Sunday, November 12, 2017

சிட்டுவின் வலசை வரலாறு!




உல்லாசமாய் உலகளந்திருந்த 
சிட்டுக்குருவி
வெள்ளோட்டமாய் மனுசனூரில் 
மதியிறக்கி
தள்ளாட்டமாய் தத்தளிக்கும் 
கூட்டத்தினூடே
பரவசமாய் கூர்ந்துநோக்கி 
வண்ணமயமான
வஞ்சகமெனும் புதிதாயொரு 
வரைவிலக்கணமும்
நெஞ்சகத்தை ஆட்கொள்ள 
அள்ளியெடுத்ததை
பத்திரமாய் பையகப்படுத்திப் 
பறந்தது
வகைவகையாய் பிறன்பொருள் 
களவாடலும்
காழ்ப்பும், கோபதாபமும், 
புறம்பேசுதலும்
தீயசொல்லும் விதண்டாவாதமும் 
விரசமும்
அனைத்தும் அள்ளிஅள்ளி 
பையகப்படுத்தி
சுமந்தசுமை மூச்சழுத்தி 
எழும்பவிடாமல்
விழிபிதுங்கி மூலையில் 
முடங்கச்செய்ய 
வாட்டமுற்று வாடிக்கிடந்ததை 
வழிப்போக்கன்
நாய்நண்பன் பரிவோடு 
நலம்விசாரிக்க
தன்வினை தானறியாது 
தலைகவிழ்ந்திருக்க
பைரவனும் ஏற்றிவைத்த 
துர்பாரங்களை
 ஒவ்வொன்றாய் சுமையிறக்கி 
சுகமளிக்க
கூனாய் குவிந்ததெலாம் 
சிதறியோட
குதித்தோடி குதூகலமாய்  
சிறகுவிரித்த
சிட்டுக்குருவி தவறியும் 
மனிதப்பதரின்புறம்
சிரம்சாய்க்காமல் வான்வழியே  
வலசைபோனது! 

நன்றி : வல்லமை - http://www.vallamai.com/?p=81248