பவள சங்கரி
ஆர்க்கிமிடீசும், அம்மாப்பேட்டையும்!
ஹாய் குட்டீஸ் நலமா?
இன்னைக்கு நாம பார்க்கப் போற கதை மிகச் சுவாரசியமானது. விஞ்ஞானிகள், கண்டுபிடிப்புகள் என்றெல்லாம் வாசிக்கும்போது நமக்கு மலைப்பாக இருக்கிறதல்லவா? நிறைய படித்தவர்களுக்கும், மிகப்பெரிய அறிவுஜீவிகளுக்கும் , அனுபவசாலிகளுக்கும் மட்டுமே அதெல்லாம் சாத்தியம் என்றுதானே நினைக்கிறீர்கள். அப்படியெல்லாம் இல்லை. இளம் வயதிலேயே விஞ்ஞானிகளான பலர் இருக்கிறார்கள். மழைநீர், சிறு சிறு பள்ளங்களில் தேங்கி கொசுக்களின் பிறப்பிடமாகி, மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சலை ஏற்படுத்துகிறது அல்லவா. அதை அழிப்பதற்கு சப்பாத்திக்கள்ளியின் உட்பகுதியை அரைத்து, அதிலிருந்து வருகிற ‘மீயூசிலே ஐஸ்’ என்ற வழுவழுப்பான திரவத்தைப் பயன்படுத்தி, அந்த லார்வாக்கள் உயிர் வாழ்வதற்கான பிராண வாயு கிடைக்காமல் , இந்த ஜெல் கலந்த இரண்டே நாட்களில் இறந்ததோடு கொசுவின் கூட்டுப்புழுக்கள் மொத்தமாக அழிந்ததை நிரூபித்திருக்கிறார். இயற்கை முறையிலான இதனால் தண்ணீரில் உள்ள மற்ற நுண்ணுயிரிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறும் பிளஸ் 1 படிக்கும் பள்ளி மாணவர், புதுவையைச் சேர்ந்த காஸ்ட்ரோ, தன் ஆசிரியையின் உதவியுடன் இதனைச் சாதித்துள்ளார். அதற்காகப் பல பரிசுகளும் வென்றிருக்கிறார் இவர். நம் நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கும் இந்த கொசுப்பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டும் உறுதியோடு இருக்கிறாராம், இவர். எத்துனை சமுதாய அக்கறை பாருங்கள் இந்த வயதிலேயே..