நூல் பெயர் ; நாமாவோம்
நூல் தொகுப்பு ஆதாரம்; திருமதி. G. திலகவதி IPS
தொகுப்பாளர் ; ஜெ.ஜெயபாரதி
வெளியீட்டாளர் ; படிகள் படிப்பியக்கம், சித்தார்த்தா பள்ளி, ஈரோடு.
விலை ரூ 80/-
சக்தியும், சிவமும் இணைந்து ஒரே நேர்கோட்டில் பயனிக்கும் போதுதான் வாழ்க்கைச் சக்கரம் நிலையான திசையில் சுழலும் என்பதனை, அழகாகவும், தெளிவாகவும், பல வல்லுனர்கள் மூலம் நிரூக்கப்பட்ட ஆதாரங்களுடன் கூடிய இப்புத்தகம், ஒவ்வொரு குடும்பத்திலும் அவசியம் இருக்க வேண்டிய ஒரு சிறந்த கையேடாகும்.
'சாகித்திய அகாடமி விருது' பெற்றிருக்கும் எழுத்தாளரும், காவல் துறை இயக்குநருமான திருமதி.ஜி.திலகவதிIPS, அவர்களின் தெள்ளுத் தமிழ் மற்றும், சமுதாய நற்சிந்தனையுடன் கூடிய, நச்சென்ற முன்னுரையுடனும், திரு எஸ்.கே.மயிலானந்தம் அவர்களின் வாழ்த்துரையுடனும், திருமதி ஜெ.ஜெயபாரதி அவர்களால்,தொகுக்கப் பட்டிருக்கும் இந்நூல் அனைத்துத் தரப்பினரும் பயன் பெரும் வகையில் அமைந்திருப்பது தான் இதன் சிறப்பம்சமாகும். இருபத்தியொரு வண்ண மலர்களாலான ஒரு அழகிய மாலையாகும் இந்நூல். ஆங்கில உரைகளை மருத்துவர் வி.ஜீவானந்தம், திருமதி ஜெயபாரதி மற்றும் திரு மு.சுப்பிரமணியம் ஆகியோர்கள், எளிய நடையில்,தூய தமிழில் அழகாக மொழி பெயர்த்துள்ளார்கள்.
முதல் மலராக, பெண் விடுதலை- பாலின நீதிக்கான அறைகூவல். நீதியரசர் வீ.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களால் மலர்ந்துள்ளது. பண்பாட்டுச் சங்கிலி மற்றும் குடும்பக் கட்டுக்குள் அடிமைப் பட்டுக் கிடக்கும் இந்தியப் பெண்களின் நிலை குறித்தும், பெண் சொத்துரிமை மற்றும் இந்து வாரிசுச் சட்டம் குறித்த காரசாரமான விவாதம் மற்றும், பெண்களுக்கு எதிரான, பாகுபாடுகளுக்கு எதிராக அமெரிக்காவில் 1950- 60களில் 'மக்கள் உரிமை இயக்கம்' எழுந்ததைப் போல நம் நாட்டிலும் எழக்கூடும். பேண்கள் வீட்டுப் பறவையாக வாழ இனியும் தயாராக இல்லை என்கின்ற தீர்க்க தரிசனமும் , மார்வாடிப் பெண்களின் வரதட்சனைக் கொடுமை போன்ற அநீதிகள் அழிய வேண்டுமானால், ஒரு பாலினப் புரட்சிக்கு வித்திட, இந்தியாவின் 30 கோடிப் பெண்களும் ஒன்று திரண்டு, அரசியல் சட்டம் சரத்து 15 [3] - 16 [ஏ] க்கு உட்பட்ட அனைத்து உரிமைகளையும் பெறப் போராட வேண்டும் என்ற அறைகூவலையும் விடுத்துள்ளார்.
ஏ.ஈ. ஆல்டிகர் அவர்களின் 'பெண் வரலாற்றுப் பார்வை' யில், வரலாறு என்பது [His story] 'அவனது' மகத்தான கதையைச் சொல்வதாகவே உள்ளது. ஆனால் 'அவள்' கதை [Her story] சொல்லப் படாத ஒன்றாகவே உள்ளது, என்கிற உண்மையை நிரூபித்துள்ளார். ஆண் ஏன் இப்படி அடக்கினான் என்பதோடு, பெண் ஏன் இப்படி அடங்கிப் போனாள் என்ற ஆதங்கத்தை, நவீன மனிதகுல வரலாற்றுக்கு முந்தய காலத்தில், பெண்ணின் பங்கு, பின் வேதகாலம், ஆணாதிக்க மைல் கற்கள், இதற்கான தீர்வுகள், என்று அனைத்தும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
முனைவர் ரெஜினா பாப்பா அவர்களின், 'தமிழக வரலாற்றில் பெண்கள் 1950 வரை', என்ற மலரில், வரலாற்றில் பல்வேறு கட்டங்களில் பெண் பெற்றிருந்த இடம், அவளது நிலை, அதிகாரம், ஆளுமை, ஆகியவைகள் குறித்த விளக்கமாக அமைந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் தான் விழிப்புணர்வுக் காலம் போன்ற ருசிகரமான தகவல்களும் ஆச்சரியப் படவைக்கிறது.....
'ஆணென்ன, பெண்ணென்ன'?, அடிப்படை உண்மைகள், 'மரியோ ஸ்காட்டோனின்', என்பவரால், புறத் தோற்றம், வளர்ச்சி, செயல்பாடுகள், பலம், பலவீனம் இவைகள் குறித்து ஆணிற்கும், பெண்ணிற்கும் உள்ள வேறுபாடுகள், அழகாகவும், விஞ்ஞானப் பூர்வமாகவும் விவரிக்கப் பட்டுள்ளது. ஜான் நிக்கல்சன் அவர்களின் 'பெண்மையின் வலிமை', என்ற அடுத்த மலர், பெண்ணியல் ஆய்வு பற்றிய விளக்கமாகும். 1 முதல் 18 வயது வரை, பாலின அடையாளம் உருவாகும் முறை விஞ்ஞானரீதியாகவும், சமூகப் பார்வையுடனும், அலசி ஆராயப் பட்டுள்ளது. அறிவியல்ரீதியாக, மூளை வளர்ச்சியில் ஆண் மற்றும் பெண்களுக்குள வேறுபாடுகள் குறித்த கண்ணோட்டம் நல்ல தகவலாகும்.
'வலிமையும்- சாதனைகளும்', என்ற ஜான் நிக்கல்சன் அவர்களின் கட்டுரையில் அறிவியல்ரீதியாக, இரு பாலரின் பலம் மற்றும் பலவீனங்கள், பெண்கள் பற்றிய தவறான கருத்துக்கள், உடல்ரீதியாக பெண்கள் எவ்வாறு மாறுபடுகிறார்கள் போன்ற பல் வேறு விதமான தகவல்களும் அடங்கியுள்ளன.
'உணர்ச்சி வசப்படுதல்', என்னும் அடுத்த கட்டுரை பேட்ரிக்கா சர்ச்லேண்ட் வில்லியம், எஃப் ஆல்மேன் என்பவரால் எழுதப் பட்டதாகும். 'பெண்ணும் கண்ணீரும் ஏற்புடை இணை, என்றும் ஆண் கண்ணீர் சிந்துவது அவமானகரமானது என்னும் நம்பிக்கை ஆழமாக உள்ளது. பெண் சாதிக்க முடியாததை, அவளது கண்ணீர் சாதித்து விடும் என்ற எண்ணமும் வலிமையாக உள்ளது. இவற்றிற்கெல்லாம் அறிவியல் காரணம் உண்டா என்பது போன்ற பல வினாக்களுக்கு இதில் அறிவியல் மற்றும் சமூகரீதியான விளக்கமும் உண்டு.
'பெண்களுக்கு மட்டும் ஏன் ஹிஸ்டீரியா?' என்ற வினாவிற்கு , பெண்கள் ஆரோக்கியச் சிறப்பிதழ், மாமியாரால் கொடுமைப் படுத்தப்பட்ட, புரியாத வயதில் பாலியல்ரீதியான வன்முறைக்கு உள்ளான, மற்றவர்களைப் போல அழகும், படிப்பும் தனக்கு இல்லையே என்ற தாழ்வு மனப்பான்மையும், தன்மீது அக்கரை கொண்டவர் இல்லை என்ற மன உளைச்சல் இப்படி பல காரணங்கள் விளக்கப்பட்டுள்ளது. இளம் பெண்களுக்கான நல வாழ்வுக் குறிப்புகள் மிக பயனுள்ள தகவல்களாகும். மார்பகப் புற்று நோய் குறித்த விழிப்புணர்வூட்டும் அரியத் தகவல்களும் வழங்கப்பட்டுள்ளது.
காமன்வெல்த் செயலகத்தின் பாலியல் மேலான்மை அமைப்பின் வெளியீடான, பாலினம், பாலியல் பங்கு ஆகிய கட்டுரைகள் ஆண், பெண், பாலியல் பற்றிய, ஆய்வறிக்கையில், ஆண்மைக்குத் தொடர்புடையனவற்றிற்கு, துணிச்சல், இலட்சியம், உறுதித் தன்மை, தெளிந்த சிந்தனை, தைரியம், யதார்த்தவாதம், பலம் இன்னும் பலப்பல. ஆனால், பெண்மைக்குத் தொடர்புபடுத்தப்படுபவைகளாக பெரும்பாலும் குறைவான சுயமதிப்பீட்டை உண்டாக்கக் கூடிய, கவர்ச்சி, சார்ந்திருத்தல், உணர்ச்சி மிகுதி, பலகீனம், தாழ்ந்து போதல், அதிகமாகப் பேசுதல், கனவுலகில் சஞ்சரித்தல்,என நீண்டு கொண்டே போகும் பட்டியல்......பிறப்பு எண்ணிக்கையில் சமமற்ற நிலையின் பின் விளைவு, அதிலுள்ள தடைகள், அதற்கானத் தீர்வுகள், சமத்துவத்தினால் ஏற்படக் கூடிய நன்மைகள் இப்படி பல அரிய தகவல்கள் அடங்கியுள்ள இப்பகுதி சமூக ஆர்வலர்களின் பெரும் விருந்தாகும்.
ஸீஷ்மா சகாய் அவர்களின் பெண் சக்தி மேம்பாடு எனும் இப்பகுதியில், உலகளவில் பல வரலாற்றுத் தகவல்கள், பெண் தன் ஆளுமையை வளர்த்துக் கொள்ள செய்ய வேண்டியவைகள், போன்ற பல முக்கியத் தகவல்கள் அடங்கியுள்ளது.
'திறமை மட்டும் ஒருவரிடம் இருந்தால் போதாது, அதனைப் பயன்படுத்திட, செயல்படுத்தத் தேவைப் படுகிற சக்தி, ஆற்றல், அவரிடம் இருந்திட வேண்டும் என்ற, மார்த்தா சி. நஸ்பாம் அவர்களின் 'திறன் வல்லமை அணுகுமுறை' என்ற கட்டுரையில் ஆணித்தரமாக நிரூபிக்கப் பட்டுள்ளது.
இந்திய அரசியல் சாசனம், இந்திய தண்டனைச் சட்டத்தில், பெண்களுக்கெதிரான குற்றங்களும், தண்டனைகளும் என்ற கட்டுரையில், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கான தண்டனைகள் குறித்த விவரங்கள் அடங்கியுள்ளன.
தேசியப் பெண்கள் ஆணையத்தின் பெண்களுக்கான சமூக உரிமைகளும், பாதுகாப்பும், அதற்கான சட்டங்கள், மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு பிரகடனங்கள், உடன்படிக்கைகள் மற்றும் இந்திய அரசியலமைப்பு பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் இவையனைத்தும் சாமான்ய மக்களுக்கும் புரியும் வண்ணம் எளிதாக வழங்கப் பட்டுள்ளது.
இந்து திருமணச் சட்டங்கள் மற்றும் பாதுகாப்புச் சட்டங்கள் குறித்தும், இந்திய அரசியல் சாசனம், இந்திய தண்டனைச் சட்டத்தின்படி இந்து திருமணத்திற்கான நிபந்தனைகள், மணமுறிவு கோருவதற்கான காரணங்கள், மறுமணம், ஜீவனாம்சம், அனைத்து மதச் சட்டங்கள் போன்ற மிக்கியமானத் தகவல்களும் வழங்கப் பட்டுள்ளன.
மத்திய மாநில சமூக நலத்துறை மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறை மூலம் கிடைக்கப் பெறும் நலிவுற்ற மகளிருக்கான நலத்திட்ட உதவிகள், அதனைப் பெறுவதற்கு அணுக வேண்டிய அலுவலர்களின் பட்டியலும் அதற்கான தகுதிகள் இப்படி பயனுள்ள தகவல்களும் உள்ளடங்கும்.
இறுதியாக தொகுப்பாளரின் பாலின நிகர்நிலைப் புது மொழிகள், இரு பாலர் கல்வி முறையே பாலின நிகர் நிலைக்கு அடித்தளம் என்கிற ஆணித்தரமான வாதங்கள்.ஆக சமூக சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள், மாணாக்கர்கள், குடும்பப் பெண்கள் என்று பல தரப்பினருக்கும் பயன் தரக் கூடிய ஒரு கையேடு 'நாமாவோம்' என்ற இப்புத்தகம் என்றால் அது மிகையாகாது.........