே வராமல் இருந்திருக்கிறது. தானும் ஒரு மருத்துவராக இருந்தபடியால் எளிதாக இந்தப்பிரச்சனையை அணுக முடிந்தது என்றும்,ஆரம்பத்தில் அதிர்ச்சியாகவும், தன்னிடம் உண்மையை மறைத்த வினுவின் பெற்றோர் மீதும் கோபமும் வருத்தமும் இருந்தாலும், சற்றே அவர்களின் நிலையில் இருந்து யோசித்த போது,ஒரு பெண்ணைப் பெற்றவர்களின் நிலையை புரிந்து கொள்ள முடிந்தது என்றும், முன்பே தன்னிடம் இதைப்பற்றி பேசியிருந்தால், தாங்களும் இந்த திருமணத்தை இன்னும் மகிழ்ச்சியாக கொண்டாடியிருக்கலாமே... இவ்வளவு மன உளைச்சலையும் தவிர்த்திருக்கலாமே என்று சர்வ சாதாரணமாக பேசிய மருமகனை கண்ணீர் பொங்க கட்டியணைத்துக் கொண்டார் மாமனார். கோமதியின் கண்களில் கண்ணீர் ஆறாய்ப் பெருகிக் கொண்டிருந்தது. ஆனால் அந்தக் கண்ணீரில் உப்பு இல்லை!



படத்திற்கு நன்றி :


நன்றி - திண்ணை