பவள சங்கரி
இயற்கையின் படைப்புகளிலேயே மிகவும், உன்னதமானது பெண் இனம். அனைத்து உயிரினங்களுக்கும் தனிப்பட்டதொரு மென்மையையும், அழகையும் அள்ளி வழங்கியிருப்பது கண்கூடு. அந்த வகையில் மனிதப் பிறவியில் இந்தப் பெண் இனம் பல வகையான உணர்வுகளுக்கும், அதற்குரிய சூழலுக்கும் ஆட்படுவதும் இயற்கை. இந்த இயற்கையின் விநோதத்தை அதீதமாக காட்சிப்படுத்த நினைப்பது மனிதர்களுக்கேயுரிய இயல்பாக இருப்பதே நம் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளின் முக்கிய அம்சமாக இருக்கிறது. இதில் பெரும்பாலும் நன்மைகளும், தீமைகளும் சமமாகக் கலந்து இருப்பதே நிதர்சனம். வளர்ந்து விட்ட நாகரீகத்தில் மற்றைய சில நாடுகளில் ஓரளவிற்கு இதெல்லாம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், நம் இந்திய கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் இதெல்லாம் இன்றும் வழமையாகத்தான் இருக்கிறது. வாழையடி வாழையாக கடைபிடிக்கப்படும் பழக்க வழக்கங்கள் பல அர்த்தமுள்ளதாக இருப்பினும், சில வேண்டாதவையாகவும் தேவையற்றவைகளாகவும் உள்ளது.
பொதுவாக பெண்களின் பருவக் காலங்களை , பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை மற்றும் பேரிளம்பெண் என ஆறு வகைகளாகப் பிரித்துள்ளனர். பேதைப் பருவம் என்பது ஏழு வயது வரையிலான குழந்தைப் பருவம். பெதும்பை என்பது பதினொரு வயது வரையிலான ஒரு பருவம். அடுத்து வருவதுதான் மங்கை எனும் பூப்படையும் பருவம். மடந்தை என்பவள் திருமண வயதில் இருக்கும் பத்தொன்பதிற்கும் மேற்பட்ட பருவத்தினள். அரிவை எனும் பருவம் இருபத்தைந்து வயதான தாய்மைப் பருவம். தெரிவை என்பது உலகம் அறிந்த முப்பது வயதிற்கும் மேலான பருவம். அடுத்து நாற்பது வயதுப் பருவமான உலக ஞானமும், அனுபவமும் பெற்ற பேரிளம் பெண் என்பது. இதன் அடிப்படையிலேயே நம்முடைய பெரும்பான்மையான சம்பிரதாயங்கள் அமைந்திருக்கின்றன.