Thursday, May 4, 2017
Wednesday, May 3, 2017
தீ .. தீ ... தீ..!
ஒரு செயலை வல்லமையுடன் செய்து முடிப்பவர் யார் என்பதையறிந்து அவரிடம் அப்பணியை ஒப்படைப்பவரே சிறந்த நிர்வாகி. இதனை உணர்த்தும் விதமாக நேற்று நடந்த சம்பவம்..
இதனையே வள்ளுவப்பெருந்தகை,
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல். குறள் # 517 என்கிறார்.
நேற்று இரவு மணி 12.10. அசந்து உறங்கும் வேளையில் ‘டமார்’ என்று ஒரு சத்தம் எதிரொலித்தது. தூக்கம் கலைந்து என்னவோ ஏதோ என்று வெளியே ஓடிவந்து பார்த்தால், பக்கத்து வீட்டில் , எதிர் வீட்டில் , அண்டை அயலார் என ஒரு சிறு கூட்டம் ஓடிவந்து கொண்டிருந்தனர் எங்களைப்போலவே. எங்கள் வீட்டின் அருகாமையில் எதிர்புறமாக இருந்த ஒரு சிறு தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து . அனைத்தும் இரசாயணப் பொருட்கள் என்பதால் அனைவரும் அச்சத்தின் உச்சத்தில் உறைந்திருந்த நேரத்தில், தீயணைப்புத்துறைக்கு தொலைபேசியில் அழைக்க முயன்றபோது பதற்றத்தில் எந்த எண்ணும் நினைவில் வர மறுக்கிறது. என் கணவர் காரை எடுத்து சற்று தொலைவில் நிறுத்திவிட்டு தீயை அணைக்க தண்ணீர் பிடித்து ஊற்றிக்கொண்டிருந்தார். ஒருவழியாக 101 நினைவிற்கு வந்து அழைக்க முயன்றபோது லைன் பிசியாகவே இருந்தது. உடனே 108 அழைத்துவிட்டேன். அந்தந்த பகுதிக்கென்று ஆம்புலன்ஸ், தீயணைப்பு நிலையம், காவல்துறை என அனைத்திற்கும் தனி எண்கள் இருப்பது தெரிந்தும் அந்த அவசரத்தில் ஒன்றும் நினைவிற்கு வரவில்லை. இதுபோன்று முக்கியமான எண்களை கண்ணில் படும்படியாக எங்காவது எழுதிவைக்க வேண்டும் என்று ஊருக்கு உபதேசம் செய்யும் நாம் கோட்டை விடுவதும் நடந்துவிடுகிறது. 108 என்று பொத்தாம் பொதுவாக போன் செய்தது சென்னையின் பிரதான ஆம்புலன்சு நிலையத்திற்குச் சென்றிருக்கிறது. ஒரு பெண் தான் அழைப்பை ஏற்றிருந்தார். பதற்றமாக நான் ஏதேதோ வேகமாக பேசியதை பொறுமையாகக் கேட்டு, தன் அமைதியான கேள்விகள் மூலம் எங்கள் ஊர், தாலுக்கா, அருகிலிருக்கும் லேண்ட்மார்க் என அனைத்தையும் என்னிடமிருந்து வாங்கி, அங்கிருந்து தானே ஈரோடு இரயில் நிலையம் அருகிலிருக்கும் தீயணைப்பு நிலையத்திற்கு நேரடியாக இணைப்பைக்கொடுத்து பேசவைத்துவிட்டார். அடுத்த 30 நிமிடங்களில் தீயணைப்பு வண்டி வந்ததால் பெரும் இழப்பிலிருந்து பாதுகாப்பும் பெறமுடிந்தது. அந்தப் பெண் ஒரே வார்த்தையில் இது ஆம்புலன்சு, 101 தான் தீயணைப்பு நிலையம் என்று சொல்லியிருந்தால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அவர் அப்படி செய்யாமல் ஆபத்தான இந்தச்சூழலை நிதானமாக மனிதாபிமானத்துடன் அழகாகக் கையாண்ட விதம் முகம் தெரியாத அந்தப் பெண்ணை மனதார வாழ்த்தவும், பாராட்டவும் செய்கிறது! உலகம் அவ்வளவு மோசம் இல்லீங்க.. நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
Subscribe to:
Posts (Atom)
-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
பவள சங்கரி h ttps://www.youtube.com/watch?v=AXVK2I37qbs சமுதாயத்தில் பல புரட்சிகளை ஏற்படுத்திய, சிவவாக்கியர், ‘புரட்சிச் சி...