திருமதி ருக்மணி தேவி அருண்டேல்.
[ 1904 - 1986 ]
சங்கத் தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் பிப்ரவரி மாதம் 29 ஆம் நாள், லீப் வருடம், 1904 ஆம் ஆண்டு, பௌர்ணமி தினத்தன்று, மகாமகத் திருவிழாவின் போது, தன் பெற்றோருக்கு எட்டாவது குழந்தையாக பிறந்தார் ருக்மணி தேவி. இவருடைய தந்தையார் நீலகண்ட சாஸ்திரிகள், சமஸ்கிருத பண்டிதர்கள் வழி வந்த ஐதீகமான பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். தாயார் சேஷம்மாள், சிறந்த இசைக்குடும்பத்தில் இருந்து வந்தவராவார்.
ருக்மணி தேவி இருபதாம் நூற்றாண்டில் நம் இந்தியத் திருநாட்டிற்குக் கிடைத்த ஒரு கலைப் பொக்கிஷம் எனலாம். அக்காலங்களில், கோவில் திருவிழாவில் நாட்டியம் ஒரு முக்கிய பங்கு வகித்து வந்தது. இறைவனுக்கு படைக்கப்படும் ஆராதனையாகவே கருதப்பட்டு வந்தது. இவருடைய இளவயது பருவத்திலேயே, இவருடைய தந்தை, மகாராஜாவிற்காக கோவிலில் நவராத்திரி விழாவில் நாட்டியம் ஏற்பாடு செய்யும் பணியில் இருந்தபோது, ருக்மணியும் உடன் இருந்ததால், நாட்டியத்தால் பெரிதும்கவரப்பட்டார். மிகுந்த தெய்வ பக்தி கொண்டவராகவும், மதுரை மீனாட்சியம்மன் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவராகவும் இருந்தார் ருக்மணி தேவி.
ருக்மணி தேவியின் தந்தை பொதுப்பணித் துறையில் பொறியாளராக பணிபுரிந்து வந்ததால் அவர்களின் குடும்பம் ஊர், ஊராக மாற்றலாகிக் கொண்டிருந்தலால் இவரால்,
நிலையான ஒரு பள்ளியில் படிக்க இயலாமல் போனது. ஆகவே வீட்டிலேயே ஆசிரியர் வைத்து இவருக்கு கற்பிக்கச் செய்தார்கள். ஸ்ரீராம் என்றொரு சகோதரரும் இவருக்கு உண்டு. அவர், கும்பகோணத்தில் உள்ள தங்கள் மாமா வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருந்தார். இவர்கள் இருவரையும் எந்த கட்டுப்பாடும் இன்றி சுதந்திரமாக வளர்த்தனர் பெற்றோர். குடும்ப பாரம்பரிய ஒழுக்கம் இயல்பாகவே இவர்களிடம் இருந்தது. இசை, வயலின் வாசிப்பது போன்ற கலைகளையும் கற்றுவித்தனர் பெற்றோர்.இவருடைய தந்தை ஓய்வு பெற்ற பின் இவர்கள் செங்கற்பட்டில் குடியேறினர்.
ருக்மணி தேவியின் தாயார் இசைக் குடும்பத்திலிருந்து வந்தவராவார். தியாகராஜ சுவாமிகள் இவர் வீட்டு திண்ணையில் அமர்ந்து இளைப்பாறுவாராம். பல பிரபல இசைக்கலைஞர்கள் இவர் தாயாரின் வீட்டிற்கு வருவதுண்டு. அருணாசலக் கவிராயர், மகா வைத்தியநாத ஐயர், மற்றும் பலரும் ருக்மணியின் தாயார் இல்லத்திற்கு வருவதுண்டு. தன்னுடைய மூன்றாவது வயதிலிருந்தே , நவராத்திரி விழாவின் போது, புதுக்கோட்டை சமஸ்தானத்தில் மணிக்கணக்காக இசை நிகழ்ச்சியில் அமர்ந்து விழா முடியும் வரை முழுவதுமாக கேட்டு பழகியவருக்கு, பிற்காலத்தில் இசையின் ஆர்வம் முளை விட்டதிலும் ஆச்சரியமில்லை.
ருக்மணியின் தந்தை, கர்னல் ஆல்காட் என்பவரால் ஈர்க்கப்பட்டு, 1906 இல், பிரம்மஞான சபையில் சேர்ந்தார். அடையாரில் இவர்கள் குடும்பம் குடியேறியதுடன், ருக்மணிதேவி, திருவல்லிக்கேணியில் பள்ளியில் சேர்ந்து கல்வி பயின்றார். பிரம்மஞான சபையின் அருகிலேயே புதிய இல்லமும் கட்டப்பட்டு, அதற்கு ‘ புத்த விலாஸ்’ என்று பெயரும் சூட்டப்பட்டது. பிரம்மஞான சபையைச் சார்ந்த எலியனார் எல்டர் என்பவரும் அவரது சகோதரி கதலின் என்பவரும் கிரேக்க நடனம் ஆடுவதை இரசித்த ருக்மணிதேவி தானும் அதில் பங்கு கொண்டார். 1918 இல் ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய ‘மாலினி’ என்ற நாடகம் மேடையேறிய போது, ருக்மணிதேவி கேதாரகௌளா ராகத்தில் ஒரு பாடல், இசைப் பாத்திரத்தில் பாடினார்.
1917 ஆம் ஆண்டில், ருக்மணிதேவி பெனாரஸ் சென்றபோது டாக்டர் அருண்டேல் என்பவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிரம்மஞான சபையின் தளபதியான அருண்டேல் அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராவர். பெனாரஸில் [காசி] மத்திய இந்துக் கல்லூரியில் சில காலம் தலைவராகவும் இருந்தார். பின்பு டாக்டர் அன்னி பெசண்ட் அவர்கள் நடத்தி வந்த ‘நியூ இந்தியா’ என்ற பத்திரிக்கையின் பொறுப்பாளராக பதவி வகித்தார். பலத்த எதிப்புக்கிடையில் அன்னிபெசண்டின் உறுதியான உதவியுடன் அருண்டேலை திருமணம் செய்து கொண்டார் ருக்மணிதேவி.
1924 ஆம் ஆண்டு கணவர் அருண்டேலுடன் லண்டனில் தங்கியிருந்த போது, ரஷ்ய நடனக்கலைஞர் பவ்லோவை கொலெண்ட் கார்டன்ஸில் சந்தித்தார். இவருடைய பாலே நடனக்கலைத் திறமை ருக்மணியை பெரிதும் கவர்ந்தது. பாவ்லோ, பாலே நடன அரங்கை விட்டு வெளியே வந்த போது ருக்மணிதேவி, அவருடைய நடனத்தில் மெய்மறந்து, அவரிடம் தன்னால் பாவ்லோவைப் போல ஒரு காலும் நடனமாட முடியாது என்று கூறினார். இதனைக் கேட்ட பாவ்லோ, ருக்மணியிடம், ‘நீங்கள் நடனமே ஆட வேண்டாம், மேடையில் நடந்து வலம் வந்தாலே போதும், மக்கள் உறுகிவிடுவார்கள்’, என்று கூறினார். பாவ்லோ ருக்மணிதேவிக்கு நாட்டியத்தின் மீது தீவிர ஆவலை தூண்டிவிட்டார். பாலே நடனமும் கற்றார்.
ருக்மணிதேவியின் உள்ளத்தில் பரதநாட்டியம் பூரணமாக கற்க என்ற எண்ணத்தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. முறைப்படி நடனம் கற்க வேண்டி முதலில் மைலாப்பூர் கௌரி அம்மாளிடமும், பின்பு பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடமும் நடனம் பயின்றார். தன்னுடைய 31 வயதில் நாட்டிய அரங்கேற்றமும் நடத்தினார். பிரம்மஞான சபையின் வைரவிழா நிகழ்ச்சியில் அரங்கேற்றிய நடனம் பரத நாட்டிய வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. நாட்டியத்திற்கு பெரும் எதிர்ப்பு இருந்த அந்த கால கட்டத்தில் டாக்டர் முத்துலட்சுமியும் நடனத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தார்.
இந்தச் சூழலில் ருக்மணி அருண்டேலின் நிகழ்ச்சிக்கு சி.பி.ராமசாமி ஐயர், சிவசாமி ஐயர் மற்றும் சீனிவாச சாஸ்திரி போன்றவர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். அன்னி பெசண்ட் அம்மையாரும், டாக்டர் அருண்டேலும் இந்தியாவின் அரசியல் சுதந்திரத்திற்காக பெரும் பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில் இந்தியா சிறிது சிறிதாக தன்னுடைய தனித்தன்மையை இழந்து கொண்டு வருவதாக உணர்ந்த ரேணுகா அருண்டேல், நமது நாட்டின் கலாச்சாரத்தை மறுமலர்ச்சியடையச் செய்வதும் அப்போராட்டத்திற்கு இணையானது என்று கருதினார்.
மேலும் பரதத்தில் பூரணத்துவம் பெரும் ஆவலில், சுப்பிரமணிய சாஸ்திரியிடம் பரத சாஸ்திரம் குறித்த தெளிவான விளக்கம் பெற்றார். பாபநாசம் சிவன், காளிதாச நீலகண்ட ஐயர், டைகர் வரதாச்சாரியார் போன்றவர்கள் நாட்டியத்திற்கான பாடல் இயற்றியும் ஒருசில குறைபாடுகளை நீக்கியும் சில மாற்றங்களைக் கொண்டு வந்தனர். இதனால் நடனக் கலையின் நுட்பங்கள் பூரணத்துவம் அடைந்தது, என்றால் அது மிகையாகாது. இவருக்குக் கிடைத்த வரவேற்பினாலும், ஆதரவினாலும், நடனக்கலை பள்ளியை ஏற்படுத்த வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது.
ருக்மணி தன் கணவர் அருண்டேல் தலைமைப் பதவி ஏற்றிருந்த காலத்தில், பிரம்மஞான சபையின் ஒரு மரத்தின் அடியில்,கலைக்கான பன்னாட்டு மையம் ஒன்றை நிறுவினார். தன் சகோதரரின் மகளான ராதா என்கிற ஒரே ஒரு மாணவி மட்டும் தான் முதலில் இருந்தார். அன்று ராதா அவரை அத்தை என்று அழைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்த மற்ற மாணவர்களுக்கும் அவர் அத்தையாகவே ஆனார். உலகளவில் பல மாணவர்கள் பரதம் கற்கும் பொருட்டு வந்து சேர ஆரம்பித்தனர்.
டாக்டர் அருண்டேல், திரு நாராயணமேனன், திரு ராம கோட்டீஸ்வரராவ், திரு சந்திரசேகரன், பண்டித சுப்பிரமணிய சாஸ்திரி, திரு கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் பல பாரம்பரியக் கலைகளில் விருப்பமுள்ள சென்னையைச் சேர்ந்தவர்களின் ஆதரவுடன், ருக்மணி அம்மையார் “கலாஷேத்ரா”, என்ற கலாச்சாரப் பள்ளியைத் தோற்றுவித்தார்.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் நாட்டிய நிகழ்ச்சிகள் மற்றும் நாட்டிய நாடகங்கள் நடத்தப்பட்டது. ருக்மணிதேவி தன் மாணவர்கள் குழுவுடன், தென்னிந்தியப் பயணம் மேற்கொண்டு முதலில் குற்றாலத்தில், ‘குற்றாலக் குறவஞ்சி’, நாட்டிய நாடகத்தை நடத்திக் காண்பித்தார். பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி, காளிதாஸ் நீலகண்ட ஐயர், டைகர் வரதாச்சாரியார், பாபநாசம் சிவன் போன்ற இசைக்கலைஞர்கள் கலாஷேத்ராவில் பணியாற்றி இசையையும், நடனத்தையும் ஒருங்கே வளர்த்தனர். இவர் சமஸ்கிருத நாடகங்களையும், சமஸ்கிருத பண்டிதர்களின் துணை கொண்டு நாட்டிய நாடகமாக மேடையேற்றினார். ‘குமார சம்பவம்’ நாடகம் மிகப்பிரபலமானது. குறைந்த எண்ணிக்கையில் இருந்த மாணவர்கள், போகப் போக பல ஊர்களிலிருந்தும் அதிகளவில் வந்து சேர ஆரம்பித்தனர். பெரும்பாலான நடன வகுப்புகள், அடையாறு பிரம்மஞான சபையின் பெரிய ஆல மரத்தினடியிலேயே நடந்தது.
ருக்மணி, கலாஷேத்ராவில் ‘சங்கீத சிரோமணி’ என்ற படிப்பைக் கொண்டுவர பெரு முயற்சி எடுத்தார். லெட்சுமண சுவாமி முதலியார், லட்சுமி நாயர் தலாராம், வயலின் வெங்கட சுவாமி, புல்லாங்குழல் சஞ்சீவராவ், அண்ணாமலை பல்கலைக்கழகத்திலிருந்து கே.பொன்னையாபிள்ளை ஆகியோர் அடங்கிய ஒரு குழு கலாஷேத்திராவை பார்வையிட்டு, சங்கீத சிரோமணி படிப்பு ஆரம்பிப்பதற்கு அனுமதியும், சென்னைப் பல்கலைக் கழக அங்கீகாரமும் அளித்தது.
ருக்மணி தேவி அருண்டேல், பரதக்கலை மேம்பாட்டுப் பணிகளுடன், விலங்குகள் பாதுகாப்பு, சைவ நெறி முறை போன்ற பல நற்காரியங்களிலும் ஈடுபட்டிருந்தார். 1952 ஆம் ஆண்டு பாராளுமன்ற ராஜ்யசபை உறுப்பினராக, திரு ராஜாஜி அவர்களின் வற்புறுத்தலின் பேரில் இரண்டு முறை பதவி வகித்தார். வாயில்லாத ஜீவன்களான விலங்குகளின் மீது ஆழ்ந்த அன்பு கொண்டவராக இருந்த காரணத்தினால், 1960 ஆம் ஆண்டு, மிருகவதை தடுப்பு மசோதாவை பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்தார்.மிருக நலக் கழகத்தின் முதல் தலைவரும் ஆனார்.
மைசூர் மகாராஜாவின் ஆஸ்தான வித்வானாக விளங்கிய தெய்வீக இசைப் புலமை வாய்ந்த வாசு தேவாச்சாரியார் அவர்களின் உதவியுடன், ‘வால்மீகி இராமாயணம்’ நடன நிகழ்ச்சியைத் தயாரித்தார்.
ருக்மணியும் டாக்டர் அருண்டேலும், 1941 இல் சாந்திநிகேதன் சென்று தாகூரைச் சந்தித்து அவர் விருப்பத்திற்கிணங்க, ஒரு அபிநயமும் பிடித்துக் காட்டினார். சாந்தி நிகேதனின் அமைதியும் அழகும் ருக்மணியை பெரிதும் ஈர்த்தது. அதன் காரணமாக திருவான்மியூரில் நிலம் வாங்கப்பட்டது.
கணவர் அருண்டேல், 1945 ஆம் ஆண்டு காலமானார். இதற்குப் பிறகு ருக்மணிதேவி, இந்தியக் கலாச்சாரத்தையும், மரபுகளையும் எடுத்துக் காட்டும், ‘ஆண்டாள் சரித்திரம்’, ‘சீதா சுயம்வரம்’, ‘சாகுந்தலம்’, ‘குமார சம்பவம்’, ‘கீத கோவிந்தம்’, ‘புத்த அவதாரம்’, ‘பக்த மீரா’, ‘சபரி மோட்சம்’, ‘குற்றாலக் குறவஞ்சி’, ‘குசேலோ பாக்கியானம்’ முதலிய நாட்டிய நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. ‘பாகவத் மேளம்’, என்கிற பழம்பெரும் கலைக்கு புத்துயிர் அளித்தார் ருக்மணிதேவி.
கலாஷேத்ரா, மற்ற குழுக்களிலிருந்து, தங்களுடைய தனிப்பாணியினால் மிகவும் வேறுபட்டு உள்ளது. 1934 இல் டாக்டர் அருண்டேல் பெசண்ட் உயர்நிலைப் பள்ளியை உறுவாக்கினார். சங்கரமேனன் பள்ளியின் முதல்வரானார். பின்பு டாக்டர் மரியா மாண்டிசோரியை வரவழைத்து மாண்டிசோரி கல்வி முறையை பள்ளியில் கொண்டு வந்தார். ஆசிரியர் பயிற்சி கல்வி துவக்கப்பட்டது.
நெய்தல் துறையைத் தோற்றுவித்ததோடு இயற்கை சாயம் ஆராய்ச்சி ஆய்வுக் கூட்டத்தையும் அமைத்தார். இங்கு உற்பத்தியாகும் சேலைகள் சிறப்பான தனிப்பட்ட வடிவமைப்பும், தனிப்பட்ட ரகத்தையும் கொண்டிருந்தன. கலாஷேத்ரா துணிகள் இன்றும் தனித்துவம் பெற்று விளங்குகின்றன.
கணவருடைய மறைவிற்குப்பின், பிரம்மஞான சபையின் வளாகத்திலிருந்து அவருடைய கலாஷேத்ரா, பள்ளி மற்றும் கைத்தறி குடிலை மாற்றப்படவேண்டும் எனக் கேட்டுக் கொண்டதன் பேரில் திருவான்மியூரில் வாங்கிய 60 ஏக்கர் நிலத்தில் கைத்தறி போர்ட் அளித்த நிதி உதவியின் மூலம் கைத்தறி குடில் மாற்றப்பட்டது. 1951 இல் பிரம்மஞான சபையிலிருந்து ஒரு சிறிய ஆலமரச் செடியை கொண்டுவந்து அதனை ஜனவரி முதல் நாள், தங்களது வளாகத்தில், ஒரு விழாவாகக் கொண்டாடி அதனை நட்டு வைத்தார். பல நாட்டு நண்பர்களும், தங்கள் நாட்டிலிருந்து மண் கொண்டுவந்திருந்தனர். கடற்கரை ஒட்டி இன்றும் பசுமையான மரங்களுடன் எழில் சோலையாக மாறியுள்ளது கண்கூடு. ஒரு சமயம் குடில் தீக்கிரையான போல பல்வேறு சம்பவங்கள் நடந்தாலும், ஏதோ ஒரு சக்தி அவரைக் காத்து, அரவணைத்து மீட்டு கொண்டு வந்து கொண்டிருந்தது.
தமிழ் நூல் நிலையம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. ருக்மணிதேவியின் சிறந்த சேவையைப் பாராட்டி பல்வேறு விருதுகளும் அவருக்கு வழங்கப்பட்டது. இந்திய அரசாங்கத்திடமிருந்து, பத்மபூஷண் விருது, சங்கீத நாடக அகாடமியின் விருது, கலைத்துறையில் சிறப்பான சாதனைகள் புரிந்தமைக்கு மகாராஷ்டிராவில் இச்சல் கரஞ்சி விருது, விலங்குகள் நல அமைப்பிடமிருந்து, பிராணி மித்ரா விருது, தமிழ்நாடு இயல் இசை மன்றத்தின் தனிப்பெரும் கலைஞர் என்ற விருது, மத்திய பிரதேச அரசிடமிருந்து காளிதாச சன்மான் விருது, விலங்குகளுக்குச் செய்த சேவைக்காக அமெரிக்காவிலுள்ள பன்னாட்டு சைவ உணவு ஒன்றியம் அளித்த மன்கர் விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார் அம்மையார்.
மேலும் அமெரிக்காவின் வேய்ன் பல்கலைக்கழகம், கல்கத்தாவில் உள்ள ரவீந்திர பாரதி பல்கலைக்கழகம் பெனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகம் ஆகியவைகள் ருக்மணி அருண்டேலுக்கு டாக்டர் பட்டங்கள் அளித்து கௌரவித்தன.
ருக்மணி தேவி தயாரித்த 25 நாட்டிய நாடகங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான காவியங்களாகும். இவற்றின் தனிச் சிறப்பிற்கு முக்கிய காரணம், மரபு வழுவாத நாட்டியம் மட்டுமல்லாது சிருங்காரம், பக்தி, கலையம்சம், ஆன்மீகம், அழகு மொழியில் பாபநாசம் சிவன் போன்ற பிரபலமானவர்கள் அமைத்துக் கொடுத்த இசை போன்றவைகளாலும் ஆகும்.குடும்பப் பெண்கள் மேடையேறி நடனம் ஆடக்கூடாது என்ற கொள்கையை தகர்த்தெரிந்து, பரதக் கலைக்கு ஒரு மதிப்பையும், மரியாதையையும் ஏற்படுத்தியவர் ருக்மணிதேவி. அருண்டேல் அவர்கள். நாட்டியம், நாடகம் என்ற நவரச காவியத்தை முழுவடிவில் உருவாக்கி நடனக் கலையில் ஒரு மறுமலர்ச்சியை தோற்றுவித்தார்.
இவருடைய தன்னலமற்ற கலைச்சேவை இந்தியாவின் தலைசிறந்த ஒரு கலாச்சாரத் தூதுவராக உயர்த்தியது. உலகின் பல நாடுகளுக்கும் சென்று பரதக் கலையை பரப்பியுள்ளார்.
பிப்ரவரி மாதம் 1986 ஆம் ஆண்டு ருக்மணி தேவி அருண்டேல் இறைவனடி சேர்ந்தார். ‘அத்தை’ என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட ருக்மணி, எல்லாவற்றிலும் அழகான பகுதியை மட்டும் காணக்கூடிய சக்தி வாய்ந்த பார்வையைப் பெற்றிருந்தார். கவித்துவமும், அழகை ஆராதிக்கக் கூடிய தெய்வீகப் பண்பும்தான் இவரை வாழ்நாள் முழுதும் மகிழ்ச்சியாக வைத்திருந்தது எனலாம்.