Saravanan Manickavasagam added a new photo to the album: தமிழ் கட்டுரை நூல்கள்.
சூதுபவள மணி- தமிழக கிழக்காசிய வணிகத் தொடர்பு - பவள சங்கரி.
ஆசிரியர் குறிப்பு:
ஈரோட்டை சொந்த ஊராகக் கொண்டவர். சென்னையில் கல்லூரி படிப்பு. இணைய இதழ் ஆசிரியர். யாதுமாகி நின்றாய், வாழ்வியல் வண்ணங்கள், விடியலின் வேர்கள், கனலில் பூத்த கவிதைகள், நயமிகு நங்கையர் உட்பட பலநூல்களை எழுதியவர். தொடர்ந்து நூல் விமர்சனம் செய்பவர். கெய்ஷா எனற பிரபலநூலை தமிழில் மொழிபெயர்ப்பு செய்தவர். கொரிய கவிக்குயிலின் கவிதைகளை மொழிபெயர்ப்பு செய்தவர். இந்தநூல் ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு.
திரைகடலோடியும் திரவியம் தேடு என்பது கொன்றை வேந்தன். சங்ககாலத்தில் இருந்தே தமிழர்கள் பல நாடுகளுடன் வணிகம் செய்ததும், மணவினைகள் செய்தும் இருந்திருக்கிறார்கள். தொன்மத்தில் இருந்து தமிழரின் உலகளாவிய கடல் வணிகத்தைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் இந்த நூலில்.
நுண்முகம் கட்டுரை, அக்காலத் தமிழரின் குறிப்பாக கொங்கு தமிழரின் பரந்த நோக்கு, வணிக உறவு, புலம் பெயர்தல் முதலிய பல விசயங்களை அலசுகிறது. முத்தம்மாள் பழனிச்சாமியின் நாடுவிட்டு நாடுவந்து என்னும் சுயசரிதை நூலிலும் கொங்கு வேளாளர் புலம்பெயர்ந்த குறிப்புகள் உள்ளன.
தமிழகத்தின் தொன்மை- காலம், சமயம், இலக்கியம், இலக்கணம் என்று பொது சகாப்தத்திற்கு முன் 600 ஆண்டுகளில் தொடங்கி இன்று வரை பகுதிகளாக பிரிக்கப்பட்டு சொல்லப்பட்டிருக்கின்றது. அகழாய்வுகள் அதன் கண்டுபிடிப்புகள் சங்கப்பாடல்களில் வரும் குறிப்புகள் வழி தமிழர் நாகரீகம் விளக்கப்படுகிறது.
தமிழகத்தின் இயற்கைவளம்- முன்பே சாதிகள் இருந்ததில்லை. இரும்பூழிக்காலம் பிற நாடுகளுக்கு முன் இந்தியாவில். நிலவளம் ஐந்து நிலத்திணைகளிலும். நாட்டுப்புறப் பாடல். ஏற்றம், கமலை இறைத்தல் என எத்தனை செய்திகள்!
தமிழர் தொழிலியல்- குவளையம் மூலம் இரும்புத் தயாரிப்பு, உப்பு தயாரிப்பு, தாவரங்கள் வளர்ப்பு, எறி உளி, எருதுப் பாதை, சக்கரம் கண்டுபிடிப்பு, கட்டுமரம் என்று தொழில்களும் சமூகப்பொருளாதார வளர்ச்சியும்.
தமிழர் கடல் வணிக மேலாண்மை- பருவக்காற்றை துணையாகக் கொண்ட கடல் வணிகம்.கடல் கொள்ளையரை சமாளித்தல். கிரேக்கர்களுக்கு கடல் வழிப் பாதையைக் காட்டுதல். (யவனராணி என்ற சரித்திரநாவலே அவர்கள் இங்கு வந்ததை வைத்து புனையப்பட்ட கதை. கடற்கரையில் பேரழகுடன் ஒதுங்கிய யவனராணி!)
ஆய்வேளிரும் கொங்கு வேளிரும்- கொங்கு வேளிர் சமயம், நாகரீகம், வாழ்க்கை முறைகள்,கொடை.
கொங்குநாட்டு வரலாறு- சங்கத்திலிருந்து கொங்குநாட்டை ஆண்ட குறுநில மன்னர்கள், அரசர்கள் பற்றிய குறிப்பு. பௌத்தமதம் சமணம் பரவல். சைவத்தின் வளர்ச்சி. வைணவம், ஆனந்தசயி, சாக்தம், சிறுதெய்வங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள்.
பழந்தமிழரின் உலகளாவிய கடல் வணிகம்-
வணிகம் செய்த பொருட்களும் நாடுகளும்.
உலகக்கடல் வணிகம்- அகழ்வில் கிடைத்த பண்டைகாலத்திய உரோமானிய நாணயங்கள், மூலக்கண்ணாடி, பானை ஓடுகள், உரோமானியக்கலம்.
உலக வணிகத்தின் மேற்கு கிழக்கு மையப்புள்ளி- இறக்குமதி செய்யப்பட்ட ஏராளமான பொருட்கள் பட்டியலின் நடுவே சத்தமின்றி இருக்கிறது, ரோமில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மது! தமிழன் எப்போதுமே ரசிகன் போலிருக்கிறதே!
தமிழ்வணிகம் தோற்றுவித்த அகண்ட தமிழகம்- எல்லைகள் விரிதல் நாடுகள் பற்றிய குறிப்புகளுடன்.
சீனாவுடன் வணிகத் தொடர்புகள்- நான்காம் நூற்றாண்டில் இருந்தே தொடங்குகிறது.
தமிழகத்தின் இரோம வணிகமுறைகள்- தடைகளும் வணிகப்பாதைகளும்.
கடல்சார் வணிகத்தில் ஐரேசிய கப்பல்களின் பங்கு- மரங்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி.
கடல்சார் உலகப்பொருளாதார வணிக இணைப்புகள்- இந்தியப்பெருங்கடல்- உலகவணிகத்தில் இந்தியப்பெருங்கடலின் பங்கு.
சூதுபவள வரலாறு- அரியமணிக்கல். சங்ககாலப்பாடல்களில் குறிப்புகள்
சூது பவளப்பாதை- தமிழகத்தில் அபரிதமாய் கிடைத்த மணிகள்.
ஆய்வேளிர் காலத்திய கொங்கின் வணிக அமைப்பு- கண்ணால் சோதித்துக்கூட பொருட்களை அளந்திருக்கிறார்கள்.
கொரியாவின் கயா அரசி கொங்கின் இளவரசி- ஹேமமாலினி, வகீதா ரஹ்மான், ஸ்ரீதேவி வடநாடு போனால் வாயைப் பிளக்கிறோம். இங்கிருந்து அப்போது எத்தனை பெண்கள் எங்கெல்லாமோ சென்று அரசியாகக்கூட ஆகியிருக்கிறார்கள். பெண்டிர்க்கு சென்றஇடம் எல்லாம் சிறப்பு.
தென் கொரியா கொங்கு ஒப்பாய்வு-
வெற்றிலையின் பிறந்தகம். நம் கலாச்சாரத்துடன் இணைந்த வெற்றிலை. (பாட்டி ஏன் சிறுவயதில் மாடுமுட்டும் என்று சொன்னார்?)
தமிழகம் கிழக்காசியா வணிகம்சார் கடல்பாதை& கிழக்காசியாவின் முன்னேற்றம்- வணிகத்தோடு வளர்ந்த வாழ்வியலும், நுண்கலைகளும்.
உலகக்கடல்வழி வணிகத்தில் கொங்கின் பங்கு- கம்போடிய நாட்டில் கொங்கு வணிகத் தொடர்புகள்.
சங்க இலக்கியமும் திணைசார்ந்த அகழாய்வும்- அகத்திணை புறத்திணை கலாச்சாரம் வாழ்வு விதிமுறைகள்.
கோட்பாடுகளும் ஆய்வு அனுமானங்களும்-
சமூகம், வழிபாடு, வாழ்வியல் தொடர்புகள்
முதலியன கருதுகோள் மற்றும் கோட்பாட்டின் வழியான ஆய்வுகள்.
ஆய்வு முடிவுகள்- வணிகம், சமூக, சமயத் தொடர்புகள் பலநாடுகளுடன் இருந்ததற்கான ஆராய்ச்சி திரட்டுகள்.
கமலஹாசனுக்கு இருக்கும் தொடர்புகளுக்கு உலகப் படங்கள் குறித்து பேசுவது பெரிய காரியமில்லை. அதே போல் மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் எந்த தகவல்களையும் சேகரித்தல் எளிது. அதனாலேயே நன்கு சமைக்கத் தெரிந்தவர்கள் மீந்த இட்டிலியை பலவித சுவைமிகுந்த பதார்த்தமாக்குவது போல்,
சங்கீதம், சமத்துவம், வானசாஸ்திரம் பற்றி எல்லாம் படைப்புகள் படைக்க முடிகிறது. ராஜம் கிருஷ்ணன் களப்பணியோடு மிகுந்த ஆராய்ச்சி செய்து ஒவ்வொரு படைப்புகளையும் படைத்தவர். அதன் பின் இருக்கும் உழைப்பு எல்லோராலும் செய்யக்கூடியதல்ல.
பவளசங்கரியின் இந்த நூல் அது போல் முழு உழைப்பையும் அர்ப்பணிப்பையும் ஏந்தி வருவது. சூதுபவள மணியை குறியீடாகக் கொண்டு தமிழர் கடல்கடந்தவணிகம், வாழ்வியல், சமயம், நாகரீகம் என்று எத்தனையோ தகவல்கள் தமிழரின் வாழ்க்கையை சொல்லி வருகின்றன. வாழ்வியல் முறை நூல்களே நம்மிடம் அரிது. சங்கப்பாடல்களின் குறிப்புகள் இடையிடையே படிக்கும் ஆர்வத்தைக் கூட்டுகின்றன. கம்போடியாவில் இருக்கும் ஆவணங்கள் கிடைத்தால் முழுமையான சித்திரம் கிடைக்கும் என்று சொல்லும் அளவிற்கு இந்த நூலில் இவரது முனைப்பு. வரலாறு, சமூகம், சமயம் என பல கோணத்திலும் இந்த நூல் சிறப்பு வாய்ந்தது. பூ பூத்தல் அதன் இஷ்டம் போய்பார்த்தல் உன் இஷ்டம் என்ற கல்யாண்ஜி கவிதை சில சமயங்களில் சிலபுத்தகங்களுக்கும் வெகு பொருத்தமாக அமைந்து விடுகிறது. பணிவான வணக்கங்களும் வாழ்த்துகளும் பவளசங்கரி.
பிரதிக்கு:
பழனியப்பா பிரதர்ஸ் 044- 28132863 & amazon kindle
முதல்பதிப்பு 2019
விலை ரூ 310.