Wednesday, November 24, 2010

கல்லையும் கரைக்கும்..........காதல்.




காதல் என்ற வார்த்தையைக் கேட்டாலே காத தூரம் ஓடி ஒளியும் காலம் மலையேறி விட்டது. இன்று பெண் குழந்தைகள் தங்களுக்குத் தேவையானதை, தாஙகளே தேர்ந்தெடுக்கக் கூடியத் தெளிவையும், நல்லது, தீயது குறித்த தெளிந்த விழிப்புணர்வும் கொண்டுள்ளார்கள். எந்த விடயங்களையும் தெளிவாக சிந்தித்து முடிவெடுக்கக் கூடியத் திறனும் பெற்றிருக்கிறார்கள்.

சில காலம்முன்பு பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம் சிறந்ததா அல்லது காதல் திருமணம் சிறந்ததா என்று ஒரு விவாதம், “அவள் விகடன்” பத்திரிக்கைக்காக ஈரோடு மகளிர் கலைக்கல்லூரியில் நடத்தினேன். அதில் பத்து மாணவிகள் கலந்து கொண்டு காரசாரமாக விவாதித்தனர். அதனை சுருக்கமாக இங்கே தொகுத்துக் கொடுத்துள்ளேன்.

ஜான்ஸி : காதலர் தின கொண்டாட்டம் மிகப் பிரபலமானதிலிருந்து புரியவில்லையா, காதலின் உன்னதத்தை மக்கள் புரிந்து கொண்டார்கள் என்று.

ஜெயசுதா : நாட்டில் தலை போகிற பிரச்சனைகள் எத்தனையோ இருக்கின்றன. காதலர் தின கொண்டாட்டமா முக்கியம்? இது போல தேவையில்லாத கொண்டாட்டங்கள் குறைந்தால்தான் நாடு உருப்படும்.

சத்யா : கல்லைக் கூடக் கரைய வைக்கும் சக்தி உள்ளது காதல். கல்லாய் இருந்த இறைவனைக் கூட உருக வைத்தது ஆண்டாளின் காதல் அல்லவா...?

ஜெயசுதா : தெய்வீகக் காதல் வேறு....மனிதனின் காதல் வேறு. திருமணத்திற்குப் பிறகு ஒவ்வொருவர் வாழ்விலும் எத்தனையோ பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதனை உறவுகளால் மட்டுமே தீர்க்க முடியும்.

ரேணுகா தேவி : வரதட்சணை கொடுமையால் அதிகமா ஸ்டவ் வெடிக்கறது நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில்தாங்க........காதல் திருமணம்னா எந்த எதிர்பார்ப்பும் இருப்பதில்லையே.

கார்த்திகா : பல காதலர்கள் வீட்ல இருந்து பணம் நகையெல்லாம் எடுத்துக்கிட்டுத்தானே ஓடிப்போறாங்க.....சில நேரத்தில் அந்த காரணத்தினாலேயே ஏமாற்றப்படவும் செய்கிறார்கள்.

மேகலதா : சாதி வேறுபாடுகள் ஒழிய உதவுவது காதல்தானே. அரசாங்கமே காதல் திருமணத்திற்கு ஆதரவு கொடுக்கிறதே. பல சலுகைகளும் கொடுக்கிறது. காதல்ல மட்டும் தான் கலப்புத் திருமணம் சாத்தியமாகும்.

நிரஞ்சனா : அரசு பண்றது எல்லாமே, தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடுகிற வேலைதான். சாதி என்னன்னு கேட்காத பள்ளிக்கூடமும் இல்லை, சாதி இல்லாத சர்டிபிகேட்டும் இல்லை.

சித்ரா : காதல் எப்படிங்க வருது? பெரும்பாலும் வெளித்தோற்றமும், அந்தஸ்தும் பார்த்துத்தானே வருது....?
பெற்றோர் பலதையும் விசாரித்துப் பார்த்து முடிவு பண்ணும் திருமணத்தில் தான் பாதுகாப்பு அதிகம்.

ப்ரியா : அதில மட்டும் என்ன, குழந்தை இல்லேன்னாலோ, அல்லது வேறு ஏதாவது சின்ன பிரச்சனை இருந்தாலோ அதே பெரியவர்களே பார்த்து இரண்டாம் திருமணம் கூட செய்து வைக்கிறார்களே.

ஜான்சி : பெற்றோர் நிச்சயிக்கிற திருமணத்தில் பெண் பார்க்கும் படலம் என்று ஒண்ணு இருக்குமே, அது கொடுமைங்க.... ஆடு மாடு பேரம் பேசுவது போல பெண்ணை கேவலப்படுத்தும் இந்த திருமண பேரம் அவசியமா?

கார்த்திகா : காதல் திருமணத்தில் மட்டும், ப்ளஸ் பாயிண்டெல்லாம் மட்டும் காட்டி அட்ராக்ட் பண்ணுவாங்க. திருமணத்திற்குப் பிறகு மைனஸ் பாயிண்டெல்லாம் தெரியும் போது அப்ப பத்திக்கும்......

ஜெயசுதா : பல காதல் திருமணங்கள் தற்கொலையில் தானே முடிகிறது?
ரேணுகாதேவி : அதற்குக் காரணம் பெரும்பாலும்,பெற்றோராத்தான் இருப்பாங்க. ஈகோ, சாதி வேறுபாடு போன்ற காரணங்களைச் சொல்லியே பிரித்து விடுகிறார்கள். மகிழ்ச்சி, துக்கம் மாதிரி காதலும் ஒரு யதார்த்தமான உணர்வுதானே ?

ப்ரியா : உண்மைதான். காதலியின் நினைவாக கட்டிய தாஜ்மகால் இன்னும் உலக அதிசயமாக நிற்கிறது. நிச்சயித்த திருமணம் பண்ணின கண்ணகி சிலை இன்றும் கண்ணீருடன் நீதி கேட்டுக் கொண்டு நிக்குது. அது மட்டுமில்ல. கலப்பு மணம் மூலம் பிறக்கும் குழந்தைகள் மிக அறிவாளிகளாக இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றனவே.


சித்ரா : குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க பெரியோர் ஆதரவு அவசியம். அது மட்டுமல்ல, என்னதான் கணவனின் அரவணைப்பும், ஆதரவும் இருந்தாலும், பேறு காலங்களிலெல்லாம் தாயன்பு இல்லாவிட்டால் ஏக்கம் தான் மிஞ்சும்.

ஜான்சி : அதற்காக மனதிற்கு பிடிக்காதவரை மணந்து காலம் முழுவதும் கண்ணீருடன் வாழ்க்கையை நடத்த முடியுமா? மனப்பக்குவமும், தன்னம்பிக்கையும் உள்ளவங்க தைரியமாக காதலிச்சு கல்யாணம் செய்து, வாழ்க்கையில் வெற்றியும் பெறலாம்.

இப்படித்தாங்க நீண்டு கொண்டே போனது விவாதம். இதற்கு தீர்ப்பு நீங்கதான் சொல்லனும்.........

24 comments:

  1. விவாதம் சுவாரஸ்யம். இதற்கெல்லாம் தீர்ப்பே கிடையாது:)! சில காலம் முன்னர் எனில் எப்போது? இதில் விவாதித்தவர்களின் சொன்ன கருத்துடனேயேதான் இருந்திருப்பார்களா எனத் தெரியவும் ஒரு ஆவல்!

    ReplyDelete
  2. இக்கரைக்கு அக்கரை பச்சைனு சொல்லவும் முடியாதே. ம்ம்ம்ம்..... Everyone's married life is unique. Applying general standards may not be possible always.

    ReplyDelete
  3. பெற்றோர் பார்த்து செய்யும் திருமணமே சிறந்தது

    ReplyDelete
  4. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. //இதற்கு தீர்ப்பு நீங்கதான் சொல்லனும்.//

    பித்தளை சொம்பு இருக்கா ?

    ReplyDelete
  6. பேசிச் செய்த திருமணமோ காதலித்த திருமணமோ வாழ்வு இனிப்பது அதிஸ்டம்தான் !

    ReplyDelete
  7. இப்புடி புள்ளைகள போட்டு தொந்தரவு பண்ணாதீங்க அவுங்கவுங்க இஷ்டத்துக்கு உட்டுங்க எல்லா நல்லபடியா நடக்கும்

    ReplyDelete
  8. சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள குடும்பநல நீதிமன்றத்துக்கு வந்து பாருங்கள்...! "கல்லை கரைக்குதா? இல்லை... வாழ்க்கை கரைக்குதா என்ற உண்மையும் புரியும்...!

    உணர்ச்சிகளின் அடிமைகள்தான் காதல் திருமணம் புரிவோர்...!
    உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவர்கள்தான் பெற்றோர் பார்த்து மனம் புரிவோர்...!

    இன்று... தன்னை பெற்று அரும்பாடுப்பட்டு வளர்த்த பெற்றோரை... நோகடித்து ஓடுபவர்கள்... அவர்களுக்குளேயே தங்கள்தங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத காரணத்தால்... ஒருவரை விட்டு ஒருவர் ஓடுகிறார்கள்... அதாவது விவாகரத்து பெறுகிறார்கள்... விவாகரத்து பெற வரிசையில் நிற்கிறார்கள் இந்த உணர்ச்சிகளின் அடிமைகள்... "வாழ்க்கை என்பது விட்டுக் கொடுத்தல்"... அது காதலில் இருப்பதை தெரியும்... அது நடிப்பு...!

    ஓர் காதலர் காதலிக்கும்போது... பேசுவது, பழகுவது சிலமணிநேரம் மட்டுமே...! இந்த சிலமணிநேரத்தில் காதலன் கஞ்சனாய் இருப்பான்... ஆனால்... அவள் எதிரில் பிச்சைக்காரனுக்கு நூறு ரூபாய் பிச்சையாய் போடுவான்... அங்கே அவன் போலித்தனம், கபடநாடகம் தெரியாது... அதேபோல் காதலி தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் எனும் பிடிவாத குணம் கொண்டவளாய் இருப்பாள்... அவன் எதிரில் விட்டுக்கொடுப்பவளாய்... நெகிழ்வுடன் நடிப்பாள்...

    ஆனால் வாழ்க்கை என்பது 24 மணிநேரமும்... உண்பதும்...உறங்குவதும்..ஊடலும்...கூடலும்தான் வாழ்க்கை... இந்த 24 நேர வாழ்க்கையில் இவர்களுக்குள் ஒளிந்திருக்கும் "நிஜங்கள்" விஸ்வரூபமெடுக்கும்போது... அவர்கள் வாழ்க்கை வேதனையின் எல்லையில் முடியும்... குழந்தைகள் இருந்தால் அவர்கள் வாழ்கையும் வீணாகிறது....

    இதுதான் காதல் திருமண வாழ்க்கையின் உண்மை நிலை... யதார்த்தம்...!

    ReplyDelete
  9. நசரேயனுக்காக வெள்ளி சொம்பு காத்துக்கிட்டு இருக்கிலல..........

    ReplyDelete
  10. வேலு சார் புரியுது.......சும்மா கிடந்த சங்கை.......

    ReplyDelete
  11. ராமலஷ்மி, இந்த பேட்டி எடுத்து 4 வருடம் ஆகிறது. இன்னைக்கு இந்தப் பெண்களே வாழ்க்கையில் செட்டில் ஆகியிருப்பார்கள். எனக்கும் கூட ஆசைதான். இதி பங்கு பெற்ற யாராவது பதில் சொல்ல [ அப்டேட்] வருவார்கள் என்று.......பார்ப்போம்.

    ReplyDelete
  12. தம்பி காஞ்சி முரளி கூல்.........டேக் இட் ஈசி பாலிசி வேணும் வாழ்க்கையிலே....

    ReplyDelete
  13. சித்ரா, ஹேமா இருவரும் கிட்டத்தட்ட ஒரே மன நிலையில் இருக்கிறீர்கள். ஆனால் அது சரியான தீர்ப்பான்னு......இன்னும் சில நம்ம்ம சொந்தங்கள் பதில் சொல்லட்டும்.....முடிவு ஆராய்ச்சி பண்ணலாம்.....

    ReplyDelete
  14. எல்.கே. தெளிவா இருக்கீங்க......

    ReplyDelete
  15. ராதா கிருஷ்ணன் சார், ஆசியா இருவரும் ஈசியா தப்பிக்கப் பார்க்கிறீங்க........பதில் தேவை....

    ReplyDelete
  16. காண வாரோ...வந்தேனுங்க..........ஆனா உங்க தீர்ப்ப சொல்லலியேஏஏஏ.........

    ReplyDelete
  17. காதலித்து பெற்றோர் பார்த்து செய்யும் திருமணமும் சிறந்தது...!

    ReplyDelete
  18. எப்போதோ எழுதியது நினைவிற்கு வருகிறது... "காதல் கற்பனை வாழ்வில் புன்னகைத்துவிட்டு, நிஜ வாழ்க்கையில் ஓலமிட்டு அழுகிறது"...

    நிஜமாகவே எதார்த்தமான பதிவு... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  19. ஜெயசீலன் நீங்க நிச்சயிக்கப்பட்ட திருமண ஆதரவாளரா.......நன்று.

    ReplyDelete
  20. ஸ்ரீராம்...

    காதலித்து பெற்றோர் பார்த்து செய்யும் திருமணமும் சிறந்தது...!
    அப்போ காதல் திருமணமும் சிறந்ததுன்னு எடுத்துக்கனுமா.....

    குழப்பமா இருக்கீகளா........?

    ReplyDelete
  21. காதல் திருமணத்தைப் பெற்றோர் அங்கீகரிக்கணும்னு சொல்றேன்...!!

    ReplyDelete
  22. காதல் என்பது (காதல்)திருமணத்திற்கு பிறகு கலகலத்துப் போவது ஏனோ?

    ReplyDelete
  23. பிள்ளைகளின் விருப்பத்தை பெற்றோர்தம் விருப்பமாக மாற்றிக்கொண்டால் அநேக குழப்பங்கள் குறையும்.அதுவே இன்றைய கால கட்டம்.

    ReplyDelete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...