அனசுயாபென் சாராபாய்
{ 1885 - 1972 }
தொழிலாளர்களுடைய நலனுக்காக இரசியா, சீனா போன்ற நாடுகளில் பொதுவுடமைச் சித்தாந்தம் வளர்ந்து வந்த காலகட்டத்தில் பல்வேறு பிரிவினரால், பல்வேறு தொழிற்சங்கங்கள், தொழிலாளர் நலனுக்காக ஏற்படுத்தப் பட்டிருந்தாலும், இந்தியாவில் இதற்கெல்லாம் தாயாகவும், முன்னோடியாகவும் இருந்தவர் அனசுயாபென் சாராபாய்.
அனசுயாபென் சாராபாய் 1885ம் ஆண்டு, ஒரு செல்வச்செழிப்பான , தொழிலதிபர் குடும்பத்தில், அகமதாபாத்தில் பிறந்தார். 19ம் நூற்றாண்டின் இறுதியில், சொந்தமாக நூற்பாலை நிறுவிய வெகு சொற்பமானவர்களில் இவருடைய தந்தையும் ஒருவர். இவருடைய தாய் மிகுந்த ஆன்மீக நாட்டம் கொண்டவர். அனசுயாவிற்குத் தன் தாயின் தாக்கமும் அதிகமாக இருந்தது. இவருடைய பெற்றோர் இவரின் 11 வது வயதிலேயே இறந்து விட்டனர். இதற்குப் பிறகு இவர் தன்னுடைய இளைய சகோதரர் அம்பாலால் மற்றும் சகோதரி காந்தா ஆகியோருடன் தன்னுடைய மாமன் சிமன்பாய் என்பவரிடம் தான் வளர்ந்தார்.
ஒரு பிரபல தொழிலதிபரின் குடும்பத்தில் பிறந்த அனசுயாபென் இன்று அதிக சக்தி வாய்ந்தவர்களாகக் கருதப்படுகிற ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிற, இந்தியாவின் தொழிற்சங்க கூட்டமைப்பபின் அடித் தளத்தை நோக்கி முதல் அடி வைத்தவர் என்பதுதான் மிக ஆச்சரியமான விசயமாகும்.
அனசுயாபென் தோற்றுவித்த நாட்டின் முதல் தொழிற்சங்கமான , நெசவாளர்கள் கூட்டமைப்பே , 50 ஆண்டுக் காலங்களாக தலைமையகமாக செயல்பட்டதோடு, அனைத்து இந்திய தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த செயலகமான, இந்திய தேசிய தொழிற்சங்க கூட்டமைப்பு மகாசபை [ INTUC ] யின் உருவாக்கத்தை நோக்கிச் செயல்பட்டது. உலகத் தொழிலாளர் அமைப்பு [ ILO ] முன்னாள் இயக்குநரான எலியாச் G. மெபேர் அவர்களின் கணிப்பில், அனசுயாபென்னின் கட்டுப்பாடான, மற்றும் மகாத்மா காந்தியடிகளின் வழிகாட்டுதலின் கீழ் அகிம்சை முறையிலான , பொறுப்பான சேவகர்களான சங்கர்லால் பன்கர் போன்றவர்களின் உதவியுடன் அமைக்கப் பட்ட சங்கமே, இந்திய தொழிற்சங்கங்களின் உருவாக்கத்தின் மூலக் கதையாகும்.
இந்த தொழிற்சங்கம் இன்று இந்தியாவில் உழைப்பாளிகளின் உள்ளத்தில் தன்அழுத்தமான சுவடுகளை பதித்துச் சென்றுள்ளது. இது முதலாளிகளுக்கும், தொழிலாளிகளுக்கும் இடையேயான நல்லுறவுகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருப்பதோடல்லாமல், தொழில் நலச் சட்டம் [ Industrial Relations Act ], மற்றும் தொழில் தகராறுகள் சட்டம் [Industrial Dispute Act] ஆகியவற்றுடன் இணைந்து செயல்படக் கூடியதுமாகும். மேலும், தொழிலாளர்களின் நலன் மட்டுமன்றி அவர்தம் குழந்தைகளின் நலன்களையும் கருத்தில் கொண்டு, அமைக்கப்பட்ட பொதுவான திட்டமாகும் இன்றும் நம்முடைய செயல் திட்ட வல்லுனர்களால், நலத்திட்ட செயல்பாடுகளில் பயன்படுத்தப் பட்டு வருகின்ற ஒரு உன்னத தொழில் தத்துவமாகும்.
தொழிலாளர்களுக்கும், ஏழை எளியோருக்கும் தாயாக விளங்கிய சமுதாய சீர்திருத்தவாதியான அனசுயாபென் ஒரு சிறந்த அறிவாளி, பெண்ணியவாதி மற்றும் தேசியவாதியுமாவார். இவருடைய பன்முகத் திறமைகள் மற்றும் இந்திய சமுதாயத்திற்கான பல வகையான பங்களிப்பு இவருக்கு இந்திய மறுமலர்ச்சியில் ஒரு நிரந்தரமான இடத்தை உறுதிபடுத்தியுள்ளது.
அனசுயாபென் நான்காம் வகுப்பு வரை வீட்டிலேயே படித்தார். பிறகு மேற்கொண்டு படிப்பதற்காக மகாலட்சுமி பயிற்சி கல்லூரியில் சேர்ந்தார். ஆனாலும் அவரால் மேற்கொண்டு படிக்க இயலவில்லை. காரணம், தான் திருமணம் செய்து கொள்வதற்காக நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை பரீட்சையில் தோல்வியடைந்து கொண்டே இருந்ததுதான். அந்தககால கலாச்சார முறைப்படி இந்தியப் பெண்கள், கணவன்மார்களை விட அதிகமாகப் படிப்பதை அனுமதிக்கவில்லை. ஆனால் அவர் தன் சகோதரர் அம்பாலாலுக்குப் பயிற்சி அளிக்கும் போது தானும் உடன் இருந்து கவனித்துக் கொண்டிருப்பார்.
இவருக்கு 12 1/2 வயதாகும் போதே, 1897ம் ஆண்டு, திருமணம் நடந்தது. தன்னைவிட குறைந்த வசதியுடையவருக்கே வாழ்க்கைப் பட்டார் இருப்பினும், இவருடைய வாழ்க்கை கண்ணீரும் கம்பலையுமாகவே இருந்தது. மனம் ஒத்துப் போகாததனால், மண முறிவும் ஏற்பட்டது. இந்த நேரத்தில் அவர் ஆன்மீகப் புத்தகங்களில் அடைக்கலமானார். சுவாமி விவேகானந்தர் மீது பெரும் ஈடுபாடு கொண்டிருந்ததால், அவருடைய பிரபலமான ,'சன்யாசினியின் பாடல்', அவரை வெகுவாகக் கவர்ந்தது. இதனை குஜராத்தி மொழியிலும், மொழிபெயர்த்தார். இந்த தாக்கம் அவரை ஒரு ஜைனத் துறவியாகவும் முடிவெடுக்கச் செய்தது.
ஆனால் டாக்டர். எருள்கர் என்பவரைச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பு, அவரை மருத்துவம் படிப்பதற்காக இலண்டன் மாநகரம் செல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. தன்னுடைய 26ம் வயதில், 1911ம் ஆண்டு, அந்தக் காலத்தின் ஒரு புரட்சிகரமான செயலாக, படிப்பிற்காக, கடல் கடந்து, தனி ஒரு பெண்ணாக வெளி நாடு செல்லத் துணியும் அளவிற்கு அவருடைய குடும்பம் பழைய கலாச்சாரத்திற்கு அடிமையாகாமல் இருந்தது.
இலண்டனில் இருந்த காலம் இவருடைய வாழ்க்கை முறையையே மாற்றியமைத்தது. பிற்காலத்தில் பெரும் தலைவர்களாக மாறிய பல இந்திய நண்பர்களைப் பெரும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றார். இருப்பினும், ஒரு நாள் ஒரு இளம் கன்றுக் குட்டியின் இறைச்சிக் குவியலை இலண்டனின் ஒருஇறைச்சிக் கடையில் பார்த்து மனம் சஞ்சலப்பட்ட அனசுயாபென், தான் மருத்துவப் படிப்பிற்கு தகுதியற்றவர் என்பதை உணர்ந்து கொண்டார். காரணம் தன்னால் மனித உடலை அறுத்து பரிசோதனை செய்வது சாத்தியப் படாது . அதனால் அவர், இலண்டன் பொருளாதாரப் பள்ளியில், [ London School of Economics ] , சமூகச் சேவை குறித்த படிப்பை படிக்க முடிவு செய்தார். இங்குதான் அவர் தன்னுடைய பிற்கால வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இரு பெரும் கருத்துத் தொகுதிகளுக்கு ஆட்பட்டார்.
முதன் முதலில் பிரிட்டானியர் வழி நடத்தும் பெண் வாக்குரிமையை ஆதரிக்கும் பெண்களின் மிகக் கட்டுப்பாடான பெண்ணீய இயக்கத்தின் தொடர்பு கிடைத்தது. இரண்டாவதாக, அவர் , பிற்காலத்தில், தொழிலாளர் நலச் சங்கங்களை இந்தியாவில் முன்மொழிவதற்குக் காரணமாக இருந்த, ஃபேபியன் சோசலிச கருத்துக்களினால் ஈர்க்கப்பட்டார்.
1913 ல் தான் தேர்ந்தெடுத்தப் பணிகளுக்கான முழுமையான பரிவாரங்களுடன் இந்தியா திரும்பினார்.
தளர்ந்த மனித உள்ளத்தினைத் தாங்கி நிறுத்தியே
தளர்ச்சிதனைப் போக்கிடும் கை நம்பிக்கை
சோர்ந்து நிற்கும் உள்ளத்தின் இருள் போக்கியே
ஒளி விளக்கு ஏற்றிடும் கை நம்பிக்கை
உறுதி கொண்டு உழைத்தாலே உலகம் ஜெயிக்கலாம்
துணிவு கொண்ட உள்ளத்தினால் அகிலம் ஆளலாம்.
இந்தியா திரும்பிய அனசுயாபென் தொழிற்சாலைப் பணியாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பங்களுக்காகப் பாடுபடுவதென்று முடிவு செய்தார். ஆரம்ப காலத்தில் அவர்களின் நிலை மிக மோசமானதாக இருந்தது. மார்ச் மாதம் 1914 ல் முதலில் நெசவாளர்களின் குழந்தைகளுக்காக, ஜெசோதாபென் என்கிற ஒரு விதவைப் பெண்ணின் துணை கொண்டு, 1916 ல், அமரபுராவில் ஒரு குழந்தைப் பள்ளியை நிறுவினார். தன்னுடைய வாழ்க்கையில் அதுதான் மிக ஆசீர்வதிக்கப் பட்ட கணமாக உணர்ந்தார்.
இந்த சிறிய ஆரம்பம்தான் அவரை, கடனுதவி வழங்கும் கூட்டுறவுச் சங்கங்கள் நிறுவி, அதன் மூலம் தொழிலாளர்களைக் கடன்காரர்களின் பிடியிலிருந்து விடுவிக்கச் செய்தது. பிறகு, ஆயுர்வேத மருத்துவமனை, இரவு நேர முதியோர் பள்ளி, பஜனை மடம், ஆரம்பப் பள்ளிகள் தொழிலாளர்களின் பொது நலம், இப்படி படிப்படியாக சேவைகள் தொடர்ந்தன.இந்தச் செயல் பாடுகள் அனைத்தும் உண்மை மற்றும் அகிம்சை வழியிலான நலத்திட்டம் என்கிற பொதுக்கருத்தை ஏற்படுத்த உதவியது. இந்தப் பொதுக் கருத்தே, இன்றைய பலதரப்பட்ட தொழிலாளர் நலத் திட்டங்களுக்கு அடிப்படையாக உள்ளது.
1917 ல் அகமதாபாத் நகரில் பிளேக் நோய் தாக்கியது. இதனால் பெரும்பாலானத் தொழிலாளர்கள் தங்களுடைய கிராமங்களுக்கு, பயந்து ஓடினர். இது தொழிற்சாலைகளுக்குப் பெரும் பிரச்சனைகளை உருவாக்கியது. அப்பொழுது, நிர்வாகம் அவர்களை அங்கேயே தங்க வைக்கும் பொருட்டு, அவர்களுடைய கூலியில் 75 % ஊக்கத் தொகையாகக் கொடுப்பதாக அறிவித்தது. ஆனால் வேறு போக்கிடம் இல்லாமல் அங்கேயே தங்க வேண்டியிருந்தத் தொழிலாளர்கள் கூட இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அனசுயாபென்னிடம் வந்து முறையிட்டனர் தொழிலாளர்கள். அவருக்கு இது முற்றிலும் ஒரு புதிய களமாக இருந்தாலும், இந்தப் பிரச்சனையின் முக்கியத்துவத்தை உணர்ந்தவராக, அவர்களுடைய நியாயமானக் கோரிக்கைகளைப் புரிந்து கொண்டு , ஆவன செய்வதாக ஒப்புக் கொண்டார்.
இதுதான் இந்திய கூட்டுறவுத் தொழிற்சங்கத்தின் முக்கியம் வாய்ந்தத் தருணமாக இருந்தது. முதல் முறையாக, தொழிலாளர்களுக்கான நற்பலன்களைக் கருத்தில் கொண்டு, ஒரு நெறிப்படுத்தப்பட்ட முறையிலான கூட்டு முயற்சி எடுக்கப் பட்டது. அனசுயாபென் முதல் கூட்டத்தை சபர்மதி ஆற்றங்கரையில் கூட்டி, தொழிற்சாலை முதலாளிகளுக்கு 48 மணி நேரக் கெடு கொடுத்தபின், இறுதியில் வேலை நிறுத்தம் அறிவிக்கப் பட்டது.
இதில் இன்னொரு ஆச்சரியமான செய்தி, அனசுயாபென்னின், ச்கோதரர் அம்பாலால்பாய் ஆலை முதலாளிகள் சங்கத் தலைவராக இருந்தது தான். இதையனைத்தையும் எட்ட இருந்து கவனித்துக் கொண்டிருந்த காந்தியடிகள், உள்ளூர் தொழிலாளர்களுக்கு, கூலியை உயர்த்திக் கொடுக்கும்படி அம்பாலாலுக்கு ஒரு கடிதம் எழுதினார். எதிர், எதிர் கொள்கைகள் கொண்ட சகோதரரும், சகோதரியும், ஒரே வீட்டில் வாழ்ந்தாலும், அவரவர் கொள்கைகளை மதித்துக் கொண்டு, அடுத்தவரின் வெற்றியையும் பாராட்டிக் கொண்டு அமைதி காத்து வந்தனர். ஆலை முதலாளிகள் கூலியை உயர்த்திக் கொடுக்கவும் ஒப்புக் கொண்டனர்.
1917ல் , இந்தியாவின் கூட்டுறவு தொழிற்சங்கத்தின் வரலாற்றில் இந்த வேலை நிறுத்தம் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். 1918ல் நெசவாளர்கள் மற்றுமொரு தேவைக் காரணமாக பிரச்சனையைக் கொணர்ந்தனர். இந்த முறை காந்தியடிகள் அந்த வேலை நிறுத்தத்தில் நேரடி ஆவல் கொண்டு அனசுயாபென் மற்றும் ஏனையத் தலைவர்களுக்கும் வழிகாட்டினார். ஆலை முதலாளிகள் கதவடைப்பை அறிவித்தாலும் , இறுதியில் நெசவாளர்களே வெற்றி பெற்றனர். இந்த நேரத்தில் தான் ஆலை முதலாளிகளும், சங்கம் அமைப்பதை விரும்பினர். இறுதியாக 1920ல், முதல் தொழிற்சங்கமான, நூற்பாலை தொழிலாளர் சங்கம் [TLA], உருவானது.
காந்தியடிகள், இந்தச் சங்கம் தொழிலாளர்களுக்குச் சேவை செய்வதற்காக அமைக்கப்பட்டதன்றி, ஆலை முதலாளிகளுக்கு எதிரானதல்ல என்பதைத் தெளிவுபடுத்தினார். மேலும் அவர் நெசவாளர் கூட்டுறவுச் சங்கம், தனக்கென்று சட்ட திட்டங்கள் கொண்டிருக்க வேண்டும், தொழிலாளர்களை முதலாளிகள் தங்கள் சுயநலத்திற்காக பயன் படுத்திக் கொள்வதும் மற்றும் ஆதிக்கம் செலுத்துவதும் கூடாது. அத்தோடு அந்தச் சங்கம் பொருளாதாரத் தன்னிறைவு கொண்டதாக இருத்தல் வேண்டும், என்று அழுத்தமாகக் கூறியிருந்தார்.இது ஆலை நிர்வாகத்திற்கும் மற்றும் தொழிலாளர்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு அகமதாபாத் நெசவுத் தொழிற்சாலை எந்த ஒரு வேலை நிறுத்தமும் எதிர் கொள்ளவில்லை.
தொழிலாளர்களுடனான இவருடைய மனம் திறந்த நெருக்கமான தொடர்பு, அத்துடன் அம்பாலால்பாயின் ஆக்கப் பூர்வமான செயல்களும் முக்கியத் திருப்பங்களை ஏற்படுத்தியிருந்தன. நூற்பாலைத் தொழிலாளர் சங்கம் [TLA], தொழிலாளர்களின் நலனில் அக்கரை செலுத்துகிறது. தொழிலாளர்களுக்கு, உழைப்புக் கேற்ற ஊதியம் எவ்வளவு அவசியமோ, அது போன்று அவர்கள் மது மற்றும் போதைப் பழக்கம் கொண்டிருக்கக் கூடாது. கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். கடன் வாங்கும் பழக்கம் இருக்கக் கூடாது. நல்ல உடல் ஆரோக்கியமும் கல்வியும் கொண்டிருக்க வேண்டும். ஒழுங்கான குடியிருப்பும் மற்றும் போதுமான சமூகப் பாதுகாப்பும் இருத்தல் வேண்டும். மேற்கண்ட கருத்துக்களில் அனசுயாபென் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவராகவும், அதற்காகப் பாடுபடுபவராகவும் இருந்தார்.அவர்கள் வசிக்கும் இடங்களுக்குச் சென்று, அவர்களுக்கு இருக்கக் கூடிய பிரச்சனைகளைக் கண்டறிந்து, அதற்கானத் தீர்வுகளையும் பகுத்தாய்ந்தார்.
தொழிலாளர்கள் தங்களுடைய மிகக் கடுமையான நேரங்களில் கூட, அனசுயாபென்னைத் தாயாகவும், சகோதரியாகவுமே, பார்த்ததில் எந்த அதிசயமும் இல்லை. காந்தியடிகளின் கொள்கைகளுக்கு முழு உருவம் கொடுத்தவரும் அனசுயாபென்தான். செல்வச் செழிப்பில் பிறந்து வளர்ந்திருந்தாலும், தன் தோற்றத்தில் அதை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார். சேரிகளுக்குச் சென்று அந்தக் குழந்தைகளின் நலனிலும் அக்கரை செலுத்தி வந்தார். காந்தியடிகளுடன் சந்திப்பு ஏற்பட்டவுடன் அவருடைய வாழ்க்கை முறை மிக எளிமையாகிவிட்டது.
அனசுயா பென் பெண்ணுரிமை மற்றும் பெண் விடுதலை இவைகளில் நம்பிக்கை கொண்டவராவார். அவருடைய நடத்தையில், துணிச்சலும், தைரியமான போக்கும் இருந்தது. பெண்கள் முக்காடிட்டுக் கொண்டு வீட்டின் உள்ளேயே அடைந்துக் கிடந்த அந்தக் காலத்தில், ஆண்களிடம் சரி சமமாகப் பழகுவதிலும், முக்காடில்லாமல் வெளியே செல்வதிலும் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியிருந்தார். புதிய செய்திகளை அறிந்து கொள்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார்.
பொறுமையும், தனித் திறமைகளும் கொண்டிருந்த அனசுயாபென், ஒரு செயல் வீரர் என்றால் அது மிகையாகாது !! தொடரும்.