Saturday, February 11, 2012

இந்தியத் திருநாட்டின்மறுமலர்ச்சியில் பெண்கள் - பகுதி - 13





இந்தியாவின் கோகிலம், வானம்பாடி!


கவிக்குயில் சரோஜினி அம்மையார் - (1879 - 1949)


சரோஜினி நாயுடு அம்மையார் 1879 ஆம் ஆண்டு, பிப்ரவரி 13 ஆம் நாள் , ஐதராபாத் நகரில் அவதரித்த கவியரசி. அவர்தம் இளம் வயதிலேயே விசேச குணங்கள் அமையப்பெற்ற அதிசயப் பிறவி. சுப்பிரமணிய பாரதிக்கு இணையாகத் தம் எழுச்சிமிகு கவிதைகள் மூலம் நாட்டு மக்களிடையே, சுதந்திர தாகத்தையும், விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தியதோடு தாமும் அப்போராட்டத்தில் பங்கு கொண்டவர்.இந்தியாவின் , முதல் பெண் மாநில ஆட்சித் தலைவர் மற்றும் இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவரும் ஆவார். அரசியல் சமுதாய சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியவர். கவிக்குயில், கவியரசி, இந்தியாவின் கோகிலம்,வானம்பாடி என்றெல்லாம் பல்வேறு பட்டங்களுடன் சிறப்பிக்கப்பட்டவர். சரோஜினி என்ற தம் பெயருக்கேற்றவாரு, குளத்தில் மலர்ந்த செந்தாமரை மலராக புகழ் மணம் வீச புவியை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார். உருது, ஆங்கிலம், வங்காளி மற்றும் பெர்சியன் மொழிகளில் வல்லவர்.


சரோஜினி நாயுடு ஒரு இந்து பிராமணக் குடும்பத்தில் , வேதமும், ஆகமமும் பயின்ற ,தத்துவ மேதை மற்றும் விஞ்ஞானியான அகோரநாத் சட்டோபாத்தியாயர் என்ற வங்காளிக்கும், வரத சுந்தரி என்ற வங்காள மொழிக் கவிஞருக்கும் , ஒரு பெரிய குடும்பத்தில் எட்டு குழந்தைகளின் மூத்தவராக, செல்ல மகளாகப் பிறந்தார். இவர் தந்தை ஐதராபாத் நகரத்தின் முதல் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினர். நிஜாம் பேரரசில் ஒரு கல்லூரியை நிறுவி, அதில் தானே ஆசிரியராகவும் பணி புரிந்ததோடு, பொது நலச் சேவையிலும் அதிக ஈடுபாடு கொண்டவர் இவருடைய தந்தை.


சரோஜினி அம்மையார் ஆரம்பக்கல்வியை ஐதராபாத் நகரத்திலும், உயர்நிலைப் பள்ளிப் படிப்பை சென்னையிலும் பயின்றார். தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலேயே,மெட்ரிக்குலேசன் தேர்வை சென்னை மாநிலத்திலேயே முதலாவது மாணவியாக தேர்வு பெற்றார். இடையில் நான்கு ஆண்டுகால இடைவெளியில் பல்வேறு வகையான பிரிவுப் பாடங்களில் தம் கவனத்தைச் செலுத்தினார். 1895 ஆம் ஆண்டில் நிஜாம் கல்லூரி மூலமாக உபகாரச் சம்பளம் பெற்று, இங்கிலாந்து சென்று, அங்கு கிங்ஸ் கல்லூரியிலும், கேம்பிரிட்ஜ் கிர்டன் கல்லூரியிலும் தம் கல்வியைத் தொடர்ந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுத் தேறிய முதல் பெண்மணி என்ற பெருமையும் பெற்றவர் கவிக்குயில். ஆங்கில இலக்கியத்தில் பெரும் புலமை பெற்று விளங்கினார்.


இங்கிலாந்தில் இருந்த சமயம் , இரண்டாயிரம் அடிகள் கொண்ட ஒரு நீண்ட கவிதை நாடகம் ஒன்றும், கற்பனைக் கதையையும், தம் கல்லூரி ஆசிரியர்களான எட்மண்ட் கோஸ்,ஆர்தர் சைமன்ஸ் ,இருவரிடமும் காட்டினார். அவருடைய இலக்கணச் சுத்தமான படைப்புகளைக் கண்டு ஆச்சரியம் கொண்ட அவர்கள், சரோஜினி அம்மையாரை கவிதை வடிக்கும் ஆர்வத்தை மேலும் ஊக்கப்படுத்தினர். இதுவே அவருடைய அழகிய கவிதைகளுக்கான அடிப்படையாக அமைந்தது எனலாம். இதன் தொடர்ச்சியாகவே இவருடைய மிகப் புதுமையான, பிரபலமான, காதல் பாடல், குருவிப்பாடல், பல்லக்கு சுமப்போர் பாடல், நடிகர் பாடல், தாலாட்டு மற்றும் காட்டுப்பூ பாடல் சேணியன் பாடல் போன்ற அநேகம் பாடல்கள் உருவாகின. அலங்கார வார்த்தைகளும், நகைச்சுவையும்,ஆனந்தச் சுவையும் பொங்கி வழிந்த அவருடைய கவிதைகளில் பெரும் நாட்டம் கொண்ட அவருடைய ஆசிரியர்கள் எட்மண்ட் கோஸ் மற்றும் ஆர்தர் சைமன்சும் இக்கவிதைகளை புத்தகமாகக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன் பலனாக, 1905 ஆம் ஆண்டில்,முதல் தொகுப்பான The Golden Thershold ( தங்க வாசல்) மற்றும் 1912ல் The Bird of Time (காலப்பறவை) மற்றும் "The broken wing (1912)" என்ற தொகுப்புகளும் மலர்ந்தன. இந்நூல்கள் ஆங்கில சமுதாயத்தினரையும் பெரிதும் கவர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மக்களின் உள்ளத்து உணர்வுகளுக்கு வடிவம் கொடுத்து மேலை நாட்டவர்களுக்கும் விளங்கச் செய்தவர் இவரே. மிகப்பிரபலமான வங்கக் கவி தோருதத் என்பவருக்கு ஈடாக சரோஜினி அம்மையாரின் கவிதைகள் உள்ளதாக கோகலே வியந்து பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.


மெல்லிய இதயமும், பளிச்சென்ற கருத்துகளும் கொண்ட , ஆங்கில கலாச்சாரமும், இந்தியக் கலாச்சாரமும் ஒருங்கே அமையப்பெற்ற கவிக்குயிலின் பாடல்களில், டெனிசன், ஷெல்லி மற்றும் எலிசபெத் பேரட் பிரௌனிங் ஆகிய ஆங்கிலக் கவிஞர்களின் தாக்கமும் இருந்தது. மிகுந்த கற்பனை வளமும், தாள லயமும், இசை வடிவமும் , காதல், பிரிவு, ஏக்கம், இறப்பு,வாழ்வின் அற்புதங்கள் என்று அனைத்து ஆழ்மன உணர்வுகளையும் அழகு கவிதைகளாக்கும் வல்லமை பெற்றவரானார்.இந்திய அரசும் கேசரி ஹிந்த்என்னும் சிறப்பு வாய்ந்த பதக்கத்தைக் கொடுத்து அம்மையாரைக் கௌரவித்தது.


1898 ஆம் ஆண்டு தம் படிப்பை முடித்துக் கொண்டு, தாய் நாடு திரும்பியவர்,கோவிந்தராஜுலு என்கிற கீழ் சாதி என்று கூரப்பட்ட சாதியைச் சார்ந்த ஒரு மருத்துவரை ,பிரம்மசமாஜ முறைப்படி ஐதராபாத்தில் மணமுடித்து, இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாயானார்.


தம்முடைய கவித்திறன் மற்றும் பேச்சுத் திறன் மூலம் , இந்திய சுதந்திரப் போராட்டத்தின் சாராம்சத்தை வெகு எளிதாக இந்தியா மற்றும் வெளிநாட்டிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.1914 ஆம் ஆண்டு இலண்டனில் தேசதந்தை அண்ணல் காந்தியடிகளைச் சந்தித்தார். அக்கணம் முதல் அவருடைய நம்பிக்கைக்குரிய சீடர்களில் ஒருவரானார். அகில இந்திய பெண்கள் கூட்டமைப்பை தோற்றுவித்தவர்களில் இவரும் ஒருவர். அன்னி பெசண்ட் அம்மையார் மற்றும் மார்கரெட் இ. கசின்ஸ் ஆகியோருடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றினார்.


பெண் கல்வி வளர்ச்சிக்காக இவர் ஆற்றிய தொண்டும் அளப்பரியது. ஒரு முறை ஐதராபாத் நகரில், இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக பல்லோர் வீடு வாசல்களையும் இழந்து பரிதவித்து நின்ற போது, தம் இனிய பேச்சின் மூலம் அனைத்து இந்திய மக்களிடமும் உருக்கமான வேண்டுகோள் விடுத்ததன் மூலம் குவிந்த பொருள் கொண்டு துன்பமுற்றோரின் துயர் களையப்பட்டது. இதில் கிடைத்த வெற்றி அவரைத் தொடர்ந்து சேவையில் ஈடுபடுத்திக் கொள்ள ஊக்குவித்தது.


தன்னுடைய நாவன்மையாலும், கவித்திறத்தாலும், இளைஞர்களை நாட்டு நலப்பணியில் ஈடுபடுத்தினார். இந்து - முஸ்லீம் ஒற்றுமை, சுய அரசாங்கம், சாதி மதமற்ற ஒருமைப்பாடு போன்ற கொள்கைகளை வலியுறுத்தினார். பால கங்காதர திலகர், கோபாலகிருஷ்ண கோகலே,சர்பிரோஸ்ஷாமேத்தா போன்ற பெருந்தலைவர்களுடன் நெருங்கிய நட்பு கொண்டு,அவர்களுடன் இணைந்து பணியாற்றினார். 1918ல் காஞ்சிபுரத்தில் நடந்த தமிழ் மாநில அரசியல் மகாநாட்டிற்கு தலைமை வகித்தார். பெண்கள் கல்வி கற்று முன்னேற வேண்டும் என்பதிலும், அவர்கள் சமையலறையைவிட்டு வெளியே வர வேண்டும் என்றும்,கைம்பெண்களுக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் முழக்கம் எழுப்பினார். இவருடைய நாவன்மையின் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாக காந்தியடிகள் ,தென் ஆப்பிரிக்க மக்களின் உரிமைக்குக் குரல் கொடுக்க இவரைத் தேர்வு செய்து அனுப்பினார்.


1924இல் தென் ஆப்பிரிக்கா சென்று அங்கு நடைபெற்ற காங்கிரசு கூட்டத்தில் உருக்கமாகப் பேசி மக்களை ஊக்குவித்ததோடு, நேட்டாலில் இந்தியர்களின் உரிமையைப் பறிக்கும் மசோதாவை சட்டமாக்க ஆங்கிலேயர்கள் முயற்சி எடுப்பதை அறிந்த அம்மையார், தம் பேச்சு மற்றும் செய்திகளின் மூலமாகவும், தம் எதிர்ப்பையும், கண்டனத்தையும் வெளிப்படுத்தினார்.

1928இல் காந்தியடிகளின் அறிவுரைப்படி அமெரிக்கா சென்று அங்கு வாழும் இந்தியர்களின் நாட்டுப்பற்றும், அவர்கள் கொண்டுள்ள சுதந்திர வேட்கையும் , அவர்களின் தியாகச் சிந்தையையும், அமெரிக்க மக்களுக்கு உணர்த்தும் விதமாக ஆழ்ந்த பேச்சை வழங்கினார். அமெரிக்க மக்களின் அனுதாபத்தையும் பெற்றார். காந்தியடிகள், மாளவியா ஆகியோருடன் சரோஜினி தேவியாரும், இந்தியப் பெண்களின் பிரதிநிதியாக சென்றார். மாண்டேகு சீர்திருத்தத்தை விமர்சித்ததோடு, ஆங்கிலேயர்களின் கொடுமைகளையும் அவர்கள் உள்ளம் நெகிழுமாறு தெளிவுபடுத்தினார்.


காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு, 1930 ஆம் ஆண்டு சிறை சென்ற பிறகு ,சரோஜினி தேவியாரே அக்கூட்டத்தை தலைமை தாங்கி வழிநடத்தினார்.அப்போது அண்ணலுடன் இவரும் ஏர்வாடா சிறையில் அடைக்கப்பட்டார். சிறைச்சாலையில் அவருக்குச் சகோதரியாகவும், பணிப்பெண்ணாகவும் உடனிருந்து நல்ல முறையில் கவனித்துக் கொண்டார். தம் கவித்திறன் மற்றும் நகைச்சுவைப் பேச்சுத்திறன் ஆகியவற்றின் மூலமாக சிறைச்சாலை வாழ்க்கையைக் கூட இனிமையாக்க முடிந்தது அவரால். இந்த சமயத்தில் அவருக்கு இருதய நோய் ஏற்பட்டு, இங்கிலாந்து சென்று சிகிச்சைப் பெற்றுத் திரும்பினார்.


1940 ஆம் ஆண்டு, தம் உடல்நலம் குன்றிய சமயத்திலும், காங்கிரசு தலைவர்களின் பேச்சுரிமைக்காக நடத்திய அறப்போரில் தானும் கலந்து கொண்டு சிறை சென்றார். இவருடைய அழகு பேச்சுக்கலையையும், நகைச்சுவையையும் கண்டு மகிழ்ந்த காந்தியடிகள் அவருக்கு இந்தியாவின் வானம்பாடி என்ற சிறப்புப் பெயரையும் வழங்கி கௌரவித்தார். கோபாலகிருஷ்ண கோகலே நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்த போது சரோஜினி தேவியார் அவரைச் சென்று சந்தித்து, நெடு நேரம் அளவளாவி வந்தபோது, கோகலே,சுதந்திரப் போராட்டத்தில் திரும்பவும் முழு முனைப்புடன் பணி செய்யத் தனக்கு சக்தி கிடைத்து விட்டதாகச் சொன்னார். அன்று இரவு நிம்மதியான உறக்கமும் வரும் என்றார்.1942 இல் சரோஜினி நாயுடு திரும்பவும், “வெள்ளையனே வெளியேறுஇயக்கத்திற்காக முழக்கமிட்டு சிறை பிடிக்கப்பட்டார். 21 மாதங்கள் காந்தியடிகளாருடன் சிறைவாசம். அண்ணலுடன் அவருடைய பாசப்பிணைப்பு அதிகமானது. அவரை மிக்கி மவுஸ்என்று செல்லமாக அழைப்பாராம், சரோஜினி அம்மையார்.


சிறையிலிருந்து விடுதலை ஆன பின்பு, 1944 ஆம் ஆண்டு, பிப்ரவரி 22ம் நாள் தன் இன்னுயிர் ஈந்த அன்னை கஸ்தூரிபாய் காந்தி அவர்களுக்கு நினைவு மண்டபம் எழுப்புவதற்கு அகில இந்திய மக்களிடம் வசூல் செய்த ரூபாய் 1 கோடி 31 இலட்சம்,தொகையை சௌபாத்தியில் அக்டோபர் 2,1944ல் நடந்த பொதுக்கூட்டத்தில் , அண்ணலின் 75வது பிறந்தநாள் விழாவில் வழங்கினார். இதுவே காந்தியடிகள் , அன்னை கஸ்தூரிபாய் காந்தி நினைவாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் கிராம சேவை மையம் ஆரம்பிப்பதற்கு அடித்தளமானது. இம்மையம், கிராம மகளிருக்கு சுகாதாரம், கல்வி, பல்வேறு நலத்திட்டங்கள்,தொழிற்கல்வி பயிற்சி மையங்கள், அவர்தம் உரிமைகளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் , சுயமரியாதையை விளங்கச்செய்தல் போன்ற பல்வேறு பணிகளை பொறுப்பேற்றது இம்மையம். சுதந்திர இந்தியாவின் பெண்கள் முன்னேற்றத்திற்கு மற்றொரு மைல்கல் இச்சேவை மையம்.

மாபெரும் தியாகங்கள், போராட்டங்கள் என அனைத்தின் பரிசாக 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் நம் இந்திய நாடு சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்தது. நம் மூவர்ணக் கொடி பட்டொளி வீசி பறக்க ஆரம்பித்தது. சுதந்திரக் கொடியின் வண்ணமைப்புக் குழுவில் சரோஜினி அம்மையாரும் இணைந்திருந்தார். இந்நிகழ்ச்சியில் அவருடைய சுவையான எழுச்சிமிகு சொற்பொழிவு அனைவர் உள்ளத்திலும் வீர உணர்ச்சியையும்,உரிமைக்குரலையும் நிலைநாட்டிச் சென்றது. பண்டிட் ஜவஹர்லால் நேரு நாட்டின் பிரதமர் பொறுப்பேற்க, இந்திய மாகாணங்கள் அனைத்திற்கும் இந்தியர்களே கவர்னர் பொறுப்பேற்றனர். ஐக்கிய மாகாணமான உத்திரப்பிரதேசத்திற்கு கவிக்குயில் கவர்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு தம் பணியை செவ்வனே செயலாற்றியதோடு, பல சிக்கல்களைத் தீர்க்கும் முகமாக மற்ற மந்திரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கிக் கொண்டிருந்தார்.


1948 ஆம் ஆண்டு அண்ணல் காந்தியடிகள் இன்னுயிர் நீத்தபோது உலகமே பேரதிர்ச்சிக்குள்ளான சமயம் சரோஜினி தேவியாரும் தாங்கவொண்ணா துயரத்துடன்,காந்தியடிகளின் அஸ்தியை திரிவேணி சங்கமத்தில் கரைத்தார். அண்ணலின் மறைவிற்குப் பின்னர் அம்மையாரின் உடல் நலத்திலும் நலிவு ஏற்பட ஆரம்பித்தது. அதிக இரத்த அழுத்தமும், சுவாசக் கோளாறும் அவர் உடல்நிலையைப் பெரிதும் பாதித்துள்ளது. மார்ச் மாதம் 2 ஆம் நாள் 1949 ஆம் ஆண்டு, லக்நோவில் அவர்தம் ஆழ்ந்த உறக்கம் துவங்கியது. ஜவஹர்லால் நேருஜி அவருடைய மறைவிற்கு மனம் வருந்தி உருக்கமாக ஆற்றிய உரையில், “ அரசியலில் அறத்தைப் புகுத்தினார் அண்ணல். கவியரசி சரோஜினியோ, அதற்கு கலையழகை ஊட்டினார். கவியாகத் துவங்கிய அவர்தம் வாழ்க்கையே ஒரு கவிதையாக மலர்ந்து விட்டதுஎன்று பாராட்டினார். தேசத்தலைவர்களுடன், லேடி மவுண்ட்பேட்டனும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு பெருமை சேர்த்தார்.

கல்வித்திட்டத்தில் கட்டாய இராணுவப்பயிற்சி சேர்க்க வேண்டும் என்ற இவரது கொள்கை சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.மாணவர்கள் மத்தியில் சொற்பொழிவாற்றும் போது இராணுவப்பயிற்சியில் இளைஞர்கள் உற்சாகமாக பங்குபெற முன்வர வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வந்தார். அவருடைய காலப்பறவை’, “தங்க இறகு’, விழித்தெழு’, ‘தங்க வாசல்போன்ற கவிதைத் தொகுப்புகள் இன்றளவும் அவர்தம் புகழ் பாடிக்கொண்டிருக்கின்றன. கல்வி முறையில், சாலைப் போக்குவரத்தில், கிராம ஆட்சியில் அவர் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என முழங்கியதும் சிந்திக்கப்பட வேண்டியது. பெண்குலப் பெருமையை அகில உலகிலும் நிலைநாட்டிய பெருமையும் அவரைச் சாரும். பெண் குலத்திற்கு நல்லதொரு வழிகாட்டியாகவும், நல்லதொரு குடும்பத் தலைவியாகவும்,தியாகச் சிந்தை கொண்டவராகவும், பெண்குலப் பெருமையை நிலைநாட்டுபவராகவும் உலக சரித்திரத்தில் நீங்காத இடம் பிடித்தவர் அம்மையார்.


ஒரு கவிஞர் என்பவர், கற்பனைச் சோலையுள், மலர்ப்பூஞ்சோலைகளின் நறுமணத்தினூடேயும், இயற்கையின் இன்பத் தேனைப் பருகிக் கொண்டு அம்மயக்கத்தில் இனிய கானங்கள் மட்டும் இசைத்துக் கொண்டு, மக்களைப் பரவசப்படுத்தும் ஒரு இசைக்கருவியாக மட்டும் இராது, சக மனிதர்களின் துயரங்களிலும் பங்கு கொண்டு அவர்தம் துயர் தீர்க்கும் முகமாக, போர்க்களத்தினிடையேயும் பரணி பாடும் வல்லமை கொண்டவனாக இருப்பவனே சிறந்த கவியாக இருக்க முடியும் என்பதற்கான முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் கவியரசி சரோஜினி அம்மையார். ஓய்ந்து போன உழைப்பாளிகளுக்கும், துவண்டு போன மக்களுக்கும், தம் உரிமையைக் கூட உணராத பேதைப்பெண்டிருக்கும்,சுதந்திரக்காற்றை சுவாசிக்கும் விழிப்புணர்வையும், எழுச்சியையும் ஊட்டும் உன்னத கவிஞர் கவிக்குயில் சரோஜினி தேவியார் என்றால் அது மிகையாகாது. தலைசிறந்த பேச்சாளர்,பெருங்கவி, மிக வித்தியாசமான அழகு, ஆழ்ந்த , அதே சமயம் நகைச்சுவையும் கலந்த பேச்சு, நிர்வாகத் திறன்கள் மற்றும் சிறந்த தலைமைப் பண்பு” - அவருடைய இறுதி அஞ்சலியாக உத்திரப்பிரதேச அரசாங்கம் செலுத்திய பாராட்டு மொழிகள் மூலமாகவே இவர்தம் பெருமையை முழுமையாக உணர முடிகிறதன்றோ!

Wednesday, February 8, 2012

பெண்ணாலம்

பட்டொளிவீசும் பதின்மத்தின் தலைவாசலில்
பட்டுத்தெளியும் திருமணபந்தமெனும்
சிறைவாசம்.

கடமையே கண்ணாக கணவனின்
சுகசீவனமே
மாசற்ற கற்புநெறியாக

இனிய பதினாறில் இளம்தாயாகி
மறுபிறவியாய்
மகத்தான தலைப்பிரசவம்.

கனியும் காதலால் உறவுகளையும் சுமக்கும்
அச்சாணியாய்
குதூகலமான குடும்பபாரம்.

தளிர்நடை பயிலும் முன்பே மூத்தாளாக
உயரச்செய்த
வல்லமையான மறுபிரசவம்.

தொலைக்காட்சி திரைக்காட்சி அபூர்வமான
காலகட்டத்தில்
கட்டில்காட்சியே பொழுதுபோக்காய்!

தொன்விருட்சமாய் விழுதுகள்
இரத்த பந்தங்கள்
சூப்பிய பனங்கொட்டையாய் சுண்டியவதனம்.

பொருளாதாரமும் வாழ்வாதாரமும்
உரையும்கோட்டின்
உளைச்சலின் உச்சம்.

குருதியும்கொதித்து இருதயமும்துடித்து
பரிதவிக்கும்வேளை
கிடுகிடுக்குமோசை படபடக்குமுயிர்.

சரசரக்கும் பாசக்கயிறை வீசி
துடிதுடிக்கும் உயிரை
சிகரமேற்றும் சிலிர்ப்பு .

பட்டதெல்லாம் போதுமினித்துயர் படமுடியாதென்றே
பந்தபாசம் விலக்கி
பக்திநெறிப் பயணத்தின் ஆயத்தமாக

விழுதுகள் வேரூன்ற உற்றதுணை நாடி
கூப்பித்தொழும் முதிதையில்
மாலவனின் மாயலீலையால் காலனின்கயிறும் பொடிப்பொடியாக

பாசமும்வெல்ல நேசமும்சிறகடிக்க
படபட இதயமும்
மெதுமெதுவாய் துடிக்க

லப்..டப்….லப்…..டப் ஓசையுடன்
இதயக்கண் விழிக்க
பட்டதுயரே இதமாய் இனிக்க

கனிந்துநின்று கசிந்து உருகி
மாடாயுழைத்து ஓடாய்த்தேய்ந்து
தண்ணளி வீசும் பெண்ணாலம்!!!!

படத்திற்கு நன்றி :

http://upload.wikimedia.org/wikipedia/commons/9/9b/Banyan_tree_on_the_banks_of_Khadakwasla_Dam.jpg

நன்றி : வல்லமை பிரசுரம்

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...