Monday, December 19, 2011

கண்களில் ஊடுறுவிய அன்புப் பெருக்கு!


ஈரோடு வலைப்பதிவர்கள் சங்கமம்!

ஒருவரின் எழுத்தை வைத்து அவரைப் பற்றிய ஒரு கற்பனை உருவம் வடித்து வைத்திருப்போம், நம்மையறியாமலே. பலர் தங்கள் புகைப்படங்களை தங்களுடைய சுயகுறிப்பில் போட்டிருந்தாலும், அது பெரும்பாலும் மிகப் பழைய புகைப்படமாகவே இருப்பதால், நேரில் பார்க்கும் போது ஒரு த்ரில்தான்... [பாவம் புதுசா புகைப்படமே எடுத்திருக்க மாட்டாய்ங்களோ.....?] ஒரு திருமணவிழாவில் பல நாட்களுக்குப் பிறகு நெருங்கிய உறவினர்களை பார்க்கும் போது ஏற்படுமே ஒரு குஷி அப்படி ஒரு இன்பம் அனைவரின் முகத்திலும் தென்பட்டது. விகல்பமில்லாமல் ஒரு குடும்பமாக அனைவரும் பழகியது உண்மையிலேயே மன நிறைவைத் தரக்கூடிய விசயமாக இருந்தது. ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் பேசும் போது இது போன்ற சங்கமம் நல்ல சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது என்று குறிப்பிட்டது எவ்வளவு சத்தியமான வார்த்தை என்று உணர முடிந்தது. எந்த ஊருக்கு, எந்த நாட்டிற்குச் சென்றாலும் கண்களை மூடிக் கொண்டு நமக்கு அங்கு நண்பர்கள் இருப்பதாக மார்தட்டிக் கொள்ளலாமே!

ஒவ்வொருவரும், ஒவ்வொருவரை உற்றுப் பார்த்து , இவராக இருக்குமோ என்று குறுகுறுவென பார்க்க, அவரும் இவரை, அவராக இருக்குமோ என்று ஊன்றிப் பார்க்க, இருவரும் வந்து ஒருவரை ஒருவர் தாங்களே அறிமுகப்படுத்திக் கொள்ள, காண்பதற்கே சுவாரசியமாக இருந்தது. இது மற்றொரு தனி குடும்பம் போன்ற நினைவையே ஒவ்வொருவரிடமும் தோற்றுவித்தது தெளிவாகத் தெரிந்தது... இது போன்று வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர்களுக்கு நன்றி சொல்லவும் வேண்டும் என்று ஆந்திர மாநிலம் சித்தூரிலிருந்து, அவ்வளவு தொலைவு மிக ஆர்வமாக வந்திருந்த தமிழரசி நெகிழ்வாக சொன்னது மகிழ்வாக இருந்தது.. 10 மணி நேரம் பயணம் செய்து வந்திருக்கிறார் என்றால் பாருங்களேன் அவர் ஆர்வத்தை! சகோதரர், ‘வானம்பாடிகள்’ பாலா சார் மற்றும் சகோதரர் ஜீவ்ஸ் இவர்களைப் பற்றியும் நிறைய சொல்லலாம். அத்துனை சகோதரத்துவம் எல்லாரிடமும்! 'மயில்’ விஜி, மிக சுவாரசியமானவர்! ஏதோ பொழுது போக்காக வலைப்பதிவை நடத்திக் கொண்டிருக்காமல் நாங்கள் சாதனைகளும் செய்து கொண்டிருக்கிறோம் என்று நிரூபித்திருப்பவர்களைப் பார்க்க பெருமையாக இருந்தது.அதை வெளிக்கொணர்ந்த நல்ல உள்ளங்களையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை! பரிசு பெறவில்லை என்பதற்காக மற்றவர்களெல்லாம் சோடை போனவர்கள் அல்ல என்பது அங்கு வந்திருந்த அனைவருக்கும் தெரியும். அடுத்து வரப்போகிற சங்கமங்களில் பரிசு வாங்கப் போகிறவர்கள்தான் என்பதும் புரியும். அத்துனை சூட்டிப்பு ஒவ்வொருவரிடமும்...

நம் பதிவர் சி.பி செந்தில்குமார் { அட்ராசக்கை] அருகில் அமர்ந்து உணவருந்த வாய்ப்பு கிடைத்தது. மிக சுவாரசியமாக படபடவென பல தகவல்களைச் சொன்னார். அடடா இவ்வளவுநாள் இவருடைய பிளாகை சரியா படிக்காம விட்டுட்டோமேன்னு தோனிச்சுனா பாருங்களேன்.. அது போலத்தான் வலைச்சரத்தின் பொறுப்பாசிரியர் சீனா சார் அவங்க மனைவியோட வந்திருந்தார். அவரையும் பார்க்க முடிந்தது. நம்ம தேனம்மை பரிசும் பாராட்டும் வாங்கியது மகிழ்ச்சியாக இருந்தது. பழகுவதற்கும் மிக எளிமையான குணம். சங்கவி, ஆதிஷா, குறிப்பாக பரிசு பெற்ற அத்தனை பேரையும் பாராட்டியே ஆகனும்... அதில் குறிப்பாக, திரு மகேந்திரன் அவர்கள் தம்முடைய சேவை மூலமாக அனைவரையும் கவர்ந்தார் என்றே சொல்ல வேண்டும்!

ஒரு மாபெரும் சக்தியாக உருவாகக்கூடிய சங்கமம் இது என்றால் அது மிகையாகாது. வாழ்க வலைத்தள நண்பர்கள்! இது போன்று சங்கமம் அங்கங்கு அடிக்கடி நடந்தால் அது ஆரோக்கியமான சமுதாயத்தையும் உருவாக்கக் கூடும் என்பதில் ஐயமில்லை! திறம்பட,அனைவரும் பாராட்டும் வகையில், மற்றவர்களையும் ஊக்குவிக்கும் வண்ணம், இந்த சங்கமத்தை முன் நின்று நடத்திய, நம் சொந்தங்களுக்கும் ஒரு ஓ போட வேண்டும்!


கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...