Wednesday, May 27, 2020

கண்ணதாசனின் ‘சேரமான் காதலி'



கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்)




தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவர்த்தியாய் அமர்ந்துகொண்டு வாத பிரதிவாதங்கள் அனைத்தையும் தமக்கே சாதகமாக்கிக்கொண்டு கற்பனை உலகிலேயே வாழுபவர்களே கவியரசர்கள்! இவர்களுக்குச் சற்றும் சளைத்தவரல்லர் நம் கவியரசர் கண்ணதாசன்!
ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள், ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், 20க்கும் மேற்பட்ட புதினங்கள், நாடகங்கள், ஆன்மீக நூல்கள் உட்பட 232 நூல்களை எழுதியுள்ளவர் கவிஞர் கண்ணதாசன். சங்க இலக்கியங்களின் செழுமை, வாழ்வியல் தத்துவங்கள், அனுபவங்கள், சமூகம், அரசியல் என பல்வேறு தளங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய படைப்புகளை பாமரனுக்கும் விளங்கும் வண்ணம் எளிமையான மொழியில் வழங்கியவர் கவியரசு கண்ணதாசன்.
இதில் மிகச் சிறப்பானதானக் கருதப்படும் 'சேரமான் காதலி' 1980ஆம் ஆண்டின் சாகித்ய அகாதமி விருது பெற்ற புதினம் ஆகும். இப்புதினம் மூன்றாம் சேரமான் ஆட்சிக்காலமாகிய கி.பி.798 முதல் கி.பி.834 வரையிலான வரலாற்று நிகழ்வுகளை மையமிட்டதாக அமைகிறது.
தமிழகத்தின் சுவையான வரலாறு கொண்ட மூவேந்தர்கள், சேரர், சோழர், பாண்டியர். சோழர், பாண்டியர் வரலாறு பற்றிய சுவையான புதினங்கள் அதிகம் இருப்பினும், சேரர் வரலாறு குறித்த சான்றுகள் இருப்பினும் சுவையான புதினமாக்கப்பட்டுள்ளவை அதிகமில்லை எனலாம். எந்தவொரு வரலாறும் நல்ல மொழி நடையில் கற்பனை வளமும் இணைந்து புதினமாகவோ, சிறுகதையாகவோ புனையப்பட்டால் மக்கள் மனதில் பசுமரத்தாணியாக பதிந்துவிடும் வாய்ப்பு அதிகம். அத்தகைய நிறைவான ஒரு வரலாற்று புதினத்தைப் படைத்து அளித்த பெருமை நம் கவியரசு கண்ணதாசன் அவர்களையேச் சேரும்.
இரண்டாம் சேரமான் பெருமாளின் வாழ்க்கையிலிருந்தே இக்கதை தொடங்குகிறது. ஆள்வார் ஆழ்வாரான படலம் என்ற அழகான சொல்லாடலுடன் ஆரம்பிக்கிறது புதினத்தின் முதல் பகுதி.
இன்று பல்லோரும் பேசிவரும் தேசிய ஒருமைப்பாடு எனும் உன்னத கருத்திற்கு அன்றே உறுதியான உரமிட்டவன் மூன்றாம் சேரமான் பெருமாள் பாஸ்கர இரவிவர்மன். ஆண்மையும், வீரமும் மிக்க இந்த அழகிய காதல் இளவரசன் யூத அழகி யுஜீனாவையும், முகமதியக் கட்டழகி சலீமாவையும் காதல் மணம் புரிந்து களிப்புற்றிருக்கிறான். ஆயினும் குலதர்மமும், கொள்கையும் காக்கப்படவேண்டும் என்பதற்காகக் கரம் பற்றிய அன்பு மனைவியான இராணி பத்மாவதியை எக்குறையுமின்றி காத்து வந்ததோடு, அவளிடம் சேரமான் அன்புடனும், பண்புடனும் நடந்துகொண்ட விதம் கவிஞரின் அழகுத் தமிழ் நடையில் எளிமையாக விளக்கப்பட்டுள்ள விதம் போற்றத்தக்கது. யூதர்கள், முகமதியர்களின் வாழ்வியல் முறைகளை அன்புக் காதலிகள் யுஜீனா, சலீமா ஆகியோரின் காதல் வாழ்வினூடே கருத்தாழம் மிக்க சொற்களோடு விளங்கச் செய்கிறார். பண்டைய கேரள மக்களின் கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் போன்று அந்நாளைய பல்வேறு வாழ்வியல் நடைமுறைகளை அறியத்தருகிறார். தேன் சொட்டும் காதல் மட்டுமன்றி அகம் நிறைக்கும் வேதாந்தத் தத்துவங்களும் குறைவின்றி நிறைந்து கிடப்பதைக் காணமுடிகிறது. சேரர்களின் வாழ்வியல் பற்றி அறிய சேரமான் காதலி ஒரு சிறந்த ஆவணம் எனலாம்.
கவிஞரின் வழமையான படைப்புகள் போன்று இதிலும் சமய கருத்துகள் மிகுந்து காணப்படும் என்று எண்ணி வாசிக்கத் துவங்கினால் ஏமாற்றமே மிஞ்சும்.
துடிசைக் கிழார் எழுதிய சேரர் வரலாற்று ஆவணத்தின் மூலமாகவே சேரமான் காதலி உருவானது என்று கூறி, அதன் முக்கியப் பகுதிகளை முன்னுரையில் அளித்துள்ளார்.
மூன்றாம் சேரமான் பெருமாள் கி.பி.798இல் பட்டத்திற்கு வந்தபோது வேணாடு சேர நாட்டுக்கு உட்பட்டிருந்துள்ளது. இரண்டாம் சேரமான் பெருமாளுடைய மகனைப் பகைத்துக்கொண்டு உள்நாட்டுக் கலவரத்தை ஏற்படுத்தாமல் இருக்கும் பொருட்டு வேணாட்டை அவனுக்கே கொடுத்து தனக்குக்கீழ் ஆளும்படி செய்தது மூன்றாம் சேரமான் பெருமாளின் சாணக்கியத்தனம் என்கிறார். முடிதுறந்து வைணவத் துறவியாகும் அவர் தனக்குப்பின் தன் மகன் மார்த்தாண்டனை அரசனாக முடிசூட்ட எண்ணுகிறார். மிகசிறந்த ராஜதந்திரியான பாஸ்கர இரவிவர்மன் பாண்டிய, கொங்கு நாட்டு மன்னர்களையும் சேர நாட்டில் உள்ள பிற மதத்தவரையும் தூண்டிவிட்டு மார்த்தாண்டனுக்கு எதிராக கலகம் செய்து, முடிவில் ஆட்சியைக் கைப்பற்றினான். மார்த்தாண்டன் தன் மனைவி மெல்லிலங்கோதையுடன் காட்டுக்குள் சென்று தஞ்சமடைகிறான். துறவியான பின்பு குலசேகர ஆழ்வார் என்று அழைக்கப்பட்டவர், திருக்கன்னபுரத்தில் உயிர் விட நேரும்போது தற்செயலாக அங்கு வந்துசேரும் ரவிதாசன் மனம் மாறுகிறார். சோழ மன்னன் விக்ரமன் சமரசம் செய்து வஞ்சியை தலைநகராகக் கொண்ட சேர நாட்டை ரவிதாசனும் திருவிதாங்கூரை தலைநகராகக் கொண்ட வேணாடு பகுதியை மார்த்தாண்டனும் அரசாள்வதாக முடிவாகிறது. ரவிதாசன் மூன்றாம் சேரமான் என்ற பட்டத்துடன் அரியணை ஏறுகிறான்.
இறுதியாக கி.பி.834இல் மூன்றாம் சேரமான் பெருமாள் சேர நாட்டை பன்னிரெண்டு பகுதிகளாகப் பிரித்தபோது வேணாட்டோடு ஒட்ட நாட்டையும் சேர்த்து மார்த்தாண்டவர்மனுக்குக் கொடுத்தார். அது முதல் சமீப காலம்வரை அரசு கட்டிலில் இவர் பரம்பரையினரே வீற்றிருந்துள்ளனர்.
தந்தையைப் போலவே கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய இரண்டாம் சேரமான் பெருமாள் திருவிதாங்கூர் பத்மநாபசாமி கோவிலுக்கு வேண்டிய திருப்பணிகளைச் செய்துள்ளான். வேணாட்டடிகள் என்று வழங்கப்பட்ட இவன் பெயராலேயே இன்றும் திருவாங்கூர் அரசர்களுக்கு வேணாட்டடிகள் என்ற பட்டம் நிலைத்துள்ளது. இறுதியில் அரசை தன் மகனுக்கு கொடுத்துவிட்டு, தில்லையில் சென்று தங்கி தில்லைக் கூத்தப்பெருமானின் மீது திருவிசைப்பா பாடி, அங்கேயே முக்தி அடைந்ததையும், கி.பி. 970-984 இல் திருவிசைப்பா ஒன்பதாம் திருமுறையில் சேர்க்கப்பட்டதையும் அறிய முடிகிறது. குலசேகராழ்வார் இயற்றிய பதினைந்து பாடல்கள் கதைப்போக்கில் அளிக்கப்பெறுவது சிறப்பு.
கி.பி. 798இல் பட்டத்துக்கு வந்த மூன்றாம் சேரமான் பெருமாள், பௌத்த, யூத, கிறித்துவ, முகமதியர் என அனைத்துச் சாராரையும் அணைத்துச் சென்றதோடு, உள்நாட்டுக் கலவரம் ஏற்பட்டு விடக்கூடாது என்ற விழிப்புணர்வுடன் பார்ப்பனர்கள், நம்பூதிரிகள், ஏனைய செல்வந்தர்கள் போன்றோரிடமும் மனம் ஒத்து ஆட்சி புரிந்துள்ளான். 5 சகோதரிகள், ஒரு சகோதரன் உடன் பிறந்த இவரது பட்டத்து அரசிக்கு குழந்தை இல்லை. இதற்கிடையில் வெகு நாட்களாக இரகசியமாகக் காப்பாற்றி வந்த முகமதியப் பெண்ணுடனான காதல் உறவு நம்பூதிரிகள், செல்வந்தர்களுக்கு தெரிந்துவிட்டதால் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக பாண்டிய, கொங்கு மற்றும் வேணாட்டு மன்னர்களை படையெடுக்கத் தூண்டிவிட்டனர். சலீமா என்ற அந்த அரேபிய அழகியை பட்டத்து யானையின் தாக்குதலில் இருந்தும் கடற்புயலில் இருந்தும் காப்பாற்றியதால் வந்த வினைதான் அந்த காதல்.
ஏகவீரன் எனும் ஸ்ரீவல்லப மன்னன் கடற்துறைப்பட்டினமான விழிஞம் எனும் இடத்தில் மூன்றாம் சேரமான் பெருமாளோடு போரிட்டு அவனைத் தோற்கடித்தான். அதோடு நிற்காமல் அடுத்து தலைநகரான வஞ்சி நகர் மீது போர்த்தொடுக்கப்போவதை அறிந்தவன், தனது நாட்டை பன்னிரண்டு சிறு நாடுகளாகப் பிரித்து அவைகளை மார்த்தாண்டவர்மன், அவன் சந்ததியர், தம்பி மக்கள், சகோதரிகள் ஐவர், சுற்றத்தார், நண்பர்கள், பணியாட்கள் என அனைவருக்கும் பங்கிட்டுக் கொடுத்துவிட்டு, இரவோடு இரவாக தனது காதலியுடன் ஒரு கப்பலில் அரேபியாவிற்குச் சென்றுவிடுகிறான். காதலின் மீதான சமயத்தின் தாக்கங்கள் அக்காலத்திலும் பின்னியெடுத்திருப்பதைக் கவிஞர் தம் மொழி மூலம் உள்ளம் நெகிழச் செய்கின்றார். பின் மெக்காவை அடைந்து முகமதிய மதத்தைத் தழுவியபின், ஜபார் என்னும் ஊருக்குச் சென்று தன் இறுதிக்காலம் வரை அங்கேயே இருந்து கி.பி.838இல் மரணமடைந்தார் என்பது வரலாறு.
“எதிர்த்துப் பேசினால் சுடச்சுடப் பதில் கொடுத்துவிட முடியும். புகழ்ந்துபேச ஆரம்பிப்பவனை அப்புறப்படுத்துவது கடினமான காரியம்” (98) என்பது போன்ற கவிஞரின் வசனங்கள் நம்மை நிகழ் காலத்திற்கு அவ்வப்போது இழுத்து வரத்தான் செய்கின்றன!
“சரித்திரத்தின் போக்கிலேயே கற்பனை கலந்தேனே தவிர தடம் தவறிப்போகவில்லை” என்ற உறுதியும் அளிக்கிறார். சுவையான கதையம்சத்திற்காக, யூஜியானா என்ற யூதப்பெண்ணின் கற்பனைப் பாத்திரம் மூலமாக காதல், ஏக்கம், சோகம் என அனைத்தையும் தமக்கே உரிய கவித்துவப்பாணியில் அழகுற அமைத்துள்ளார். ஆய் இன மலைவாழ் மக்களின் வாழ்க்கைப் பக்கத்தில் புதைந்துள்ள இன்பங்கள் கவிஞரின் சொல்லாடலில் மேலும் இனிமையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.
“பெரும்பாலான மக்கள் அரசு பீடத்தில் யார் இருக்கிறார்கள் என்பது பற்றிக் கவலைப்படுவதில்லை. தங்களது அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு இல்லாமல் இருந்தால் போதும் என்பதுதான் அவர்கள் நிலை. (184)” என்று இன்றைய மக்களின் மனநிலைக்குப் பொருந்தும் கருத்தையும் வாழைப்பழத்தின் ஊசியாக ஏற்ற முயல்கிறார்.
அதே போன்று, சேரமான் மனைவி பத்மாவதியின் பணிப்பெண் ஒருத்தி, தான் கணவனை இழந்தவள் என்று கூறும்போது,
'மங்கலம் இழந்தாயா? நெற்றியில் குங்குமம் இருக்கிறதே!" என்று கேட்கிறாள் அரசி.
'மனத்திலே நாயகன் இருக்கிறான்; அதனால் மார்பிலே மாங்கல்யம் இருக்கிறது. கனவிலே அவனோடு உறவாடவே இந்த மாங்கல்யமும் இந்தக் குங்குமமும்!" (236) என்று அப்பணிப்பெண் பதிலிறுப்பதாக அந்த உரையாடல் தொடர்கிறது. இதன் மூலம் கவிஞர் தம் பரந்த மனவோட்டத்தை விளங்கச் செய்வது சிறப்பு.
பல்வேறு மதத்தினரும் கலந்து வாழும் வஞ்சி நகர் பற்றிய கவிஞரின் வர்ணனை நெஞ்சை அள்ளுவதாக அமைந்தாலும், பல்வேறு சமய கருத்துகளையும் நம்பிக்கைகளையும் யார் மனமும் புண்படாதவாறு புதினம் அமைத்திருப்பது கவியரசருக்கு பெருமை சேர்ப்பது ஆகும்.
“தற்போதைய நிலையை மேற்கோள் காட்டினால் நாராயண நம்பூதிரி பிரதம மந்திரியாகவும், இரண்டாம் சேரமான் பெருமாள் குடியாட்சித் தலைவராகவும் விளங்கினார்கள்” என்று தற்கால வாழ்வியலை தொடர்புபடுத்தும் பாங்கும் சுவை கூட்டுவது.
சேரமான் காதலி, காதலும் சமயமும் பின்னிப் பிணைந்த விறுவிறுப்புடன் கூடிய ஒரு அழகிய புதினம். தொல்காப்பியக் காலத் தமிழ், சங்க காலம், சங்கம் மருவிய காலம், சங்கம் இருந்த கபாடபுரம் முதலான பல்வேறு செய்திகளைக் கதையினூடே கூறிச்செல்லும் பாங்கு பாராட்டிற்குரியது. ஏனைய அவர்தம் படைப்புகள் போன்றே 'சேரமான் காதலி' என்ற இப்புதினமும் நம் சிந்தனைக்கு விருந்தாகவும் சீர்திருத்தக் கருத்துகளைத் தாங்கிய வாளாகவும் செயல்பட்டு உள்ளம் நிறைக்கின்றன என்றால் மிகையாகாது!
பதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184026184
Pages : 680
Published Year : 2016
விலை : ரூ.330

கவியரசர் கண்ணதாசனின் 'சேரமான் காதலி'